அருணா உண்டாகியிருந்தாள்.
ஏழாவது மாதம். பிரசவத்திற்கு உதவ அவள் தாய் இந்தியாவிலிருந்து இன்று வருகிறாள். ஸ்ரீராமுக்கு
ஒரே சந்தோஷம்.
“உங்கம்மா சமையல
நெனச்சாலே நாக்குல தண்ணி ஊறர்து. அருணா, உங்கம்மா ரசத்துக்கு ஈடு இணையே கிடையாது. வோர்ல்ட்லேயே பெஸ்ட்
குக். என் ஒரே பயம் என் வெயிட் ஒரேயடியா ஏறிடுமேங்கறதுதான். எனக்கே இப்படின்னா நீ உங்கம்மா
வரத எப்படி எதிர்பார்த்துட்டிருப்பே நீ! ஒனக்கு சமைக்கறதுலேயிருந்து கம்ப்ளீட்டா லீவ்.
நல்ல ரெஸ்ட் கெடைக்கப்போறது. ஹேப்பியா?”
ஸ்ரீராம் அவளை
அன்புடன் அணைத்துக்கொண்டான்.
“உம்…” அருணா அரை
மனதுடன் பதிளளித்தாள்.
அருணாவுக்கும்
தன் தாயின் மடியில் சுகமாக படுத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கணும் என்று ஏக்கம் இருக்கத்தான்
செய்தது. அவள் அம்மாவிற்கு விதவிதமாக சமைக்கப் பிடிக்கும். வீட்டு வேலை எல்லாவற்றையும்
இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அவள் வந்துவிட்டால் அருணாவுக்கு எதுவும் செய்யத்
தேவையில்லை. சும்மா சோம்பல் முறித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்து இருந்தால் போதும்.
அம்மா தன் பாசத்தால் அவளை முழ்கடிப்பாள். அவள் அம்மாவின் அகராதியில் சோம்பல் என்ற வார்த்தைக்கே
இடமில்லை.
ஆனால் ஏன் அவள்
தன் அம்மாவின் வரவைப் பற்றி “நெர்வஸாக” இருக்கிறாள்? அவள் மனதிற்குள் தன் தாயைப்பற்றி
கொஞ்சம் அவமானமான உணர்வு இருந்தது என்பது தான் உண்மை. தன் அமெரிக்க ஃப்ரெண்ட்ஸ்கள்
கர்னாடகமான கட்டுப்பெட்டியான தன் அம்மாவைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? முக்கியமாக
மிஸஸ் நீலா ராமசாமி? மிஸஸ் நீலா ராமசாமி கர்னாடக
இசையைப்பற்றி பேசினாலும் சரி, தமிழ் சினிமாக்களைப் பற்றி பேசினாலும் சரி, இந்திய அரசியலைப்
பற்றி அலசும்போதும் சரி ஆங்கிலத்தில், அதுவும் அமெரிக்க ஆக்ஸன்டோடு (உச்சரிப்போடு)
தான் பேசுவாள். என்னவோ அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள் போல! எட்டாவது வரை மட்டும்
படித்த, ஆங்கிலம் பேசத்தெரியாத தன் அம்மாவைப் பற்றி என்ன நினைப்பாள்? அம்மா வெகுளி.
கேலியாக பேசினால் கூட புரியாது. இங்கிலீஷ் வார்த்தைகளை தப்பும் தவறுமாக உபயோகிப்பாள்.
லாரிக்கு ராலி
என்பாள். டெம்பரெரிக்கு டெம்பரவரி என்பாள். மைல்ட்டுக்கு ஸ்மைல் என்பாள், அன்னௌன்ஸ்
பண்ணிட்டான் என்கிறதுக்கு அலவன்ஸ் பண்ணிட்டான் என்பாள். எத்தனை தடவை அப்பாவும் தானும்
ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்திருக்கிறோம்! பாவம் அம்மா!
தோற்றத்திலும்
அவள் ரொம்ப சாதாரணம் தான். குண்டாக, குட்டையாக இருப்பாள். முகம் களையாக இருந்தாலும்
முன் பல் கொஞ்சம் முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும். பேசும் போது கத்தி பேசுவாள். பக
பகவென்று சிரிப்பாள். தன் ஃப்ரெண்ட்ஸ்களை நினைக்கும் போதே அருணாவுக்கு உள்ளூர கொஞ்சம்
பயமாக இருந்தது. கேவலமாக பார்ப்பார்களோ, இளப்பம் செய்வார்களோ?
அப்பா மட்டும்
இப்போ உயிரோட இருந்தால்! உயரமா கம்பீரமா கவர்ச்சிகரமான பர்சனாலிட்டியா இருப்பார். ஆனால்
‘ஹார்ட் அட்டேக்கில் அவர் போய்ச் சேர்ந்து மூன்று வருஷமாகி விட்டது.
வேதம் நல்ல விதமாக
இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தாள். அருணாவிற்கு வாய்க்கு ருசியாக பொருளங்காய் உருண்டை,
பொரிகொள்ளு என்று என்னெவெல்லாமோ செய்து கொண்டு வந்திருந்தாள். வெகு சீக்கிரமே சமையலறைப்
பொறுப்பையெல்லாம் சகஜமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வேளையும் வித விதமாக சமைத்து மகளையும் ஸ்ரீராமையும் திணர அடித்தாள். ஜெட்லேக்?
அது அவளை பாதித்ததாகவே தெரியவில்லை. அருணாவின் மேல் பாசத்தை கொட்டினாள். அருணாவும்
கொஞ்சம் கொஞ்சமாக தாயின் அரவணைப்பில் தன் பயத்தை மறக்கத்தொடங்கினாள். ஆனால் அடி மனதில்
ஒரு அச்சம் இருக்கத்தான் செய்தது.
இந்த அமெரிக்க
ஊரில் இருந்த சில தமிழ் குடும்பங்கள் அவ்வப்போது ஒன்று கூடுவது வழக்கம். நவராத்திரி
போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் அனைவரும் முறை போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் வீட்டில்
மற்றவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். பாட்டு, டான்ஸ், கேம்ஸ், அரட்டை அடிப்பது என்று
பலவாறாக “எஞ்சாய்” பண்ணுவார்கள். அருணாவும் ஸ்ரீராமும் அந்த ஊருக்கு வந்த சில வாரங்களிலேயே
அந்த கூட்டத்தில் ஒன்றாகிவிட்டார்கள். எல்லோருக்கும் பரஸ்பரம் ஒருவருகொருவர் நன்கு
பரிச்சயம் இருந்தது.
“அந்த நீலா ராமசாமி!
கர்வி. தலை கனம் பிடிச்சவ! நிச்சயமா அம்மாவை எளப்பமா பார்ப்பா. எளக்காரமா பேசுவா. அம்மாவுக்கு
ஒண்ணும் புரியாது. அவள் பாட்டில் பலமா சிரிப்பா, பட்டிக்காடு மாதிரி பேசுவா. எல்லாரும்
கேலியா ஒத்தர ஒத்தர் பார்த்து சிரிப்பா. எனக்கு அவமானத்துல சாகலாம் போல இருக்கும்.”
அருணாவின் அடி மனதில் இந்த எண்ணங்கள் ஓடிக்கொண்டே தான் இருந்தன.
ஒரு வாரம் எல்லாம்
நன்றாகவே ஓடியது. அருணாவின் அச்சமும் கொஞ்சம் குறைந்தது. தாயின் உபசரிப்பில் கொஞ்சம்
கொஞ்சமாக தன் பயத்தை மறக்கத் தொடங்கினாள். அப்போது திடீரென்று வேதம் ஒரு குண்டைப் போட்டாள்.
“அடுத்த வெள்ளிக்கிழமை
உன் வளைகாப்பை வச்சுக்கலாம். நல்ல நாளாயிருக்கு. உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடலாம்.
பிரமாதமா கொண்டாடிடலாம்.”
அதிர்ச்சியுற்ற
அருணா, “அம்மா, எதுக்கு வளைகாப்பெல்லாம்? பெருசா ஒண்ணும் கொண்டாட வேண்டாம்.”
வேதம் புன்னகை
செய்தாள்.
“இப்போ ஒன் நெலமைல
அப்படித் தான் தோணும். நீ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நான் பாத்துக்கறேன். இது
உன்னோட முதல் கர்ப்பம். அதுனால வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் மொறையா செய்யணும். வளைகாப்பை
எல்லாரையும் அழைச்சு சிறப்பா செய்யலாம். சீமந்தம் வேணும்னா சிம்பிளா வீட்டோட செஞ்சுக்கலாம்.
நான் சென்னையிலேர்ந்து நிறைய வேற வேற சைஸ்ல வளையல் வாங்கிண்டு வந்திருக்கேன். ஒனக்கு
புடவை, வளையல் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். தவிர வர ‘கெஸ்டு’களுக்கு கிப்ட் கொண்டு
வந்திருக்கேன்.”
வேதம் பாசத்துடன்
தன் மகளின் கையைப் பற்றினாள்.
“வா, ஒன்னோட பொடவை,
வளயல் எல்லாம் காமிக்கறேன்.”
“வளைகாப்புக்கு
கறுப்புல தான் புடவை வாங்கணும். ஏன்னா திருஷ்டி படக்கூடாது. இல்லியா? எல்லார் கண்ணும்
ஒரே மாதிரியா இருக்காது. சரி,..ஒனக்கு பிடிச்சிருக்கா,
அருணா? உன் சிவந்த ஒடம்புக்கு ரொம்ப நன்னாயிருக்கும். அதுக்கு மேட்சா கருகமணி வளை வாங்கியிருக்கேன்.
அப்புறம் வர கெஸ்ட் எல்லாருக்கும் வளையல்களோட கூட ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொண்டு வந்திருக்கேன்.”
வேதம் புடவையை
பிரித்துக்காட்டினாள். அகல அரக்கு பார்டருடன் கறுப்பு உடலில் ஆங்காங்கே ஜரிகை அன்னபட்சிகள்
பளபளக்க பட்டு புடவை கண்ணை பறித்தது.
“நன்னாயிருக்கும்மா.
மத்தெதெல்லாம் அப்பறம் பார்க்கறேன். டயர்டா இருக்கு.”
“சரிம்மா, படுத்துண்டு
ரெஸ்ட் எடுத்துக்கோ”
வேதம் தன் திட்டப்படி
எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். ஸ்ரீராம், அருணாவின் எல்லா நண்பர்களையும் லிஸ்ட் போட்டுக்கொண்டு
ஃபோனில் பேசி அழைத்தாள். ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்து செய்தாள். நிறைய ஷாப்பிங்க்
போக வேண்டியிருந்தது. ஸ்ரீராம் உற்சாகத்துடன் மாமியாரை ‘மால்’களுக்கு கூட்டிக்கொண்டு
போனான். அவனுடைய உற்சாகத்தை பார்க்க அருணாவுக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.
கடைசியில் அந்த
விசேஷ நாள் வந்தது.
கூப்பிட்டவர்கள்
ஒருவர் விடாமல் எல்லோரும் குடும்பத்துடன் வந்தார்கள். விரைவில் ஹால் நிரம்பி வழிந்தது.
அருணா புதுப்புடவை
அணிந்து தேவதை மாதிரி அறையிலிருந்து வெளியே வந்தாள். என்ன அழகு! கர்ப்பம் அவள் அழகுக்கு மெருகிட்டிருந்தது. ஸ்ரீராமுக்கு
அவள் மேலிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.
வேதம் வழக்கம்
போல் சிரித்துக்கொண்டு உரக்க பேசிக்கொண்டிருந்தாள். அருணா எல்லோரும் அவளை இளக்காரமாக
கேலியாக பார்க்கிறார்களா என்று எல்லார் முகத்தையும் நோக்கினாள். ஆனால் எல்லா பெண்மணிகளின்
கவனமும் இந்த விசேஷ தினத்தை முழுமையாக அனுபவிப்பதில் இருந்தது. அவர்கள் அனைவரும் அருணாவை
சூழ்ந்து கொண்டு அவளுடைய காஞ்சிபுரம் பட்டு புடவையையும் அழகையும் பாராட்டுவதில் ஈடுபட்டனர்.
“ரொம்ப அழகா இருக்கே,
அருணா!”
“யூ லுக் பியூட்டிஃபுல்!”
“கறுப்பு பட்டுல
நீ தேவதை மாதிரி இருக்கே”
எல்லோரும் ஃபோட்டோ
எடுப்பதிலும் செல்ஃஃபீ எடுத்துக்கொள்வதிலும் மூழ்கினர். ஸ்ரீராமோ வீடியோ எடுத்து தள்ளினான்.
வேதம், ஸ்ரீராம்
மற்றும் ஒரு பெண்ணின் உதவியுடன் எல்லோருக்கும் சூடாக குழிப்பணியாரமும், காபியும் தந்தாள்.
“ஓ! ஃபென்டாஸ்டிக்!
, க்ரேட்! ஒண்டர்ஃபுல்!“
எல்லோரும் ரசித்து
சாப்பிட்டனர்.
அப்புறம் வேதம்,
அலங்கரித்த நாற்காலியில் அருணாவை உட்கார வைத்தாள். அருகில் மேஜையில் பல விதமான அட்டைப்பெட்டிகள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
வளைகாப்பு சடங்கை
விநாயகர் பூஜையுடன் வேதம் தொடங்கி வைத்தாள். பிறகு வேதம்
பெண்களை அழைத்தாள்.
“அருணாவுக்கு குங்குமம்,
சந்தனம் இட்டு வளை போடுங்கோ.”
வேதம் இந்தியாவிலிருந்து
கடை கடையாக சுற்றி ரகம் ரகமாக பல டிசைங்களில்
வளையல்கள் வாங்கி வந்திருந்தாள். பெண்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அருணாவிற்கு
நலங்கு இட்டு வளையல் அணிவித்தனர். வளையல்களின் அழகான டிசைன்களை வியந்து பாராட்டினர்.
வளைகாப்புக்காக செய்து வந்திருந்த கருகமணி பதித்த தங்க வளையல்களை வேதம் அருணாவின் கரங்களில்
அணிவித்தாள்.
பிறகு வேதம் எல்லா
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வளையல்கள் கொடுத்தாள். ஸ்ரீராம் ஃபோட்டோக்கள் எடுத்துக்கொண்டே
இருந்தான்.
இது பெண்களுக்கான
சடங்காக இருந்தாலும் ஆண்களும் உற்சாகத்துடன் பங்கெடுத்துக்கொண்டனர்.
அப்புறம் விருந்து!
அப்பா! எப்படிப்பட்ட விருந்து! உருளைக்கிழங்கு ரோஸ்ட், பீன்ஸ் உசிலி, வடை, அவியல்,
பல காய்கள் போட்டு சாம்பார், பாதாம் அல்வா, தேங்காய் பால் பாயசம், பச்சடி, அப்பளம்,
வறுவல், ஊறுகாய்கள் என்று பலவித அயிட்டங்கள்.
“எல்லாம் ரொம்ப
அருமையா இருக்கு. அருணா! நீ ரொம்ப லக்கி! உங்க அம்மா சமையல் உனக்கு தினமும் கிடைக்கும்.”
அனைவரும் ஏக மனதுடன் விருந்தையும் ஏற்பாடுகளையும் புகழ்ந்தார்கள்.
“நானும் தான் லக்கி!”
என்றான் ஸ்ரீராம் புன்னகையுடன்.
வேதம் ஒரு சிறு
புன்னகையுடன் புகழாரங்களை ஏற்றுக்கொண்டாள்.
“ஸோ ஃபார் ஸோ குட்.
இது வரைக்கும் எல்லாம் சரியா நடந்துண்டு இருக்கு.” இந்த சிந்தனை அருணாவின் மனதில் ஓடியது.
“எல்லாருக்கும்
ஒரு சின்ன கிஃப்ட் கொண்டு வந்திருக்கேன்.”
வேதம் எல்லோருக்கும்
ஒரு பாக்கட் கொடுத்தாள்
அருணா தலை நிமிர்ந்து
பார்த்தாள். அதைப்பற்றி முன்பு வேதம் சொன்ன போது அருணா அக்கறை காட்டியிருக்கவில்லை.
அது எதாவது ஸ்வாமி படமோ, குங்குமச்சிமிழோ இருக்கும் என்று நினைத்தாள்.
.பாக்கட்டின் மேலிருந்த
கலர் பேப்பரை பிரித்த நீலா ராமசாமி “வேதம் சாம்பார் பௌடர்!” என்று உரக்க படித்துவிட்டு,
“ஓ! க்ரேட்! நீ சொல்லவே இல்லையே, அருணா? ஹௌ ஒண்டர்ஃபுல்!” என்றாள். எல்லோரும் தங்கள்
தங்கள் பாக்கட்டை பிரித்துப்பார்த்து மகிழ்ந்தனர்.
எதோ அம்மா பிஸினஸ்
தொடங்கியிருக்கிறாள் என்று அருணாவிற்கு தெரியும். ஆனால் அதைப்பற்றியும் அவள் அக்கறை
காட்டியிருக்கவில்லை.
“இன்னிக்கு சாம்பார்
அத்தன டேஸ்டியா இருந்துது. இந்த பொடி தான் போட்டீங்களா, ஆன்ட்டீ?” இது அர்ச்சனா சேகர்.
“ஆமாம்மா”
:ஆன்ட்டி, இது
மாதிரி இன்னும் எதாவது, லைக்.. உம்…ரசப்பொடி..?” இது வந்தனா ஹரி.
வேதம் சிரித்தாள்.
“இருக்கு. எல்லா
விதமும் இருக்கு. தோசை மிளகாய்ப்பொடி, எள்ளுப்பொடி……..”
“எள்ளுப்பொடியா?
அது எனக்கு வேணுமே! மாமி!” என்றாள் நீலா ராமசாமி. எல்லோரும் வேதத்தை சூழ்ந்துகொண்டனர்.
“தந்தா போறது.
ஆனா இப்போ நான் கொண்டு வரல்லை. ஆனால் என் பிள்ளை வருவான். அப்போ கொண்டுவரச்சொல்றேன்.”
“எனக்கும் மாமி”,
“எனக்கும் மாமி”, “எனக்கும் மாமி”, எல்லாரும் ஒரே குரலில் சொன்னதைக் கேட்டு சிரித்தாள்
வேதம்.
“எல்லாருக்கும்
தரேன். நான் இப்ப தான் ஒரு வருஷமா இந்த பிஸினஸை ஆரம்பிச்சிருக்கோம். எல்லாம் என் பிள்ளை
ராஜுனால தான். ராஜு அருணாவோட அண்ணா.”
அருணா சற்று அதிர்ச்சியுடன்
நிமிர்ந்து தன் தாயை பார்த்தாள்.
“அவர் போனதும்
நான் ரொம்ப ‘டௌனா’ இருந்தேன், ராஜு தான் இந்த ஐடியா தந்தான். ஸ்பைஸ் பிஸினஸ் ஆரம்பிக்கற
ஐடியா.”
எல்லோரும் வேதம்
சொல்லுவதை உன்னிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“எனக்கு கொஞ்சம்
தயக்கமா தான் இருந்துது. ஏன்னா எனக்கு இந்த பிசினெஸ்கெல்லாம் மூளை கிடையாது.” வேதம்
பெரிதாக சிரித்தாள்.
ஆனால் யாரும் ஏளனமாக
சிரிக்கவில்லை. அருணாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. எல்லோரும் வேதம் சொல்லுவதை எல்லாம்
கவனமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
வேதம் தொடர்ந்தாள்.
ஆனா ராஜு இருக்கானே
பிடிவாதக்காரன். என்னை விடவே மாட்டேனுட்டான். “நீ வித விதமா பொடிகள், ஊற்காய் எல்லாம்
பண்ணு. அது ஒன்னோட டிபார்ட்மென்ட் அதையேல்லாம் ‘சேல்’ பண்ற டிபார்ட்மென்ட் என்னோடது.”
அப்படின்னான். அவன் அக்கௌன்டென்ட் ஆச்சே!. அப்படி தான் நானும் அவனுமா இந்த பிசின்ஸை
ஆரம்பிச்சோம். என் பேர் தான் வைக்கணும்னு பிடிவாதமா இருந்தான்.”
“ஆமா, உங்க பேரு
வச்சது தான் சரி.” என்றாள் நீலா ராமசாமி தீர்மானமாக..
வேதம் புன்னகை
செய்தாள்.
“அப்புறம் ராஜு
என்ன பண்ணினான் தெரியுமா? நோட்டீஸ் ப்ரின்ட் பண்ணி வீடு, கடை சூப்பர் மார்க்கட் எல்லா
எடத்துலேயும் குடுத்தான். பத்திரிகைகள்ள விளம்பரம் குடுத்தான். ஆரம்பமே நன்னா இருந்துது.
மொதல்ல சின்னதா ஆரம்பிச்சது இப்ப கொஞ்சம் வளர்ந்து பெருசாயிருக்கு. டிவில கூட இப்போ
விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிருக்கான்.. என்னோட இப்போ நாலு பொண்கள் வேல செய்யறா.. ராஜு
இன்னும் விரிவா செய்யணும்னு சொல்றான்.”
எல்லாரும் மிகவும்
சுவாரசியமாக கேட்டனர். வேதத்தின் அடக்கமும், வெகுளித்தனமும் அனைவரையும் கவர்ந்தது.
அருணாவின் மேல் இருந்த எல்லார் கவனமும் இப்போது வேதத்தின் மேல் திரும்பியிருந்தது.
“ராஜு, என் அண்ணா,
அப்பாவின் மூத்த மனைவியின் மகன். அவன் அம்மாவின் கஷ்ட சமயத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறான்.
நானோ கொஞ்சம் கூட தாயின் கஷ்டத்தை உணராமல் சுயநலத்துடன் இருந்து விட்டேன்.” அருணாவின்
மனம் கலங்கியது.
“மாமி, நீங்க உங்க
ப்ராடக்ட்ஸ எக்ஸ்போர்ட் பண்ணலாமே, இங்க ஸ்டேட்ஸுக்கு? நாங்க ஹெல்ப் பண்றோம்” என்றாள்
அர்ச்சனா எனபவள்.
“ஆமா, ஆமா, ரொம்ப
நல்ல ஐடியா, அர்ச்சனா” என்றாள் நீலா ராமசாமி. “இங்க உங்க ப்ராடக்ட்ஸுக்கு நல்ல மார்க்கட்
இருக்கும், மாமி. இங்க இருக்கற இண்டியன்ஸ் அதை எல்லாம் அள்ளிண்டு போவா.”
ஒரே சமயத்தில்
எல்லோரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார்கள்.
அருணா குற்ற உணர்வில்
தவித்தாள். “எல்லாரும் என்னை விட நல்லவா. நான் தான் ரொம்ப கெட்டவ. அல்ப விஷயங்களை பெரிசா
நெனச்சிண்டு தங்கமான அம்மாவை கேவலமா நெனச்சு அவள அலட்சியமா நடத்திட்டேன்.” துக்கத்தின்
பளு மனதை அழுத்த தலை குனிந்துகொண்டாள்.
“அருணாக்கண்ணு!
ரொம்ப டயர்டா இருக்கா? எதாவது சாப்பிடறியா?” தாயின் பாசக்குரலை கேட்டதும் தலை நிமிர்ந்த
அருணாவின் உள்ளம் உருகியது. அவளுக்கு தாயை கட்டிக்கொண்டு, “அம்மா, என்னை மன்னிச்சுடு”
என்று கதறி அழவேண்டும் போல இருந்தது..
“அம்மா, நீ சாப்பிட்டியா?” என்றவளை ஆச்சர்யத்துடன்
பார்த்தாள் வேதம்.
அன்றிலிருந்து
அருணாவின் போக்கில் ஒரு நல்ல மாற்றம் தென்பட்டது.
அம்மாவிற்கு அவள் தடுத்தாலும் சமையலறையில் உதவி செய்தாள். மாலிற்கு சென்று அம்மாவிற்கு வித விதமான பொருள்களை வாங்கி அளித்தாள். தன்னிடம்
அன்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ளும் அருணாவை பார்க்க பார்க்க வேதத்திற்கு மிகவும்
ஆச்சர்யமாக இருந்தது. இந்த அவள் மனமாற்றத்திற்கு என்ன காரணம்? புரியவில்லை என்றாலும்
அவளுடைய மென்மையான உள்ளத்திற்கு சந்தோஷமாக இருந்தது.