ரயில் ஒரு மணி
நேரம் லேட்டாக வந்தது. வண்டியிலிருந்து இறங்கிய அசோக்குக்கு அசுரப் பசி.
“நான் வரேன்னு
தெரியும். அம்மா எதாவது பண்ணி வச்சிருப்பா. போய் ஒரு கை பார்க்க வேண்டியது தான்”.
ஆட்டோவில் வீட்டை
நோக்கி விரைந்தான்.
ஆட்டோ அவன் வீடு
முன்னால் நின்றதும் கையில் பேக்குடன் இறங்கிய அசோக், வீட்டுக்கு முன்னால் இருந்த பெரிய
வேப்பமரத்தின் கீழ் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தான். “எதுக்காக
இவா இங்க நிக்கறா?”
அவன் அம்மா சுடச்சுட
உப்புமாவும் வெங்காய தக்காளி கொத்சும் அவன் முன்னால் வைத்தாள்.
“ஆஹா! என்ன டேஸ்ட்!
அம்மா, உன் மாதிரி யாரும் இப்படி உப்புமா பண்ண முடியாது. சான்சே இல்ல.”
அவன் தாய் புன்னகை
செய்தாள்.
“ஓனக்கு நல்ல பசி,
அதான் இப்படி என்னை புகழறே.” அவள் அவன் தட்டில் இன்னும் கொஞ்சம் உப்புமாவை பறிமாறினாள்.
“அது சரி, அம்மா,
வாசல்ல யாரு கொஞ்சம் பேரு நிக்கறா?”
அவன் தாயின் முகம்
மாறியது.
“அதுவா, மரத்துல
பிள்ளையார் இருக்கார்னு நெனைக்கறா. அதான்...”
“மரத்துல பிள்ளையாரா?”
“ஆமாண்டா, எல்லாம்
உன்னால வந்தது தான்.”
“என்னம்மா சொல்றே?
நான் என்ன பண்ணினேன்? நான் நாலு நாளா ஊர்லயே இல்லையே?”
அவன் தாய் புன்னகை
செய்தாள். அவன் முதுகில் செல்லமாக தட்டினாள்.
“அதுக்கு முந்தி
நீ சொன்ன வார்த்தை தான் இது எல்லாத்துக்கும் காரணம்.”
“என்னது? ஒண்ணுமே
புரியல்ல. என்ன புதிர் போடறே? கொஞ்சம் புரியும்படி சொல்லேன்.”
“ஒரு வாரம் முந்தி,
நீ என்ன சொன்னே வாசல்ல, வேப்ப மரத்தப்பாத்து
ஞாபகம் இருக்கா?”
“நான் என்ன சொன்னேன்?”
“அந்த வேப்பமரத்தோட
“ட்ரங்க்” ஒரு யானை தும்பிக்கை மாதிரி இருக்குன்னு சொல்லல்லே?”
“அப்படியா சொன்னேன்?.”
“ஆமா. நீ சொன்னே,
அந்த வேப்ப மரத்துல யானை தும்பிக்கை இருக்குன்னு.”
“அதுவா?” அசோக்
சிரித்தான். “ஆமா, சொன்னேன். அதுக்கென்ன?”
“அதுலேர்ந்து தான்
எல்லாம் ஆரம்பிச்சுது. நம்ம வீட்ல வேல செய்யறாளே ராணி, அவ நீ சொன்னத கேட்ருக்கா. அவ
எதித்த வீட்டு கல்யாணிகிட்ட சொல்லியிருக்கா.
ராணி அவ வீட்லயும் வேல செய்யறா. தெரியும் இல்ல? கல்யாணி உடனே வந்து பார்த்திருக்கா.
அவ பார்த்துட்டு என்ன சொன்னா தெரியுமா?”
அசோக் தலையை நிமிர்த்தி
தாயை நோக்கினான்.
“ஓ! அந்த மாமியா?
அவ ஒரு பெரிய வம்பியாச்சே! என்ன சொன்னா?”
“அவ சொன்னா, சாக்ஷாத்
பிள்ளையாரே நம்ம வீட்டுக்கு வந்துட்டாருன்னா.”
“என்ன முட்டாள்தனம்!”
“இன்னும் கேளு.
அவ ஓடிப்போய் சந்தனம், குங்குமம் எல்லாம் கொண்டுவந்து அந்த மர தும்பிக்கைக்கு மேல கண்
மாதிரி, அப்பறம் அதுக்கு மேல நெத்தில இருக்கற மாதிரி சந்தன பட்டைகளயும் குங்குவத்தையும்
இட்டா. அப்போ பார்த்தா கொஞ்சம் பிள்ளையார் மாதிரி தெரிஞ்சிது.”
“நல்ல ஆர்டிஸ்டா
இருப்பா போலிருக்கு.”
“அப்படியே அது
நின்னுருந்தா நன்னா இருந்திருக்குமே. ஆனா, அசோக், இப்போ தெனம் தெனம் ஜனங்கள்ளாம் சொயம்பு
பிள்ளையார தரிசனம் பண்ண வர ஆரம்பிச்சூட்டா”
“அதென்ன? என்னவோ
பிள்ளையார்னு சொன்னியே?”
“சொயம்பு. அப்படின்னா
தானே உருவானதுன்னு அர்த்தம். அது ரொம்ப விசேஷமாம்.”
அசோக் பிரமித்து
போய் விட்டான். “நாலு நாளைக்குள்ள என்னென்னவோ நடந்திருக்கே! தான் எதோ வேடிக்கையா சொன்னது
இப்படி ஆயிடுத்தே!”
அன்று இரவு அசோக்குக்கு
ஒரு பயங்கர கனவு வந்தது. கனவுல அவன் வீட்டு முன்னால ஒரு பெரிய கூட்டம். ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள். மைக் வழியாக மேக்ஸிமம் வால்யூமில் பக்திப்பாட்டுகள் ஒரு பக்கம் ஒலிக்க,
இன்னொரு பக்கம் மைக்கில் மேக்ஸிமம் வால்யூமில் வாத்தியாரின் மந்திரங்களின் ஓசை கேட்க,
பெண்களின் கீச்சுக்குரல்கள், குழந்தைகளின் அலறல், எல்லாம் சேர்ந்து சத்தம் பயங்கரமாக
காதைப்பிளந்தது, கனவில் அசோக் பார்க்கிறான், தன் வீட்டு காம்பௌண்டிற்குள் நிறைய பேர்
சுவாதீனமாக நுழைந்து என்னன்னவோ கேட்கிறார்கள். ஒரு பெண்மணிக்கு பாத்ரூம் போகவேண்டியிருந்தது,
ஒருவருக்கு தண்ணீர் வேணும், சிலருக்கு உட்கார்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பலகாரத்தை
சாப்பிடணும்.
கனவில் அசோக் தாங்க
முடியாமல் அங்கிருந்து தப்பி ஓட பார்க்கிறான், ஆனால் முடியவில்லை. அத்தனை கூட்டம்.
அசோக்குக்கு மூச்சடைப்பது போல இருந்தது. வியர்த்து கொட்டியது. திடீரென்று விழித்துக்கொண்டான்.
“ஐயோ! என்ன பயங்கரமான
ட்ரீம்? நைட்மேர்! சும்மா எதோ வேடிக்கையாக சொன்னது இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு போயிடுமோ?”
அசோக் வாட்சில்
மணி பார்த்தான். மணி ஒன்று. மெதுவாக பூனை போல் வீட்டிற்கு வெளியே போனான்.
அடுத்த நாள் காலையில்
காப்பி கொண்டு வந்து கொடுத்த அசோக்கின் தாய் சொன்னாள், “அசோக், மரத்துல பிள்ளையார காணும்.
யாரோ பைக்கால மரத்து மேல இடிச்சிருக்கா போலிருக்கு.”
அசோக் ஒண்ணும்
பேசாமல் காப்பியை குடித்தான்.
“அசோக்!”
“என்னம்மா?”
“அசோக், எனக்கு
இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”
“நிஜமாவா சொல்றே?
நான் நெனைச்சேன்....”
“ஆமாண்டா, அது
சரி தான். ஆரம்பத்துல எனக்கும் அதிசயமா தான் இருந்துது. ஆனா அப்பறம் யோசிச்சேன். அது
மரத்தோட ஒரு பாகம் தான். அது கற்பனையால தான் பிள்ளையாராயிடுத்து. எல்லாம் இந்த ராணி
அப்பறம் அந்த கல்யாணியால வந்தது. மரம் கல்யாணி வீட்டுக்கு எதிரக்க இருந்திருந்தா அவ
இப்படி செஞ்சிருப்பாளா? நம்ம வீட்டு வாசல்ல இருந்தது அவளுக்கு சௌகர்யமா போயிடுத்து.
அவளுக்கு பொழுது போறதுக்கு ஒரு வழியா ஆயிடுத்து. எப்போ, வேற ஜனங்க வர ஆரம்பிச்சாங்களோ
எனக்கு மனசுல கொஞ்சம் சங்கடம் ஏற்பட ஆரம்புச்சுது.”
.அசோக்கிற்கு அதிர்ச்சியாக
இருந்தது. அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.
“என்னம்மா சொல்றே?
நீ நேத்திக்கு இதையெல்லாம் சொல்லவேயில்லையே?”
“ஆமாண்டா, அசோக்,
இது இப்படியே போனா என்ன நெலமை வரும்னு நெனச்சு பார்த்தபோது எனக்கு பயமா இருந்துது.
உனக்கு ரொம்ப தொந்தரவா இருந்திருக்கும். எப்ப பார்த்தாலும் ஜனங்க கூட்டம் போட்டுண்டே
இருப்பா. நமக்கு ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க முடியாது. இதெல்லாம் குருட்டு நம்பிக்கைன்னு
எனக்கு தோணித்து. யாரோ ஒத்தர் ஆரம்பிச்சு விடறார், மத்தவா அது பின்னால் போறா. இது மாதிரி
தெனம் நெறைய சின்ன சின்ன கோவில்கள் எழும்பிட்டேயியிருக்கு. ஜனங்களோ குருட்டுத்தனமா
நம்பறா. உண்மையான பக்தியோட நாம நம்ம உள்ளத்துல பகவானை தியானம் செஞ்சா அது தான் ரொம்ப
மேலானதுன்னு நான் நெனைக்கறேன். பணம், பதவி எல்லாம் வேண்டாம்னுட்டு ராமர தியானிச்சிண்டு
அவர் மேல பாட்டுகள் பாடிண்டு தியாகராஜர் இருக்கல்லியா?, அது மாதிரி இன்னும் எத்தனையோ
பக்தர்கள் இருந்திருக்கா. பக்தி நம்ம உள்ளத்துல இருக்கணும். இருக்கற கோவில்களே போதும்னு
தோணறது, அதையெல்லாம் நன்னா வச்சுண்டா போறும். அசோக்.”
அசோக் தன் தாயை
ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
“நீ ஏம்மா இதை
என் கிட்ட சொல்லல்ல? நான் நெனச்சேன், உனக்கு அதுல நம்பிக்கை இருக்குன்னு?
“ஆமாண்டா, நானும்
எல்லாரும் என்ன சொல்வாங்களோன்னு நெனச்சு பயந்துண்டு இருந்தேன். அசோக், நீ எனக்கு ஸ்வாமிக்கிட்ட
பக்தி இல்லேன்னு நெனக்கறியா?”
அசோக் அம்மாவை
அன்பாக அணைத்துக்கொண்டான்.
“இல்லவே இல்ல.
அம்மா! நீ கரக்டா புரிஞ்சிண்டிருக்கே. நீ தான், அம்மா ரொம்ப “க்ரேட்”.
“அம்மா! வந்து...”
“என்னடா?”
சொல்லணுமா, வேண்டாமா?
வேண்டாம். ரகசியம் என்னோடயே இருக்கட்டும். அசோக் தீர்மானித்தான். அவன் மனதில் லேசாக
உணர்ந்தான்.
“இல்லம்மா, ஓண்ணும்
இல்ல.”
அவன் அம்மா காப்பி
டம்ளரை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி சென்றவள் திரும்பி அசோக்கைப் பார்த்தாள்.
“தேங்க் யூ, வெரி
மச், அசோக்!”
இந்த கதை நிஜமாக நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டது. இந்தியாவில் சாலைகளில் நிறைய குட்டி குட்டி கோவில்கள் எங்க பார்த்தாலும் நீங்கள்
பார்க்கலாம். இதில் மற்ற மதங்களுக்கும் கொஞ்சம் பங்கு உண்டு.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில்
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கோயில்கள் எழுப்பப்படுவதினால் நெரிசல் அதிகமாக ஆகிறது.
பக்தர்கள் நின்றுகொண்டு வணங்குவதால் பெரிய பஸ்களை ஓட்டுவது ஓட்டுனர்களுக்கு சிரமமாக
உள்ளது. சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ள இவற்றை அகற்ற முனிசிபல் கார்ப்பரேஷனால் எதுவும்
செய்ய முடிவதில்லை. காரணம் மக்களின் தீவிர உணர்ச்சி, ஆவேசம். எதாவது செய்ய முற்பட்டால்
ஆர்ப்பாட்டம் நிச்சயம்.
நான் ஒரு முறை அப்படி ஒரு கோயில் உருவாவதை
பார்த்தேன், ஒரு ட்ராஃபிக் அதிகமாக உள்ள சாலையின் ஓரத்தில் யாரோ ஒரு சின்ன பிள்ளையார்
பொம்மையை விட்டு விட்டு சென்றிருந்தார்கள்.
சில தினங்களில் அதற்கு பீடம், பிறகு சுற்றி டைல்ஸ் என்று அது வளர ஆரம்பித்தது. சில
மாதங்களிலேயே அது ஒரு அழகான கோவிலாக உருவெடுத்தது. போக்குவரத்து அதிகமான சாலையாதலால்
உண்டியலில் பணம் விழுந்துகொண்டே இருந்தது. சீக்கிரமே ஒரு பூசாரியும் வந்தார். சிலர்
நன்கொடையாக வெள்ளி கவசம், குடை என்று அளிக்க, இன்று அந்த கோவில் ஒரு பணக்கார கோவிலாக
இருக்கிறது. அதற்கு தனி கமிட்டி, , மெம்பர்கள் என்று எல்லாம் ஏற்பட்டுவிட்டது. சொல்லமுடியாத
இடைஞ்சல் அந்த கோவிலால்.
குருட்டு நம்பிக்கைகளை விட்டு விட்டு எப்போதுதான்
நாம் உண்மையை நோக்கி போகப்போகிறோமோ?