Monday, September 14, 2015

பலே, நந்திதா! - ஒரு நாடகம்

கதா பாத்திரங்கள்:

கல்யாணி: தாயார்

பிரியா; கல்யாணியின் மகள், காலேஜ் மாணவி, வயது பதினேழு

வேணுகோபால்: கல்யாணியின் மகன். சவுதி அரேபியாவில் வேலை கிடைத்து சீக்கிரமே போக இருக்கிறான். அவனுக்கு இந்த நாடகத்தில் பங்கு இல்லை.

நந்திதா: கல்யாணியின் புது மருமகள், வேணுவின் மனைவி.

சேஷாம்பாள்: பிரியாவின் பாட்டி, கல்யாணியின் அம்மா, கொஞ்சம் சொத்துள்ளவள், கல்யாணிக்கு ஆதரவாக இருக்கிறாள்.

திலகம்: சேஷாம்பாளின் தங்கை. சின்ன வயதிலேயே கணவனை இழந்தவள். வசதி ஏதும் இல்லாதவள். தன் அக்காளின் ஆதரவில் வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கிறாள்.

அப்பு அய்யர்: பல காலமாக வீட்டில் தங்கியிருக்கும் விருந்தாளி.

                     காட்சி 1

ஒர் மத்திய தர தமிழ் பிராம்மண குடும்பம் வசிக்கும் கொஞ்சம் பெரிய மாடி வீடு. 

காலை மணி 5.30

(சமையலறையில் கல்யாணி காபி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறாள். பால்காரன் பசுமாடு கொண்டு வந்து கறந்து பால் கொடுத்துவிட்டு போய்விட்டான். புதிதாக அரைத்த காபிப் பொடியில் தயாரித்த டிகாஷன் வாசனை வீடு முழுவதும் கமகமக்கிறது.)

கல்யாணி : பிரியா! பிரியா! எங்கே அவ? இன்னும் எழுந்திருக்கலையா! மணி அஞ்சரை ஆயிடுத்தே! மாமா காபிக்காக வெயிட் பண்ணிண்டிருப்பார். இவள இன்னும் காணுமே!  பிரியா! இன்னுமா தூங்கிண்டிருக்கா? சரியான தூங்குமூஞ்சி!

(நந்திதா வருகிறாள்)

நந்திதா:(காபி வாசனையை முகர்ந்து கொண்டு) அம்மா, எனக்கு காபி தரேளா?

கல்யாணி: (புன்னகையுடன்)  நந்திதா, எழுந்திட்டியா? வா. பிரியா இன்னும் எழுந்திருக்கல. நீ கொஞ்சம் அப்பு மாமாக்கு மாடில காபி கொண்டே கொடுத்துட்டு வரியா? நான் ஒனக்கு காபி அப்புறம் கலந்து தரேன்.

நந்திதா: ப்ளீஸ் அம்மா, எனக்கு மொதல்ல குடுத்துடுங்களேன். நான் அப்பறம் மாமாவுக்கு கொண்டு போறேன்.

கல்யாணி: இல்ல, மொதல்ல இத கொண்டே குடுத்துட்டு வா, அதுக்குள்ள நான் ஒனக்கு காபி கலந்து வக்கறேன்.

நந்திதா: ஏம்மா? அவர் கீழ வரக்கூடாதா? அது தானே ஈஸி, மாடிக்கு சூடா காபிய கொண்டு போறதோட?

கல்யாணி: இல்ல.  நந்திதா, நான் எப்பவுமே அவர் நம்பாத்துக்கு வந்ததுலேர்ந்து காபிய மாடிக்கு அனுப்பறது தான் வழக்கம். அப்பறம் அவர் வாக் போவார். போயிட்டு வந்து ஸ்நானம் பண்ணிட்டு பூஜை பண்ணுவார். அவர் அம்பாளுக்கு பூஜை பண்றத பார்த்திருக்கியா? ரொம்ப நன்னா இருக்கும்.

(பிரியா வருகிறாள்)
சரி, சரி, பிரியாவே வந்துட்டா. பிரியா, தூங்குமூஞ்சி! இந்தா காபிய மாமாவுக்கு கொண்டே குடு.

பிரியா: (கண்களை தேய்த்துக்கொண்டே) எனக்கு ஒரே தூக்கமா வருது. ராத்திரி ரொம்ப நாழி படிச்சேன். சரி. குடு. கொண்டு போறேன்.(காபித் தம்ளரை எடுத்துக்கொள்கிறாள்)

நந்திதா: பிரியா, இரு, நானும் வரேன். (இருவரும் போகிறார்கள்)

காட்சி 2

(நந்திதாவும் பிரியாவும் பேசிக்கொண்டே கடைத்தெருவுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்.)

நந்திதா: ஏன், பிரியா, யார் இந்த அப்புமாமா? உங்களுக்கு உறவா?

பிரியா: இல்ல. இல்ல. அவர் எங்கப்பாவோட ஃப்ரண்டு. அவர் எதோ வேலையிலிருந்து ரிடயர் ஆனவர். அஞ்சு வருஷம் முன்னாடி எங்கப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து போய்ட்டார். இல்லியா? அப்போலேயிருந்து  இவர் இங்க வந்து இருக்கார், எங்களுக்கு ஹெல்ப் பண்ண. அப்பா போன போது இங்க வீட்ல நாங்க நாலு பேர் தான் இருந்தோம், பாட்டி, சின்ன பாட்டி, அம்மா, நான். வேணு அண்ணா  சென்னைல ஹாஸ்டல்ல தங்கி படிச்சிண்டிருந்தான்.  அப்பாவுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்துடுத்து. அப்போ அப்பாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்து உதவி செஞ்சா. அதுல ஒருத்தர் தான் அப்பு மாமா. ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்கே அப்பா போய்ட்டார்.

நந்திதா: ஓ, அப்படியா, அப்புறம்? எப்படி அவர் இங்கேயே வந்து தங்கிட்டார்? உங்களுக்கு உறவு கூட இல்லியே?
பிரியா: அது வந்து மன்னி, எனக்கு அவ்வளவா ஞாபகம் இல்லே. முதல்ல எங்கப்பா போனப்புறம், அடிக்கடி அப்பு மாமா வருவார். பாட்டி கிட்டேயும் அம்மா கிட்டேயும் பேசிண்டிருப்பார். அப்புறம் இங்கேயே தங்க ஆரம்பிச்சுட்டார். அது சௌரியமா இருந்துது.

நந்திதா: யாருக்கு சௌரியம், உங்களுக்கா, அவருக்கா?

பிரியா: (கொஞ்சம் அதிர்ச்சியுடன்) என்ன மன்னி சொல்றேள்?

நந்திதா: இந்த அப்புமாமா ரொம்ப சௌரியமா தான் இருக்கார். நானும் ஒரு வாரமா பார்க்கறேன். கார்த்தால அஞ்சு மணிக்கு சுடசுட ஸ்ட்ராங்க் காஃபி, டிகிரி காப்பி. அப்புறம் எல்லாருக்கும் முந்தி அவர உக்கார வச்சு நுனி எலைல சாப்பாடு. நேத்திக்கு என்ன நடந்துது தெரியுமா, நானும் வேணுவும் ரொம்ப பசியோட...

பிரியா: (குறுக்கிட்டு) தெரியும் மன்னி, நீங்க சாப்பிட வந்தேள் ஆனா அம்மா அப்பு மாமா வரட்டும்னு சொல்லிட்டா இல்லே? அது ஏன்னா ஒரு பிராம்மணனுக்கு மொதல்ல சாப்பாடு போட்டுட்டு நாம சாப்டா புண்ணியம்னு அம்ம நெனைக்கிறா. அதான்.

நந்திதா: (கொஞ்சம் கடுப்புடன்) அதெல்லாம் மூட நம்பிக்கை. மொதல்ல அவருக்கு உபசாரம் பண்ணி போட்டுட்டு, மிச்சத நாம் எல்லாரும் ரேஷன் பண்ணிக்கணும்.  நானும் பார்த்துண்டு தான் இருக்கேன். அம்மா நமக்கெல்லாம் வெஜிடபிள்ஸ் எல்லாம் போட்டுட்டு தான் சுட்ட அப்பளாம் போட்டுக்கறா. எல்லாம் சமைச்சுட்டு கடைசில அம்மா சுட்ட அப்பளாம் போட்டுக்கறா. இது நியாயமா இருக்கா? இதெல்லாம் போறாதுன்னு மேல அவருக்கு பெஸ்ட் ரூம் மாடில. எனக்கும் வேணுவுக்கும் சின்ன பெட் ரூம்.

பிரியா: மன்னி!

நந்திதா: ஆமாம் பிரியா, நீங்க எல்லாரும் எப்படியோ இதையெல்லாம் சகிச்சிண்டு இருக்கேள்?

பிரியா: மன்னி! என்ன செய்யறது?

நந்திதா: என்னால பொறுத்துக்க முடியாது. அவரோட ரூம பார்த்தியா?  செவுரெல்லாம் பயங்கரமா அம்மன் படம் வரைஞ்சு வச்சிருக்கார். எதோ தன்னோட சொந்த விடு மாதிரி.

பிரியா: (சிரித்துக்கொண்டே) மன்னி, நான் காபி கொண்டே குடுக்கறச்சே அந்த படங்கள பார்க்காம இருக்க முயற்சி பண்ணுவேன்.

நந்திதா: பாத்தியா, ஒனக்கும் பிடிக்கல்ல. சரி, பிரியா, சொல்லு, ஏன் அவர வீட்ல வச்சு கொண்டாடிட்டிருக்கீங்க? நாம ஒண்ணும் பெரிய பணக்காரங்க இல்ல. அவர் எதாவது வீட்டு செலவுக்குன்னு கொடுப்பாரா?

பிரியா: (தயக்கத்துடன்) இல்ல. மன்னி, ஆனா ஹெல்ப் பண்றார்.

நந்திதா: என்ன ஹெல்ப்?

பிரியா: பாட்டிக்கு பேங்க் வேல எல்லாம் அவர் தான் செய்யறாரு. பாட்டிக்கு நெலத்துலேயிருந்து வருமானம் வருது. மாமா தான் அதை எல்லாம் டெபாசிட் பண்றதுக்கு, இன்வெஸ்ட் பண்றதுக்கு எல்லாம் ஹெல்ப் பண்றார்.

நந்திதா: ஏன் பிரியா, நீ அம்மாவோட பேங்குக்கு போய் அந்த வேலையெல்லாம் செய்ய முடியாதா?

பிரியா: உம், செய்யலாம். என்னை தனியாத் தான் போக விட மாட்டா. அம்மா கூட வந்தா பண்ணலாம்.

நந்திதா: இன்வெஸ்ட் பண்றதுக்கு எல்லாம் பாட்டிக்கு என்னால உதவி பண்ண முடியும்.

பிரியா: நெஜமாவா, மன்னி?

நந்திதா: கண்டிப்பா. நான் ஒரு சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் ஆச்சே.

பிரியா: ஆமாம் மன்னி, மறந்துட்டேன். மன்னி, எனக்கும் தான் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் தோணும். என்னை சில சமயம் அவர் கண்ட்ரோல் பண்ணுவார். எனக்கு பிடிக்காது. ஆனா அம்மாவுக்கும் பாட்டிக்கும் அவர் கிட்ட அப்படி ஒரு மரியாதை. முக்கியமா அம்மாவுக்கு. அப்பாவோட நண்பர்ங்கறதுனால. அவர் இங்க வந்து இருக்கறது ஒரு அதிர்ஷ்டம்னு நெனைக்கறா. ஆனா....

நந்திதா: ஆனா என்ன?

பிரியா: வந்து.. இந்த சின்னப் பாட்டி இருக்காளே...

நந்திதா: ஆமாம், திலகம் பாட்டி.

பிரியா: சின்னப்பாட்டிக்கு மாமாவை பிடிக்கவே பிடிக்காது.

நந்திதா: அப்படியா?

பிரியா: ஆமாம். வெட்டி செலவுன்னு முணுமுணுப்பா. ஆனா சின்னப்பாட்டி தானே ஒண்ணும் பண்ண மாட்டா, ஏன்னா பாட்டிக்கு அடங்கி போவா. எனக்கு சின்னப்பாட்டிய ரொம்ப பிடிக்கும். அவ கிட்டே நீங்க பேசினா எதாவது யோசனை நிச்சயமா சொல்லுவா.

நந்திதா: அப்படியா? சரி. நான் பேசறேன். உம்..அப்புறம்  இந்த அப்பு மாமாவுக்கு சொந்தமா பணம் எதாவது இருக்கா?

பிரியா: எதோ பென்ஷன் வரது. ரெயில்வேல வேலையா இருந்தாராம். மாசம் ஒரு தரம் பென்ஷன் வாங்கணும்னு போவார். ஆனா ஒண்ணு, அவர் நேர்மையானவர் தான்.

நந்திதா: அது சரி, அவருக்கு குடும்பம் ஒண்ணும் கெடையாதா? ஒண்டிக்கட்டையா?

பிரியா: (சிரித்துக்கொண்டே) ஆமாம். ஓண்டிக்கட்டை, 
பிரம்மச்சாரி. ஆனா பொண்கள் விஷயத்துல ரொம்ப கரக்ட். நான் காஃபி கொண்டுபோவேன் இல்லையா, மேல டேபிள்ள வச்சுட்டு வந்துடணும்.

நந்திதா: அது சரி, எனக்கும் அப்படி தான் பட்டுது. என்னன்னா இங்க அவருக்கு சௌக்கியமா இருக்கு. அவ்வளவு தான். அது சரி, ஒனக்கு தெனம் காலங்கார்த்தால காஃபி கொண்டு போய் குடுக்கறது கஷ்டமா இல்லையா? அவர் ஏன் கீழ வந்து வாங்கிக்க கூடாது?

பிரியா: எனக்கு கஷ்டமாத்தான் இருக்கு மன்னி, ஆனா அம்மா திட்டுவா. 
கார்த்தால எனக்கு தூக்கம் தூக்கமா வரும். அம்மா என்ன எழுப்பி காஃபி கொண்டு போகச்சொல்லுவா. நான் தூங்கி வழிவேன்.

நந்திதா: பிரியா, நான் அப்புமாமாவை வீட்ட விட்டு போகவைக்கணும்னு பார்க்கறேன். நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவியா?

பிரியா: (பயத்துடன்) ஐயோ! மன்னி, அம்மா திட்டுவா.
நந்திதா: சரி, பிரியா, நான் திலகம் பாட்டியோட பேசறேன். பாக்கலாம்.

காட்சி 3

காலை மணி 5.15

கல்யாணி வீட்டு மாடியறை.

(அப்பு அய்யர் குறுக்கும் நடுக்கும் நடந்து கொன்டே தனக்குள்ளே முணுமுணுக்கிறார்): மூணு நாளா கார்த்தால இந்த புது மாட்டுப்பொண் காஃபி கொண்டு வரா. பிரியாவுக்கு எக்ஸாமாம். இது ஒரு சாக்கு தான். முன்னாடி எல்லாம் பரிட்சை இருந்தாலும் பிரியா தான் காஃபி கொண்டு வருவா. சூடா ஸ்ட்ராங்கா இருக்கும். இப்பொ இவ கொண்டு வர காஃபி ஆறி அவலா தண்ணி மாதிரி இருக்கு. சகிக்கல்ல. இந்த நந்திதாவுக்கு என்னை பிடிக்கல்ல. அது நன்னா தெரியறது. எம காதகி! வேணும்னே கழுநீர் மாதிரி காஃபி கொண்டு வரா. அவ கொண்டு வரக்கூடாதூன்னும் சொல்லமுடியாது. அது நன்னா இருக்காது. என்ன செய்யறது?... கீழ போய் காஃபி குடிக்க வேண்டியது தான். இன்னும் கொஞ்சம் நாள் தான். நந்திதா போய்ட்டா அப்புறம் கவல இல்ல. அது வரைக்கும் ஜாக்கிரதையா இரு அப்பு! (போகிறார்)

காட்சி 4

காலை 5.15

(வீட்டு ஹாலில் ஒரு ஊஞ்சல் இருக்கிறது. கீழே திலகமும் நந்திதாவும் உட்கார்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். பரஸ்பரம் குசுகுசுவென்று ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சேஷாம்பாள் பாட்டி பெருமுச்சுடன் வந்து ஊஞ்சலில் அமர்கிறாள்.)

சேஷாம்பாள் பாட்டி: என்ன ரகசியம் பேசிண்டிருக்கேள் ரண்டு பேரும்?

(திலகமும் நந்திதாவும் சற்று அதிர்ச்சியுடன் நிமிர்கிறார்கள்)

நந்திதா: ஒண்ணும் இல்லே, பாட்டி, இப்போ டிவில எதோ கொலையப் பத்தி ந்யூஸ் வரது இல்லையா அதப் பத்தி பேசிண்டிருந்தோம்.

சேஷாம்பாள்: அப்படியா?

[கல்யாணி வருகிறாள்]

சேஷாம்பாள்: கல்யாணி, இன்னிக்கு என்ன சமயல்?

நந்திதா: அம்மா, பாகக்கா பிட்ல பண்றேளா, எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கல்யாணி: ஆனா மாமாவுக்கு பிடிக்காதே. நந்திதா. கீரை மசியல், சுண்டைக்கா வத்தக்குழம்பு, கோஸ் கறி பண்ணி வடாம் பொரிச்சூடலாம்னு இருக்கேன்.

சேஷாம்பாள்: கல்யாணி, நந்திதா ஆசையா கேக்கறா, அதையே பண்ணிடு.

 (அப்பு அய்யர் நுழைகிறார்)

சேஷாம்பாள்: வாங்கோ, அப்பு. எங்களோட காப்பி சாப்பிடலான்னு வந்துட்டேளா, உக்காருங்கோ.

(நந்திதாவும் திலகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்)

அப்பு அய்யர்: (கொஞ்சம் நிஷ்டூரமாக) எனக்கு காஃபி சூடா இருந்தாத்தான் பிடிக்கிறது. என்ன செய்யறது, அப்படியே வழக்கமாயிடுத்து. அதான் கீழ வந்தேன்.

கல்யாணி:  மாமா, தெனமும் சூடாத்தானே நான்...

நந்திதா: (இடைமறித்து) அம்மா, இது நல்லது தானே அம்மா. மாமா கீழ வந்தா, சூடா காஃபி சாப்டுட்டு இங்கேயிருந்தே வாக்கிங்க் போலாம், அப்படியே ஆத்துக்கு ஃப்ரெஷ்ஷா கறிகாய் வாங்கிண்டு வரலாம். இல்லையா  மாமா? அப்புறம் நீங்க உங்க பூஜைய பண்ணலாம்.

 (அப்பு அய்யர் திடுக்கிடுகிறார், கல்யாணி முகத்தில் கலவரம்)

திலகம்: எனக்கு கூட மாமா பூஜைய பாக்கணும்னு ஆசை. மேல ஏற முடியல்ல. கீழ பண்ணினார்னா நானும் பார்க்கலாம்.

அப்பு அய்யர்: ஐயோ! எனக்கு காயெல்லாம் வாங்கத் தெரியாது. அதெல்லாம் லேடீஸ் மேட்டர்.

நந்திதா: கோயமுத்தூர்ல எங்கப்பா தான் எப்பவும் காய் வாங்குவார். நான் ரெண்டு நாள் உங்களோட வரேன். அப்புறம் பழகிடும். பாவம் அம்மா தெனம் சாயங்காலம் காய் வாங்கிண்டு தூக்கிண்டு வரா. அம்மாவுக்கு ஒரு ஹெல்ப்பா இருக்கும்.

திலகம்: ஆமாம். கல்யாணிக்கும் பிரஷர் இருக்கே. டயர்டா ஆயிடறா.

கல்யாணி: சாயங்காலம் டயர்டா தான் ஆறது. ஆனா அதுக்காக மாமாவப்போய்...

நந்திதா: (இனிமையான குரலில்)மாமா வாக்கிங்க் போறச்சே வாங்கிண்டு வந்தா அவருக்கும் வீட்டுக்கு கொஞ்சம் காண்ட்ரிப்யூட் பண்ற திருப்தி இருக்கும், இல்லியா மாமா?

(அப்பு அய்யர் பேசவில்லை. முகத்தில் கடுகடுப்பு.)

கல்யாணி: (மலர்ச்சியுடன்) மாமா, இந்தாங்கோ, சூடா காஃபி.

நந்திதா: அம்மா, பாட்டி, நான் இன்னொரு விஷயம் நான் உங்களோட டிஸ்கஸ் பண்ணணும். எங்களுக்கு மாடில பெரிய பெட்ரூம் கெடைச்சா தேவலை. இப்போ நாங்க இருக்கற சின்ன பெட்ரூம் எங்க சாமானுக்கு போறல்ல. ரொம்ப நெருக்கடியா இருக்கு.

(அப்பு அய்யர் திடுக்கிடுகிறார், கல்யாணி முகத்தில் தவிப்பு)

கல்யாணி: (தயக்கத்துடன்) நந்திதா! அதுல மாமா இருக்காளே! இன்னும் ரண்டு வாரம் தானே? வேணு கிளம்பிடுவானே!

நந்திதா: தெரியும் அம்மா,  ஆனா வந்துண்டு போயிண்டு தானே இருப்பார்! இப்படி செஞ்சா என்ன? நாங்க பெரிய பெட் ரூம் எடுத்துக்கறோம், பிரியா சின்ன பெட் ரூம் எடுத்துக்கட்டும். அவளுக்கு படிக்க வசதியா இருக்கும். அவர் போனப்புறம் பிரியா என்னோட படுத்துக்கட்டும். கீழ வராந்தா கோடில பெரிய ரூம் இருக்கே, அப்பா இருக்கறச்சே அவரோட ஆஃபீஸ் ரூமா இருந்துதுன்னு சொல்லுவேளே, அது தானே இப்பொ பிரியாவோட ஸ்டடி ரூமா இருக்கு?  அத மாமாவுக்கு கொடுத்தூடலாமே. ஒரு கட்டில் போட்டுட்டா போறும். ஃபேன் எல்லாம் இருக்கு. மாமாவுக்கு, சூடா காஃபி சாப்பிட, வாக்கிங்க் போக எல்லாம் சௌரியமா இருக்கும்.

திலகம்: அப்போ நாம எல்லாரும் மாமா பூஜைய பாக்கலாம்.

(அப்பு அய்யர் முகம் சிவக்கிறது)

(இந்தப் பொண்ணு சொல்றத பார்த்தா எதோ திட்டமிட்டு சொல்ற மாதிரி இருக்கே! சேஷாம்பாள் முணுமுணுக்கிறாள்)

நந்திதா: (திலகத்தை புன்னகையுடன் பார்த்தவாறு) ஆமாம், பாட்டி. தவிர கீழ் ரூம் செவுரெல்லாம் காலியா இருக்கு. மாமா இஷ்டம் போல புதுசு புதுசா அம்பாள் படம் வரையலாம்.

அப்பு அய்யர்: (கோபத்துடன் கத்துகிறார்) அவொ என்னை கேலி பண்றா. நீங்க எல்லாம் வெறுமனே வேடிக்கை பாத்துண்டு இருக்கேள்! நான் இந்த மாதிரி அவமானப் பட்டதே இல்லை! இத்தன வருஷமா நான் உங்க எல்லாருக்கும் என்னோட சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்து தங்கிண்டு உதவி பண்ணிண்டு இருக்கேன். ரிடயர் ஆனதும் சொந்த பிசினஸ் ஆரம்பிக்கணும்னு இருந்தேன். உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து இருக்கேன். ஒவ்வொரு மாசமும் ஒரு லாட்டரி டிக்கட் வாங்கி அம்பாள் சன்னிதில வைக்கறேன். எதுக்கு தெரியுமா? எனக்காக இல்ல. பிரைஸ் விழுந்தா  பிரியா கல்யாணத்துக்கு கொடுக்கணும்னு தான்., எனக்கு பரிசு விழ அனுக்ரஹம் பண்ணுன்னு அம்பாள வேண்டிக்கறேன்.

கல்யாணி: (நெகிழ்ச்சியுடன்) அப்படியா மாமா?

அப்பு அய்யர்: ஆமாம். பிரைஸ் பத்து லட்சம். தேவிகிட்ட எப்பவும் வேண்டிக்கறேன் , பிரைஸ் எனக்கு விழ வை அம்மா, அதுல அஞ்சு லட்சம் உனக்கு கொடுத்துடறேன், பாக்கி அஞ்சு லட்சம் பிரியா கல்யாண செலவுக்கு கொடுக்கறேன்னு,

நந்திதா: (சிரிப்பை அடக்கமுடியாமல்) மாமா, தேவி பத்து லட்சமும் தனக்கு வேணும்னு சொன்னா?

அப்பு அய்யர்: (கோபத்துடன் வெடிக்கிறார்) பார்த்தேளா, அவொ எப்பிடி என்ன இன்சல்ட் பண்றான்னு? அவொ வந்ததுலிருந்து என்னை அவமானப்படுத்தறதுதான் அவளோட வேலையாப் போச்சு. நீங்க எல்லாரும் பாத்துண்டு சும்மா இருக்கேள்! மணி செத்து போனபோது நீங்க எல்லாரும் எப்படி இருந்தேள், ஞாபகம் இருக்கா? நிர்க்கதியா நின்னேள்! அப்போ நான் ஹெல்ப் பண்ணலேன்னா என்ன ஆயிருப்பேள்? சாக்கடைல விழுந்து நாறி போயிருப்பேள்! நன்னி கெட்ட ஜன்மங்கள்! நீங்க சொன்னா நான் இன்னைக்கே போறேன். எனக்கு போக்கிடம் இல்லேன்னு நெனக்காதீங்கோ!

கல்யாணி: மாமா!

சேஷாம்பாள்: (யாரும் எதிர்பாராத விதமாக) அப்பு, அது தான் நல்லதுன்னு நெனைக்கறேன்.

(அப்பு அய்யர் திடுக்கிடுகிறார்)

அப்பு அய்யர்: பெரியம்மா, கோவிச்சுண்டூட்டேளா? நான் எதோ கோபத்துல கத்திட்டேன். ஒண்னும் நெனச்சுக்காதீங்கோ!

சேஷாம்பாள்: பரவாயில்லை அப்பு.

அப்பு அய்யர்: (எழுந்து கொண்டே) பெரியம்மா, நான் கெளம்பறேன். பேங்குக்கு போகணும், ஒங்களொட...

சேஷாம்பாள்: அதுக்கு இப்பொ அவசியம் இல்ல. அப்பு. நீ அஞ்சு வருஷமா பார்த்துண்டிருந்த என்னோட பாங்க் விஷயத்த எல்லாம் நான் நந்திதாவை பாக்க சொன்னேன். அவ பாத்துட்டு சொல்றா, சரியா முதலீடு பண்ணியிருந்தா பணம் இப்போ ரண்டு மடங்காயிருக்குமாம். காலத்துக்கு தக்க மாதிரி நாம்பளும் மாறணும் இல்லையா? இப்போலேர்ந்து அவதான் என் பாங்க் விஷயத்த எல்லாம் கவனிக்கப் போறா.. நீ நெறைய உதவி செஞ்செ. இல்லேன்னு சொல்லல்ல. நாங்களும் உன்னை இத்தன வருஷமா நன்னா கவனிச்சிண்டோம். (“ரொம்ப நன்னாவே” - நந்திதா முணுமுணுக்கிறாள்). இப்போ நீ உன் விருப்பப்படி உன் பிசினஸை கவனிக்கப் போ.

அப்பு அய்யர்: நீங்க என்ன இப்படி சொல்றேள்? நான் உங்க குடும்பத்துல ஒத்தன். நான் அஞ்சு வருஷமா என்னோட எதையும் கவனிக்காம உங்களுக்கு ஹெல்ப் பண்ணிண்டிருக்கேன். உங்களுக்கு பாதுகாப்பா இருக்கணும்னு தான் நான் இங்கேயே இருக்கேன். நீங்க இப்படி பேசறத பார்த்தா வருத்தமா இருக்கு. உங்க (நந்திதாவை முறைத்துப் பார்த்துக்கொண்டே) புது மாட்டுப்பொண் உங்க மனசுல தவறான எண்ணத்த உண்டாக்கியிருக்கான்னு தோணறது.

ஆனா நீங்க சொல்லுங்கோ, வேணும்னா நான் கீழ இந்த வராந்தா அறைக்கு ஷிஃப்ட் பண்ணிக்கறேன். எனக்கு கஷ்டம் தான். எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். இந்த காலத்துல ஆண் துணை அவசியம். அப்படியே உங்களை விட்டுட்டு போனா நன்னா இருக்காது.

(தனக்கு ஆதரவு பெற கல்யாணியை பார்க்கிறார். கலயாணி என்ன செய்வது என்று தெரியாமல் சங்கடத்துடன் தரையை நோக்குகிறாள்.)

சேஷாம்பாள்: இல்ல. அப்பு.. அதுக்கு அவசியமில்லை. கிராமத்துல வேலு இருக்கான், தனியா இருக்கான். நம்பிக்கையானவன். அவனோட பொண்டாட்டி சமீபத்துல எறந்து போய்ட்டா. அவன வரச் சொல்லலாம்னு இருக்கேன்.. அவன் வெராந்தாவுல படுத்துப்பான். மத்தபடி மங்கு மங்குன்னு நெறைய வேலயும் செய்வான். நீ போறபடி போ. போய் உன் பிசினஸ கவனிச்சுக்கோ.

அப்பு அய்யர்: (கோபத்தில் வெடிக்கிறார்) இத்தன நாள் என் உதவியெல்லாம் வாங்கிண்டு இன்னைக்கு என்னை தொரத்தறேளா! நன்னியில்லாத ஜன்மங்கள்! எல்லாரும் நரகத்துக்கு தான் போவேள்! நாசமா போங்கோ!

(கோபத்துடன் வெளியேறுகிறார். கல்யாணி பிரமித்து நிற்கிறாள். சேஷாம்பாள் அமைதியாக தினத்தாளை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறாள். நந்திதாவும் திலகமும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கிறார்கள்)

                            (திரை)