எனக்கு ரமணன் தூரத்து சொந்தம். ஆனால் அதைவிட சங்கீதம் மூலமாக எங்களுக்குள் நெருங்கிய நட்பு இருந்தது என்பது தான் உண்மை. ரமணனின் அப்பா கர்னாடக சங்கீத ரசிகர். ரமணன் சின்ன பையனாக இருந்த போதே தன் தந்தையுடன் பாட்டுக் கச்சேரிகளுக்கு போவான். மகனுக்கு சங்கீதத்தில் இருந்த அசாத்திய ஆர்வத்தைக்கண்ட அவன் தந்தை அவனை ஒரு பிரபலமான சங்கீத வித்வானிடம் பாட்டு கற்க ஏற்பாடு செய்தார். அந்த வித்வானும் ரமணனின் ஆர்வத்தையும், இயற்கையாக அவனுக்கிருந்த ஞானத்தையும் கண்டு அவனை தன் முக்கிய சிஷ்யர்களில் ஒருவனாக்கிக் கொண்டார். படிப்புடன் கூடவே அவன் சங்கீத அப்பியாசமும் தொடர்ந்து நடந்தது.
ரமணன் ஆடிட்டர் பரிட்சை தேறி, நல்ல வேலைக்கும் போனான். அவன் பார்க்க நன்றாக இருப்பான். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. படிப்பு, வேலை, குணம் எல்லாம் அமைந்த அவனுக்கு ஒரு “பெரிய இடத்து”ப்பெண்ணுடன் கல்யாணமும் நடந்தது வியப்பில்லை.
வேலையிலிருந்து கொண்டே, குருஜியிடம் சங்கீதம் படிக்கவும் போவான். சிறிது காலத்திற்குப் பிறகு ரமணன் தன் குருவுடன் கச்சேரிகளில் பாடத் தொடங்கினான். குருவும் இடை இடையில் அவனுக்கு பாட சான்ஸ் தருவார். நன்றாக பாடுவான். நல்ல குரல் வளம் இருந்தது. சபையோர் அவனுக்கு கை தட்டுவார்கள்.
சிறிது காலத்திற்கப்புறம் அவனுடைய குரு இறைவனடி சேர்ந்தார்.
அடுத்தடுத்து ரமணன், ரேவதி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன. அது வரை எல்லாம் நன்றாக இருந்தது. அப்புறம் அந்தப்பெண் ரேவதிக்கு சோதனைக் காலம் தொடங்கியது. ஒரு நாள் திடீரென்று ரமணன் வேலையை ராஜீனாமா செய்தான். “இனிமே பாட்டு தான்” என்று அறிவித்தான்.
அவன் ஆரம்பத்தில் சில கச்சேரிகளும் செய்தான். அதிக வருமானம் இல்லை. ஆனாலும் பத்திரிகைகளில் அவன் பாட்டுக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது. பிறகு மெல்ல மெல்ல கச்சேரிகள் செய்வதை தவிர்க்க ஆரம்பித்தான். ஏதேதோ காரணம் சொல்வான். “தொண்டை சரியாக இல்லை”, “சாதகம் போதவில்லை”. “கொஞ்ச நாள் ஆகட்டும்.”
இப்போது அவன் மனைவியைப் பார்த்தால் பாவமாக இருந்தது. குடும்பம் போதுமான வருமானம் இல்லாமல் கஷ்டப்படத் தொடங்கியது. ரேவதியின் அப்பா உதவி செய்து கொண்டிருந்தார்.
எனக்கு ரமணனுடன் நல்ல சிநேகிதம். என் வீட்டுக்கு அடிக்கடி விஜயம் செய்வான். அவனுடன் சங்கீததைப்பற்றி பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரமணனின் சுவாசமே சங்கீதம் தான். அதுவும் கர்னாடக சங்கீதம்.
திடீரென்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்வான். “ரமணன் வந்தாச்சா, இனிமே, அவ்வளவுதான், அப்பாவும், அவனும் பேச ஆரம்பிச்சுடுவா” என்று என் மனைவி தன் மகனிடம் முணுமுணுப்பாள். ஆனால் ரமணனின் கள்ளம்கபடில்லாத சுபாவம் அவளுக்கு அவனிடம் அனுதாபத்தை ஏற்படுத்திவிடும். அவள் கொடுக்கும் காபியை ரசித்து அருந்துவான். “கே. வி. என். ஸாரோட காபி மாதிரி (பிரபல வித்வான்,கே. வி. நாராயணஸ்வாமி பாடும் காபி ராகம்) அபாரமா இருக்கு, மாமி!” என்பான். .
அவள் சில சமயம் அவனை சாப்பிடச் சொல்லுவாள்.
“பக்கவாத்தியம் அமர்க்களம், மாமி.” என்று அவள் சமையலை ரசித்து சாப்பிடுவான்.
நான் அவனிடம் சில வித்வான்ளைப்பற்றி கேட்பேன். அசாத்திய பிருகாக்களும் சங்கதிகளும் பாடும் ஒரு ஒரு பிரபல பாடகரைப் பற்றி, “அவர் அசாத்தியமா பாடறார் இல்லியா, ரமணா?” ன்னு நான் அவனை தூண்டி விடுவேன்.
“அவர் அசுரன் தான், மாமா. அவர ஒரு மோர் மிளகான்னு வச்சுக்கோங்கோ, , சாப்பாட்ல முழுக்க முழுக்க மோர் மிளகா மட்டும் இருந்தா எப்படி இருக்கும், சொல்லுங்கோ?” என்பான்.
நிறுத்தி சாவகாசமாக பாடும் இன்னொரு பிரபல பாடகரைப்பற்றி கேட்பேன்.
“அவர் பால் பாயசம், ஸார். ஆனா விருந்துல முழுக்க முழுக்க பாயசமே பறிமாறினா எப்படி இருக்கும்? எஞ்சாய் பண்ண முடியுமா? தெகட்டாதா?”
“பிலஹரிய முக்கியமா எடுத்து பாடறாளே, அந்த ராகத்துல அத்தன அழகு இல்லையே, ரமணா.” என்பேன்.
“அது வந்து, மாமா, பாகக்கா பிட்ல சில பேருக்கு ரொம்ப பிடிக்கும் இல்லையா, , அது மாதிரின்னு வச்சுக்கோங்கோ, பிலஹரிய. பிடிச்சவாளுக்கு அந்த ராகம் ரொம்ப பிடிக்கும்.”
கச்சேரி அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பாடவேண்டும் என்று நிறைய ஐடியாக்கள் அவனுக்கு இருந்தது.
“அறுசுவை விருந்துன்னு சொல்லுவா, இல்லையா, மாமா, அது மாதிரி கச்சேரியும் ஒரு விருந்து, காதுக்கு. அதுல விறுவிறுப்பும் இருக்கணும், சாப்பாட்ல வடை, சிப்ஸ் மாதிரி. அப்புறம சுகமான, அழுத்தமான ஆலாபனை இருக்கணும். அது நல்ல அரைத்துவிட்ட சாம்பார். அப்புறம் பச்சடி, பொரியல் அவியல் மாதிரி ஜனரஞ்சகமா சில உருப்பிடிகள். துக்கடாக்கள். ஒரு மியூசீஷியனுக்கு ஆடியன்ஸுக்கு தகுந்த மாதிரி உருப்பிடிகளை மாத்திக்கற திறமையும் இருக்கணும்.”
“அதெப்படி ரமணா, முடியும்?”
“நல்ல பாடகனால முடியும். ஆடியன்ஸ பார்த்தா எப்படி பாடணும்னு மனசுல தோணும். ஆடியன்ஸ்ல விஷயம் தெரிஞ்சவங்க இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி சங்கதிகள் பாடி நம் வித்வத்த காமிக்கணும். ஜனரஞ்சகமா பாடினா சிலபேருக்கு பிடிக்கும். ஆடியன்ஸோட பல்ஸ், அத ஃபீல் பண்ணனும்.”
நல்ல மூளையும், அபார ஞானமும் இருந்தாலும் அவனால் சங்கீத உலகில் வெற்றி பெறமுடியவில்லை. பர்ஃபெக்க்ஷன் பர்ஃபெக்க்ஷன் என்று தேடிக்கொண்டு தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருந்தான்
கணவன் மனைவிக்கிடையில் சச்சரவுகள் வர ஆரம்பித்தன. கடைசியில் வருமானத்திற்காக ரமணன் பாட்டு டியூஷன் தர ஆரம்பித்தான். அதையும் சரியாக அவனால் செய்யமுடியவில்லை. ஒரு வீட்டில் டியூஷனுக்குப் போவான். பேச ஆரம்பித்து விடுவான். பாட்டை விட பேச்சுதான் அதிகமாக இருக்கும். அடுத்த டியூஷன் சென்னையில் மறு மூலையில் இருக்கும். அதன் நினைப்பே இல்லாமல் உட்கார்ந்திருப்பான். சொல்லிக்கொடுத்தால் அபாரமாக இருக்கும். அவன் ஞானம் அப்படி. அவன் ஞானத்தை பார்த்துவிட்டு தான் பலர் அவனை டியூஷனுக்கு அமர்த்தினார்கள். ஆனால் ஒழுங்காக டியூஷன் எடுக்கவில்லை என்றால் யார் தான் பொறுத்துக்கொள்வார்கள்?
ஒரு நாள் அவன் மனைவி ரமணனின் நிலையற்ற போக்கு பிடிக்காமல் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் பிறந்தவீட்டிற்கு சென்றுவிட்டாள். அங்கே குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட்டு, அங்கேயே தங்கிவிட்டாள்.
சில மாதங்கள் நானும் அவனை பார்க்கவில்லை. ஒரு நாள் தற்செயலாக வாக்கிங் போகையில் மகாலிங்கம் என்பவரை சந்தித்தேன். அவருடைய பெண்களுக்கு பாட்டு சொல்லித்தர நான் தான் ரமணனை ஏற்பாடு செய்திருந்தேன். பேச்சுவாக்கில், ரமணன் இரண்டு மாதமாக டியூஷனுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
“என்ன பிரச்னை அவருக்குன்னு தெரியல்ல. அவர் கொஞ்சம் எக்ஸன்ட்ரிக் தான் ஸார், தெரியும். ஆனா சொல்லிக்குடுத்தா அபாரமா அழகா சொல்லித்தருவார். அவரால முடியல்லேன்னா தான் வேற வாத்தியார் வைக்கணும்.” என்றார்.
நான் விசாரித்து சொல்வதாக அவரிடம் சொல்லிவிட்டு நேராக ரமணனின் வீட்டிற்கு சென்றேன். பெல் அடித்ததும் கதவைத் திறந்த அவனைப் பார்த்ததும் எனக்கு பெரிய அதிர்ச்சி. இளைத்து கருத்துப் போயிருந்தான். கண்களில் ஒளி இல்லை. என்னைப் பார்த்ததும் , “வாங்கோ, மாமா” என்றான்.
அவனிடம் அவனுடைய இயல்பான உத்ஸாகம் இல்லை.
“எப்படி இருக்கே, ரமணா? இந்தப்பக்கம் வந்தேன். உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு. நீயும் வரவேயில்ல. ஆத்துல லக்ஷ்மி கூட ரமணனை பார்த்து ரொம்ப நாளாச்சுன்னா.”
“உள்ளே வாங்கோ மாமா. ஸாரி, ரொம்ப ஸாரி. கண்டிப்பா நான் உங்காத்துக்கு வந்திருக்கணும். ஆனா எனக்கு இப்பல்லாம் மூட் அவுட் மாமா. எதுக்கு உயிரோட இருக்கணும்னு அலுப்பா இருக்கு.”
“ஏன், ரமணா. ஏன் இப்படி சொல்றே? எப்பவும் சிரிச்சுண்டே இருப்பியே, ஏன் இப்படி ‘டௌனா’ இருக்கே?”
“என் லைஃபே ஒரு வேஸ்ட் மாமா, அது தான் ரேவதியும், அவ அப்பா ஆத்துக்குப் போயிட்டா. பாட்டிலேயும் முன்னுக்கு வரல்லே, குடும்பத்தையும் பாத்துக்கல. என்னால ஒண்ணுமே சரியா பண்ண முடியல்ல. எதுக்கு நான் இருக்கணும்? சொல்லுங்கோ, நான்போயிட்டா தான் நல்லது.”
எனக்கு அவனைப் பார்த்து மனம் உருகியது. அவன் தோள்களை பரிவாக அணைத்துக்கொண்டேன்.
அவன் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
“ரமணா, பைத்தியம், இப்போ எதுக்கு அழறே?” அவனை ஆதரவாக தட்டிக்கொடுத்தேன். அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.
“இங்கிலீஷ்ல செல்ஃப் பிடின்னு சொல்லுவா. நீ இப்போ சுய அனுதாபத்துல மூழ்கி இருக்கே. அதுலேயிருந்து நீ வெளில வரணும்.”
“எப்படி மாமா? நான் செய்யறது எல்லாமே தப்பா இருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல்ல.”
நான் என்ன சொன்னாலும் அவன் நெகடிவாகவே பேசிக்கொண்டிருந்தான்.
கடைசியில் நான், “இதோ பார் ரமணா, எனக்கு போகணும். டயமாயிடுத்து. ஆனா அதுக்கு முந்தி நான் ஒண்ணு சொல்றேன். உன் குரு உனக்கு எப்படி சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்? தன் ஞானத்தை எல்லாம் கரைச்சு உனக்கு ஊட்டினார். உன் மேல அவருக்கு அப்படி ஒரு வாத்ஸல்யம். அதுக்கு நீ என்ன கைம்மாறு பண்ணினே? அந்த சங்கீதத்த தூக்கி குப்பைல எறிஞ்சிருக்கே. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும். எப்படியோ போ, நான் வரேன்.”
நான் கொஞ்சம் சலிப்புடன் வீடு திரும்பினேன்.
மறுநாள் அதிகாலையில் என் வீட்டு மணி அடித்தது. கதவைத் திறந்தால் ரமணன்! குளித்து, நெற்றியில் வீபூதியுடன் நின்றான்.
“மாமா, உள்ள வரலாமா?”
“என்ன முட்டாள் மாதிரி கேட்டுண்டிருக்கே, வா.”
உள்ளே வந்தான்.
மடை திறந்தாற்போல் பேச ஆரம்பித்தான்.
“நேத்து நீங்க போனப்புறம் என் மனசாட்சி என்னை கொன்னுது மாமா. குருஜிக்கு நான் பண்ணிண்டிருக்கற த்ரோஹம் என்னை வாட்டி எடுத்துது. நீங்க அடிச்சு சொன்ன மாதிரி குருஜி என்னை தன் பிள்ளை போல வச்சுண்டிருந்தார். அவருக்கு நான் எதாவது பதில் கைம்மாறு செய்யணும்னா அவரோட சங்கீதத்தை, அவரோட பாணியை நிலை நிறுத்தணும். அதுக்கு என்னைத் தவிர வேறெ யாரும் இல்ல. நான் மட்டும் தான் இருக்கேன். என்னோட கடமை அவரோட சங்கீதத்தை உயிருள்ளதா வைக்கணும். நான் முடிவு பண்ணிட்டேன் மாமா, நான் இதை செய்யணும்னு. அதுக்கு மொதல்ல என் வாழ்க்கையை ஒழுங்கா பண்ணிக்கணும். நீங்க என் மர மண்டைக்கு நல்ல அடி குடுத்துட்டேள்.”
நான் புன்னகை செய்தேன்.
“அப்போ ரேவதிய கூட்டிண்டு வரப்போறியா?”
“இல்ல, மாமா. அது இப்போ வேண்டாம். நான் நேத்து ராத்திரி முழுக்க இதையெல்லாம் பத்தி யோசிச்சிண்டிருந்தேன். மொதல்ல என் டியூஷன எல்லாம் திரும்ப ஆரம்பிக்கணும். நல்ல ஸ்டூடண்ட்ஸ உருவாக்கணும். அது மூலமா என் குருஜியின் பாணிய நிலை நிறுத்த முடியும். அப்புறம் நன்னா சாதகம் பண்ணி என் சங்கீதத்த இம்ப்ரூவ் பண்ணிக்கணும். நிறைய பர்ஃபாமென்ஸ் கொடுக்கணும். பேர் வாங்க இல்ல. புரியறதா மாமா?”
“அதெல்லாம் சரி. உன்னால இதெல்லாம் செய்ய முடியுமா?
“அதுக்குத்தான் மாமா காலங்கார்த்தால உங்காத்துக்கு ஓடி வந்திருக்கேன்.”
“எதுக்கு?”
“மாமா, உங்க சப்போர்ட் எனக்கு வேணும். அப்பப்போ நான் என் லட்சியத்துலேர்ந்து வெலகிப் போனா நீங்க என் மண்டைல அடிக்கணும்.”
“லக்ஷ்மி, ஒன்னோட சப்பாத்திக்கொழவிய கொண்டு வா. இவன் தலைல ஒண்ணு போடறேன்.”
“அடிங்கோ, மாமா. எனக்கு நன்னா வேணும்.”
“சரி, அதெல்லாம் இருக்கட்டும். ரமணா, சமையல் ஆயிடும் கொஞ்ச நாழில, சாப்டுட்டு போ. உன்னை பார்த்தா பல நாள் பட்டினி மாதிரி இருக்கு.” என்றாள் லக்ஷ்மி.
“அதுக்கென்ன மாமி,பேஷா சாப்டறேன். இப்போ மொதல்ல காபி கொடுங்கோ. இன்னும் காலை காபி சாப்பிடல்ல. ஆனா அதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் இப்படி நில்லுங்கோ. நமஸ்காரம் பண்றேன். என்னோட இந்த புது சகாப்தத்துக்கு உங்க ஆசீர்வாதம் ரொம்ப ரொம்ப தேவை”
இப்படித் தான் ரமணன் தன் புதிய சங்கீத யாத்திரையைத் தொடங்கி இசைவானில் ஒரு தாரகையாக மின்னத் தொடங்கினான். அவனுடைய குடும்பமும் சிறிது காலத்திற்கப்புறம் வந்து சேர்ந்து கொண்டது. அவனுடைய இந்த முன்னேற்றத்தில் எனக்கும் முக்கியப்பங்கு உண்டு என்பதில் எனக்கு பெருமிதம், ஒருஆழமான திருப்தி.