அன்று
கோகுலாஷ்டமி. இந்த பெரிய அமெரிக்க நகரத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் ஒரே கூட்டம். கோவில்
அர்ச்சகரான நாணு பிஸியாக அலைந்துகொண்டிருந்தான்.
இந்த கோயில் கட்டி மூன்று வருடங்கள் தான் ஆகிறது. ஆனாலும் மிகவும் பிரசித்தமாகிவிட்டது.
இன்றைக்கு விசேஷ தினமாதலால் நிறைய
இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர். ஒரு பார்ட்டி வந்தவுடன் நாணு
அவர்களுக்காக ஸ்பெஷலாக கற்பூர ஆரத்தி காண்பிப்பான். அது அவர்களுக்கு திருப்தியாக
இருக்கும். அவர்களும் தட்டில் டாலர்களை தாராளமாக போடுவார்கள்.
அங்கு சுற்று வட்டாரத்தில் நாணு என்ற நாராயணனுக்கு நல்ல பெயர். நாணு
இளைஞன், சுறுசுறுப்பானவன். அவன் குரல்
கம்பீரமாக இருந்தது, அவன் சம்ஸ்கிருத மந்திரங்களை நன்றாக அழுத்தமாக சொல்வது அந்த
அமெரிக்க வாழ் இந்தியர்களை பெரிதும் கவர்ந்தது. அவர்கள் செல்வம் தேடி
அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய கலாச்சாரத்துக்காக ஏங்கினார்கள். நாணு பூஜை
செய்யும் விதிமுறைகள நன்கு அறிந்திருந்தான். பூஜைகளை முறைப்படி செவ்வனே செய்வது
மட்டுமல்லாமல் எல்லாரிடமும் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொண்டான். கொஞ்சம்
பணத்தாசை கொண்டவன்தான். ஆனால் அதை அங்கு
வாழ் மக்கள் குறையாக நினைக்கவில்லை. அவர்களிடம் பணத்துக்கு குறைவில்லை,
தாராளமாகக்கொடுத்தார்கள். அவனை எல்லாருக்கும் பிடித்திருந்தது.
நாணு இன்று கிருஷ்ணர் சிலையை மிக நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தான்.
எல்லோரும் கண்ணனின் அழகைப் பார்த்து மயங்கினாரகள். அவனை வெகுவாக பாராட்டினார்கள். அபிஷேகம்,
பூஜை, ஆரத்தி எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடித்தான். மாலை சாய்ந்து இரவு
தொடங்க ஆரம்பித்துவிட்டது.
நாணு தட்டில் விழும் பணத்தை அவ்வப்போது ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும்
எப்போது போவார்கள், பணத்தை எண்ணலாம் என்று அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் மனம் பொறுமையை கொஞ்சம் இழந்து கொண்டிருந்தது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் முகத்தில்
புன்னகையுடன் அலைந்துகொண்டிருந்தான்.
வந்தவர்களோ போவதற்கு சிறிதும் அவசரப்படவில்லை.
மறுநாள் விடுமுறை. கோவிலில் நண்பர்கள், உறவினர்களை சந்தித்து, ஆனந்தமாக அரட்டை
அடித்துவிட்டு, விசேஷ தின பிரசாதங்களான, புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், வடை, தயிர்சாதம் தவிர வெல்ல
அவல், முறுக்கு, சீடை என எல்லாவற்றையும்
ஒரு கை பார்த்துவிட்டே எல்லாரும் கிளம்புவார்கள்.
அவர்கள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டும் இடையிடையே கோக்கோகோலாவை
பருகிக்கொண்டும் “எஞ்சாய்” பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு நாணுவுக்கு நல்ல
வரும்படி, தவிர அவன் ஒரு கிரகப்பிரவேசத்திற்கும், ஒரு பூணூல் கல்யாணத்திற்கும்
“புக்” ஆகியிருந்தான். நாணுவுக்கு ஒரே சந்தோஷம்.
தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த நாணு
இன்று இந்த அமெரிக்க நகரத்தில் சொந்தக் கார் என்ன, ஸ்மார்ட் ஃபோன் என்ன என்று
அமர்க்களமாக வாழ்ந்துகொண்டிருந்தான். அவனுடைய கனவான “நெறைய பணம் சம்பாதிக்கணும்,
சொந்த வீடு வாங்கணும், அழகான ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்” என்பது கிட்டத்தட்ட
பூர்த்தியாகிக்கொண்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஒரு ஏழை பூஜை வாத்தியார் தான் அவன் அப்பா. நாணுவிற்கு தான்
முன்பு கழித்த அந்த தரித்திர வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே பிடிக்கவில்லை.
அவனுடைய தாய், அவள் உயிரோட இருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரியிடம் வாங்கின சின்ன
கடனை எப்படி திருப்பி கொடுப்பது, பால்காரனுக்கு எப்படி பணம் கொடுப்பது என்றெல்லாம்
கவலைப்படாமல் நன்றாக சௌகரியமாக வாழணும் என்று ஆசைப்பட்டாள். அவள் உள்ளம் தங்க நகைக்கும்,
பட்டுப்புடவைக்கும் ஏங்கியது. தன் சின்ன ஆசைகளை தன் கணவனிடம் சொல்ல அவளுக்கு
தைரியம் இல்லை. அவர் கண்டிப்பானவர். ஆனால் நாணுவுக்கு அவளுடைய ஏக்கம் தெரியும்.
அவள் கணவர் வெளியில் போயிருக்கும் சமயங்களில், தன் மகனை மடியில் இருத்திக்கொண்டு
“நீ பெரியவனானதும் எனக்கு ஒரு ஜோடி தங்க வளையும், ஒரு பட்டுப்புடவையும் வாங்கித்
தருவியாடா, கண்ணு?” என்பாள். தன் ஆசைகள் நிறைவேறாமலேயே அவள் இறந்துவிட்டாள். பணம்
தான் முக்கியம் என்ற எண்ணம் நாணுவின் பிஞ்சு உள்ளத்தில் ஆழ பதிந்துவிட்டது.
மூன்று வருஷங்களுக்கு முன் இந்தியாவில் அவன் இருந்த கிராமத்து கோயிலுக்கு சில
அமெரிக்க வாழ் இந்தியர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த அமெரிக்க
நகரத்தில் புதிதாக ஒரு கிருஷ்ணர் கோயில் கட்டியிருந்தார்கள். அதில் பூஜை செய்ய அவர்கள் ஒரு அர்ச்சகரை தேடி வந்திருந்தனர்.
நாணுவைப் பார்த்ததும் அவர்களுக்கு பிடித்திருந்தது. அவனை அமெரிக்காவுக்கு பூசாரி
வேலைக்காக கூப்பிட்டார்கள். அவர்கள் சொன்ன சம்பளத்தொகையைக் கேட்டதும் நாணுவுக்கு
மயக்கமே வரும்போல இருந்தது. அவன் அப்பாவுக்கு அதில் சிறிதும் இஷ்டமிருக்கவில்ல. ஆனால்
நாணு பிடிவாதமாக அதை ஒப்புக்கொண்டு, அந்த
தரித்திர வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அமெரிக்கா வந்துவிட்டான்.
ஒன்பது மணியானதும் வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக புறப்பட
ஆரம்பித்தார்கள். விரைவில் கோயில் காலியானது. ஆனால் ஒரு ஓரத்தில் நிழலாக யாரோ ஒருவன்
நிற்பது தெரிந்தது. நாணுவுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது. “எல்லாம் முடிஞ்சாச்சு!
இன்னும் ஏன் போகாம நிக்கறான்?”
பிரசாதத்திற்காக நிற்கிறான் போலும். எரிச்சலை அடக்கிக்கொண்டு சன்னிதியினுள்
சென்று ஒரு தட்டில் கொஞ்சம் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு எப்போதும்போல் ஒரு போலிப்
புன்னகையுடன் நாணு அவனருகில் சென்றான்.
அங்கே நின்றுகொண்டிருந்தவன் ஒரு அமெரிக்கன் என்பதைக் கண்டதும் வியப்படைந்தான்.
அவனிடம் பிரசாத தட்டை கொடுத்தான். அந்த வெள்ளைக்காரன் அதை ஒரு புன்னகையுடன்
வாங்கிக்கொண்டான். “தேங்க் யூ!” என்றான்.
ஆனால் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் நின்றுகொண்டிருந்தான்.
“பிரசாதம் தான் கிடைச்சாச்சே, ஏன் இன்னும் நிக்கறான்!”
“Can you teach me the meanings of
the Upanishads?” (எனக்கு உபநிஷத்துகளின் அர்த்தங்களை கற்றுத்தர முடியுமா?)என்று கேட்டான் அந்த
அமெரிக்கன்.
ஒன்ணும் புரியாமல் விழித்தான் நாணு.
எனக்கு ... உபநிஷத்துகளின் ... அர்த்தங்களை .... கற்றுத்தர ... முடியுமா?
என்று ஆங்கிலத்தில் நிறுத்தி நிறுத்தி கேட்டான் அவன்.
இப்போது நாணுவுக்கு புரிந்தது. அவன் இந்த மூன்று வருஷத்தில் ஓரளவு,
சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்து வைத்திருந்தான்.
நாணு அதிர்ந்தான். அவனை யாரும் இதுவரை
இப்படி ஒரு கேள்வியை கேட்டதில்லை. அவனுடைய அதிர்ச்சியைப்பார்த்த அந்த அமெரிக்கன்
புன்னகை புரிந்தான்.
“நான் அந்த எல்லா ஸ்க்ரிப்சர்ஸோட ட்ரேன்ஸ்லேஷன் எல்லாம் படிச்சுட்டேன். எனக்கு குழப்பமா
இருக்கு. அர்த்தம் எல்லாம் சரியா புரியல்ல. எனக்கு நெறைய சந்தேகம் இருக்கு.
வேதங்கள், உபநிஷத்துகள்ள உண்மையான நாலட்ஜ் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது
சரியா? உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே?”
அவன் ஆவலுடன் நாணுவைப் பார்த்தான்.
“உம், .... ஆமா....” தடுமாறினான் நாணு.
“குட், நீங்க மந்திரங்கள் சொன்னத கேட்டதும் எனக்கு
ரொம்ப நல்லா இருந்துது. உங்களுக்கு சம்ஸ்க்ருதம் நன்னா தெரிஞ்சிருக்கும்னு
தோணித்து. எனக்கு அந்த மாதிரி விஷயங்கள்ள
ரொம்ப இன்டரஸ்ட். ஒரு தாகம்னு கூட சொல்லலாம். அது என்னை விடாம தேட வைக்குது. என்ன
தேடறேன்னு எனக்கே தெரியல்ல. நெறைய புஸ்தகங்கள் படிச்சுட்டேன். எல்லா மதத்தோட
புஸ்தகங்களையும். எனக்கு எல்லாமே இருக்கு. பணத்தால எதையெல்லாம் அனுபவிக்க முடியுமோ
அதெல்லாம் நான் அனுபவிச்சுட்டேன். ஆனா திருப்தியே இல்ல. இதெல்லாம் விட something
different, வித்தியாசமா,
உசந்ததா எதோ இருக்குன்னு என் மனசு சொல்லுது...உங்களுக்கு நான் சொல்றது புரியறதா?
நாணு பிரமிப்பில் வாயடைத்துப் போய் நின்றான். அவன் மனதில் ஒரே குழப்பம். “இவன்
என்ன சொல்றான்? அவனுக்கோ எல்லாம் இருக்குங்கறான். பின்னே எதுக்கு ஏதோ புரிபடாத
விஷயத்தப்பத்தி மண்டைய போட்டு ஒடச்சிக்கறான்? முட்டாள்!”
“கேன் யூ ஹெல்ப் மி?”
நாணு புத்திசாலி. “இந்த வெள்ளைக்காரன் நல்ல பணக்காரனா தெரியறான். தாராளமா
குடுப்பான்.”
ஆனா நாணுவுக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது அவனை சும்மா ஏமாத்தமுடியாது.
எல்லாத்தையும் படிச்சுட்டு வந்து கேக்கறான். ஒண்ணும் படிக்காத நான் பேச ஆரம்பிச்சா
கண்டுபிடிச்சுடுவான் நான் ஒரு அறிவிலின்னு.
அப்போது சட்டுனு அவனுக்கு ஒரு ஞாபகம் வந்தது. நான் புறப்படறச்சே அப்பா ஒரு பைல ஒரு புஸ்தகக்கட்டு வச்சு குடுத்தாரே!
“இது நம்ம பொக்கிஷம்டா, ஜாக்கிரதையா வச்சுக்கோ. உனக்கு நேரம் கிடைக்கறச்சே
எடுத்துப்படி.”
தந்தையின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது. நிச்சயமா அப்பா கொடுத்த
புஸ்தகங்கள்ள இந்த வெள்ளைக்காரன் கேக்கற கேள்விகளுக்கு விடை இருக்கும். அப்பா இதே
மாதிரி தான் பேசுவார். அந்த புஸ்தகங்கள வச்சுண்டு சமாளிச்சுடலாம். நிறைய பணமும்
கிடைக்கும். ஆனா ஒடனே முடியாது. கொஞ்சம் டயம் வேணும்.
“யூ வான்ட் ... லெர்ன்
ஸ்க்ரிப்சர்ஸ்?” தன் ஆங்கிலம் பற்றி கொஞ்சம் பெருமை உண்டு நாணுவுக்கு.
முடிந்தபோதெல்லாம் இங்கிளீஷில் பேச முயற்சி செய்வான்.
“யெஸ், யெஸ்.” என்றான் அந்த அமெரிக்கன் ஆவலுடன்.
“நௌ ஐயாம் பிசி. கம் ஆஃப்டர் .. பிஃப்டீன் டேஸ். ஐ டீச் ஸ்க்ரிப்சர்ஸ்”
தலையை ஆட்டினான் அவன்.
“குட். ஐ வில் கம். தேங்க் யூ.”
நாணு தன் விசிட்டிங்க் கார்டை நீட்டினான். “பிஃபோர் யு கம் கால் மி.”
“வெல், தட்ஸ் நைஸ். தேங்க்ஸ்.” கார்டை எடுத்துக்கொண்டு நாணுவின் கைகளை
நட்புடன் குலுக்கிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
அன்று நாணு தன் அறைக்கு சென்றதும் முதல் காரியமாக பணப்பையை எடுத்து அன்றைய
வரும்படியை எண்ணி விட்டு ஜாக்கிரதையாக
அலமாரியில் வைத்துப்பூட்டினான்.
பிறகு கொண்டு வந்திருந்த பிரசாதத்தை ரசித்து சாப்பிட்டான்.
“சரி. அப்பா கொடுத்தத பார்க்கலாம்”
கொஞ்சம் தயக்கத்துடன் சூட்கேசைத் திறந்து தந்தை கொடுத்திருந்த, சிவப்புத் துணியில் கட்டி
வைத்திருந்த அந்த புஸ்தக மூட்டையை எடுத்தான். அவன் வீட்டை விட்டு வந்த போது அப்பாவின்
தந்த அன்பளிப்பு. மெள்ள கட்டை அவிழ்த்தான். அதில் சில பழைய புஸ்தகங்கள் இருந்தன.
புஸ்தக அடுக்கின் மேல் ஒரு கடிதம் இருந்ததைக்கண்டு அதிர்ந்தான். அவன் கடிதத்தை
எதிர் பார்க்கவில்லை. கடிதத்தை எடுத்துப்பிரித்தான். அப்பாவின் கையெழுத்தைப்
பார்த்ததும் அவன் உள்ளே ஒரு சின்ன வலி. படிக்க ஆரம்பித்தான்.
சிரஞ்சீவி நாராயணனுக்கு, ஆசீர்வாதம்.
நீ இதை பார்ப்பாயா, படிப்பாயா என்று தெரியாது. என் காலம் முடிவதற்கு முன்
உன்னை பார்ப்பேனா என்றும் தெரியாது.
(நாணுவின் தொண்டையில் என்னவோ அடைத்தது.)
நீ சமுத்திரத்தைத் தாண்டி மேலை நாட்டில் பணம்
சம்பாதிக்க போயிருக்கிறாய். பணத்தின் மோகத்தில் நம் அடிப்படை பாரம்பரியத்தை
மறந்துவிடாதே. உலக இன்பங்கள் எல்லாம் மாயை. இன்று இருக்கும், நாளை போய்விடும். கோவிலில்
உன் கடமைகளை கண்ணும் கருத்துமாக, பக்தியுடன், பலன் எதையும் எதிர்பார்க்காமல் செய்.
உன் அம்மா போனவுடன் நீ வீட்டில் இருந்தது எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. நீ
இங்கு இல்லாதது எனக்கு பெரிய இழப்பாக தோன்றுகிறது. இதுவும் மாயை தான் – இந்த
பாசம்.
உனக்கு நேரம் கிடைக்கும்போது இந்த புஸ்தகங்களைப் படி. இவை நம் பொக்கிஷம்.
உனக்கு சந்தேகங்கள், குழப்பங்கள் ஏற்படும்போது இவை உனக்கு வழி காட்டும். உடல்
நலத்தில் அக்கறையாக இரு. பகவான் அனுக்ரஹம் உனக்கு எப்போதும் இருக்க நான்
பிரார்த்தனை செய்கிறேன்.
இப்படிக்கு,
ஸ்வாமிநாத சாஸ்திரிகள்.
கடிதம் நாணுவின் கையிலிருந்து நழுவி விழுந்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கி எழுந்த துக்கம் அவனை உலுக்கியது. கதறி கதறி
அழுதான்.
அமெரிக்கா வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் தன் தந்தைக்கு கடிதம் எழுதுவான். அதை
ஒரு கடமையாக நினைத்தான். அவன் அப்பா பதில் எழுதியதே இல்லை. அவன் பணம் அனுப்பிய
போதும் அதை ஏற்க மறுத்துவிட்டார். அப்பாவிற்கு தன் மேல் பாசம் இருக்கிறது என்று
அவன் நினைத்ததே இல்லை. அவருக்கு தன் மேல் அபரிமித பாசம் இருக்கிறது என்பதை
தெள்ளத்தெளிவாகக் காட்டியது இந்த கடிதம். மூன்று வருடங்களாக வாசிக்கப்படாமல்
பெட்டியில் அது கிடந்ததை நினைத்து நெஞ்சம் உருகி அழுதான்.
ஒரு பெருமூச்சுடன் மேலாக இருந்த புஸ்தகத்தை திறந்தான்.
அவனுக்கு அதை வாசிக்க அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை, ஆனால் பணத்தின் மோகம்
அவனை உந்தியது. அவன் படிக்க ஆரம்பித்தவுடன் அவன் மனதில் பழைய நினைவுகள், அவனுடைய
குழந்தைகால நினைவுகள் வந்து அலைமோத ஆரம்பித்தன. அவன் அப்பா தினமும் காலையில் அவனை
தன் முன்னால் உட்காரவைத்து சம்ஸ்க்ருத மந்திரங்களை அர்த்தத்துடன் விளக்குவார்,
அவனை மந்திரங்களை திருப்பி சொல்ல வைப்பார். அவனும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பி
ஒப்பிப்பான். ஆனால் அவன் மனமோ வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் தன் தோழர்களுடன்
இருக்கும். அவன் அப்பா தயாராக பிரம்பை வைத்திருப்பார். அவன் தப்பாக உச்சரித்தால்
பிரம்படி நிச்சயம். எந்திரம் மாதிரி திருப்பி சொல்வான். அதனால் மந்திரங்களின்
சரியான உச்சரிப்பு அவனுக்கு இயல்பாகிவிட்டது. அது நாணுவுக்கு இந்த அமெரிக்க
நகரத்தில் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. ஆனால் அவன் அப்பா அர்த்தங்களை
விளக்கும்போது கவனமாக கேட்டதே இல்லை. கேட்டிருந்தால் இப்போது இந்த
வெள்ளைக்காரனுக்கு சுலபமாக பதில் சொல்லியிருக்கலாம்.
படிக்கப்படிக்க நாணுவுக்கு அதில் எழுதப்பட்டிருந்த விஷயங்களில் சுவாரசியம் ஏற்பட ஆரம்பித்த்து. அவன் அப்பா
புத்தகங்களின் பக்கங்களில் காலியிடங்களில் தன் விளக்கங்களை நெருக்கமாக
எழுதியிருந்தார். அவற்றை படிக்கப்படிக்க நாணுவுக்கு தன் தந்தை எத்தனைஅறிவாளி ,
உயர்ந்த சிந்தனையாளர், பணிவானவர் என்று தெரிந்தது. நாணுவின் உள்ளம் தந்தையைக் காணத்
தவித்தது.
நடு இரவாகிவிட்டது அவன் வாசிப்பதை நிறுத்தியபோது. படுத்தால் உறக்கம் வரவில்லை.
எதோ ஒரு அதிருப்தியை உணர்ந்தான். அடுத்தநாள் கோயிலில் கடமைகளை இயந்திரம் போல்
செய்தான். அவனுடைய கவர்ச்சியான புன்னகையும்
கலகலப்பான பேச்சும் அவனைவிட்டு எங்கோ ஓடிவிட்டன. நல்லவேளையாக அன்றைக்கு அதிகம்
பேர் கோவிலுக்கு வரவில்லை. அவன் மனம் அந்த புத்தகங்களிலேயே இருந்தது.
உபநிஷத்துகள்! கதோபநிஷத்து, முண்டகோபநிஷத்து, மஹாநாராயணோபநிஷத்து....
யோகவாசிஷ்டம்! இன்னும் பல! அடுத்த ஒரு வாரம் ஒரு தவிப்புடன் அவன் அந்த புத்தகங்களை
படித்தான். அந்த புத்தகங்களில் எழுதப்பட்டிருந்த விஷயங்களில் ஆழ்ந்து, புரிந்துகொள்ள முயற்சி செய்தான். அவன்
மனதில் ஒரே குழப்பம், சந்தேகங்கள்! தன் தந்தையை பார்க்கவேண்டும், அவரிடம் தன்
சந்தேகங்களைக் கூறி அவருடைய விளக்கங்களைக் கேட்கவேண்டும் என்கிற அடக்கமுடியாத ஆவல்
அவன் உள்ளத்தில் எழுந்தது. தன் சந்தேகங்களை அவரால்தான் தீர்க்கமுடியும். அந்த
வெள்ளைக்காரன் என்ன விரும்புகிறான் என்பதும் நாணுவுக்குப் புரிந்தது. அவனுடைய
சந்தேகங்களை தீர்த்து வைக்கும் திறன் தனக்கு சிறிதும் இல்லை என்பதும் நாணுவுக்குப்
புரிந்தது.
நிறைய சிந்தித்தபின் நாணு இந்தியாவுக்கு, தன் கிராமத்திற்கு போக
தீர்மானித்தான். அவன் அமெரிக்காவுக்கு வந்து மூன்று வருடங்களாகிவிட்டன. அவன் மனம்
தந்தையைக் காண விழைந்தது. அந்த வெள்ளைக்காரனையும் தன் கிராமத்திற்கு, தன் தந்தையை
சந்திக்க அழைத்தால் போகிறது. அவன் வந்தால் சரி. இல்லாவிட்டால் தனியாகப் போகலாம்.
அப்பாவின் விளக்கங்களை கேட்க சுவாரசியமாக இருக்கும். இந்த தீர்மானத்திற்கு
வந்தபின் அவன் மனம் கொஞ்சம் சாந்தியடைந்தது.
பிரயாணத்திற்க்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். அடுத்த நாள் அவன்
கிராமத்திலிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை அவனுடைய ஒன்றுவிட்ட தம்பி -
சித்தப்பா பிள்ளை ராஜு எழுதியிருந்தான்.
சிரஞ்சீவி நாராயணனுக்கு,
நமஸ்காரம். உனக்கு ஒரு சோகமான செய்தியை தெரிவிப்பது என் கடமையாக இருக்கிறது.
5ம் தேதி வெள்ளியன்று காலை உன் தந்தை, என் பெரியப்பா ஸ்ரீ. ஸ்வாமிநாத சாஸ்திரிகள் இறைவனடி
சேர்ந்தார்.
(நாணு அதிர்ந்தான். கை நடுங்கியது.)
வியாழனன்று இரவு வழக்கம் போல் படுக்கப்போனார். நானும் வழக்கம் போல் வீட்டின்
வெளி வராந்தாவில் உறங்கினேன். நீ அமெரிக்கா போன பிற்பாடு அது தான் என் வழக்கமாக
இருந்தது.
பெரியப்பா எப்போதும் காலை ஆறு மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போக தயாராகி
விடுவார். என்னை வந்து எழுப்புவார். அன்று ஏழு மணியாகியும் அவர் வெளியே வரவில்லை.
ஒரு வேளை அவருக்கு உடல் நலம் சரியில்லையோ என்று பார்க்க நான் உள்ளே சென்றேன். அவர்
படிக்கையில் படுத்துக்கொண்டிருந்தார். முதலில் அவர் தூங்குகிறார் என்று
நினைத்தேன். பிற்பாடு தான் தெரிந்தது, அவர் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்
என்று. அவர் அமைதியாக நம்மை விட்டுவிட்டுப்
போய்விட்டார். அவர் பெரிய மனிதர், அவருக்கு தொண்டு செய்யக் கொடுத்துவைத்தது
எனது பாக்கியம். நீ சென்றுவிட்ட காரணத்தால், தான் இறந்துவிட்டால் நான் தான்
அவருக்கு ஈம சடங்குகளை செய்யணும் என்று சொல்லியிருந்தார். நீ வந்துவிட்டால் நீயே
செய்யலாம். எதிர்காலத்தில் கோவில் காரியங்களை நான் கவனித்துக்கொள்வேன்.
நாணு, உன் தந்தைக்கு உன் மேல் அளவுகடந்த பாசம் இருந்தது. உன்னைப்பற்றி
அடிக்கடி பேசுவார். வெளியில் பார்த்தால் அவர் கண்டிப்பானவராகத் தோன்றும். உள்ளே
இளகிய சுபாவமுள்ளவர் தான். உனக்கு மிகவும் துக்கமாக இருக்கும். உனக்கு எப்படி தேறுதல் சொல்வது என்று
தெரியவில்லை. அந்த பகவான் தான் உனக்கு இந்த பேரிழப்பை தாங்கிக்கொள்ள பலம்
தரவேண்டும்.
இப்படிக்கு,
ராஜு.
“ஐயோ! அப்பா! ... இல்லே! நீ என்ன விட்டுட்டு போகாதே! போகாதே! அப்பா! ஐயோ!’
குலுங்கி குலுங்கி அழுதான். “இருக்காது! நான் தப்பா படிச்சிருப்பேன்!”
மீண்டும் மீண்டும் பயித்தியம் பிடித்தவன் மாதிரி கடிதத்தை படித்தான்.
“ஐயோ! என்ன காரியம் செஞ்சுட்டேன்!”
கழிவிரக்கம் அவனை உலுக்கியது. ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இன்றி கழிந்தது.
அவன் சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.
பிறகு ஒருநாள் வாயில் மணி அடித்தது. அமெரிக்கன் தான் வந்திருந்தான். இளைத்து
கறுத்துப்போயிருந்த நாணுவைப் பார்த்து அவன்
அதிர்ச்சி அடைந்தான்.
“நான் கோயிலுக்கு வந்திருந்தேன். அங்க சொன்னாங்க உங்க அப்பா தவறிட்டார்னு. ஐ
ஆம் வெரி வெரி சாரி.” என்றான் அவன்.
உண்மையான உணர்வுடன் அவன் கூறிய சொற்கள் அழுது அழுது உலர்ந்து போயிருந்த
நாணுவின் கண்களில் மீண்டும் கண்ணீரை வரவழைத்தன.
அந்த அமெரிக்கனைப் பார்த்து நாணு உணர்வால் தடைப்பட்ட, தழத்தழத்த குரலில், “என்
அப்பா மகான், க்ரேட் மேன். ... நம் சாஸ்திரங்களோட அர்த்தங்களை... நன்னா நமக்கு
விளக்கியிருப்பார்.... நான் உங்களையும் அழைச்சிண்டு அவர்கிட்ட போலாம்னு
நெனச்சிண்டிருந்தேன்... அப்பா என்னை ஏமாத்திட்டுப் போயிட்டார்.” நாணு விம்மி
விம்மி அழுதான்.
அந்த அமெரிக்காக்காரன் அனுதாபத்துடன் நாணுவின் தோளில் தட்டிக்கொடுத்தான்.
“எனக்கு புரியறது உங்க மனசு. உங்க அப்பா உயர்வான மனிதர். ஆனா கவலைப்படாதீங்க. நம்
சந்தேகங்களை விளக்க நமக்கு ஒரு மனிதர்
கிடைச்சுட்டார்.”
அவன் “நமக்கு”ன்னு சொன்னது நாணுவின் உள்ளத்தைத்தொட்டது. எனக்கும் அதே தாகம்
இப்போ இருக்குன்னு புரிஞ்சிண்டிருக்கான் போல இருக்கு.
“அவர் இன்னிக்கு சாயங்காலம் பேசப்போறாரு. வான்ட் டு கம்?”
“யார் அவர்?”
“இந்தியன் தான். நான் அவர் பேச்சை ஒரு நாள் கேட்டேன். அற்புதமா, தெளிவா,
எளிமையா இருந்துது. அவருடைய செய்தி நேரா நம்ம உள்ளத்த தொடற மாதிரி இருக்கு. அவர்
நாம் எத தேடிண்டு இருக்கோமோ, அந்த ட்ரூ நாலட்ஜ்,
அதப்பத்திதான் பேசறாரு. வேறெ எதை பத்தியும் இல்ல. அவர் ஒரு உண்மையான மாஸ்டர்னு
(ஆசான்னு) நெனைக்கறேன். மறுபடியும் அவர் பேசறத கேட்க ரொம்ப ஆவலா இருக்கு. இன்னிக்கு
யாராவது கேள்வி கேட்டால் கூட பதில் சொல்வாராம். உங்களுக்கும் அதுல இன்டரஸ்ட்
இருக்கும்னு நெனச்சேன். சரி தானே?”
நாணு ஆமாம் என்று தலையாட்டினான்.
“பத்து நிமிஷம் தாங்கோ. ரெடியாயிடறேன்.”
“ஒன் மோமென்ட், ஹியர் ஈஸ் சம் ப்ரசாத், கோவில்லேர்ந்து கொண்டுவந்தேன். வாங்க, இத
சாப்பிடலாம்.” பொட்டலத்தில் புளியோதரையும் வடையும் இருந்தது.
பட்டினியால் வாடியிருந்த நாணுவிற்கு அது அமிர்தமாக இருந்தது.
நாணு தயாரானதும் இருவரும், அந்த
உயரமான வெள்ளைக்காரனும், மாநிறமான இந்தியனும் நட்புடன் கைகோர்த்துக்கொண்டு சென்றனர்.
இருவருக்கும் ஒரே எண்ணம், ஒரே லட்சியம்.
நாணுவின் கனவான “நெறைய பணம்
சம்பாதிக்கணும், சொந்த வீடு வாங்கணும், அழகான ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்”
என்பது என்ன ஆயிற்று?
அவனுக்கு அது நினைவே இல்லை.
என் குறிப்பு:
பல வருடங்கள் முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு ஒரு கோயிலில் ஒரு
இளம் தமிழ் நாட்டு அர்ச்சகனை பார்த்தேன். அவன் கார், செல்ஃபோன் எல்லாம்
வைத்திருந்தான். எங்களிடம் நன்றாக
பழகினான். சிரித்துக்கொண்டே என்னிடம், “எனக்கு ஒரு பொண் பார்த்துத் தாங்கோ”
என்றான். அந்த சம்பவத்திலிருந்து எழுந்தது தான் இந்த கற்பனை.