Sunday, November 6, 2016

சுயம்வரம்

  ராமிற்கு கவலையாக இருந்தது. இன்று தான் சுயம்வரம். அவன் குடும்பத்தில் எல்லாருக்கும் அவனுடைய அம்மா, தங்கை, தம்பி எல்லோருக்கும் ஒரே டென்ஷன்! எல்லோரும் அவனுக்கு உதவிசெய்வதில் முனைந்திருந்தார்கள்.
பழைய காலத்தில் இளவரசிகளுக்கு சுயம்வரம் வைப்பார்கள் இல்லையா? அரசகுமாரர்கள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். அரசகுமாரி ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் கழுத்தில் மாலையிடுவாள் . இந்த காலகட்டத்தில் சுயம்வரம் திரும்பவும் வழக்கத்தில் வந்துவிட்டது.
நேற்று அவனுடைய தங்கை கிருஷ்ணா அவனுடன் ஆண்கள் ப்யூட்டி பார்லருக்கு  போய் அவனுடைய முகம் தலை முடி, கைகள், பாதங்கள் எல்லாம் அழகுப் படுத்திக் கூட்டிக்கொண்டு வந்தாள். இப்போது உடை அணிவது மட்டும் தான் பாக்கி. சூட்டா இல்லாவிட்டால்,  ஷெர்வாணி குர்தாவா? கிருஷ்ணா ஷெர்வாணி குர்தாதான் என்று தீர்மானமாக சொன்னாள்.
ராம் உடை அணிந்து ரெடியாகி விட்டான். அவனுக்கு மனதில் ஆவலான எதிர்பார்ப்பு, அதே சமயம் கொஞ்சம் அச்சமும் இருந்தன.
“அசல் மாப்பிள்ள மாதிரி இருக்கே” என்றாள் அவன் தாய் வாஞ்சையுடன். ராம் தன்னை கொஞ்சம் திருப்தியுடன் பார்த்துக்கொண்டான்.
“அம்மா, நீ இல்லாட்டா கிருஷ்ணாவாவது என்னோட வந்தா நல்லா இருக்கும். கொஞ்சம் தைரியமா இருக்கும்.” என்றான் அசட்டு சிரிப்புடன்.
“நல்லா தான் இருக்கும். ஆனா யாரும் கூட வரக்கூடாதுன்னு ரூல் இருக்கே, என்ன பண்றது?”
ராமின் மனதில் சிந்தனைகள் ஓடின. “லேட்டாக போகக்கூடாது. 50 பேர்ல மூணு பேர் தான் அழைக்கப் பட்டிருக்காங்க. வெற்றிங்கறது ஒரு நூலிழைல தான் தொங்கிட்டிருக்குது. சரியான டயத்துக்கு போறது முக்கியம். இந்த வாட்டி வெற்றி அடையணும். எப்படியெல்லாம் நடந்துக்கணும், பேசணும்னு கிருஷ்ணா அவளுடைய அனுபவத்திலிருந்து சொல்லி கொடுத்திருக்கா. . இந்த வாட்டி வெற்றி நிச்சயம்.”
போன வருடம் தான் கிருஷ்ணா தனக்கு சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்திருந்தாள். அவளுடைய அனுபவம் கை கொடுத்தது.
டாக்ஸியில் அமர்ந்த அவன் அன்றைய செய்தித்தாளை பிரித்தான்.  பெரிய அச்சில், “ஆண் சிசுக்கள் வதை அதிகரிப்பு! முதன்மந்திரி கவலை!  வேண்டாத ஆண் குழந்தைகளை கொண்டு வந்து விட ஆங்காங்கே தொட்டில்கள் வைக்க ஆணை!.”
தலைப்பு அவனைஅதிரவைக்கவில்லை. இந்த மாதிரி செய்திகள் சர்வசாதாரணமாகி விட்டன.
அவன் இடத்தை அடைந்த போது மற்ற இரண்டு பேரும் ஏற்கனவே வந்திருந்தார்கள். மூன்று பேரும் ஒருவரை ஒருவர் போட்டி, பொறாமையுடன் பார்த்துக்கொண்டாலும் செயற்கையாக புன்னகை செய்ய தவறவில்லை. அவர்களும் ஷெர்வாணி குர்தாஅணிந்திருந்தனர். மூன்று பேரும் அசப்பில் ஒரே அச்சில் வார்த்தது போல இருந்தனர். மூன்று பேரும் நன்றாக டிரஸ் செய்து ஆணழகர்களாக காட்சியளித்தனர்.  மூன்று பேர் கையிலும் ஒரே மாதிரி பை. ஸ்டார் சிங்கர் ரீயாலிடி ஷோ மாதிரி மூன்று பேருக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. படிப்பு, வேலை, சம்பளம், ரசனைகள், தவிர வீட்டில் உதவி செய்ய ஒரு தாயோ, சகோதரியோ உண்டா இது போல நிறைய விஷயங்களுக்கு மார்க் அளிக்கப் பட்டிருந்தது. இதற்காக விண்ணப்ப தாள்கள் நிரப்ப வேண்டியிருந்தது. தங்கை கிருஷ்ணா தான் அவனுக்கு ஃபாரம்களை நிரப்ப உதவி செய்திருந்தாள்.
மூன்று பேருக்கும் சமமான மதிப்பெண்கள். அதனால் யார் தேர்ந்தெடுக்கபடுவார்? ராமா, அல்லது மற்ற இருவரில் ஒருவரா? அவர்களை நம்பர் 2, நம்பர் 3 என்று குறிப்பிடலாம்.
ராமிற்கு ஒரே கவலை! டயம் ஆக ஆக அவன் டென்ஷனும் அதிகரித்தது. இந்த சுயம்வரத்தில் வெற்றி அடையாவிட்டால் இந்த நகரத்தில் நடக்க இருக்கும் இன்னொரு சுயம்வரத்திற்கு போக வேண்டி வரும். தொந்தரவு. மேலும் அது இரண்டாம் பட்சம் தான்.
நேர்காணல் தொடங்கியது. ஒரு வரவேற்பு மேஜையில் அமர்ந்திருந்த ஒரு பெண்  ஒவ்வொரு பெயராக கூப்பிட்டாள். அவர்களை சோதனைக்குப்பிறகு ஒரு சௌகர்யமான அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கே ஒரு சோபாவில் இளவரசி போல் கம்பீரமாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண். அவள் தான் சுயம்வரம் நடத்தும் மங்கை. அவள் அவர்கள் மூவரையும் பார்த்து புன்னகை செய்தாள். “உட்காருங்கள்” என்றாள் இனிய குரலில். மூவரும் ஹெட்மாஸ்டர் முன் உட்காரத் தயங்கும் மாணவர்களைப் போல் தயக்கத்துடன் நாற்காலி நுனியில் அமர்ந்தனர். ஒரு பையன் மூவருக்கும் பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தான்.
“வெல்கம். நீங்க மூணு பேருமே ஒரே மாதிரி மார்க் எடுத்திருக்கீங்க. அதனால உங்க மூணு பேருக்கும் ஒரு டெஸ்ட் வைக்கப்போறேன்.”
இதுவும் வழக்கம் தான். பண்டைய காலத்து ராஜகுமாரிகள் மாதிரி இந்த காலத்தில் பெண்கள் போட்டி வைப்பது சாதாரணமாகிவிட்டது.
அந்தப் பெண் மேலும் சொன்னாள், “அது ஒரு சமையல் போட்டி. என்ன சரியா?”
சரின்னு மூன்று பேரும் தலையாட்டினர்.
“நீங்க மூணு பேரும் வத்தக்குழம்பு பண்ணனும்.”
“வத்தக்குழம்பா?”
ராமிற்கு கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டது. மற்ற இருவரும் அதிர்ந்தனர்.
“ஆமா. வத்தக்குழம்பு.”
“நான் சாம்பார் நல்லாசெய்வேன்” இது நம்பர் 1.
“வத்தக்குழம்பு வைக்கத்தெரியுமா?”
“என்னால கத்துக்க முடியும்.”
கொஞ்சம் இளப்பத்துடனும் இரக்கத்துடனும் அந்தப் பெண் அவனை பார்த்தாள்.
“நான் ரொட்டி, சப்ஜி எல்லாம் ரொம்ப நல்லா செய்வேன். நெறைய டிஷஸ் எனக்கு தெரியும்” இது நம்பர் 2.
“அதெல்லாம் சரி. ஆனா போட்டி வத்தக்குழம்பு செய்யறது. பாட்டியெல்லாம் செய்வாங்களே மண மணக்க, அந்த மாதிரி வத்தகுழம்பு பண்ணத் தெரியுமா தெரியாதா?”
ராம், “எனக்குத் தெரியும். எங்கம்மா கத்துக்கொடுத்திருக்காங்க. வேணும்னா நான் செஞ்சு காட்டறேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அந்தப் பெண் அவனைப்பார்த்து புன்னகை செய்தாள்.
“ஓ! வெரி குட். வாங்க. சின்ன வெங்காயம், முருங்கைக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய் எல்லாம் ரெடியா இருக்கு. வாங்க.”
அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். மற்ற இருவரும் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறினர்.
யார் ஜெயிச்சாங்கன்னு சொல்லணுமா? ராமின் உள்ளம் சிறகடித்துக்கொண்டு ஆகாயத்தில் பறந்தது.
“சடக்”கென்று விழித்துக்கொண்டான். அவன் அம்மா அவனை குலுக்கி ஆட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள்.
“என்னடா தூக்கத்துல வத்தக்குழம்பு, வெங்காயம், வெண்டைக்கான்னு உளறிட்டிருக்கே? சரியான தூங்குமூஞ்சி! இன்னிக்கு என்ன நாள், ஞாபகம் இருக்கா?”
“ஆங்,  சுயம்வரமா?”
“சுயம்வரமா, என்னடா உளர்றே? எந்திரிச்சு ரெடி பண்ணிக்கோ. “
“என்ன ட்ரெஸ்? ஷெர்வாணியா?”
“இதென்னடாது என்னன்னவோ சொல்றான்! இப்ப எதுக்கு ஷெர்வாணி கிர்வாணியெல்லாம். பேசாம பேன்ட் டீ-ஷைர்ட் போட்டுக்கோ. கல்யாணத்துக்கா போறோம்? பெண் வீட்டுக்காரங்கள சந்திக்கப் போறோம். மறந்துட்டியா? பகல் கனவு கண்டுட்டு உளறிட்டிருக்கே.”
“ நீ கூட வருவியா, அம்மா?”
“பின்னே என்ன? நானு, அப்ப, தங்கச்சி எல்லாரும் தான் வருவோம்.”
”சுயம்வரம் எங்கம்மா நடக்குது?“
“ஐயய்யோ! இவனுக்கு என்னவோ ஆயிடுச்சு. சுயம்வரம் கியம்வரம் எல்லாம் ஒண்ணும் இல்லை. அந்த ராஜகுமாரிக்கு நீ ஒருத்தன் தான் ராஜகுமாரன். நல்லா உளர்றே. சுயம்வரமாம்! தூக்கத்துல எதோ கனவு கண்டிருக்கான்” அவன் அம்மா பெரிதாக சிரித்தாள்.
“போய் குளிச்சுட்டு வா. நான் காபி கொண்டுவரேன்”
எல்லாம் கனவா? ராமிற்கு தலை சுற்றியது. “நல்ல வேளை. 2016ல் இருக்கேன். 2076ல் நான் இருக்க மாட்டேன்.  சரி, போய் நல்லா குளிச்சு ஒரு காபி குடிச்சா  ஃப்ரெஷ் ஆயிடும். இல்லாட்டா எதாவது உளறிட்டே இருப்பேன்! அப்பா! கனவு நெஜம் மாதிரியே இருந்திச்சு.” எழுந்து குளிக்கப் போனான்.




Thursday, October 6, 2016

திருடினது யார்?

எல்லாரும் ஆர்த்தியை புஸ்தகப்புழு என்பார்கள். எதாவது புத்தகத்தில் மூழ்கியிருப்பாள் அல்லது லேப்டாப்பில் எதாவது செய்து கொண்டிருப்பாள். எப்போதும் கலைந்த கூந்தலுடன், மூக்கில் மூக்குக்கண்ணாடியுடன் அவள் புஸ்தகப்புழுவாக காட்சியளிப்பாள்.

ஒரு நாள் ஆர்த்தி புத்தகத்தில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்தாள். அவளுடைய அம்மா, “ஆர்த்தி, புஸ்தகத்த மூடு. எப்போ பார்த்தாலும் படிச்சுக்கிட்டே இருந்தா ஒடம்பு எனனத்துக்கு  ஆகும்? போய் காத்தாட ஒரு வாக் போய்ட்டு வா.” என்று அதட்டினாள்.

“ஊம்? என்ன? என்ன சொன்னே, அம்மா?” என்றாள் ஆர்த்தி தலையை புத்தகத்திலிருந்து தூக்காமல்.

அவள் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கிய அவள் தாய், “எந்திரி, இந்த நிமிஷம் ஷூ போட்டுட்டு வாக் போறே. இப்படி வீட்டிலேயே அடைஞ்சு கெடந்தா ஒடம்பு கெட்டுப்போகும். போ, கெளம்பு!” என்று  அதட்டினாள்.

“சரி, போறேம்மா” என்று மனசில்லாமல் எழுந்து உடை மாற்றிக் கொண்டு ஷூ அணிந்து கொண்டு கிளம்பினாள். வேகமாக நடந்தாள். அவள் மனம் இன்னும் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலேயே இருந்தது. திடீரென யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் அவளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. 
சுற்று முற்றும் பார்த்தாள்.  சாலை ஓரத்தில் ஓரமாக உட்கார்ந்து ஒரு பெண் முழங்காலில் தலையை புதைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அருகில் ஆர்த்தி வரும் சப்தம் கேட்டு அந்தப் பெண் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆர்த்திக்கு ‘ஷாக்’க்காக இருந்தது. அது வேணி! அவள் வீட்டில் வேலை செய்யும் பெண்!

ஆர்த்தி அவள் அருகில் சென்று, “வேணி, ஏன் அழுதுட்டிருக்கே? என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
ஆர்த்தியைப் பார்த்ததும் வேணி பலமாக அழ ஆரம்பித்தாள். களைத்திருந்த அவளைப் பார்க்க ஆர்த்திக்கு பாவமாக இருந்தது.  “வேணி, சாப்பிட்டியா?”

இல்லை என்று வேணி தலையாட்டினாள்.

“சரி, வா. வீட்ல போய் எதாவது சப்பிடலாம். வா, எந்திரி.”

“வேண்டாம், அக்கா, எனக்கு ஒண்ணும் வேண்டாம்.” வேணி பலமாக விம்மிக்கொண்டு, “அக்கா, என்னை திருடின்னு சொல்லிட்டாங்க. நான் எதுக்கு உயிரோட இருக்கனும்? நான் செத்துப் போறேன்.”

ஆர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“யாரு உன்னை திருடின்னு சொன்னாங்க?”

“அவங்க தான். சிந்து வீட்ல. நான் அங்கேயும் போறேன் இல்லே? அவங்க வீட்ல ஒரு தங்க செயினைக் காணுமாம். நான் தான் அத எடுத்தேன்னு சொல்றாங்க. நான் செயினை திருப்பிக் குடுக்கல்லேன்னா என்னை போலீஸ்ல புடிச்சு குடுத்துருவாங்களாம். நான்  செயினை எடுக்கவே இல்லையே, எப்படி திருப்பி குடுக்க முடியும்? எனக்கு பயம்மா இருக்கு அக்கா. போலீஸ் என்னை அடிப்பாங்க.”

வேணிக்கு பதினைந்து வயது தான் இருக்கும். ஏழை. படிக்காதவள். இரண்டு, மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்தாள். அவள் அப்பா குடிகாரனாம். அவளுடைய அம்மாவும் அவளும் உழைத்து சம்பாதிக்கும் கொஞ்சம் பணத்தில் தான் அவர்கள் குடும்ப வண்டி ஓடியது.

ஆர்த்தி வேணியின் கையை பிடித்து அன்புடன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

“அம்மா, வேணிக்கு எதாவது திங்க குடு. அவ ஒண்ணுமே சாப்பிடலையாம்.”
ஆர்த்தியின் அம்மா வேணிக்கு ரொட்டி, ஜாம், டீ எல்லாம் கொடுத்தாள்.

“முதல்ல சாப்பிடு. அப்புறமா என்ன நடந்திச்சுன்னு சொல்லு.” என்றாள் ஆர்த்தியின் அம்மா இரக்கத்துடன்.

அழுகைக்கு நடுவே நடந்ததை விவரித்தாள் வேணி.

சிந்துவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விரைவில் நடக்கப் போகிறது.  முந்தின தினம் சிந்துவின் அம்மா அவளுக்கு வாங்கின நகைகளை வீட்டிற்கு வந்திருந்த சிநேகிதிகளுக்கு காட்டிவிட்டு பிறகு நகைகளை அதன் ஜிப் பையில் வைத்து தன் அறையில் பீரோவில் வைத்து பூட்டினாளாம். பிறகு வழக்கம் போல் பீரோ சாவியை பீரோவின் மேல் வைத்தாளாம். இது நடந்தது நேற்றைக்கு. இன்று காலை நகைகளை பேங்க் லாக்கரில் வைப்பதற்காக எடுத்தாளாம். எதற்கும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க பையை திறந்து பார்த்தாளாம். அதில் ஒரு தங்க செயினை காணோமாம். முந்திய தினம் மாலையிலிருந்து இன்று காலை 10 மணிக்குள் அந்த செயின் மாயமாய் மறைந்து விட்டது. காலையில் அந்த அறையை  கூட்டுவதற்காக உள்ளே வேணி போயிருக்கிறாள். அதனால் வேணி அப்போது அந்த செயினை எடுத்திருக்க வேண்டும் என்று சிந்துவின் அம்மா அவளை குற்றம் சாட்டியிருக்கிறாள்.

“நான் அந்த செயினை பார்த்ததே இல்லீங்க.” வேணி விம்மினாள்.

“அழுகைய நிறுத்து. வேணி. நீ சங்கிலியை எடுக்கல்லேன்னா யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது.” என்றாள் ஆர்த்தியின் அம்மா அன்புடன்.
“ஆனா நிச்சயமா நீ எடுக்கலையே?” ஆர்த்தி இப்படி கேட்டதும் இன்னும் பலமாக அழ ஆரம்பித்தாள் வேணி.

நீங்களும் நான் திருடின்னு சொல்றீங்களா, அக்கா?”
“இல்லவே இல்ல. நான் உன்னை சந்தேகப்படல்ல. நீ எடுக்கல்லேன்னா நீ பயப்பட தேவையில்ல. அதைத்தான் சொல்ல வரேன். உனக்கு நான் உதவி செய்யணும்னா என் கிட்ட எல்லாம் விவரத்தையும் சொல்லணும். நீ எடுக்கல்லேன்னா வேற யாராவது எடுத்திருக்கனும் இல்லையா? அது யாருன்னு நாம கண்டு பிடிக்கணும்.”

வேணி கண்களை அகல விரித்தாள்.
“ஆர்த்தி அக்கா, அவங்க வீட்ல இருந்தவங்க எல்லாரும் சொந்தக்காரங்க. நான் ஒருத்தி தான் வெளிலேயிருந்து போனேன்.”

“அதனால திருடினது யாருன்னு நாம கண்டு பிடிக்கணும். அப்பொ தான் நீ நிம்மதியா இருக்க முடியும். வீட்ல இருக்கறவங்க யாரோ தான் எடுத்திருக்காங்க. அதனால தான் நான் கேக்கறேன் சிந்து வீட்ல யாரெல்லாம் இருக்காங்க இப்போ?”

“சிந்து, அவ அப்பா, அம்மா, அப்பறம் சிந்துவோட அத்தை, அவங்க பொண்ணு பிரியா, அப்புறம் சிந்துவோட மாமா.”
ஆர்த்தி யோசித்தாள்.
“சிந்துவோட  அம்மா, சிந்து இவங்கள விட்டுரலாம். அப்போ பாக்கி இருக்கறது நாலு பேர்.”
“சிந்துவோட அப்பா? அவரா இருக்காதே, ஆர்த்தி?” என்றாள் அவள் அம்மா.
“சொல்ல முடியாதும்மா. அந்த நாலு பேர்ல ஒத்தர்” என்றாள் ஆர்த்தி அழுத்தம் திருத்தமாக.

 “வேணி, நீ எத்தன மணிக்கு வேலைக்கு அவங்கவீட்டுக்குப் போனே?” என்று கேட்டாள் ஆர்த்தி.
“9 மணிக்கு.”
“சரி, வேணி, இப்ப நீ வீட்டுக்குப் போ.”
வேணி கொஞ்சம் சமாதானத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள்.
“அம்மா, நான் சிந்து வீட்டுக்கு போய்ட்டு வரேன்.”
ஆர்த்தியின் தாய் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தாள். யார் வீட்டுக்குமே சாதாரணமா போக மாட்டாளே!

“நான் வேணி விஷயம் எல்லாம் பேச மாட்டேன். சும்மா சிந்துவை பார்க்கற மாதிரி போறேன். சிந்து பேச்சுலேயிருந்து எதாவது “க்ளூ” கிடைக்கும். வேணி எடுக்கல்லங்கறத நிரூபிச்சா போறும். பாவம். எப்படி அவங்க அவ மேல பழி சுமத்தறாங்க? ஏழைங்கறதுனால தானே”
ஆர்த்தியின் அம்மா அசந்து போனாள்.

சிந்து, ஆர்த்தியை சந்தோஷத்துடன் வரவேற்றாள். “வா, ஆர்த்தி. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. நீ கல்யாணத்தின் போது என் கூடவே இருக்கணும். சரியா? சாரீஸ் எல்லாம் இன்னும் வாங்கல்ல. நகை எல்லாம் பண்ணியாச்சு.”
“அப்படியா?”
“ஆமா, ஆர்த்தி, சிகப்பு கல் நெக்லஸ், வளையல், ஜிமிக்கி எல்லாம் செஞ்சிருக்காங்க. உனக்கு காட்டணும்னு ஆசையாயிருக்கு. ஆனா அம்மா எல்லாத்தையும் லாக்கர்ல வச்சுட்டாங்க”.
“அப்படியா?”
“ஆமா, ஆர்த்தி, மொதல்லையே லாக்கர்ல வச்சிருக்காலாம். அப்போ வேணி அந்த செயினை திருடியிருக்க மாட்டா.”
“வேணி திருடினாளா? அவ சாதுவாச்சே! ஏன் அவள திருடின்னான்னு சொல்றீங்க?”
“ஆமா, ஆர்த்தி. நேத்து சாயங்காலம் அம்மா பீரோவுல வச்சு பூட்டியிருக்காங்க.  அதுக்கப்புறம் யாரும் எங்க வீட்டுக்கு வரல்ல. எங்கம்மா சொல்றாங்க வேணி தான் அந்த ரூமுக்கு போயிருக்கா. அவ தான் எடுத்திருக்கணும்னு.”
“எந்த பீரோ?” என்று ஆர்த்தி கேட்டாள்.
“வா, காட்டறேன். அப்புறம் உன்னோட நெறைய பேசணும்.”

சிந்து ஆர்த்தியை தன் பெற்றோர் அறைக்கு கூட்டிச் சென்றாள்.
“இந்த பீரோதான். நேத்து மாலைல எங்கம்மா நகைகள தன்னோட ஃப்ரெண்ட்ஸ்களுக்கு காட்டிட்டு இந்த பீரோல வச்சு பூட்டியிருக்கா.”
“அப்போ எத்தனை மணி? “
“நாலு மணி இருக்கும்.”
“வேணி அப்போ இங்க இருந்தாளா?”
“அவ எப்படி அப்போ இருப்பா? அவ காலையில் தானே வரா!”
“வேணி பீரோவைத் திறந்து செயினை எடுத்திருக்கான்னு சொல்றீங்களா?”
“ஆமா, அப்படித்தான் இருக்கணும்.”
“பீரோ சாவி எங்க இருந்தது?”
“பீரோ மேல. எப்பவும் எங்கம்மா அங்க தான் வைப்பாங்க.”

ஆர்த்தி பீரோ அருகே சென்று பீரோ மேலே எட்ட முயற்சித்தாள்.
“பாரு, சிந்து, எனக்கே எட்டறது கஷ்டமா இருக்கு. வேணி என்னை விட குட்டை. அவளால எப்படி எடுத்திருக்க முடியும்? ஒரு ஸ்டூலோ சேரோ இல்லாம அவளால சாவிய எடுத்திருக்க முடியாது. இந்த ரூம்ல சேரோ ஸ்டூலோ இல்ல”
இதை கேட்டதும் சிந்து முகத்தில் குழப்பம்.

ஆர்த்தி உறுதியுடன் கூறினாள், “சாவிய எடுக்க வேணிக்கு ஒரு ஸ்டூலோ சேரோ வேணும். அதுக்கு அவ டைனிங் ரூமுக்கோ, சமையல் ரூமுக்கோ போயிருக்கணும். காலை நேரத்தில் வீட்ல எல்லாரும் இருந்த போது அவளால் யாருக்கும் தெரியாமல் அத எடுப்பது இம்பாஸிபிள். அப்படி ஒரு ஸ்டூலை அவள் எடுத்துக் கொண்டு போயிருந்தாலும், அது மேல ஏறி சாவியை எடுக்கணும், கொத்திலிருந்து சரியான சாவிய கண்டு பிடிச்சு பீரோவைத் திறக்கணும். நகைப்பையை எடுத்து சங்கிலியை எடுத்துக்கிட்டு பைய மூடி மறுபடியும் பீரோவுல வச்சு பீரோவைப் பூட்டி பழையபடி சாவிய பீரோ மேல வச்சிட்டு சங்கிலியை தன் ஜாக்கட்ல ஒளிச்சுக்கிட்டு, அப்புறம் ஸ்டூலை யாரும் பார்க்காமல் பழையபடி கொண்டே போடணும். இதுக்கெல்லாம் எவ்வளவு டயம் ஆகும்? எல்லாரும் வீட்ல இருக்கறச்சே இதெல்லாம் சாமர்த்யமா செய்ய வேணிக்கு மூளை இருக்குன்னு நெனக்கிறியா?”
சிந்து முகத்துல கலவரம்.

“ஆர்த்தி, நீ சொல்றத பார்த்தா....வேணி எடுத்திருக்கமாட்டான்னு தோணுது. ஆனா வேற யார் எடுத்திருப்பா? வேற யாரும் வரல்லியே?”
“சிந்து, வேணி நிச்சயமா எடுக்கல்ல. நீங்க அவள வீணா குத்தம் சொல்லிட்டிருக்கீங்க. பாவம். ஏழை.”
“ஆனா யார் திருடியிருப்பாங்க? அதை கண்டு பிடிக்கணுமே.”
“அதுக்கு வேற யாருக்கு எடுக்க வாய்ப்பு இருந்திச்சுன்னு கண்டுபிடியுங்க. நேத்தைக்கு சாயங்காலம் யார் வீட்ல தனியா இருந்தாங்கன்னு பாருங்க. அப்போ நிஜத் திருடன் இல்லாட்டா திருடி யாருன்னு கண்டுபிடிக்கலாம். சரி. சிந்து, நான் வரேன்.”

ஆர்த்தி வீட்டுக்கு வந்து தன் தாயிடம் எல்லாவற்றையும் சொன்னாள்.
“அம்மா, இனிமே வேணியை குத்தம் சொல்ல மாட்டாங்க.”
“அப்போ யார் திருடியிருப்பாங்க?”
“பாரு, சீக்கிரமே வெளில வரும்” என்றாள் ஆர்த்தி மர்மமாக.

அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு சிந்துவின் அம்மா வந்தாள்,
அவள் ஆர்த்தியின் அம்மாவிடம் “வேணியை நாங்க குத்தம் சொன்னது ரொம்ப தப்பு. ஸாரி. அவ எடுக்கல்லன்னு தெரிஞ்சு போச்சு. நேத்தைக்கு ஆர்த்தி வந்துட்டு போனப்புறம் சிந்து எல்லாம் சொன்னா. சிந்துவோட அப்பா யார் எடுத்தாங்கன்னு கண்டுபிடிச்சுட்டார்.”என்றாள்.
“யார் அது?”
சிந்துவின் அம்மா கொஞ்சம் தயக்கத்துடன், “சரி, சொல்றேன், நேத்தைக்கு நான் ஃப்ரெண்ஸுக்கு நகைகளை காட்டினப்புறம் பீரோவுல வச்சு பூட்டிட்டு நாங்க கோவிலுக்கு போனோம். என் வீட்டுக்காரரும் அவரோட தங்கச்சியும்  வரல்லேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என் வீட்டுக்காரர் வாக்கிங் போயிருக்காரு. அதனால அவரோட தங்கச்சி வீட்ல ஒரு மணி நேரத்துக்கு மேல  தனியா இருந்திருக்கறா. நேத்தைக்கு ராத்திரி என் வீட்டுக்காரர் அவள தனியா கூப்பிட்டு மிரட்டி விசாரிச்சிருக்கார். அவள் கடைசில சங்கிலிய எடுத்ததா ஒத்துக்கிட்டா.”

“எனக்கும் ஒரு பொண்ணு இருக்குது. அவளுக்கு ஒண்ணுமே இல்ல. சிந்துவுக்கு எத்தன இருக்கு! அதனால தான் நான் ஒரே ஒரு செயினை எடுத்துக்கிட்டேன். அதுல என்ன தப்பு?” அப்படீன்னு சொன்னா. நான் தான் அவசரப்பட்டு வேணியை குத்தம் சொல்லிட்டேன்.”

“செல்வி, வேணி ஏழைங்கறதுனால உனக்கு அவளை குத்தம் சாட்டறது ஈஸியாயிடுச்சு. நீ பண்ணினது ரொம்ப தப்பு” என்றாள் ஆர்த்தியின் அம்மா.

“அதனால தான் நான் இப்ப வந்தேன். வேணி உங்க வீட்டுக்கு வந்திருப்பா, அவளப் பார்த்து ஸாரி சொல்லிட்டு நாளைலேயிருந்து வேலைக்கு வரச் சொல்லத்தான் நான் வந்தேன். நல்லா வேலை செய்வா. எங்கே அவ?”

இதை கேட்க ஆர்த்திக்கும் அவள் அம்மாவிற்கும் வெறுப்பாக இருந்தது.

உள்ளேயிருந்து வேணி அவர்கள் இருந்த ஹாலிற்கு வந்தாள். அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் சிந்துவின் அம்மா குழைவான குரலில், “ஆ, இங்க இருக்கியா வேணி. நான் சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காதே. அவசரப்பட்டுட்டேன். ஒண்ணும் நெனைச்சுக்காதே. நீ பழையபடி வேலைக்கு வா. என்ன? சிந்து கல்யாணத்துக்கு உனக்கு நல்ல சீலை எடுத்து தரேன்.”

ஆர்த்தியும் அவள் அம்மாவும் வேணி என்ன சொல்வாள் என்று ஆவலாக அவளை பார்த்தனர்.
“வேண்டாம் அம்மா, எனக்கு என் நேர்மை ஒண்ணு தான் சொத்து. வேற எதுவும் கிடையாது. அத நான் இழக்க விரும்பல்ல.” சொல்லி விட்டு வேணி உள்ளே போய்விட்டாள்.
சிந்துவின் அம்மா ஏமாற்றத்துடன் வெளியேறினாள்.

“ஆர்த்தி, உன்னை வெளில வாக்கிங் போன்னு அனுப்பினது எவ்வளவு நல்லதா போச்சு, பாத்தியா?” என்றாள் அவள் அம்மா.
“ஆனா, நான் வாக்கிங்க் போகல்லியே, பாதியிலேயே வந்துட்டேனே” என்று சிரித்த ஆர்த்தி லேப்டாப்பை திறந்தாள்.






Tuesday, September 6, 2016

இப்படியும் நடக்கலாம்!

ஹல்லோ!  ஹல்லோ!
ஹல்லோ!  யாரு?”
மிஸ்டர் கங்காதரனா?”
ஆமா. நீங்க யாரு?”
என் பேரு கோபாலன். ஸார். சமீபத்துல தான் சர்வீஸ்லேர்ந்து ரிடயர் ஆனேன்.  விஷயம் என்னன்னா எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு கல்யாணம் செய்யணும்…”
, அதுவா விஷயம்? மிஸ்டர் கோபாலன், எனக்கு அந்த மாதிரி பையன் யாரும் இல்லையே! என் பசங்கள் எல்லாம் ஸ்கூலுக்கு போறவங்க.”
இல்ல ஸார், நான் அதுக்கு சொல்லல்ல. என் பொண்ணுக்கு வரன் தேடி முடிச்சாச்சு. உங்க கிட்ட வேற ஒரு உதவி கேக்கறதுக்குத் தான்கால்பண்ணினேன்.”
ஸாரி, பணம் கேட்டிங்கன்னா என்னால குடுக்க முடியாது.” கண்டிப்பாக சொன்ன கங்காதரன் ஃபோனை ஆஃப் பண்ணப் போனான்.
ஸார், ஸார், நான் பெரிய எமௌன்ட்  எதுவும் உங்க கிட்டேயிருந்து கேக்கல்ல. பகவானோட அருளால எனக்கு போதுமான வருமானம் இருக்கு. என்ன நடந்துதுன்னு சொல்றேன். என் பொண்ணுக்கு ஆறு வருஷமா கல்யாணம் முடிக்கணும்னு பாத்துண்டிருக்கேன்அவ ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குஅதனால அவ கல்யாணம் செட்டில்ஆகாம தள்ளிப் போயிண்டே இருந்துது. எனக்கு ஒரே கவலை.
கோபாலன், எனக்கு நெறைய வேலை இருக்கு…..”
ஒரே ஒரு நிமிஷம் கேளுங்கோ, நான் ரொம்ப கவலப் பட்டேன் ஸார். அப்பொ என் மனைவி பெரிய ஸ்வாமிகள போய் பார்த்து நம்ப பிரச்னையப் பத்தி சொல்லுங்கோன்னு யோசனை தெரிவிச்சா. அவர் நிச்சயமா நல்ல வழி காமிப்பார்னு சொன்னா. சரின்னு நானும் ஸ்வாமிகளப் போய் பார்த்தேன்,  ஸார். என்னோட கவலயை அவர்கிட்ட தெரிவிச்சேன். அவர் நான் சொன்னதை எல்லாம் பொறுமையா கேட்டார்.  பிறகு  சொன்னார்,  “பகவான்கிட்ட பிரார்த்தனை செஞ்சுக்கோ, பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனா பிச்சையெடுத்து கிடைக்கற  பணத்துல தாலி செய்யறதா வேண்டிக்கோ. ஒரு மஞ்சத்துணில ஒரு ரூபா காசை முடிஞ்சு உன் ஆத்துல சாமிகிட்ட வையி. வச்சுட்டு பொண்ணு கல்யாணம் ஆகணும்னு மனஸார வேண்டிக்கோ,  உன் பொண்ணு கல்யாணம் ஆறு மாசத்துக்குள்ள நிச்சயமாயிடும்” அப்டீன்னு சொன்னார். ஸார், நீங்க நம்ப மாட்டீங்க, நான் காசை முடிஞ்சு வச்ச ரெண்டு வாரத்துலேயே என் பொண்ணுக்கு ஒரு நல்ல எடத்துல கல்யாணம் நிச்சயமாயிடுத்து. அடுத்த மாசம் கல்யாணம். இப்போ நான் என்  வேண்டுதல, அதாவது பிச்சை எடுத்து தாலி வாங்கணும், அதை நிறைவேத்தணும். எதேச்சையா உங்க பேரை டைரக்டரில பார்த்தேன். என் அப்பா பேரும் கங்காதரன் தான். அதுனால தான் உங்கள கூப்படலாம்னு தோணித்து. நீங்க எதாவது கொடுங்க, ஒரு ரூபாயாக இருந்தாலும் வாங்கிக்கறேன்.”
கங்காதரனுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.
கோபாலன் மேலே தொடர்ந்தார். “ஸார்நீலகண்டன்ன்னு இந்த ஊர்ல இருக்கார்அவரும் உங்க மாதிரி ஆபீஸர் தான்அவர் 500 ரூபா குடுத்து ஹெல்ப் பண்ணினார். அவர் ஃபோன் நம்பர் தரேன். நீங்க வேணும்ன அவர் கிட்ட  விசாரியுங்கோ. “
கோபாலன் ஒரு நம்பர் தந்தார்.
மனைவி பத்மாவிடம் பேசிவிட்டு கங்காதரன் கூறினான், “ ஓகே, கோபாலன், நான் அவர்கிட்ட பேசறேன். நீங்க 4 மணிக்கு வாங்கோ. எனக்கு சரின்னு பட்டுதுன்னா என்னால முடிஞ்சத தரேன்.”
நீலகண்டனிடம் பேசிய போது அவர்,  “ஆமா, கங்காதரன்! அவர் நல்லவரா வும் நேர்மையானவராவும் தான் தெரிஞ்சார். அதனால நான் 500 ரூவா கொடுத்தேன்” என்றார்.
அன்று மாலை கோபாலன் வந்தார்நடுத்தர வயது, வேட்டி, சட்டை. நெற்றியில் வீபூதி. சாதுவான முகம்அமைதியாகவும் மரியாதையாகவும் பேசினார். கங்காதரன் 500  ரூபாய் கொடுத்தான். கங்காதரனின் தங்கை கிரிஜா, “நல்ல காரியம். நானும் 200 ரூபா தரேன்.” என்றாள்.
ரூபாயை வாங்கிக்கொண்ட  கோபாலன், ”தேங்க்ஸ் சார், தேங்க்ஸ் மேடம். நான் இந்த உதவியை மறக்கவே மாட்டேன். கல்யாணத்திற்கு பத்திரிகை அனுப்பறேன். கட்டாயம் வந்து என் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணுங்கோ.”
கோபாலன் போய் விட்டார்.
இது நடந்து ஒரு மாசம் இருக்கும்.  கங்காதரனின் ஆப்த நண்பன் பஞ்சு (பஞ்சாபகேசன்) தன் மனைவி உமாவுடனும் மகன் சுபாஷுடனும் கங்காதரன் வீட்டிற்கு வந்தான்.  கங்காதரனும், பஞ்சாபகேசனும்  காலேஜ் நாட்களிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் சந்தித்து வம்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். பத்மாவும் உமாவும் நல்ல சிநேகிதிகள்.
பத்மா நல்ல விருந்து தயாரித்திருந்தாள்.  எல்லோரும் சாப்பாட்டை ஒரு கை பார்த்தார்கள். பிறகு அரட்டையடிக்க ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரம் கழித்து பஞ்சு சொன்னான், “கங்கா, போன வாரம் எங்க வீட்ல வேடிக்கையா ஒண்ணு நடந்துது.”
“அப்படியா, என்ன நடந்துது?”
“கோபாலன்னு ஒத்தன் என்னை ஃபோன்ல கூப்டான்.  அவன் விசித்திரமா ஒரு கதை சொன்னான். அவனுக்கு ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்காளாம்..
பத்மா, “ஏன்னா, அவர் தானே....” என்று சொல்ல ஆரம்பித்தவளை  கங்காதரன் முறைத்து ஒரு பார்வையால் அடக்கினான்.
இதை கவனிக்காத பஞ்சு மேலே தன் கதையைத் தொடர்ந்தான்.
“அவன் சொன்னான், தன் பொண்ணுக்கு பல வருஷமா வரன் தேடிக்கொண்டிருந்தானாம்.  அவ ஜாதகத்துல செவ்வா தோஷம் இருக்கறதுனால வரனெல்லாம் தட்டி போயிண்டே இருந்துதாம். அவர் பெரிய ஸ்வாமிகள் கிட்ட போய் தன்னோட பிராப்ளத்த சொன்னாராம். அவர்  இவன ஒரு வேண்டுதல் செய்துக்க  சொன்னாராம். பொண்ணுக்கு  கல்யாணம் நிச்சயமானா பிச்சை எடுத்து தாலி பண்றதா வேண்டிண்டு ஒரு காசை மஞ்சத்துணில கட்டி வையி. கல்யாணம் நிச்சியமாயிடும்னு சொன்னாராம். அதே மாதிரி நல்ல வரன் கெடைச்சு கல்யாணம் நிச்சியமாயிடுத்தாம்.  அதுனால அவன் தன் வேண்டுதல நெறைவேத்தணும்னு நெனச்சானாம். அவன் என் பேரை தேர்ந்தெடுத்தானாம் ஏன்னா அவன் தாத்தா பேரும் பஞ்சாபகேசனாம்.”
பஞ்சு பெரிதாக சிரித்தான்.
பத்மா மறுபடியும் எதோ சொல்ல வாயெடுத்தாள், ஆனால்  கணவன்  முறைத்ததைப்பார்த்து  வாயை மூடிக்கொண்டாள்.
“அப்புறம்?” கங்கா கேட்டான்.
“பொறுமையா கேளு. அவன் சொன்னான், “இப்ப தங்கம் விக்கற வெலைல அரைப் பவுன்ல செஞ்சாலும்  கூலி எல்லாம் சேர்த்து தாலி பண்ண 12,000 ஆயிடும். எப்படியோ பிச்சை எடுத்து எடுத்து அந்த பணத்தை சேர்க்கணும். பரவாயில்லை. நீங்க எது கொடுத்தாலும் சரி. நீங்க ஒரு ரூபா குடுத்தாக்கூட வாங்கிக்கறேன்.”
பத்மாவின் முகத்தில் தவிப்பு தெரிந்தது.
“நீ எதாவது குடுத்தியா?”
“அதத்தான் சொல்ல வரேன்.  நான் குடுக்கல்லாம்னுதான் நெனச்சேன். ஆனா என் பிள்ளை இருக்கானே சுபாஷ் அவன் பலமா கையை ஆட்டி எதோ சைகை செய்தான். நான் ஸ்பீக்கர ஆஃப் பண்ணிட்டு அவன் கிட்ட என்னன்னு கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன?”
“அவன் என் கிட்ட எழுதி காமிச்சான்.  அப்பா, இது ஷெர்லாக் ஹோம்ஸ் கதைல வர மாதிரியே இருக்கு. ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் கதைல ஒருத்தன் இப்படி தான் எல்லாரையும் ஏமாத்துவான். சாதாரணமா இல்லாத ‘அன்யூசுவல்’ பேரை டைரக்டரிலேர்ந்து ‘சூஸ்’ பண்ணி அது தன்னோட அப்பா, இல்லாட்டா தாத்தா பேருன்னு சொல்லி அத வச்சு ஏமாத்துவான்.”
பத்மாவின் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
பஞ்சு தொடர்ந்தான். “என் பிள்ளை, அப்பா, அவன் உங்கள ஏமாத்தறான்னு தோண்றதுன்னு சொன்னான்”
பஞ்சு தண்ணீர் குடிப்பதற்காக கதையை நிறுத்தினான்.  பத்மாவும் கங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கங்கா பத்மாவை  பேசாதே என்று விரலை ஆட்டி சைகையால் எச்சரித்தான். பத்மாவுக்கு ஒரே குழப்பம்!
பஞ்சு அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தான். “டிடக்டிவ் கத மாதிரி இல்லே? ஆமா, அப்படித்தான் இருந்துது."
“அது சரி, அதுக்கு அப்புறம் என்ன நடந்துது?”
“சுவாரசியமா இருக்கு இல்லே? கொஞ்சம் பொறுமையாக் கேளு. நான் அந்த ஆள்கிட்ட 4 மணிக்கு வா, பணம் தரேன்னு  சொன்னேன்.  அப்புறம் நாங்க டிஸ்கஸ் பண்ணி ஒரு திட்டம் போட்டோம். கங்கா, உனக்கு கதிர்வேல தெரியும் இல்லே? நம்ம கூட ஸ்கூல்ல படிச்சான். அப்புறம் ஆக்டராயிட்டான்.”
“கதிரத் தெரியுமே. ”
“அவன கூப்பிட்டு எங்க ப்ளானை அவனுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணினேன்.”
கங்கா கொஞ்சம் நிமிர்ந்து,”என்ன ப்ளான்?” என்று கேட்டான்.
“ப்ளான் என்னன்னா கதிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி வேஷம் போட்டுட்டு எங்க வீட்டுக்கு சுமார் 3.30 மணி போல வரணும். இந்த ஆள் வரச்சே அவன் அங்க இருக்கணும். இந்த கோபாலன் நேர்மையான பேர்வழியா இருந்தா போலீஸ்காரன பார்த்தா அவனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனா அவன் ஒரு ஃப்ராடா இருந்தா போலீஸைப் பார்த்தா நடுங்குவான். இது தான் எங்க ப்ளான். எல்லாம் ப்ளான்படி நடந்துது. கதிர் நிஜ போலீஸ் டிரஸ்ல ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தான்.”
“டேடி, கதிர் அங்கிள் நிஜ இன்ஸ்பெக்டர் மாதிரியே இருந்தார் இல்லே?”  என்றான் சுபாஷ்.
“ஆமாம். அன்னிக்கு அவனோட ஆக்டிங்க்குக்கு என்ன அவார்ட் வேணுனாலும் குடுக்கலாம்.
“சரியா நாலு மனிக்கு கோபாலன் வீட்ல நுழைஞ்சான்.  சோஃபால உக்கார்ந்திருந்த கதிரப் பார்த்ததும் ஆடிப் போய்ட்டான்.  ஏதோ முனகிட்டு திரும்பி போக பார்த்தான். ஆனா நான் அவன போக விடல்ல. அவன “வாங்க, கோபாலன். உள்ள வாங்கோன்னு கூப்பிட்டு உட்காரச்சொன்னேன். பாக்கியெல்லாம் கதிர் கைல விட்டுட்டேன். கதிரப் பார்த்து கோபாலன் பயத்துல வெளிறிப் போய்ட்டான்.
நாங்க எல்லாரும் சுவாரசியமா சீரியல் பாக்கற மாதிரி எஞ்சாய் பண்னிட்டு இருந்தோம். கதிரோட அதிகாரமான விசாரணையில் அதிர்ந்து போன கோபாலன் எல்லாத்தையும் கக்கிட்டான்.  அவனோட “மோடஸ் ஆப்பரேண்டி” அதாவது அவனுடைய வழக்கமான யுக்தி, ஒரு புது எடத்துக்கு போவது, அங்குள்ள டெலிஃபோன் டைரக்டரில தேடி ஒரு “அன்யூஷுவல்” பெயரை தேர்ந்தெடுப்பது.”
“டேடி, அவன் உங்க பேர சூஸ் ஏன் பண்ணினான்னா பஞ்சாபகேசங்கற பேரு ரொம்ப அன்யூஷுவல்”” இது சுபாஷ்.
“ஆமா, ரொம்ப அன்யூஷுவல். உம்... சொல்லப் போனா, கங்கா,  உன் பேரு கூட அன்யூஷுவல் தான். கங்காதரன்கர பேரு சாதாரணமா யாருக்கும் இருக்காது.” பஞ்சு கங்காவை உற்றுப் பார்த்தான்.
“சரி, சரி. அப்புறம் என்ன ஆச்சு? கதைய முடி”
“ஒரு ஏமாந்தாங்குளிய கண்டுபிடிச்சு {கங்கா சங்கடத்தில் நெளிந்தான்} தன் கல்யாணம் ஆகாத பொண்ணு, செவ்வா தோஷம் அது இதுன்னு அந்த எல்லா கதையயும் அவிழ்த்து விடுவான். எப்படி தன்னோட தாத்தா பெயரா இருந்ததால அவன் பேர சூஸ் பண்ணினான்னு புருடா விடுவான். ஒரு ரூபா குடுத்தாலும் வாங்கிக்கறேன்னு சொல்வான். அவனோட மாஸ்டர் ஸ்ட்ரோக் மஹா ஸ்வாமிகள் சொன்னார்ங்கறது தான்! நெறைய பேருக்கு ஸ்வாமிகள்னா மரியாதையும் பக்தியும் ஜாஸ்தி. அவனோட இந்த யுக்தி நல்லா வேல செஞ்சுது. முக்காவாசிப் பேரும் தாராளமாவே பணம் கொடுத்திருக்காங்க. சாமர்த்தியமா அவன் எடத்த மாத்திண்டே இருப்பான்.
கடைசில அவன் கதிர் கால்ல விழுந்தான். “என்னை விட்டுடுங்கோ, ஸார்!”ன்னு  கெஞ்சினான்.
கதிர் அதிகாரத்தோரணையோட, “சரி, இந்த வாட்டி பொழைச்சுப்போ! நெக்ஸ்ட்  டைம் நேரா ஜெயில் தான்” ன்னு சொல்லிட்டு அவன விட்டுட்டான். அவன் தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டான்.”
கதை சொல்றதுல மூழ்கியிருந்த பஞ்சு, கங்காவும் பத்மாவும் அசாதாரணமான அமைதில இருந்ததை கவனிக்கல்ல.
“பத்மா, காபி கொண்டாயேன்” என்றான் கங்கா. உடனே  பத்மா எழுந்திருந்து காபி கலக்க சமையலறைக்கு சென்றாள். அவள் கூட உமாவும் உள்ளே போனாள்.
காபி குடித்துவிட்டு பஞ்சுவும் குடும்பமும் விடைபெற்றுக்கொண்டு போனார்கள்.
கங்கா நிம்மதியுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “ பத்மா, நல்லவேளை நாம ஏமாந்ததப்பத்தி நீ ஒண்ணும் உளறாம இருந்தே. பஞ்சுவுக்கு தெரிஞ்சுதோ அவ்வளவுதான், என்ன கிண்டல் செஞ்சு செஞ்சு கொன்னுடுவான்.”
“அயிய்யோ, நான் அத உமாகிட்ட சொல்லிட்டேனே! அவ கிச்சனுக்கு வந்தாளா, பேச்சுவாக்குல நான்   நாம ஏமாந்து போய் அந்த ஆளுக்கு பணம் குடுத்தத அவ கிட்ட சொல்லிட்டேன்.”
கங்கா கத்தினான், “மக்கு! உளறுவாய்!”
“அயிய்யோ! இப்போ என்ன செய்யறது? நான் வேணும்னாஅவளுக்கு ஃபோன் பண்ணி ஆத்துக்காரர்கிட்ட சொல்லாதேன்னு சொல்லிடவா?”
“போறும். மேல மேல குட்டைய கொழப்பாதே.”