Friday, February 20, 2015

ஒரு அன்னையின் லட்சியம் அத்தியாயம் - 6

வள்ளி செல்வனின் படிப்பிற்காக தன் உடலை ஓடாக்கி உழைத்தாள். மேலும் இரண்டு வீடுகளில் வேலை எடுத்துக் கொண்டாள். பள்ளியில் சம்பளம் இல்லை, புத்தகங்களும் கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் வேறு செலவுகள் நிறைய இருந்தன. பேனா, ஜாமட்ரி பாக்ஸ், நோட்டுகள் எல்லாம் வாங்க வேண்டியிருந்த்து. சீருடை, காலணி, போன்ற பெரிய செலவுகள் வள்ளியைத் திணர அடித்தன. கார்ப்பரேஷன் பள்ளியில் எல்லாமே இலவசம். ஆனால் வள்ளிக்கு தன் மகனை நல்ல பெயருள்ள இந்த பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை. அவள் படிக்கவில்லை என்றாலும் நல்ல பள்ளியில் படிப்பது முக்கியம் என்று அவளுடைய உள்ளுணர்வு கூறியது.

முருகேசனிடமும் வள்ளி கண்டிப்பாக நடந்து கொண்டாள். செல்வன் ஒழுங்காக பள்ளிக்கு சென்றிருந்தால் வள்ளி தன் கஷ்டங்களை பொருட்படுத்தியிருக்க மாட்டாள். ஆனால் செல்வனுக்கு புதிய பள்ளி பிடிக்கவே இல்லை. பழைய பள்ளியில் பெரும்பான்மையான மாணவர்கள் செல்வனைப் போலவே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள். சத்துணவிற்காகவே நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை. ஆகையால் செல்வனுக்கு தன் நிலைமை வித்தியாசமாகத் தெரியவில்லை.

ஆனால் இப்போதோ? புதிய பள்ளியில் தலைமையாசிரியர் மிக கண்டிப்பானவர். எல்லாமே ஒழுங்காக நடந்தது. நிறைய பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தினார்கள். அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட பள்ளியாதலால் ஏழை மாணவர்களும் கணிசமாக இருந்தனர். ஆனாலும்


பெரும்பான்மையான மாணவர்கள் செல்வனை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள். யாரும் அவனிடம் பழகவில்லை. அவனுக்கு பள்ளி ஒரு சிறை மாதிரி இருந்ததில் வியப்பில்லை.
அவனுடைய வகுப்பில் வள்ளி முன்பு வேலை செய்த வீட்டு எஜமானி காவேரியின் மகன் ராம்குமார் படித்தான். வேலைக்காரியின் மகன் தன்னுடன் சரிசமமாக படிப்பதாவது என்று ஆத்திரமாக வந்தது ராம்குமாருக்கு. அவன் மூலம் செல்வனின் தாய் பற்றுத் தேய்த்து பிழைக்கும் வேலைக்காரி என்பது வகுப்பில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் செல்வனை மட்டமாக நடத்தினர். ராம்குமாருக்கு செல்வனை மட்டம் தட்டுவதில் ஒரு குரூர திருப்தி. இதனாலெல்லாம் பள்ளிக்கு செல்வது வேப்பங்காயைப் போல் கசந்தது செல்வனுக்கு.

வாரத்தில் பாதி நாட்கள் வயிற்றுவலி என்று நடித்து பள்ளிக்குப் போகாமல் மட்டம் போட்டுவிடுவான். இல்லாவிட்டால் பள்ளிக்கு செல்வது போல் கிளம்பிவிட்டு எங்காவது தன் சேரி நண்பர்களுடன் கிரிக்கட் ஆடிக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் வயிற்றுவலி என்று சொல்லி பள்ளிக்குப் போகாமல் வள்ளி வேலைக்குப் போனவுடன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததை வள்ளி கண்டுபிடித்துவிட்டாள். அதற்கு முன் மாதப் பரிட்சையில் வேறு செல்வன் மிகக் குறைவாக மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அதனால் வள்ளி அவனை நையப் புடைத்து விட்டாள்.
அன்றிலிருந்து செல்வனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. தினமும் பள்ளிக்கு சென்றான். எப்போதும் படிக்க முயன்றான். மாலையில் கூட விளையாடப் போகாமல் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போது அவன் தந்தை முருகேசனுக்கு பாவமாக இருக்கும். செல்வனை வருத்தி படிக்க வைப்பதில் முருகேசனுக்கு சிறிதும் இஷ்டமில்லை.

 “நம்ம சாதிக்கு சுட்டு போட்டாலும் படிப்பு வராது. வள்ளி. வெட்டி செலவு. சொன்னா ஒனக்கு ஏற்கமாட்டேங்குது. ஏதாவது வேலை கத்துகிட்டாலாவது புண்ணியம்” என்பான்.

சேரியில் அனைவரும் முருகேசன் கட்சி. வள்ளி மாத்திரம் தனி. ஏதோ அவள் செல்வனை சித்திரவதை செய்வதாக அனைவரும் பரிதாபப் பட்டனர். இந்த சமயத்தில் அரைவருடத்தேர்வு நெருங்கி வந்தது.

Thursday, February 12, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் - 5

பிரகாசம் வி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் உயர் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியர். அவரிடம் ஹெட்மாஸ்டருக்கு ரொம்ப மதிப்பு. ஆகையால் அவருடைய வேண்டுகோளை ஏற்று செல்வனுக்கு ஆறாம் வகுப்பில் இடம் தர சம்மதித்து விட்டார்.
வள்ளியுடன் பேசிய மறுநாள் அவளிடம் இந்த நற்செய்தியை தெரிவிக்க வேண்டுமென்று பிரகாசம் பள்ளி வராந்தாவில் சிறிது நேரம் காத்திருந்தார். அவர்கள் வராததால் சற்று நேரம் கழித்து தன் வகுப்பிற்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.
பிற்பகலில் பள்ளி முதல்வர் பியூன் மூலமாக பிரகாசத்தை விளித்தார்.
“நீங்கள் சிபாரிசு செய்த அந்தப் பையன் இன்னும் வந்து சேரல்லியே. வருவானா? ஏன்னா நிறைய பேர் சீட் கேட்டு வெயிட் பண்றாங்க.” என்று முதல்வர் பிரகாசத்திடம் கூறினார்.
பிரகாசம் ஒரு கணம் யோசித்தார். அவர் கண் முன் ஏழை வள்ளியின் முகமும் செல்வனின் துறுதுறுப்பான முகமும் தோன்றின. எதாவது கஷ்டம் நேர்ந்திருக்கும். எத்தனை ஆர்வமாக இருந்தாள் அந்தப் பெண்! நாளை நிச்சயம் வருவார்கள். பாவம்! சீட்டை விட்டுவிடக் கூடாது. நாளையும் வராவிட்டால் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டால் போகிறது. இவ்வாறு எண்ணிய பிரகாசம், “ஸார், நாளை வரை டயம் கொடுங்க. நாளைக்கு வந்துவிடுவாங்கன்னு நினைக்கறேன்.” என்றார்.
பிரகாசம் அந்த பள்ளியிலேயே மிகத் திறமையான ஆசிரியர் என்று பேர் எடுத்திருந்தார். பள்ளித்தலைவருக்கு அவரிடம் மிகவும் மதிப்பு. ஆகவே அவர் பிரகாசத்தின் வேண்டுகோளுக்கு இணங்கினார்.
பிரகாசம் யோசனையுடன் வெளியே வந்தார். அவருக்கு ஏன் இந்த ஏழைகளின் மேல் இவ்வளவு அக்கறை? அதற்கு காரணம் அவரே சிறு வயதில் ஏழ்மையில் கஷ்டப் பட்டவர். அவருடைய தாய் அவரை படிக்க வைக்க கஷ்டப்பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. அவள் அப்பளம் வடகம் இடுவாள். சிறுவன் பிரகாசம் அவற்றை விற்று வருவான்.


“அம்மா! ஒரு பாக்கட் அப்பளம் வாங்கிக்குங்க, அம்மா, நாளைக்கு எனக்கு ஃபீஸ் கட்டணும்.” என்று கெஞ்சி விற்பான். தாயை நினைத்துக் கொண்ட பிரகாசத்தின் உள்ளம் நெகிழ்ந்தது. வள்ளியைப் பார்த்ததும் அவருக்கு தன் தாயின் நினைவு தான் வந்தது. இருவருக்கும் ஒரே லட்சியம், குறிக்கோள்! தான் இப்போது நல்ல நிலைமையில் இருப்பதைப் பார்க்க அம்மா இல்லையே என்பது தான் அவருக்கு ஏக்கமாக இருந்தது.

மாலையில் அவர் வீடு திரும்பும் போது வள்ளி செல்வனுடன் வந்து கொண்டிருந்தாள்.
வள்ளி கையெடுத்து அவரை கும்பிட்டாள், உடனே செல்வனும் கும்பிட்டான்.
“அடே! நீங்களா? காலையில் ஏன் ஸ்கூலுக்கு வரல்ல? நான் காத்துகிட்டிருந்தேன்.” என்று விசாரித்தார் பிரகாசம்.
“வேண்டாங்க, செல்வனுக்கு நல்ல இஸ்கோல்ல படிக்க குடுத்து வைக்கல்ல. அவ்வளதான். உங்களுக்கு தான் ரொம்ப செரமம்.” என்று நிராசையான குரலில் கூறினாள் வள்ளி.
“என்ன விஷயம்? நேத்து உற்சாகமா இருந்தீங்க. என்ன ஆச்சு?” என்று அவர் அக்கறையுடன் கேட்கவும்,
“நேத்தைக்கு இஸ்கோல விட்டு போனேங்களா, பாருங்க, வழில ராமக்கா ஓடி வந்து, வள்ளீ ஒம்புருசன போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்கன்னு சொல்லிச்சுங்களா, நானும் சரின்னுபோட்டு கைல இருந்த பணத்த எடுத்துக்கிட்டு டேசனுக்கு ஒடிப் போனேனுங்க, அங்க போலீஸ்காரரு அவர வுடணும்னா ஒரேயடியா ஆயிரம் ரூவா கேட்டாருங்க. எங்கிட்ட இஸ்கோலுக்கு கட்டறதுக்கு வச்சிருந்த அறநூத்தி அம்பது ரூவா தான் இருந்திச்சு. ராமக்கா, பாவம் அம்பது ரூவா குடுத்துது. இந்தா, இத வாங்கிட்டு அவர விட்டா விடு, இல்லாட்டி போனா அவரு அங்கேயே கெடக்கட்டும்னு கண்டிசனா சொல்லி போட்டேன். அந்த எளுநூறு ரூவா முச்சூடையும் வாங்கிட்டு எம்புருசன விட்டாரு. கையில இருந்த பணம் முச்சூடும் தீர்ந்திடிச்சி. வேல செய்யற ரண்டு வீட்டிலயும் கேட்டு பார்த்துட்டேன். நூறு நூறு ருவா தான் குடுத்தாங்க. சொல்லுங்க சாமி, எப்படி பீஸு கட்டமுடியும்?”
மூச்சு விடாமல் தன் வழிப்படி நடந்ததை விவரித்தாள் வள்ளி.  பிரகாசத்தின் உள்ளம் நெகிழ்ந்தது. ஏழை பாமர ஜனங்களை போலீஸே ஏமாற்றினால்? இந்த ஏழையின் பணம் போனது போனது தான்.
“வள்ளியம்மா, இனிமேல் இப்படி நடந்தால் யாராவது விஷயம் தெரிஞ்சவங்க, படிச்சவங்கள கூட்டிட்டு போங்க. தெரிஞ்சுதா? போலீஸ்காரர் உங்ககிட்ட பணம் கேட்டது ரொம்ப தப்பு. அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது. அது போகட்டும். எதற்காக முருகேசனை போலீஸ் அரஸ்ட் பண்ணினாங்க?”
“அதுங்களா, என் புருசன் பாவங்க, வெகுளிங்க. சீட்டாட்டத்த வேடிக்கை பார்த்துட்டு நின்னிருக்குது. சீட்டாட்டத்துல ஏதோ தகறாராயி, அடிதடில போய் முடிஞ்சிருக்கு. இவரு சண்டைய வெலக்க பார்த்திருக்காரு. அப்போ அங்க பக்கத்துல ஒரு வீட்லேயிருந்து போலீஸுக்கு ஃபோன் செய்திருக்காங்க. போலீஸ் உடனே வந்து எல்லோரையும் புடிச்சிட்டு போய்ட்டாங்க. இவர் என்ன சொல்லியும் கேக்காம இவரையும் புடிச்சிட்டு போய்ட்டாங்க.”
“அப்படியா, சரி... செல்வனுக்கு ஆறாவதுல எடம் கிடைச்சிருக்கு. இப்போ கட்ட வேண்டிய பணத்தை நான் கட்டிடறேன். செல்வனுக்கு ஸ்கூல் சம்பளம் கிடையாது. ஆனா அட்மிஷன், டெர்ம் ஃபீஸ்ன்னு ஒரு அறுநூத்தியம்பது ரூபா கட்டவேண்டியிருக்கும். அதை நான் கட்டிடறேன்.”
பிரகாசம் மேலும் புன்னகையுடன் கூறினார், “எனக்கு திருப்பித் தர அவசரப்பட வேண்டாம். மெதுவா கொடுத்தா போதும்.”
வள்ளியின் முகம் மலர்ந்தது.
“நல்லதுங்க, சாமி, ரொம்ப சந்தோசமுங்க. சாமி! உங்க வீட்ல ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க, நான் வந்து கிளீனா செஞ்சு தாரேன்.”
பிரகாசம் புன்னகை செய்தார். “நான் தனி ஆள். எனக்கு எதற்கு வேலையாள்? செல்வன் நல்லா படிக்கட்டும். அது தான் முக்கியம். செல்வா, நல்லா படிப்பியா?”

படிப்பேன் என்று தலையாட்டினான் செல்வன். பிரகாசம் அவனை தட்டிக் கொடுத்தார்.
நன்றியால் நிறைந்த உள்ளத்துடன் அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி.

Friday, February 6, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 4

வி.எஸ். உயர்நிலைப் பள்ளி. அன்று பள்ளியில் ஒரே கூட்டம். புதிய அட்மிஷன் செய்யும் நாளானதால் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளுடன் வந்து குழுமியிருந்தார்கள்.
வள்ளியும் செல்வனுடன் அப்பள்ளிக்கு வந்திருந்தாள். செல்வன் கார்ப்பரேஷன் பள்ளியில் ஐந்தாவது தேறியிருந்தான். இந்த பள்ளியில் காலையில் நுழைவுப் பரிட்சை வைத்திருந்தனர். வி.எஸ். உயர்நிலைப் பள்ளிக்கு ஊரில் நல்ல பெயர் இருந்தது. பள்ளி வள்ளியின் வீட்டிற்குப் பக்கத்திலும் இருந்தது. இப்பள்ளியில் சேர்த்துவிட்டால் செல்வன் நன்றாகப் படிப்பான் என்று நினைத்தாள் வள்ளி.
பள்ளி முதல்வர் அறைக்கு ஒவ்வொருவராக அழைக்கப் பட்டனர். செல்வனின் முறை வந்தது. செல்வனும் வள்ளியும் உள்ளே சென்றனர். ஹெட்மாஸ்டரின் முகம் கடுகடு என்று இருந்தது. வள்ளியையும் செல்வனையும் ஏற இறங்க பார்த்தார். அவருடைய கையில் நுழைவுப் பரிட்சையில் செல்வன் வாங்கியிருந்த மதிப்பெண்களின் தாள் இருந்தது.
“டெஸ்டில் ரொம்ப மோசமா மார்க் வாங்கியிருக்கான் உன் பையன். அதனால அவன சேத்துக்க முடியாது. அட்மிஷன் இல்லை” நிர்தாட்சண்யமாகக் கூறினார் முதல்வர்.
“அப்படி சொல்லாதீங்க சாமி, எப்படியாச்சும் சேத்துக்குங்க சாமி.” என்று கெஞ்சினாள் வள்ளி.
“கணக்கில் 12, தமிழில் 18. மார்க்கு படு மோசமா இருக்கு. இந்தா இத எடுத்திட்டு போ. வேற ஸ்கூல்ல போய் பாரு. இங்க அட்மிஷன் குடுக்க முடியாது. என் டயத்த வீணாக்காதே”
பள்ளித்தலைவரின் குரலில் இருந்த கண்டிப்பு வள்ளியை பேசாமல் வெளியேற வைத்தது.
அவள் கட்டியிருந்த கோட்டை நொறுங்கி விழும் வேதனையை அவளால் தாங்க முடியவில்லை. காலையிலிருந்து நின்று கொண்டிருந்த களைப்பு வேறு.
“செல்வா, தலைய சுத்துது, வா, அப்படி கொஞ்சம் குந்தலாம்.” என்றவாறு வள்ளி அங்கே ஓரமாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கண்களை சோர்வுடன் மூடிக்கொண்டாள்.
“அம்மா, யாரோ வராங்க.”
செல்வன் குரல் கேட்டு வள்ளி அவசரமாக எழுந்திருந்தாள்.
“உட்காருங்க, அம்மா!” என்ற கனிவான குரல் கேட்டு வள்ளி நிமிர்ந்து பார்த்தாள்.
வெள்ளை வேட்டி, சட்டை, கண்களில் கண்ணாடி, மெலிந்த உயர்ந்த உருவம். முப்பது வயதிருக்கும். ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார்.
மரியாதையுடன் நின்ற வள்ளி பாமர ஜனங்களுக்கே உரித்தான வெகுளித்தனத்துடன்,
“சாமி, என் பையனுக்கு இஸ்கோல்ல எடமில்லன்னு சொல்லிபோட்டாங்களே. ஏன், சாமி, இத்தன பெரிய இஸ்கோல்ல எப்படிங்க எடமில்லாம போகும்?”
செல்வன் இடைமறித்து,
“போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியல்ல. ஒரு க்ளாஸ்ல இத்தன பேர் தான் இருக்கலாம்னு ரூல் இருக்கு, இல்லீங்களா, ஐயா?”
வள்ளியின் பாமரத்தனமும், செல்வனின் புத்திசாலித்தனமும் அந்த மனிதரை சற்று கவர்ந்தது போலும். அவர் நின்றார்.
“இடம் இல்லேன்னு சொல்லிட்டாங்களா?” என்று வினவினார்.

“ஆமா, ஐயா, பரிட்சைல மார்க்கு கொறவு, அதனால எடமில்லன்னு சொல்லி போட்டாங்களே! சாமி, நீங்களாச்சும் சொல்லி என் செல்வனுக்கு
எடம் வாங்கி தாங்கய்யா. ஒங்களுக்கு ரொம்ப புண்ணியம். அவன் நல்லா படிக்கணும், அதாங்க என் ஆசை.” கெஞ்சினாள் வள்ளி.

அந்த மனிதர் சற்று யோசித்தார். பிறகு, “அந்த அப்ளிகேஷனை எங்கிட்ட கொடுங்க, நான் ஹெச். எம் கிட்ட சொல்லி பார்க்கறேன். எதுக்கும் நாளை காலையில அட்மிஷன் ஃபீஸோட வாங்க. பணம் எவ்வளவு கட்டணும்னு விசாரிச்சிட்டு போங்க. என் பெயர் பிரகாசம். நான் இங்கதான் இருப்பேன்” என்று சொல்லி விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டார்.

வள்ளி நன்றிப் பெருக்கில், “ஐயா, நீங்க அந்த முருகசாமி மாதிரி...”என்று ஏதோ சொல்லவந்தவள் நாக்கை கடித்துக் கொண்டு மௌனமானாள்.
வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

பெரிதாக சிரித்த செல்வன்,
“எங்கப்பா பேரு முருகேசன், அத சொல்லிட்டாங்க இல்ல, அதனால தான் வெக்கப்படறாங்க” என்று விளக்கினான்.
பிரகாசம் புன்னகை புரிந்தார். எத்தனை வெகுளித்தனமானவர்கள்! முடிந்தால் இவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைத்தார்.
“அப்போ காலையில் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு பிரகாசம் சென்றுவிட்டார். புத்துயிர் பெற்ற நம்பிக்கையுடன் வள்ளி செல்வனின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நீக்கி நடந்தாள்.

கிருஷ்ணா நகரை நெருங்கும்போதே ராமக்காள் ஓடிவந்தாள்.
“வள்ளி, முருகேசன போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க.”
வள்ளி அதிர்ந்து போய் நின்றாள்.
“ஆமா, வள்ளி, சீட்டாட்டத்தில ஏதோ தகறாராம், அடிதடியாயிருச்சாம். பத்து பேர போலீசு பிடிச்சுட்டு போயிருக்காங்களாம். நம்ம பாபு வந்து சொல்லிச்சு, அதான் ஓடியாரேன்” என்று மூச்சு வாங்க தெரிவித்தாள் ராமக்காள்.
வள்ளி பிரமித்துப் போய் வாயடைத்து நின்றாள்.