Thursday, March 26, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 10

ஒரு நாள் முருகேசன் மீது ஒரு பைக் மோதி விழுந்து விட்டான். இடது காலில் அடி பட்டுவிட்டது. ஒரு முறை ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டு போட்டுக் கொண்டு வந்தான்.
 வலி கொஞ்சம் குறைந்தவுடன் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டான். சுமார் பத்து நாட்கள் கழித்து மீண்டும் வலி தொடங்கியது. முருகேசன் ஆரம்பத்தில் அசட்டையாக இருந்தான். வலியை பொறுத்துக் கொண்டே வேலை செய்தான். வர வர வலி அதிகமாகியது.  திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. இடது கால் பாறாங்கல் மாதிரி கனத்தது.
“ஐயோ! வள்ளி! வலிக்குதே! அம்மா! தாங்க முடியல்லியே!” என்று அவன் அனத்தவே வள்ளி எழுந்து அவனை தொட்டு பார்த்தாள். காய்ச்சலில் உடல் அனலாக கொதித்தது. செல்வன் ஓடிப்போய் ஆட்டோ கொண்டுவந்தான். வள்ளி முருகேசனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போனாள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தான். வீட்டிற்கு திரும்பி வரும்போது முருகேசனுக்கு இடது முழங்காலுக்கு கீழே மூளியாக இருந்தது. முருகேசன் நொண்டியாகிவிட்டான்.
வள்ளிக்கு சோதனைக்கு மேல் சோதனையாக வந்தது. வந்த வருமானம் இரண்டு வேளை சாப்பாட்டிற்கே போதவில்லை. ஆஸ்பத்திரி, மருந்து என்று வேறு செலவு எக்கச்சக்கமாக ஆகிவிட்டது. நல்லவேளையாக செல்வனுக்கு ஸ்காலர்ஷிப் இருந்தது. அவன் படிப்பு செலவு முழுவதும் அதில் அடங்கிவிட்டது. எப்படியோ இடர்களுக்கும் நடுவில் செல்வன் பத்தாவதை எட்டிவிட்டான்.
 ஒரு நாள் பள்ளியில் மதியம் உணவிற்கு மணி அடித்தது. செல்வன் தன் டிபன்பாக்ஸை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் மரத்தடிக்கு சென்றான். அங்கு ரமணி, செல்வனின் நெருங்கிய நண்பன் வந்து சேர்ந்து கொன்டான். அந்த பள்ளியில் செல்வன் சேர்ந்த புதிதில் அவனை எல்லோரும் இளக்காரமாக நடத்தினார்கள். ஆனால் ரமணி மட்டும் அவனிடம் அப்போதும் நட்புடன் நடந்து கொண்டான். வெகு விரைவிலேயே இருவரும் இணைபிரியாத  நண்பர்களாகி விட்டார்கள். ரமணி எப்போதும் ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான். அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எல்லோரையும் சிரிக்க வைத்துக்  கொண்டே இருப்பான்.
ரமணி பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரன். படிப்பில் சுமார் தான். அவனுடைய கலகலப்பான சுபாவத்திற்கு நேர் எதிரிடையாக செல்வன் எப்போதும் சீரியஸாக இருப்பான். ஒரே வகுப்பு என்றாலும் செல்வன் ஏ பிரிவிலும் ரமணி பி பிரிவிலும் இருந்தனர். அன்று செல்வன் முகம் வாடியிருந்தது. ரமணி தன் சுபாவப்படி கலகலவென்று பேசி செல்வனுடைய மூடை மாற்ற முயற்சித்தான்.
“செல்வா, இன்னைக்கு தமிழ் பீரியட்ல என்ன நடந்திச்சு தெரியுமா? ஒரே தமாஷ். எங்க பென்ச் ஓரத்துல நம்ம குண்டு ஹரி உக்கார்ந்திருந்தானா, நாங்க எல்லாரும் சேர்ந்து அவன புஷ் பண்னினோமா, அவன் தடால்லுன்னு அந்த ஸைடில விழுந்தானா, ஸார் கோபத்தோட வந்தாரா, அப்ப ஹரி ஒரு நல்ல ஐடியா பண்னினான், மயக்கம் வந்த மாதிரி கண்ண சொருகிட்டு நடிச்சானா, ஸார் அப்படியே நம்பிட்டாரு. “ஏண்டா, ஒடம்பு சரியா இல்லையா? போ. போய் கடைசி பென்ச்ல போய் படுத்துக்கோ.” அப்படீன்னாரு, அவனும் ஜாலிய பீரியட் முழுக்க சுகம்மா படுத்துக்கிட்டான்” என்று ரமணி சிரித்தான்.  ‘செல்வன் முகத்தில் சிரிப்பில்லை.
“அப்புறம் செல்வா, சயன்ஸ் பீரியட்ல நம்ம நாகேஷ் இல்லே, அவன் சள சளன்னு பேசிக்கிட்டே இருந்தானா. ஸார் பாத்துட்டாரு. அடிக்க வந்தாரா? அப்ப நாகேஷ் ஸாரப் பாத்து சொல்றான், “ஸார், என்ன அடிக்காதீங்க, ஸார்” அப்படீன்னு பலம்மா சொன்னானே பார்க்கணும், ஸார் ஷாக்காயிட்டாரு, “ஏண்டா உன்ன அடிக்கக்கூடாது?”ன்னு கேட்டார். “ஸார், நீங்க அடிச்சா நான் அழுவேன், ஸார்” ன்னு சொன்னானே பார்க்கணும், க்ளாஸ்ல ஒரே சிரிப்பு, ஸாரும் சிரிச்சுட்டாரு.” என்று பலமாக சிரித்தான் ரமணி.
செல்வன் சிரிக்க முயன்றான். ஆனால் அவன் சிரிப்பில் உயிர் இல்லை.
“ரமணி, எங்கம்மா சீக்கா இருக்காங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. எனக்கு ஒரே பயம்மா இருக்குது, ரமணி.” என்றான் செல்வன் துக்கத்தால் தடைபட்ட குரலில்.
ரமணிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது.
“செல்வா, கவலைப் படாதே. அவங்களுக்கு சரியாயிடும்.” என்று நண்பனை தேற்ற முயன்றான்.
“இல்லே, ரமணி, அம்மாவுக்கு கொஞ்ச நாளாவே, மணி பொறந்த பிறகே உடல்நிலை சரியா இல்ல. சத்தான உணவு இல்லாததால் இருக்கலாம். என் படிப்புக்காக தன்ன ரொம்ப கஷ்டப்படுத்திக்கறாங்க. ரொம்ப உழைக்கறாங்க. எங்கப்பாவுக்கு கால் போனதிலிருந்து அம்மா தான் அவர் வேலை செய்யற வீட்டிலும் போய் செய்யறாங்க.
அங்க எங்கப்பாவுக்கு தோட்டம், மாடுங்கள பராமரிக்கிற வேலை. நல்ல சம்பளம். அதனால அந்த வேலைய விட முடியல்ல. அந்த வீட்டுக்காரங்க நல்லவங்க.  எங்கப்பா மெதுவா உக்கார்ந்து பாலை கறந்து கொடுத்திருவாரு. மெதுவா தன்னால முடிஞ்சதை செய்வாரு.  ஆனா மத்த வேலைகள அம்மா தான் செய்யணும்.”
ரமணி அனுதாபத்துடன் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.
“வீக்கா இருந்தாலும் உழைச்சுக்கிட்டே இருப்பாங்க. ஆனா நேத்தைக்கு திடீர்னு வயத்தில தாங்க முடியாம வலி வந்திருச்சு. டாக்டரம்மா கான்ஸரா இருக்கல்லாம், எதுக்கும் டெஸ்ட் பண்ணிடலாம் சொல்றாங்க. எனக்கு.... பயம்மா இருக்கு, ரமணி. என்று கூறிய செல்வன் விம்மி அழுதான்.
ரமணி செல்வனின் தோள்களை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
 “செல்வா, கவலைப் படாதே.  சாயங்காலம் நாம கோவிலுக்குப் போய் சாமி கிட்ட வேண்டிக்கலாம். உன் அம்மாவுக்கு சரியாயிடும். வா. பெல் அடிச்சிருச்சு.” என்று சொல்லி நண்பனை அன்புடன் அழைத்துச் சென்றான்.

Tuesday, March 17, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 9

வள்ளியும் முருகேசனும் தங்கள் குடிசையை நெருங்கினர். அங்கு கண்ட காட்சி முருகேசனை சட்டென்று நிற்க செய்தது. குடிசைக்கு வெளியே ஒரு புறம் செல்வன் அமர்ந்திருக்க, அவனை சுற்றி கோவிந்தன், முத்து, பாலன், பழனி, செல்லி யாவரும் அமர்ந்திருந்தனர். செல்வன் பேசிக் கொண்டிருந்தான்.
ரொம்ப நாளைக்கு முன்னால இங்கிலாந்துல ஒரு விஞ்ஞானி இருந்தாரு, அவரு பேரு நியூட்டன். ஒரு நாள் அவர் ஒரு ஆப்பிள் மரத்தடில உக்கார்ந்திருந்தாராம்.”
“ஆப்பிள் மரமா?” செல்லி கண்களை அகல விரித்துக்கொண்டு கேட்டாள்.
“ஆமா, ஆப்பிள் மரம். அதுல நெறைய ஆப்பிள் பழம் இருந்துது. அதுல ஒரு பழம் அவர் தலையில விழுந்துது. அப்ப அவர் என்ன நெனச்சார், தெரியுமா?”
“அவருக்கு நல்லா தல வலிச்சிருக்கும்.” – இது பழனி.
“அத எடுத்து தின்னாரா?” – செல்லி.
“இல்ல. அவர் சாப்பிடல்ல, யோசிச்சாரு.”
“அதுல மண் பட்டிருக்கும். அதான் யோசிச்சிருப்பாரு”
“தொடச்சி சாப்பிடவேண்டியது தானே?”
“இல்ல, அவர் அத சாப்பிடல்லே. அவர் என்ன யோசிச்சாரு தெரியுமா?” எல்லோரும் செல்வனையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அந்த ஆப்பிள் பழம் ஏன் கீழ விழுந்துது, ஏன் மேல போகல்லேன்னு சிந்திச்சாரு.
 “எங்கேயாவது ஆப்பிள் மேலே பறக்குமா?” எல்லோரும் பெரிதாக சிரித்தனர்.
“ஏன் எல்லா பொருளும் கீழே விழுது? மேல ஏன் போறதில்ல? சொல்லுங்க பார்க்கலாம்” என்றான் செல்வன். எல்லோரும் மௌனமாக செல்வனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நம்ம பூமி இருக்கே, நாம வசிக்கிறோமே இந்த பூமிக்கு ஒரு சக்தி இருக்குது. அந்த சக்தியால பூமி எல்லா பொருள்களையும் தன்னை நோக்கி இழுக்கிறது. அதனால தான் மேலே எறியற பொருள் எல்லாம் கீழே விழுது.”
“அதுனால தான் மாங்காயை அடிச்சா மாங்காயும் கீளே விளுது, கல்லும் விளுது, இல்லே, செல்வா?” கேட்டது பழனி
“அடியும் முதுகில விளுது” இது பாலன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“பூமியோட இந்த சக்திக்கு புவி ஈர்ப்பு விசைன்னு பேரு. இத முதல்ல கண்டுபிடிச்சவர் நியூட்டன்.” என்று விளக்கினான் செல்வன். எல்லா சிறுவர்களும் செல்வன் சொல்வதை ஆவலுடனும் கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்த முருகேசனுக்கு வியப்பில் மூச்சடைப்பது போலிருந்தது.
“சூரியனுக்கும் ஈர்ப்புசக்தி இருக்குது. அதனால பூமி சூரியன சுத்தி வருது. சூரியன் பூமியைவிட பல மடங்கு பெருசு. ஆனா இங்கேயிருந்து பார்க்கும்போது சிறுசா தெரியுது. அதோட சக்தி அதிகம்”
“சூரியன் பெருசுன்னா சந்திரனும் பெருசு இல்லே செல்வா?” பாலன் சந்தேகம் எழுப்பினான்.
“வெரி குட், சபாஷ்1” என்ற குரல் கேட்கவும் அனைவரும் திரும்பினர். பிரகாசம் அங்கே நின்று கொண்டிருந்தார். செல்வன் சற்று வெட்கத்துடன் எழுந்து நின்றான்.
பிரகாசம் முருகேசன் வள்ளி அருகில் சென்றார். முருகேசனைப் பார்த்து, “நீங்க செல்வன் அப்பா முருகேசன் தானே?”
“ஆமாங்க” என்றான் முருகேசன் பணிவுடன்.
“முருகேசன், செல்வன் ரொம்ப புத்திசாலி, அவன நல்லா படிக்க வைங்க. அவனால உங்க சமூகமே முன்னுக்கு வரணும்.” என்று கூறிய பிரகாசம், செல்வனிடம் திரும்பி, “செல்வா, எனக்கு சென்னையில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கெடச்சிருக்கு. இன்னைக்கு தான் லெட்டெர் வந்தது.  இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும்.”
ரொம்ப நாட்களாக நீ உன் வீட்டுக்கு கூப்பிட்டுக் கொண்டே இருந்தாய்.  நானும் வரணும்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். இப்போ இந்த கடிதம் வந்த உடனே, சரி  இதையும் சொல்லிட்டு உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.” என்றார்.          
 செல்வனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் மல்கியது. பிரகாசம் அவனை அன்புடன் தட்டிக் கொடுத்து, “சென்னைக்குத் தானே போறேன், அமெரிக்கா இல்லையே. அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்பேன். நான் கடிதம் எழுதுவேன். நீயும் அடிக்கடி எழுது. என்ன? சரியா?”
“இவள் தான் மணிமேகலையா?” என்று கேட்டுக்கொண்டே முருகேசனிடமிருந்து மணியை வாங்கிக் கொண்டார்.
“வாங்க, சாமி, உள்ளே” என்று முருகேசன் அழைக்கவும் பிரகாசம் அவர்களின் எளிய ஆனால் துப்புரவாக இருந்த குடிசைக்குள் சென்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் சகஜமாக உட்கார்ந்தார். வள்ளி இரண்டு சிறிய வாழைப்பழங்களை ஒரு தட்டில் எடுத்து வந்தாள்.
“செல்வா, ஓடிப் போய் ஐயாவுக்கு பெப்ஸி வாங்கிட்டு வா.”
“வேண்டாம், முருகேசன், இதுவே போதும்” என்று வாழைப் பழங்களை சாப்பிட்டார். பிறகு எழுந்தார் போவதற்கு.
“முருகேசன், வள்ளியம்மா, நானும் உங்க மாதிரி மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வந்தவன் தான். எங்கம்மா என்னை படிக்கவைக்க ரொம்ப கஷ்டப் பட்டாங்க. எப்படியோ படிச்சு இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். அதனால சொல்றேன், செவன் படிப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் நிறுத்திடாதீங்க. செல்வா, இனிமே நீயே படிக்கலாம். யாரும் சொல்லிக்கொடுக்க அவசியமில்லை. அப்படி எதாவது புரியல்லேன்னா  டீச்சர் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ. இன்னும் ஒரு வாரம் இங்க தான் இருப்பேன். வழக்கம் போல வா. அப்போ நான் வரட்டுமா?”
பிரகாசம் விடை பெற்று சென்றார். அவர் சென்றதும் முருகேசன் படீர் படீரென்று தன் தலையில் அறைந்து கொண்டான்.
“நான் ஒரு முட்டாள், மட்டி. ஒனக்கிருக்கற புத்தி எனக்கில்லாம போயிருச்சே வள்ளி.” என்று பலவாறு புலம்பினான். பிறகு,
“வள்ளி, செல்வனை நல்லா படிக்க வைக்கோணும். அவன் நல்லா படிச்சு ஐயா மாதிரி வெள்ள வேட்டி, சட்டைஎல்லாம் போட்டுக்கணும்.” என்றான்.
“போப்பா, நான் ஜீன்ஸ், டி சர்ட்டு தான் போட்டுப்பேன்.” என்று செல்வன் கூறியதும் எல்லோரும் சிரித்தனர். ஆனந்தத்தில் வள்ளிக்கு கண்களில் நீர் மல்கியது.
விதி தன்னை மீண்டும் சோதிக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால் ஆனந்தப் பட்டிருப்பாளா?

Saturday, March 7, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 8

   இரண்டு வருஷங்கள் ஓடோடிவிட்டன. செல்வன் எட்டாவது வகுப்பை எட்டிவிட்டான். உயரமாக வளர்ந்துவிட்டான். இப்போது செல்வனின் குடிசையில் ஒரு தூளி தொங்கியது. மணிமேகலை பிறந்து ஒரு வருடமாகிவிட்டது.
  அன்று வழக்கம் போல் வள்ளி ‘மணி’யை இடுப்பில் தூக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள். வழியில் ராம்குமாரும் அவன் தாய் காவேரியும் சென்று கொண்டிருந்தனர். வள்ளி செல்வன் நன்றாக படிப்பதையும், அவன் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால் அவர்களை கவனிக்கவில்லை.
   ராம்குமார், “அம்மா, வள்ளி போறாம்மா.” என்றான்.
“போகட்டுமே, ராங்கிக்காரி.” என்று காவேரி கழுத்தை நொடித்தாள்.
“அம்மா, தெரியுமா அந்த செல்வன் இருக்கானே, அவன் தான்  இப்ப க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க்.”
  காவேரி திடுக்கிட்டாள்.
“என்ன? என்னடா சொன்னே?”
  “ஆமாம்மா, செல்வன் தான் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட். க்ளாஸ் மானிட்டர் கூட. எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கல, அம்மா. டர்டி கூஸ்!” என்றான் ராம்குமார் ஆத்திரத்துடன்.
  “அது எப்படிடா? அவன் சரியான மக்குப் பிளாஸ்திரியாச்சே?”
 “அது வந்தும்மா, ஸ்கூல்ல பிரகாசம் ஸார் இருக்காரே, அவர் அவனுக்கு பாடம் சொல்லி குடுக்கிறார்”
“அவர் பெரிய கிளாஸுக்கு சொல்லிக் குடுக்கறாருன்னு நெனச்சேன்?”
“ஆமாம்மா, அவர் நைன்த், டென்த்துக்கு தான் எடுப்பாரு, ஆனா செல்வன் அவர் வீட்ல வேல செய்யறான், அவர் பதிலுக்கு அவனுக்கு பாடம் எடுக்கறாரு. அவர் வேற யாருக்கும் டியூஷன் எடுக்கறதில்ல.”
ஆம். பிரகாசத்தின் தன்னலமற்ற செயலை உலகம் அப்படித் தான் கணித்தது.
காவேரிக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு சாதாரண வேலைக்காரி, அதுவும் மஹாராங்கிக்காரி, தன்னுடன் சண்டை போட்ட வள்ளியின் பையன் தன் செல்வ மகனை படிப்பில் முந்துவதாவது?
அன்று மாலையே ராம்குமாரை விரட்டி செல்வனின் தந்தை முருகேசனை அழைத்து வரச் செய்தாள்.
முருகேசன் வந்து மரியாதையுடன், “கூப்பிட்டீங்களாம், குமார் வந்து சொல்லிச்சு,” என்றான்.
“ஆமா, முருகேசா, எப்படி இருக்கே, இன்னம் அந்த ராவ் வீட்ல தான் வேல பாக்கறயா?” என்று கரிசனத்துடன் நலம் விசாரித்தாள் காவேரி.
 “ஆமாம்மா, நல்லா இருக்கேன், அம்மா” என்றான் முருகேசன் வினயமாக.
“இன்னைக்கு வீட்ல விசேஷம், பூஜை. அப்பம் வடை நிறைய இருக்கு. அத உனக்கு குடுக்கலாம்னு கூப்பிட சொன்னேன். இந்தா, கொண்டு போய் எல்லாரும் சாப்பிடுங்க.” என்று அவனிடம் காவேரி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள்.
முருகேசன் அதை வாங்கிக்கொண்டு போகத் திரும்பினான்.
“ம்ம்.. முருகேசா, இன்னும் ஏதோ உங்கிட்ட கேக்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன், பாரு. ஆ.. உன் பையன்.. அவன் பேரு..”
“செல்வன், அம்மா”
“ஆமாம், செல்வன், நல்லா வளர்ந்திருப்பானே, வேலைக்கு எதாவது போறானா? அவன் இப்ப என்ன செய்யறான்?” என்று கரிசனம் வழியும் குரலில் காவேரி வினவினாள்.
“இல்லீங்க, இஸ்கோலுக்கு போறாங்க, எட்டாங்கிளாஸ்.” கொஞ்சம் பெருமையுடன் சொன்னான் முருகேசன்.
காவேரி சூள் கொட்டினாள்.
“ஆமா, போ, அவன் படிச்சு என்ன கிழிக்கப் போறான்? நாலு காசு சம்பாதிச்சா உனக்கு உதவியா இருக்கும், இல்லையா? பாரு, நம்ப செட்டியார் கடை இருக்கே, மளிகைக் கடை, அங்க அவருக்கு கடைல வேலை செய்ய ஒரு பையன் வேணுமாம். சொன்னாரு. உன்ன இப்ப பார்த்த உடன எனக்கு அது  ஞாபகம் வந்துது. ஒனக்கு ஒருபையன் இருக்கானே, சொன்னா ஒனக்கு உபயோகமா இருக்குமேன்னு தோணித்து. மொதல்ல 600 ரூபா கொடுப்பாராம். போகப் போக ஜாஸ்தி கொடுப்பாராம். சொன்னார். நல்ல வேல. என்ன? அனுப்பறியா? நான் சொன்னா எடுத்துப்பாரு.”
தலையை சொறிந்தான் முருகேசன்.
“என்ன? பேசாம நிக்கறே? நான் சொல்றத கேளு. அவன கடை வேலைக்கு நாளைலேருந்து அனுப்பறே, என்ன?”
“இல்லைங்க, இந்த வள்ளி என்ன சொல்லுமோ, அதான் ரோசனையாயிருக்குது.”
“ஓ, உன் வீட்ல வள்ளி வச்சது தான் சட்டம், இல்லே? அத நான் மறந்தே போயிட்டேன்” என்றாள் காவேரி ஏகத்தாளமாக. முருகேசனின் ஆண்மை வீரிட்டெழுந்தது.
“ஊம்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, பொம்பள சொன்னா யாரு கேப்பாங்க? என்றான் வீறாப்பாக.
“பின்னே என்ன, செல்வனை அனுப்பு. நீ நம்ப ஆளாச்சேன்னு தான் நான் சொன்னேன். என்ன? அனுப்பறியா?” என்று காவேரி அதிகாரக் குரலில் வற்புறுத்தவும் “நல்லதுங்க” என்று சொல்லிவிட்டு முருகேசன் வீட்டிற்கு திரும்பினான்.
 வழியில் மணிமேகலையை தூக்கிக் கொண்டு வந்துகொண்டிருந்த வள்ளியை சந்தித்தான். மணியை வாங்கி அதன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான். பிறகு வள்ளியிடம் காவேரி சொன்ன விஷயத்தை சொன்னான்.
“நல்ல வேல, வள்ளி, நமக்கும் இப்ப செலவு சாஸ்தியா இருக்குது. நம்ம பையன் அதிர்ஸ்டம் கெடச்சிருக்கு, நாளைக்கே அனுப்பிவைக்கறேன்னு சொல்லிபோட்டேன்.” என்றான் முருகன் உற்சாகமாக.
அவன் பேச்சைக் கேட்க கேட்க வள்ளியின் இரத்தம் சூடேறியது.
“ஒனக்கு ஏதாச்சும் பயித்தியம் பிடிச்சிருச்சா?” என்று கேட்டாள் ஆத்திரத்துடன்.
“நீ எப்பவும் ராணி மாதிரி ஆடரு போடலாம்னு நெனைக்காதே. செல்வன் எனக்கும் தான் மகன். நான் அவன வேலக்கு அனுப்பத்தான் போறேன்.” என்றான் முருகேசன் கண்டிப்பாக.
வள்ளிக்கு அதிக கோபம் வந்தால் பேசவே மாட்டாள். பேசாமல் நடந்தாள்.

Sunday, March 1, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் - 7


அரைவருடத்தேர்வில் செல்வன் மிக மோசமாக மார்க் வாங்கியிருந்தான். செல்வனின் வகுப்பாசிரியர் மிகவும் கண்டிப்பானவர். நன்றாக, சிரத்தையுடன் படிக்கும் பிள்ளைகளைத் தான் அவருக்குப் பிடிக்கும். அன்று பரிட்சை தாள்களை கொடுக்கும் போது அவர் செல்வனை நன்றாகத் திட்டிவிட்டார்.
“ஆடுமாடு மேய்க்கப் போடா! உன்னையெல்லாம் எவன்டா படிக்கச் சொன்னது?” என்று அவர் திட்டியதும்  வகுப்பில் கலீர் என்று ஏகத்தாளமாக சிரிப்பொலி எழுந்தது.
“யாருடா சிரித்தது? ஸ்டாண்ட் அப்!” என்று அதட்டியவாறு அவர் எல்லா பக்கமும் உற்று பார்த்தார். எல்லோரும் பூனை மாதிரி கப்சிப்பென்று அமர்ந்திருந்தனர். ராம் குமாரும் அவனுடைய சகாக்கள் இருவரும் தான் சிரித்திருப்பார்கள் என்று செல்வனுக்குத் தெரியும். சிரமப்பட்டு கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டான்.
அன்று மாலை வீட்டிற்கு போக மனமில்லாமல் பள்ளியிலேயே ஒரு புறம் உட்கார்ந்திருந்தான்.
“செல்வா, உன்னைப்பற்றி என்னவெல்லாமோ நெனச்சிட்டிருந்தேன். இவ்வளவு  தானா உனக்கு படிப்பில அக்கறை? இவ்வளவு மோசமா மார்க் வாங்கியிருக்கே, சேச்சே, என் பேரு கெட்டுப் போச்சு”
பிரகாசத்தின் கடுமையான குரல் கேட்டுசெல்வன் திடுக்கிட்டான். தலையை நிமிர்த்தி பார்த்துவிட்டு மரியாதையுடன் எழுந்து நின்றான். தலையைக் குனிந்து கொண்டான்.

“உன் அம்மா உன்னை படிக்க வைக்க எத்தனை கஷ்டப்படறாங்க? உழைச்சு படிக்க வேணாம்? இப்படியா பொறுப்பில்லாம இருக்கறது?” என்று கண்டிப்பான குரலில் பிரகாசம் கேட்கவும் பயத்தினாலும் துக்கத்தினாலும் தொண்டையை அடைத்தது செல்வனுக்கு.
“ஸார், நான் நல்லாத்தான் ஸார் படிச்சேன்” என்றான்.
“பொய் சொல்லாதே. நீ மார்க் வாங்கல்லேன்னாலும் பரவயில்லை. பொய் சொன்னால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.” என்றார் பிரகாசம் கோபமாக.
“ஸார், நான் உண்மையாத்தான் சொல்றேன். நான் இப்பல்லாம் விளையாடப் போவதே இல்லை. எப்பவும் படிக்கிறேன். ஆனால் எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது. ஸார். அப்பா சொல்ற மாதிரி எங்க சாதிக்கெல்லாம் படிப்பு வராது போல இருக்குது. மூளை கொறைவா இருக்கும் போல.” செல்வனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
“எல்லாருக்கும் வீட்ல படிச்சவங்க இருக்காங்க. சொல்லித்தறாங்க. ஸார். இல்லேன்னா டியூஷன் சொல்லிக்கறாங்க. எனக்கு யார் ஸார் சொல்லித்தருவாங்க? எங்க காலனில யாருக்காவது லெட்டர் வந்தால் எங்கிட்டதான் கொண்டு வருவாங்க. யாரும் படிச்சதில்லை.” மேலும் சற்று தைரியத்துடன் சொன்னான்.
“உங்க சாதிக்கு படிப்பு வராதுன்னு  அப்படியெல்லாம் எதுவும் கிடையாது,. உனக்கு புரியல்லேன்னா வாத்தியார்கிட்ட கேக்க வேண்டியது தானே?”
செல்வன் தயங்கிவிட்டு பின் “ஸார், அவர் .. திட்டுவார் ஸார், எனக்கு ... அவரைப் பாத்தா ரொம்ப பயமா இருக்கு ஸார்.” என்றான்.
பிரகாசம் யோசனையில் ஆழ்ந்தார். செல்வனின் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் கோபக்காரர், கண்டிப்பானவர். பொதுவாக எல்லா மாணவர்களும் அவரைக் கண்டு பயப்படுவார்கள். செல்வன் பயந்ததில் ஆச்சர்யமில்லை.
செல்வனைக் காணும் போது பிரகாசத்திற்கு தன் இளமைப் பருவ நினைவுகள் வந்தன.

 பிரகாசம் கூறினார், “செல்வா, நான் உனக்கு கொஞ்சம் பாடம் சொல்லித் தரலாம்னு பார்க்கிறேன்”
செல்வனுக்கு தன் செவிகளையே நம்ப முடியவில்லை.
“இன்னைக்கு சாயங்காலம் உன் புஸ்தகம், நோட்டு எல்லாத்தையும் எடுத்துகிட்டு என் வீட்டுக்கு வா. பார்க்கலாம்”
“சரிங்க, ஸார், வந்துடறேன் ஸார்!” என்றான் செல்வன் உற்சாகத்துடன். அவன் கண்களில் புத்தொளி மின்னியது.
பிரகாசம் போய் விட்டார். செல்வன் தன் பையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான். தாயிடம் பிரகாசம் தனக்கு பாடம் கற்பிக்கப் போவதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். வள்ளிக்கு ஒரே சந்தோஷம்.
“செல்வா, அவர் நமக்கு கடவுள் மாதிரி. நீ அவர்கிட்ட கவனமா படிக்கணும். சரியா? அப்பால வீட்டுல அவருக்கு என்ன வேலை வேணுமானாலும் செய்து கொடுத்திரு. என்ன? துணிமணி துவைக்கணுமா, வீட்ட சுத்தம் பண்ணனுமா, எதானாலும் நல்லா கிளீனா செஞ்சு கொடு.”
அன்றிலிருந்து செல்வனுக்கு பிரகாசத்தின் டியூஷன் துவங்கியது. செல்வனின் தலையில் தான் எவ்வளவு குழப்பங்கள்? அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இவையே சரியாக புரியாத போது எப்படி பெரிய கணக்குகள் போட முடியும்? இங்கிலீஷ் எழுத்துகளே தெரியவில்லை. தமிழ் கூட சரியாக தப்பில்லாமல் எழுத முடியவில்லை.
பிரகாசம் பொறுமையுடன் அடிப்படையிலிருந்து கற்பிக்கத் தொடங்கினார். செல்வனுக்கு இயற்கையில் புத்தி கூர்மை இருந்தது. கற்பித்ததை சட்டென்று பிடித்துக் கொண்டான். பிரகாசம் எரிச்சல் படாமல் அவனுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
களிம்பேறிய விளக்கை புளி, சாம்பல் போட்டு விளக்கினால் பள பளவென்று ஆகுமல்லவா? அது போல பிரகாசத்தின் டியூஷனில் செல்வன் முன்னேற ஆரம்பித்தான். அவனுக்கு கற்றுத்தருவதில் பிரகாசத்திற்கு ஒரு ஆத்மதிருப்தி இருந்த்து.

 செவனுக்கோ பிரகாசத்திற்கு பணிவிடை செய்வதில் அலாதியான ஆனந்தம். அவரிடம் அவனுக்கு இருந்த ஈடுபாட்டிற்கு ஒரே ஒரு பெயர் தான் உண்டு - பக்தி