Saturday, January 31, 2015

ஒரு அழகுக் குறிப்பு


                
நிறைய பெண்கள் கைகளையும் பாதங்களையும் மிருதுவாகவும், அழகாகவும்  வைத்துக் கொள்வதை  முக்கியமாக கருதுவதில்லை. சில சுலபமான செயல் முறைகளை கடைபிடித்தாலே போதும், பாதங்களும் கைகளும் அழகாக இருக்கும்.
முதலில் கைகளை கவனிப்போம். சப்பாத்திக்கோ, பஜ்ஜிக்கோ மாவு பிசையும் போது மாவு நக இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும். வேலை முடிந்த பிறகு கைகளை , முக்கியமாக நக இடுக்குகளை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பார்த்தோமானால் கை கழுவின பிறகும் கட்டை விரல் நக இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருந்த மாவு சரியாக கழுவப்படாமல் அப்படியே இருக்கும். அது பிறகு நாளடைவில் தண்ணீர் பட பட அழுகி நகக் கண்கள் வீங்கி புண்ணாக காரணமாகும்.

கால்களுக்கும் அதே போல தான். செருப்பு அணியாமல் வீட்டில் நடக்கும் போது கால்களில் அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வீட்டில் காலணி அணிவதால் பித்த வெடியும் வராது, பாதங்களும் நகங்களும் சுத்தமாக இருக்கும். குளித்த பிறகு மெல்லிய துணியால் கால் நக இடுக்குகளை நன்றாகத் துடைக்க வேண்டும். இப்படி செய்வதால் கால் நகங்கள் புண்ணாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

Monday, January 26, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 3


“அப்போ எனக்கு கல்யாணம் ஆன புதுசு. அப்பல்லாம் எனக்கு வீட்டு வேல செஞ்சு பழக்கமில்ல. உன் அப்பா அப்ப ஒரு ஆபீஸ்ல பியூனா இருந்தாரு. நெலையான வேலன்னு தான் என் அப்பா என்ன உன் அப்பாவுக்கு கட்டி கொடுத்தாரு. ஆனா என்ன ஆச்சு? அந்த வேல பிற்பாடு போயிருச்சு. அது வேற கத.
உன் அப்ப என்னைய அந்த ஆபீஸ் மேனேஜர் வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. அங்க என்ன நடந்தது தெரியுமா?
தெரியாது என்று தலையாட்டினான் செல்வன். “அந்த மேனேஜர் வீடு ரொம்ப பெருசு. நாங்க அங்க போனப்ப அங்க வேற ஒரு புத்சா கலயாணம் ஆன சோடி வந்திருந்தது. அந்தப் பொண்ணு சரிகை சீலை என்ன பவுன் சங்கிலி என்ன காதுல தங்க கம்மலு, கையில தங்க வளையல் எல்லாம் போட்டுகிட்டு ராணி மாதிரி இருந்திச்சு. அவங்களுக்கு அந்த வீட்டம்மா என்ன ஒபசாரம் பண்ணிச்சு!  உங்கப்பாவை வெய்யில்ல போய் பழம், பலகாரம் எல்லாம் அவங்களுக்கு வாங்கிட்டு வர வெரட்டிச்சு. நாங்களும் அவங்க மாதிரி புதுசா கல்யாணம் ஆனவங்க தானே? என்னை வேலை வாங்கிச்சு. அவங்க வீட்டு வேலைக்காரி அன்னைக்கு மட்டம் போட்டிருச்சாம். எனக்கு அன்னைக்கு மனசுல வேதனையாயிருச்சு. ஏன் நம்மை எல்லாரும் கேவலமா நடத்தறாங்க? செல்வா, ரோசனை பண்ணி சொல்லு. அவங்க ஏன் எங்கள கேவலமா நடத்தினாங்க? அந்த இன்னொரு சோடி வந்துதே அவங்களுக்கு ஒபசாரம் செஞ்சாங்க?”
செல்வன் யோசித்தான்.
“நாம வேலக்காரங்க, அதுனால தானே, அம்மா?”
செல்வனுக்கு பெருமையாக இருந்தது. “அம்மா தன்னை பெரிய ஆளா நெனச்சு பேசறாங்களே!” தாயிடம் இன்னும் நெருங்கி அமர்ந்துகொண்டான். தாயின் அணைப்பில் தான் என்ன சொகம்?  செல்வன் வள்ளியின் மடியில் படுத்துக் கொண்டான்.
அவன் தலையை கோதிக்கொண்டே வள்ளி பேசலானாள்.
“செல்வா, நான் இதப்பத்தி நெறைய ரோசனை பண்னினேன். நம்ம சமூகத்துல யாரும் படிக்கல. நாம ஏழை. அதுனால தானே நம்மை எல்லோரும் மட்டமா நடத்தறாங்க? படிச்சிருந்தா நல்ல வேல கெடைக்கும். எல்லாரும் நம்மை மதிப்பாங்க. பாரு, அந்த டாக்டர் வீட்டுல, நான் கூட கொஞ்சம் நாள் அவங்க வீட்ல வேல செஞ்சேனே ஞாபகம் இருக்கா?”
“அந்த பிரவீன் வீடு தானேம்மா?”

ஆமாண்டா கண்ணு, அவங்க வீட்ல சமையல்காரம்மா இருந்தா. அந்தம்மா மகனு நல்லா படிப்பான். அந்தம்மா எல்லார் வீட்லயும் போயி உதவி கேக்கும். ரொம்ப கஸ்டப்பட்டு படிக்க வச்சா. இப்ப அவன் பெரிய கம்பெனில நல்ல வேலல இருக்கான். அவங்க இப்ப கௌரவமா இருக்காங்க. அவங்கள பாத்து தான் எனக்கும் உன்ன நல்லா படிக்க வைக்கணும்னு தோணிச்சு. செல்வா, நாம்பளும் அவங்க மாதிரி ஒரு நாள் ஆக வேண்டாமா, சொல்லு?”
ஆமாம் என்று தலையாட்டினான் செல்வன்.
“என்னென்னைக்கும் கூலிக்கு மாரடைச்சு கஸ்டப்படணும்மா?
வேண்டாம் என்பது போல தலையாட்டினான் செல்வன்.
வள்ளி ஏதோதோ பேசிக்கொண்டே போனாள். தாயின் மடியில் சுகமாகப் படுத்திருந்த செல்வனுக்கு அவள் கூறிய பல விஷயங்கள் புரியவில்லை என்றாலும் ஒரு விஷயம் மட்டும் அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. தான் பள்ளிக்கு ஒழுங்காகப் போய் படித்தால் தாய் தன்னிடம் அன்பாக இருப்பாள். அன்னையின் அன்புக்கு ஏங்கிய செல்வனின் பிஞ்சு மனதில் அவளை திருப்திப் படுத்தவேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
“நாமும் நல்ல வீட்ல இருக்கலாம், நல்ல சாப்பாடு சாப்பிடலாம், நல்ல உடுப்பு உடுக்கலாம். யாரும் நமக்கு கழுநீர் காப்பியும் ஊசிப்போன ரசத்தையும் கொடுக்கமாட்டாங்க.”
“அம்மா, நான் இனிமே நல்லா படிக்கிறேன்” என்று வாக்குறுதி அளித்தான் செல்வன்.
செல்வனின் வார்த்தைகள் வள்ளிக்கு தேனாக அளித்தன, அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.
“வள்ளீ! வள்ளீ! என்ற் யாரோ கூப்பிடும் குரல் கேட்கவே வள்ளி எழுந்திருந்தாள்.
“அப்ப இஸ்கோலுக்கு போறியா, செல்வா?”
“சரிம்மா”
“டப்பால பலகாரம் இருக்குது, உண்டுட்டு சாக்கிரதையாப் போ. கீதா வந்து கூப்பிடுது. நான் வேலைக்குப் போறேன்.” என்று கூறிய வள்ளி வேலைக்கு புறப்பட்டு போனாள்.
செல்வன் பள்ளிக்கு செல்ல தன் பழைய சீருடைய அணிந்துகொண்டு தயாரானான். 

Friday, January 16, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 2

செல்வன் தனக்கு வரும் ஆபத்தை உணராமல் விளையாட்டில் லயித்திருந்தான். பாலன், கோவிந்தன், பழனி, முத்து எல்லோரும் கிருஷ்ணா நகர் சேரியில் செல்வனின் நண்பர்கள். ஆரம்பத்தில் அவர்களும் செல்வனுடன் பள்ளிக்கு சென்றவர்கள் தான். சத்து உணவிற்காக பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் போனார்கள். இரண்டு மூன்று வருடங்களில் அவர்கள் எல்லோரும் படிப்பை விட்டுவிட்டார்கள். செல்வன் மாத்திரம் தன் தாயின் பிடிவாதத்தினால் பள்ளி சென்றுகொண்டிருந்தான்.
பழைய கிரிக்கட் மட்டை, பழைய பந்து, மூன்று குச்சிகள் இவைகளை வைத்துக் கொண்டு அந்த சிறுவர்கள் இஷ்டப்படி கத்திகொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். செல்வன் பேட்டிங். மட்டையை வைத்துகொண்டு பந்தை அடிக்கத் தயாராக நின்றான். முத்து பௌலிங். வேகமாக அவன் பந்தை வீச செல்வன் மட்டையால் அதை தூக்கி அடிக்க அது அங்கு வந்துகொண்டிருந்த வள்ளி மேலே போய் அடித்தது. “டேய், உங்கம்மாடா!” பழனி கத்தினான். சிறுவர்கள் அனைவரும் அங்கிருந்து சிட்டாய் பறந்தனர்.
செல்வன் நடுங்கினான். வசவுகளை பொரிந்து கொட்டியபடியே வள்ளி செல்வனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள். நண்பர்கள் கூட்டம் தூரத்திலிருந்து இரக்கத்துடன் பார்த்தது. வள்ளி செல்வனை தன் குடிசைக்குள் இழுத்துக்கொண்டு போய் கதவை சாத்தினாள். உள்ளிருந்து கத்தியபடியே வள்ளி “படீர். படீர்” என்று அடிக்கும் சப்தமும், “ஐயோ! ஐயோ!” என்று செல்வனின் அலறலும் வெளியே கேட்கவே நண்பர்கள் செய்வதறியாது ஒருவரை ஒருவர் நோக்கினர்.
அதே சமயம் பக்கத்து குடிசையிலிருந்து வெளியே வந்த ராமக்காள் விடு விடு என்று வள்ளியின் குடிசைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
“இந்தா, வள்ளி, விடு அவனை!, உனக்கு என்ன பிசாசு பிடிச்சிருச்சா? போட்டு கொல்றியே! பாவம்! பொளுதன்னிக்கும் இதே தொளிலாப்போச்சு! வாடா நீ!” என்று பலவாறு வள்ளியை அதட்டிவிட்டு செல்வனை தன் குடிசைக்கு அழைத்துக் கொண்டு போனாள். வள்ளி ஒன்றும் பேசாமல் குடிசைக் கதவை சாத்திவிட்டு வேலைக்கு சென்றாள்.
மாலையில் முருகேசன் வந்ததும் செல்வன் அம்மா தன்னை செம்மையாக அடித்ததை அழுதுகொண்டே தெரிவித்தான். ராமக்காளும் மற்றும் பலரும் வள்ளி செல்வனை அடித்ததைப் பற்றி முருகேசனிடம் புகார் செய்தார்கள். சாதாரணமாக வள்ளிக்கு அடங்கிப் போகும் முருகேசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. வள்ளி வந்ததும் முருகேசன் பெரிதாக சத்தம் போட்டான்.
“அவன் படிக்காட்டி ஒண்ணும் மோசம் போயிராது. ராச்சசி மாதிரி கொளந்தையை கொன்னுபோட்டியே! கேட்டுக்க, நாளையிலிருந்து அவன் இஸ்கோலுக்கு போக வேணாம். ஆமாம்.” என்று கண்டிப்புடன் சொன்னான். எதற்கும் வள்ளி பதில் பேசவில்லை.
பேசாமல் சோறும் குழம்பும் ஆக்கி புருஷனுக்கும் செல்வனுக்கும் படைத்தாள். பிறகு சமைத்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு தான் சாப்பிடாமல் படுத்துவிட்டாள்.
மறு நாள் காலையில் முருகேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டான். அவன் போனவுடன் குடிசைக் கதவை சாத்தின வள்ளி, செல்வனை எழுப்பினாள். “எந்திரி, வா இங்க.” என்றாள். பாயில் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்துக்கொண்டிருந்த செல்வன் பயத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
“செல்வா, கூப்பிடறேன், இல்லே, வா இங்க.”
செல்வன் கண்ணை கொஞ்சம் திறந்து பயத்துடன் அவளை நோக்கினான்.
“வா, நான் அடிக்கல, வா”
செல்வன் மெதுவாக எழுந்திருந்து தன் தாயின் அருகே சென்றான்.
“அடிச்சது நோவுதா, கண்ணு?” வள்ளி பாசத்துடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
“செல்வா, நீ பொறக்கறதுக்கு முன்னால நடந்த ஒரு விசயம்  சொல்றேன், கவனமாக் கேளு, என்ன?”
செல்வன் தலையாட்டினான்.
வள்ளி பேசலானாள்.

Thursday, January 8, 2015

ஒரு அன்னையின் லட்சியம்

இது ஒரு குருநாவல். ஒவ்வொரு வாரமும் ஒரு அத்தியாயம் போஸ்ட் செய்யலாம் என்று இருக்கிறேன், ஒரு தொடர் கதை மாதிரி. படித்து உங்கள் கமென்ட்ஸ்களை கொடுங்கள்.

அத்தியாயம்-1
கிருஷ்ணா நகர் கோவைப் புற நகர் பகுதியில் இருந்த ஒரு ஏழை மக்களின் குடியிருப்பு. அங்கிருந்த குடிசைகள் பலவிதமான பொருட்களைக் கொண்டு, பலர் வேண்டாம் என்று எறிந்துவிட்ட பொருட்களை  எப்படி எப்படியோ இணைத்து உருவாக்கப் பட்டிருந்தன. அவர்களது நோக்கம் மழை வந்தால் உள்ளே தண்ணீர் ஒழுகக் கூடாது. அவ்வளவு தான். காலனியின் ஒரு பக்கம் நகரின் கழிவு நீர் கால்வாய் இருந்தது. ஓடிக் கொண்டிருந்தது என்று சொல்ல முடியாது. பிளாஸ்டிக் பைகளும் அழுக்குத் துணிகளும் கழிவுநீரின் ஓட்டத்தை தடுத்து நிறுத்தியதால் இரவில் கொசுக்களின் ஆக்ரமிப்பு பயங்கரமாக இருக்கும்.
வெவ்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் சமயத்தில் அங்கே வருகை தருவார்கள், வாக்குறுதிகளும் செய்வார்கள். அந்த புறம்போக்கு இடத்தை தங்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என்பது அந்த மக்களின் நெடுநாள் வேண்டுகோள். ஆனால் அவர்கள் நிலைமையில் ஒரு மாற்றமும் இல்லை.
நம் கதையின் முக்கிய பாத்திரங்களான வள்ளியும் முருகேசனும் அங்கே ஒரு குடிசையில் வாழ்ந்தார்கள். சேரியில் வாழ்ந்த அந்த ஏழை மக்களுக்கும், “ஏழைக்கேத்த எள்ளுருண்டை” என்பது போல அவரவருக்கு தகுந்தவாறு ஆசைகளும் கனவுகளும் இருந்தன. வள்ளியின் குடிசைக்கு பக்கத்து குடிசையில் இருந்த ராமக்காளுக்கு தன் வாழ்நாளுக்குள் எப்படியாவது இரண்டு பவுனில் ஒரு சங்கிலி வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. மோட்டார் பழுது பார்க்கும் கம்பெனியில் வேலை பார்த்த முனுசாமிக்கு ஒரு “பைக்” குக்கு சொந்தக்காரனாக வேண்டும் என்று தணியாத ஆசை. இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகள், கனவுகள். ஒருத்திக்கு ஜரிகை பார்டருடன் பட்டுப் புடவை என்றால் ஒருவரின் லட்சியம் நல்ல மொபைல் ஃபோன், இன்னொருவருக்கு படுக்க நல்ல கட்டில். வள்ளிக்கோ இவைகளில் எல்லாம் நாட்டமில்லை. அவளுடைய ஒரே லட்சியம் தன் மகன் செல்வனை படிக்க வைத்து பெரிய மனிதனாக்க வேண்டும் என்பதே.
வள்ளி இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் விளக்கி, வீடு கூட்டித் துடைத்து, துணி துவைத்து உழைத்தாள். முருகேசன் ஒரு பணக்காரர் வீட்டில் மாடுகளை பராமரித்து, தோட்டவேலை செய்தான். இருவரும் சம்பாதித்தது அவர்களுடைய அடிப்படை தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது. வள்ளி கெட்டிக்காரி, புத்திசாலி. முருகேசன் சற்று சபல புத்தியுள்ளவன். கையில் காசிருந்தால் சினிமா பார்ப்பான், பலகாரக் கடையில் வாங்கி சாப்பிடுவான், சீட்டாட்டத்திலும் நாட்டமுண்டு. ஆனால் வள்ளிக்கு அடங்கியவன். கடன் வாங்கக் கூடாது என்பது வள்ளியின் உறுதியான கொள்கை. வள்ளியின் கண்டிப்பான நிர்வாகத்தினால் அந்த குடும்பவண்டி ஓரளவு சுமாராக ஓடியது.

அன்று காலை வள்ளி வழக்கம் போல் வேலைக்கு கிளம்பினாள்.
“செல்வா, நல்லா படிச்சிட்டு இஸ்கோலுக்கு போ! நேத்து மாதிரி சுத்தினே தோலு களண்டுடும்” என்று மகனை எச்சரித்துவிட்டு போனாள்.

முதலில் வக்கீல் வீடு. எஜமானி காவேரியம்மாளுக்கு எச்சிற்கையால் காக்கை விரட்ட மனசாகாத சுபாவம். “ஸிங்க்” நிறைய பாத்திரங்கள். வீடு கூட்டி துடைக்க வேண்டும். துவைக்க பிலாஸ்டிக் “டப்” நிறைய துணி. வேலை செய்யும்போது கழுகு கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பாள். “கட்டிலுக்கு அடியில் நல்லா கூட்டு, துணிகளை நல்லா விரிச்சு அலசு” என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். இன்றும் அப்படித் தான்.
 காவேரி கழுநீர் மாதிரி பழுப்புநிற திரவம் ஒன்றை காபி என்ற பெயரில் “இந்தா, குடி” என்று வள்ளிக்கு முன்னால் வைத்தாள். வள்ளிக்கு கோபம் வந்துவிட்டது.
இந்த கழுநீரை மாட்டுக்கு ஊத்துங்க. இதை யார் குடிப்பாங்க?” என்று கத்தினாள்.
“ஆனாலும் ஒனக்கு வாய் ஜாஸ்தி! இந்த காபிக்கு என்ன கொறைச்சல்?”
“ஆமாம், எனக்கு வாய் சாஸ்தி தான். வாயில்லாத நல்ல ஆளா பாத்துக்குங்க!” வள்ளி பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே நடந்தாள்.   

“இந்த அம்மா வீட்ல யாராலயும் வேல செய்ய முடியாது. செம வேல வாங்கும், சம்பளம் கேட்டா இலேசுல குடுக்காது. அபார்டுமண்டுல நெறய குடி வந்திருக்காங்க. ஏதாவது வீடு கெடைக்காம போகாது. மொதல்லியே கண்டிசனா சம்பளம் கேட்டுபோடணும். செல்வன் படிச்சு நல்ல வேலைக்கு வந்தா பின்னே யாரையும் லட்சியம் செய்யவேண்டாம். தல நிமிர்ந்து நடக்கலாம்” என்று மனக்கோட்டை கட்டியவாறு தான் வேலை செய்யும் இரண்டாம் வீட்டிற்கு நடந்தாள்.
“வள்ளியம்மா! வள்ளியம்மா!”
வள்ளி திரும்பி பார்த்தாள்.
ராமக்காளின் பெண் செல்லி – வயது எட்டு – ஓடி வந்தாள்.
ஓடி வந்த வேகத்தில் மூச்சு வாங்க,
வள்ளியம்மா!” ......... செல்வன் .. இஸ்கோலுக்கு போகல்ல...வெளையாடிட்டிருக்கான். கிரிக்கட்டு.” என்று செய்தி தெரிவித்தாள். தன்னை விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்ற கோபம் அவளுக்கு.
வள்ளியின் முகம் மாறியது. கோபத்தில் இறுகிய முகத்துடன் சேரிக்குத் திரும்பினாள். விடுவிடு என்று வேகமாக நடந்த அவளை செல்லி திருப்தியும் பயமும் கலந்த பார்வையுடன் பின் தொடர்ந்து ஓடினாள்.


தமிழ் மலர்

மல்லிகை, முல்லை, கனகாம்பரம், போன்ற பலவித மலர்களும், மருகு, மருக்கொழுந்து போன்ற இலைகளும் சேர்த்து ரசனையுடன் அழகாகத் தொடுத்த நறுமணம் வீசும் கதம்ப சரத்தை சூட விரும்பாத பெண் யார்? முகர விரும்பாத ஆண் யார்? என்னுடைய இந்த கதம்பத்தையும் குருநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், சமையல் மற்றும் வீட்டுக்குறிப்புகள் சேர்த்துத் தொடுத்த அழகான சரமாக அளிக்க விரும்புகிறேன். அன்பான வாசகர்களே, இந்த சரம் வாடிப் போகாமலிருக்க உங்கள் மேலான அபிப்பிராயங்கள் என்ற நீரை இந்த சரத்தின் மேல் அள்ளித் தெளியுங்கள்.