சுந்தரம் ஒரு நேர்மையான சாதாரண மனிதன்,
ஆஃபீஸர். மனைவி மாலதி
படித்தவள் தான், ஆனலும் கிராமத்துல வளர்ந்தவள். இருவரும் அன்யோன்யமான தம்பதிகள்.
அவர்கள் அன்புக்கு அடையாளமாக மாலதிக்கு சென்னையில் பெண் குழந்தை பிறந்து
இன்று பத்தாம் நாள், புண்யாவசனம். சுந்தரம் மும்பையிலிருந்து வந்திருக்கிறான்.
வீட்டில் ஒரே சந்தோஷம். எல்லார் முகத்திலும்
புன்னகை. சாப்பாடு ஆனதும் எல்லோரும் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.
சுந்தரம் மாலதியிடம், “ மாலதி, என் அண்ணா
வாஞ்சி இருக்கிறானே.. அவன்..” என்று ஆரம்பித்தான்.
மாலதி என்ன என்பது அவனைப் போல
பார்த்தாள்.
“அவன வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்களாம்.
மாலதி, கொஞ்ச நாளைக்கு வீடு கெடைக்கற வரைக்கும் நம்ம வீட்ல தங்கிக்கலாமான்னு
கேட்டான்”
“குடும்பத்தோடையா”
“ஆமா, கொஞ்ச நாளைக்கு தான். வீடு கெடைச்ச
உடனேயே போயிடுவான். நீ வரதுக்கும் இன்னும் மூணு மாசமாவது ஆகுமே”
“சரி, பாவம்.இருக்கட்டுமே.” என்றாள்
மாலதி அனுதாபத்துடன்.
இது நடந்து மூன்று மாதமாகி விட்டது.
வாஞ்சி குடும்பம் இன்னும் சுந்தரம் வீட்டில் தான் இருந்தது. போவதைப் பற்றி பேசவே இல்லை.
அவனே சொல்லுவான் என்று சுந்தரம் நினைத்தான். சுந்தரத்துக்கு வீட்டு சாப்பாடு
கிடைத்ததுக் கொண்டிருந்தது. மாலதியும் அதனால் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் மாலதி
மும்பை வர வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
சுந்தரம் ஒரு நாள் தன் சகோதரனிடம்,
“வாஞ்சி, ஞாயித்துக்கிழமை மாலதி வரா
இல்லியா? குழந்தையும் அவளும் வந்தா இடம் நெருக்கடியா இருக்கும். நீ வீடு
பாத்துட்டியா?” கேட்டான்.
“பார்த்துண்டு தான் இருக்கேன், சுந்து.
நம்ம நெலைமைக்கு ஏத்தபடி வீடு கெடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்சம் நன்னா
இருந்தா அட்வான்ஸ் ஏகப்பட்டது கேக்கறான். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.”
“சரி”
மாலதியின் பெற்றோர் அவளை குழந்தையுடன்
மும்பைக்கு கூட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த சிறிய பிளாட்டில் வாஞ்சி, அவனது
மனைவி சுபா, இரண்டு குழந்தைகள் என்று வீடு நிறைந்திருந்தது. சுபா வந்தவர்களை
உபசரித்தாள்.
“கொஞ்சம் நாளைக்கு அட்ஜஸ்ட்
பண்ணிக்கணும். வீடு பாத்துண்டே இருக்கோம்” என்றாள் சுபா.
“ஹை! குட்டிப் பாப்பா” என்று சுபாவின்
பிள்ளையும் பெண்ணும் உற்சாகமாக கத்தினார்கள்.
மாலதியின் அம்மா ரகசியமாக மாலதியிடம்
“இப்படி ரொம்ப நாளைக்கு தாட்ட முடியாது. உனக்கு பச்சை உடம்பு. நீ சத்தா
சாப்படணும். ரெஸ்ட் எடுத்துக்கணும். எப்படி நடக்கப் போறதோ, பகவானே!”
“பரவாயில்லை, அம்மா, பாவம், அவாளுக்கு
வீடு கெடைக்கலையாம்.”
மாலதியின் அம்மா இரண்டு நாள்
இருந்துவிட்டு போய்விட்டாள். கொஞ்ச நாளைக்கு எல்லாம் சரியா இருந்தது. முதலில் சுபா
காரியத்தையெல்லாம் தன் மேல் போட்டுக்கொண்டு செய்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மாலதிக்கு
வேலை அதிகமாகியது.
சுபா, “ஐயோ பாவம், நீ, இப்படி பச்சை உடம்புல வேலை செய்யாதே.
நான் பாத்துக்கறேன்” என்பாள். ஆனால்
வளரும் பிள்ளைகள், ஆபீஸ் போகும் கணவன்மார் என்று வேலை எக்கச்சக்கமாக இருந்தது.
“மாலதி, கொஞ்சம் இந்த அடுப்ப
கவனிச்சுக்கோ, நான் இப்போ வந்துடறேன்.”
“மாலதி, இந்த சட்னிய கொஞ்சம் மிக்சில
அரைச்சுடறயா?”
“கீரைய ஆஞ்சு நறுக்கிடறியா, உக்காந்தே
பண்ணு. அப்படியே ஒரு மூடி தேங்கா துருவி வச்சுடு”
மெதுவா மெதுவா சுபா மாலதி கிட்ட வேலை
வாங்க ஆரம்பித்தாள். சுபா அடிக்கடி வெளியே வேலை இருக்குன்னு போய் விடுவாள். “வெளி
வேலையும் யாராவது கவனிக்கணுமே” என்பாள். மாலதி சாது, வெகுளி. எது சொன்னாலும் சரி
என்று தலையாட்டுவாள்.
சுந்தரத்திற்கு மாலதியைப் பார்க்க பாவமாக
இருந்தது. டெலிவரி ஆகி நான்கு மாதங்கள் தான் ஆகியிருந்த நிலையில் அவளுக்கு
கவனிப்பும் ஓய்வும் ஆவசியம். இந்த வாஞ்சி குடும்பத்தோட வந்து உட்கார்ந்திருக்கானே!
என்ன செய்வது? சுந்தரத்திற்கு எரிச்சலாக இருந்தது. கண்டிப்பாக இன்று
கேட்டுவிடணும்.
“வாஞ்சி, வீடு பாக்கறது என்ன ஆச்சு?”
“பாத்துண்டு தான் இருக்கேன். அட்வான்ஸ்
ஒரு லட்சத்துக்கு கொறைய மாட்டேங்கறான். நான் எங்க போவேன், அத்தன பணத்துக்கு?”
வாஞ்சி பதிலளித்தான்.
“சரி. கொஞ்சம் சீக்கிரமா பாரு.”
இப்படியே ஒரு மாதம் கழிந்தது. அவர்கள்
கிளம்பற வழியாக இல்லை.
சுந்தரம் பொறுமை இழந்தான்.
“என்ன ஆச்சு? வீடு இன்னும்
கெடைக்கல்லியா?”
“பாத்துண்டே இருக்கேன். எல்லாரும் ஒரு
லட்சம், ஒண்ணரை லட்சம்னு ரூபா அட்வான்ஸ் கேக்கறா. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க
போவேன்? அதான் தேடிண்டிருக்கேன். கொஞ்சம் பொறுத்துகோ.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ கொஞ்ச
நாள்னு சொன்னே. இப்போ நாலு மாசமாகப் போறது. நெஜம்மா பாத்துண்டு இருக்கியான்னு
சந்தேகமா இருக்கு.”
“அப்படி சொல்றியா? சரி, ஒரு லட்ச ரூபா குடு. நாளைக்கே
காலி பண்ணிடறேன்.”
சுந்தரம் திடுக்கிட்டான்.
“நான் குடுக்கறதா? நன்னா இருக்கே நீ
சொல்றது? பாவம், நம்ம அண்ணனாச்சேன்னு இங்க தங்கிக்கோன்னேன். இப்ப என்னடான்னா நான்
லட்ச ரூபா கொடுக்கணும்ங்கறே”
இரண்டு பேருக்கும் வாக்குவாதம் பலக்கும்
போல இருந்தது.
அப்போ மாலதி, “நாம இப்போ டாக்டர்
வீட்டுக்கு போகணும். ஞாபகம் இருக்கா? போலாமா?” என்று நிலைமை மோசமாவதை தடுத்தாள்.
சுந்தரமும் மாலதியும் குழந்தைக்கு
ஆஸ்பத்திரியில் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு டாக்ஸியில் வீடு திரும்பிக்
கொண்டிருந்தார்கள்.
“மாலதி, அண்ணா குடும்பம் வந்து நாலு
மாசம் ஆகப்போறது. கெளம்பற மாதிரியே தெரியல” சுந்தரம் பேச்சை ஆரம்பித்தான்.
தலைய ஆட்டி ஆமோதித்தாள் மாலதி.
“அவன் இன்னிக்கு பேசறத பாத்தியா? நான்
ஒரு லட்சம் குடுத்தா காலி பண்ணுவானாம். எப்படி இருக்கு நியாயம்? எனக்கு வந்த
கோபத்துல...”
மாலதி புன்னகை செய்தாள்.
“ஆமாம். நீங்க அடிச்சுடுவேள் மாதிரி
இருந்துது.”
“பின்னே என்ன மாலதி? பொறுமைக்கும் ஒரு
அளவு இருக்கு இல்லையா? எனக்கு உன்ன பாத்தா தான் பாவமா இருக்கு. என்னால தானே உனக்கு
இந்த கஷ்டம்?”
“உங்க அண்ணாவுக்கு கஷ்ட காலத்துல உதவி
பண்ணினேள். அதுல எந்த தப்பும் இல்ல.”
“நீ எப்படி தான் எல்லாத்தையும்
பொறுத்துக்கறயோ. நான் பாட்டுக்கு ஆபீஸ் போயிடறேன். நீ தான் கஷ்டப் படறே. ஆனா
எப்பவும் சிரிச்சுண்டு அமைதியா இருக்கே, இது எப்படி முடியறது உனக்கு? அவா
இருக்கறது உனக்கு எரிச்சலா இல்லையா? எனக்காவது அவன் கூடப்பொறந்தவன். உனக்கு ஒரு
சம்பந்தமும் இல்லையே”
“அவாளும் மனுஷா தானே? உங்கள விட அவருக்கு
வருமானம் கொறைச்சல். ரெண்டு வளர்ர, படிக்கிற பசங்க. சிரமப்படறா. கொஞ்சம் நாம
பொறுத்துண்டு போலாமே. நமக்கு எத்தனையோ சௌரியம் இருக்கு. நெனச்சு பாருங்கோ. எத்தன
பேர் நடை பாதைலேயும் குடிசைலேயும் வசதி இல்லாம கஷ்டப்படறா! சாப்பாட்டுக்கு கூட
இல்லாம கஷ்டப்படறா! அதுக்கெல்லாம் கொறவு இல்லியே நமக்கு? பகவான் நமக்கு நல்ல
கொழந்தையும் கொடுத்திருக்கார். எது இல்லேன்னு பாக்கறத விட எது இருக்குன்னு
பாக்கறது தானே நல்லது?”
சுந்தரத்துக்கு வியப்பில் வாயடைத்துப்
போயிற்று! எத்தனை விவேகத்தோட பேசுகிறாள்!
“மாலதி, நான் ரொம்ப லக்கி, நீ எனக்கு
கெடைச்சது. ஆனா உனக்கு கஷ்டமா இல்லையா? வந்ததுக்கு இப்போ நீ இளைச்சு போயிட்டே”
“கஷ்டம் இல்லேன்னு சொல்ல மாட்டேன்.
கொஞ்சம் கஷ்டம் தான். கொழந்தைய நன்னா கவனிச்சுக்க முடியல்ல. எதாவது புதுசா
பண்ணனும்னு தோணும். டிவில புது புதுசா ரெசிபி எல்லாம் காமிக்கறா. பண்ணி பாக்கணும்னு
ஆசையா இருக்கும். ஆனா முடியறதில்ல. பசங்க இருக்கறதுனால ப்ளேட்டு,கப்புன்னு
எக்கச்சக்கமா பாத்திரம் விழறது. வேலக்காரி பாத்திரம் ஜாஸ்தியா இருந்தா மொனகறா.
மன்னிக்கு வெளில நிறைய வேலை இருக்கு. போயிடறா. கொஞ்சம் வேலை ஜாஸ்தியா தான்
இருக்கு”
“பாத்ரூமுக்கு வேற கார்த்தால ரொம்ப
நெருக்கடியா இருக்கு.”
“உம்”.
“நீ பாவம், பொறுமையா சகிச்சிண்டிருக்கே.
இன்னொரு விஷயம், செலவு வேற எக்கச்சக்கமா ஆயிண்டிருக்கு. வேலக்காரிக்கே 500 ரூபா
ஜாஸ்தி கொடுக்கறோம். கரண்ட் பில்லு, பால் அது இதுன்னு எக்கச்சக்கமா ஆறது. வாஞ்சி எதோ மாசம் குடுக்கறான். ஆனா
அதெல்லாம் பத்தாது. இப்படி எத்தன நாள் ஓட்ட முடியும்?”
மாலதி அவன் தோளில் தன் கையை வைத்து “நாம
கொஞ்சம் பொறுமையா இருப்போமே, இன்னும் ஒரு மாசம் பார்க்கலாம். இல்லேன்னா என்
நகையெல்லாத்தையும் அடகு வச்சு லட்ச ரூபா தெரட்டி உங்க அண்ணா கிட்ட கொடுத்துடுங்கோ.”
சுந்தரம் அதிர்ந்தான்.
“அது மாத்திரம் செய்யவே மாட்டேன்”
என்றான் சுந்தரம் உறுதியாக.
“நமக்கு வசதி அதிகமாகும் போது
மீட்டுக்கலாமே. அது தான் நல்லது. அவா போனா நாம நம்ம கொழந்தைய நன்னா கவனிக்கலாம்.
இல்லையா?”
”அதெல்லாம் உன் அப்பா
அம்மா உனக்கு கொடுத்திருக்கற நகை. அதை நான் தொடவே மாட்டேன். தவிர நமக்கு பொண்
குழந்த பொறந்திருக்கு. அந்த நகையெல்லாம் பின்னால நமக்கு தேவைப்படும்.”
“ரொம்ப தீர்க்கமா யோசிக்கறேளே!”
“ஆமா, எல்லாத்தையும் யோசிக்க
வேண்டியிருக்கு. கொழந்தய ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு வேற நெறைய பணம் தேவைப்படும்.
ஆஃபீஸ்லயும் லோன் எடுக்க முடியாது. வீட்டுக்காக ஏற்கனவே லோன் எடுத்திருக்கேன்.”
“சரி, கடவுள் எதாவது வழி காட்டுவார்.
கவலப் படாதீங்கோ”
வீட்டை அடைந்தார்கள்.
வாஞ்சி பெரிய புன்சிரிப்புடன் அவர்களை
வரவேற்றான்.
“டேய்! சுந்து! ஒரு நல்ல ந்யூஸ்! எனக்கு
ப்ரமோஷன் கெடைச்சிருக்குடா.”
“அப்படியா, கங்க்ராஜுலேஷன்ஸ்! வாஞ்சி!”
“ஆனா ஒரே ஒரு பேட் நியூஸும் இருக்கு.”
“அப்படியா? அது என்ன?” என்றான் சுந்தரம்
சற்று அதிர்ச்சியுடன்.
“சுந்து, எனக்கு மாத்தலாயிடுத்துடா.
சென்னைக்கு. வேற வழி இல்ல. போய் தான் தீரணும். அதுவும் ஒரு வாரத்திலேயே
கெளம்பணும்.”
“அப்படியா? அங்க வீடு...?”
வாஞ்சி பெரிதாக சிரித்தான். “இங்க நீ
கெடைச்ச மாதிரி அங்க சுபாவோட தம்பி இருக்கான். கொஞ்ச நாளைக்கு அவனோட போய் டேரா போட
வேண்டியது தான்!”
“