மாலு!
இதோ வரேன்!
“மாலு, வாசல்ல
யாரோ பெல் அடிக்கறா, போய் பாரு” பேப்பரை புரட்டியவாறே சொன்னான் கோபால்.
“வரேன், ஒரு
நிமிஷம்.”
உக்கார்ந்து
பேப்பர் படிக்கறவர் எழுந்து திறக்கக் கூடாதா, எல்லாத்துக்கும் நான் வரணும் என்று கொஞ்சம்
சலிப்புடன் எண்ணியவாறே மாலு கைகளைத் துடைத்தபடி சமையலறையிலிருந்து வேகமாய் வந்து வாயிற்கதவைத்
திறந்தாள்.
“கோபால் இருக்கானா?”
என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார் இரண்டாவது மாடி வாசியான பிரகாஷ் தன் மனைவி புவனாவுடன்.
“வாங்கோ, என்ன திடீர்னு காலங்கார்த்தால விஜயம்? என்ன சமாச்சாரம்?”
என்றான் கோபால்.
“சமாச்சாரம்
இருக்கு. அதான் வரோம். நாங்க இங்கேயிருந்து “ஷிஃப்ட்” பண்றோம் கோபால். அதான் சொல்லிண்டு
போலாம்னு வந்தோம்.”
“ஷிஃப்ட் பண்றேளா?
ஏன்? எங்க போறேள்? வேற ஊருக்கா?” என்று சற்று வியப்புடன் வினவினான் கோபால்.
கோபாலுக்கும்
மாலுவுக்கும் ஒரே ஆச்சர்யம். இருபது வருஷமாக இங்கே இருப்பவர்கள் திடீர்னு மாறிப்போகிறோம்
என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்?
“இல்ல, இதே
ஊர்ல தான், பேரூர் பக்கத்துல. புன்னகைன்னு ஒரு சீனியர் சிடிசன் ஹோம். அங்கே ஷிஃப்ட் பண்றோம்.”
“ஹோமுக்கா?
ஏன்?”
“கொஞ்ச நாளாவே
இதைப்பத்தி யோசிச்சிட்டு இருந்தோம். இப்ப தான் டிசைட் பண்ணினோம்.”
“அங்கே நமக்கு
சமைக்கற வேலை இல்ல. வேலைக்கு ஆள் எல்லாம் அவாளே ஃபிக்ஸ் பண்ணித் தந்துடுவாளாம்” இது
புவனா.
“அங்க போனா
உங்களுக்கு போர் அடிக்காதா? நன்னா யோசிச்சிட்டு தான் போறேளா?” என்றான் கோபால்.
“அங்க இருக்கறவா
எல்லாம் அதப்பத்தி ரொம்ப ஒசத்தியா சொல்றா. நல்ல செக்யூரிடி இருக்கு. 24/7 ஒரு நர்ஸ்
இருப்பாளாம். ஆம்புலன்ஸ் ரெடியா எப்பவும் இருக்குமாம். மூணு வேளை வெரைட்டியா நல்ல சாப்பாடு.
இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு. புவனாவுக்கும் ரிலீஃப்… பாவம், அவளும் சமையல் வீட்டு
வேலன்னு இத்தனை வருஷமா ஒழைச்சுட்டிருக்கா.“
“ஆனா அங்க லைஃப்
இங்க மாதிரி இருக்குமா? போர் அடிக்கும். எல்லாம் வயசானவங்க சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பாங்க.
இங்க மாதிரி அங்க இருக்காது. தவிர மாலுவுக்கு
வீட்டு வேலை செய்யறது சமைக்கறது எல்லாம் ரொம்ப பிடிக்கும். இல்லே மாலு?” என்று மாலுவைப்
பார்த்து சொன்னான் கோபால்.
மாலு செயற்கையாக
புன்னகை செய்தாள்.
“நீங்களும்
இதப்பத்தி யோசியுங்கோ.” என்றாள் புவனா.
“நமக்கு வேலைலேர்ந்து
ஓய்வு மாதிரி நம்ம லேடீஸுக்கும் ஓய்வு வேண்டாமா? இத்தனைக்கும் அவாளும் வேலைக்கு போனவா
தான். வேலைக்கும் போயிண்டு வீட்டையும் கவனிச்சிண்டு… அப்பப்பா! அவாளுக்கும் ஒரு ரெஸ்ட்
வேண்டாமா?” இது பிரகாஷ்.
“அதெல்லாம்
நமக்கு சரி வராதுப்பா. அங்க எல்லாரும் ஓல்ட்
பீப்பிளா இருப்பா.. டல்லா இருப்பா. நமக்கு இங்க தான் சரி.”
“நாமும் ஓல்ட்
தானே?” என்றான் பிரகாஷ்.
அவன் அப்படி
சொன்னது கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் முகபாவனையிலிருந்து தெரிந்தது.
“அதெல்லாம்
எங்களுக்கு வேணாம்பா. இங்க என்ன கஷ்டம்? எதுக்கு சேஞ்ச் பண்ணனும்?”
“சரிப்பா. உங்க
இஷ்டம். அப்ப நாங்க போயிட்டு வரோம். வேன் வந்திருக்கு. சாமானெல்லாம் ஏத்தணும். லன்சுக்கு
அங்கே போயிடலாம்னு இருக்கோம்”
“எங்காத்துக்கு
கொஞ்சம் வரயா, மாலு. ஏதேதோ சாமானெல்லாம் இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு போறோம். உனக்கு
எதாவது யூஸாகுமான்னு பார்க்கறயா? என்றாள் புவனா.
“ஹலோ, நான்
புவனா வீட்டு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?”
“சரி, சீக்கிரம்
போனேன் வந்தேன்னு வா.”
புவனா வீட்டிற்கு போனதும் அவள் மாலுவிடம்,
“கோபால் உன்னை நன்னா பிடிச்சிண்டிருக்கார். உன்னை எங்கே போகவும் விட இஷ்டம் இல்லை போல
இருக்கு.” என்றாள்.
“இவர் ஒரு வருஷமா
என்னை படுத்தற பாடு உனக்கே தெரியும். புவனா. சர்ஜரி ஆனதுலேர்ந்து இப்படித்தான். எப்பப்
பார்த்தாலும் மாலு, இதக்கொண்டு வா. அதைக்கொண்டுவா, வெளில கோவிலுக்கோ, கடைக்கோ போனாலும்
கால் பண்ணிண்டே இருப்பார். போனா உடனே திரும்பி வந்துடணும்.. கட்டிப்போட்ட மாதிரி இருக்கு.
வெளில யார் கிட்டேயும் சொல்ல முடியல்ல. அவரை விட்டுக்கொடுக்க மனசு வரல்ல. நீ சொன்னதுனால
இப்படி கொட்டிட்டேன்.”
புவனாவுக்கு
மாலுவைப் பார்த்து பாவமாக இருந்தது.
“இதுக்கு ஒரே
வழி நீங்களும் எங்க மாதிரி சீனியர் சிடிஸன் ஹோமுக்கு வரணும். அங்க அவருக்கு நன்னா பொழுது
போகும். உன்னைப் பிடுங்கி எடுக்க மாட்டார்” என்றாள் புவனா.
“அதெல்லாம்
நடக்காத காரியம். புவனா. பேசி என்ன பிரயோஜனம்? விடு. நீ உன் ப்ளானெல்லாம் சொல்லு.”
புவனா வீட்டிற்கு
போனதும் அங்கு ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்திருந்த சாமான்களை காட்டிய புவனா, “இதிலிருந்து
உனக்கு வேண்டியதை எடுத்துக்கோ.” என்றாள். அவைகளிலிருந்து ஒரு தோசைத்திருப்பியை மட்டும்
மாலு எடுத்துக்கொண்டாள். “இது போதும். தேங்க்ஸ்.” என்றாள்.
புவனா மேஜை
மீது வைத்திருந்த ஒரு பேக்கட்டை மாலுவிடம் தந்தாள், “இது ஓனக்கு என் ப்ரசன்ட். அன்ப்ரேக்கபுள்
டீசெட்.”
“ஓ! தேங்க்
யூ, புவனா! நான் உனக்கு ஒண்ணுமே கொடுக்கல்லியே. நீ போகப்போற விஷயம் நீ சொல்லவே இல்லை”
“ஆதனால பரவாயில்லை.
உன் ஃப்ரெண்ட்ஷிப் போதும்.”
மாலு புவனாவைக்
கட்டிக்கொண்டாள்.”
“புவனா, உன்னை
ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்.” என்றாள் மாலு வருத்தத்துடன்.
“பாவம். மாலு.
அவளுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.” புவனாவின் மனதில் இந்த எண்ணம் ஓடியது.
மாலு திரும்பி
வந்ததும் கோபால் அவளிடம், “நான் எழுதி கொடுக்கறேன். மாலு. அவா பத்து நாள்ள அலறியடிச்சிண்டு
திரும்பி வராளா இல்லையான்னு பாரு.”
“அவா சொல்றதப்
பார்த்தா அங்க ரொம்ப நன்னாயிருக்கும் போல இருக்கு.”
கோபால் அவளை
முறைத்தான்.
“உனக்கு போக
ஆசையா இருக்கு போல. வர வர நீ சமைக்க சோம்பல் படறே. நம்ம ரெண்டு பேருக்கு சமைக்கறது
என்ன கஷ்டம்? இங்க பாரு. நமக்கு அதெல்லாம் சரிப்படாது. சரி, சரி. நீ போய் செகண்ட் டோஸ் காபி
கொண்டு வா.”
“ஒரு நாள் அவர்
சமைச்சு பார்க்கட்டும். அப்புறம் தெரியும்" என்ற எண்ணிய படி மாலு அடுக்களைக்கு சென்றாள்.
நாட்கள் கழிந்தன,
வாரங்கள் கழிந்தன, இரண்டு மாதமும் கழிந்தது.
கோபால் அவ்வப்பொழுது,
புவனாவிடமிருந்து என்ன ந்யூஸ் என்று மாலுவிடம் விசாரிப்பான். அவன் நினைத்தபடி அவர்கள்
‘அலறியடிச்சிண்டு’ திரும்பி வரவில்லை.
“அவாளுக்கு
அங்க ரொம்ப நன்னாயிருக்காம். ஃபுட் ரொம்ப டேஸ்டியா, வித விதமா இருக்காம். புவனா திருப்புகழ்
க்ளாஸ், யோகா எல்லாம் அட்டன்ட் பண்றாளாம். பிரகாஷ் டேபிள் டென்னிஸ் ஆடப்போறாராம். சாயங்காலம்
ஃப்ரென்ட்ஸோட ஸீட்டாட்டமாம். இரண்டு பேரும் காலைல வாக்கிங்க் போறாளாம். புவனா சொல்றா.”
என்றாள் மாலு.
“சீட்டாட்டமா?”
“ஆமா, புவனா
சொன்னா.”
கோபாலுக்கு
சீட்டாட்டம் மிகவும் பிடித்த விஷயம்.
பிறகு ஒரு நாள் பிரகாஷிடமிருந்து கோபாலுக்கு ஃபோன் கால்
வந்தது
“கோபால், நியூ
இயர் வரப்போறது இல்லையா? அதனால் நியூ இயர் ஈவ் அன்னிக்கு இங்க பெரிசா செலிப்ரேட் பண்ணப்போறா.
ஸ்பெஷல் டின்னர், தவிர கேம்ஸ், எல்லாம் இருக்கும். நீயும் மாலதியும் வாங்க.”
கால் முடிந்ததும் கோபால் மனைவியிடம்,
“பிரகாஷ் கூப்பிடறானே?
போலாமா?” என்றான்.
“நீங்க டிசைட்
பண்ணுங்கோ.” என்றாள் மாலதி சமயோசிதமாக. அவளுக்கு ஏற்கனவே புவனா இந்த புதுவருஷ கொண்டாட்டம்
பற்றி சொல்லியிருந்தாள். தான் போகலாம் என்று சொன்னால் உடனே கோபால் எதுக்காக போகணும்
என்பான்.
“ஸரி. போயிட்டு
தான் பார்ப்போமே, என்ன தான் அங்க இருக்குன்னு.” என்றான் கோபால்.
மாலதிக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.
புது வருஷத்துக்கு முந்தின மாலை. “புன்னகை” என்ற அந்த சீனியர் சிடிசன் ஹோமின் கம்யூனிட்டி ஹாலில் ஏற்பாடெல்லாம் பிரமாதமாக இருந்தது. புவனா மாலுவிடம் நீ என்னோட இரு. அவங்க ஆம்பிளைகள் ஒண்ணா இருக்கட்டும்.” என்றாள்.
ஹாலில் நாற்காலிகள் பெரிய வட்டமாகப் போடப்பட்டிருந்தன., க்விஸ், பாஸிங்க் தி பார்சல் போன்ற விளையாட்டுகள் எல்லோரும் உற்சாகமாக விளையாடினார்கள். பாட்டு, டான்ஸ் போன்றவைகளுக்கும் குறைவில்லை. சாப்பிட சூப், பகோடா, ஆலு பரோட்டா, க்ரீன் தால், சாம்பார் சாதம், குலோப்ஜாமுன், ஐஸ்க்ரீம் என்று வித விதமான அயிட்டங்கள்.
6 மணிக்கு தொடங்கின
நிகழ்ச்சிகள் சரியாக 9 மணிக்கு முடிவடைந்தன.
"சரி, பிரகாஷ்.
எல்லாம் நன்னா இருந்துது. ரொம்ப தேங்க்ஸ். அப்போ நாங்க கெளம்பறோம்.” என்றான் கோபால்.
“ராத்திரி ஏன்
ட்ரைவ் பண்ணிண்டு போறே, கோபால். ராத்திரி தங்கிட்டு மார்னிங் ப்ரெக்ஃபாஸ்ட்சாப்பிட்டுட்டு
போங்களேன்.” என்றான் பிரகாஷ்.
“சரி, ப்ரகாஷ்.”
கோபால் நல்ல ‘மூடி’ல் இருந்தான்.
காலையில் கோபாலும் பிரகாஷும் வாக்கிங் போய்விட்டு வந்தார்கள். பிறகு கோபாலும் மாலுவும் டிபன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்கள் .
காரில் வரும்
வழியில் கோபால் பேச்சை ஆரம்பித்தான்.
“மாலு, பிரகாஷும்
நானும் இன்னிக்கு கார்த்தால வாக்கிங் போனோம் இல்லையா? அப்போ அவன் சொன்னான், அவா வீட்டுக்கு
அடுத்த கட்டுல, ஒரு நல்ல வீடு காலி இருக்காம். வேணும்னா நமக்கு ஏற்பாடு பண்ணித் தரானாம்.
வாடகைக்கு. உனக்கு வரணுன்னு இருந்தா நாம வரலாம். எனக்குத் தோணறது
கொஞ்சம் நாள் இருந்து பார்ப்போமேன்னு. நீ என்ன சொல்றே?.”
“நீங்க டிசைட்
பண்ணுங்கோ.”
“எல்லாம் உனக்காகத்தான்
மாலு. நீ எப்பவும் சமைக்க அலுத்துக்கறே. சரி. உனக்கும் கொஞ்சம் சேஞ்சாக இருக்கும்,
ரெஸ்ட் கிடைக்கும்னு தான் பார்க்கறேன்.”
மாலு உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.
“எனக்கு நீங்க
எப்படி டிசைட் பண்ணினாலும் சரி தான்.”
அன்று தொடங்கியது
நிம்மதியான வாழ்வு மாலுவுக்கு. அவள் முகத்தில் இப்போது "புன்னகை"!