பீம்! பீம்! ஸ்கூல் வேன் ஹாரன் சத்தம் கேட்டதும் தயாராக இருந்த ஐஸ்வர்யா ஓடிப் போய் வேனில்
ஏறிக்கொண்டாள். அவசரத்தில் லன்ச் பேக்கை எடுத்துக்கொள்ள மறந்து விட்டாள்.
சமையலறையிலிருந்து தேவிகா கையை துடைத்துக்கொண்டே ஓடி வந்தாள். அதற்குள் வேன் போய் விட்டது. கடு கடு என்ற முகத்துடன் ஹரி
நின்று கொண்டிருந்தான். தேவிகாவுக்கு திக்கென்றது. வசைமாரி பொழியப்போகிறது என்று என்று நன்றாகவே தெரியும் அவளுக்கு.
வேன் இன்றைக்கு பத்து நிமிஷம்
முன்னாலேயே வந்து விட்டது. ஹரியும் காலை டிஃபனுக்கு வந்து
விடுவான் என்று வேகமாக உப்புமாவை கிளறுவதில் முனைந்திருந்த அவள் வேன் சத்தம்
கேட்டதும் அடுப்பை குறைத்துவிட்டு வேகமாக வருவதற்குள் வேன் போய் விட்டது.
“ஏய்! வேன் வரச்சே கரெக்டா எங்கே போயிட்டே? குழந்தைய சரியா
அனுப்பறதோட என்ன பெரிய வேல கிழிச்சிட்டிருந்தே? குழந்தைய பெத்திருந்தாத்தானே அதோட அருமை தெரியும்?” அனலாக விழுந்த அவனுடைய வார்த்தைகள் அவள் இதயத்தை தைத்தன.
தேவிகா ஏழ்மையான குடும்பத்தில்
பிறந்தவள். சிறிய வயதில் பெற்றோரை இழந்தவள். அவளுடைய பாட்டி அவளை வளர்க்க படாத பாடு பட்டாள். அதனால் ஹரிக்கு தேவிகாவை இரண்டாம் தாரமாக கொடுத்துவிட சம்மதித்தாள். ஹரிக்கு 35 வயது தான் ஆகியிருந்தது. பார்க்க நன்றாக இருந்தான். நல்ல வேலை. இதைவிட
தன் பேத்திக்கு நல்ல இடம் கிடைக்காது என்று நினைத்தாள் தேவிகாவின் பாட்டி.
முதல் மனைவி மூலமாக ஹரிக்கு ஐந்து வயதான ஒரு பெண் குழந்தை இருந்தது.
அதை வளர்ப்பதற்காகவே ஹரியை இரண்டாம்
கல்யாணம் செய்து கொள்ள அவன் அம்மா வற்புறுத்தினாள். முதல் மனைவி இறந்து
சீக்கிரமே இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டது அவனுக்கு ஒரு குற்ற உணர்வை தந்தது. ஆனால் அவனுடைய தாயின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாம் கல்யாணத்திற்கு
சம்மதித்தான். அவனுடைய தாய் அவனை மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுபுறுத்தினதுக்கு
ஒரு காரணம் இருந்தது.
ஹரியின் தங்கை கங்கா பெங்களூரில்
ஒரு பேங்கில் வேலை பார்த்தாள். அவளுக்கு பள்ளிக்கு செல்லும் இரண்டு குழந்தைகள்
இருந்தார்கள். அவள் ஹரியின் தாயாரை தன்னுடன் வந்து இருக்க கட்டாயப்படுத்தினாள்.
ஹரியின் அம்மாவிற்கும் மகளுடன் இருப்பது பிடித்திருந்தது. ஹரியுடன் இருப்பது
அவளுக்கு சலிப்பாக இருந்தது. ஹரியின் சின்ன பெண்ணைப் பார்த்துக்கொள்ள அவள்
ஹரியுடன் இருக்கவேண்டியிருந்தது. அதனால் அவள் ஹரிக்கு இன்னொரு கல்யாணம் செய்து
வைப்பதில் தீவிரமாக இருந்தாள். ஏழையான தேவிகாவை ஹரிக்கு மறுமணம் செய்து வைத்தாள்.
ஹரி ஒரு மனைவிக்குத் தர வேண்டிய
ஸ்தானத்தை தேவிகாவுக்குத் தரவில்லை.
அவளிடம் அதிகம் பேசமாட்டான்.
பேசினாலும் அவள் முகத்தைப்
பார்த்து பேசமாட்டான். அவள் தன் குழந்தையை கொடுமை படுத்துவாள் என்கிற சந்தேகம் அவனுள் இருந்தது. அதனால் அவள் செய்வதையெல்லாம் கூர்ந்து கவனிப்பான். தொட்டால் குற்றம், பட்டால்
குற்றம் என்ற முறையில் பார்ப்பான். அவ்வப்போது அனல் போல் வார்த்தைகளை அள்ளி
வீசுவான். தேவிகா ஒன்றும் பேச மாட்டாள்.
இன்று ஐஸ்வர்யா டிபன் பாக்ஸை
மறந்து விட்டாள். ஹரிக்கு ஆபீசில் ஒன்றும் ஓடவில்லை. பாவம் குழந்தை. பசியா இருப்பாள். லன்ச் டயம் போது ஹரி பேக்கரியில் கொஞ்சம் ஸ்னாக்ஸ்
வாங்கிக்கொண்டு ஐஸ்வர்யாவின் பள்ளிக்கு விரைந்தான். பள்ளியில் தலைமை ஆசிரியை ரூமிற்கு சென்றான்.
“வாங்க சார், உக்காருங்க” என்று ஹெட்மிஸ்ட்ரஸ் அவனை வரவேற்றாள்.
“இந்த பக்கம் வேலை இருந்துது. அதான் வந்தேன். ஐஸ்வர்யா டிபன மறந்துட்டு போய்ட்டாளா, அதான் பாத்துட்டு
போகலாம்னு வந்தேன்.”
ஹெட்மிஸ்ட்ரஸ் சிரித்தாள். “அதுக்காக வந்தீங்களா? அவளுக்கு இங்க டிபன் குடுத்துட்டோம்.”
ஹரிக்கு ஒரே ஆச்சர்யம்.
“அப்படியா, எப்பவும் எல்லாருக்கும் அப்படித் தான் செய்வீங்களா?”
“இல்லே, இல்லே. உங்க மனைவி இங்க இருக்கற கேன்டீன்ல ஏற்பாடு பண்ணியிருக்கா. ஐஸ்வர்யா ரெண்டு மூணுதரம் இது மாதிரி மறந்திருக்கா. அப்போ உங்க மனைவி என்ன சந்திச்சு இப்படி ஒரு ஏற்பாடு பண்றேன்னு சொன்னா. என்னிக்கு ஐஸ்வர்யா மறந்து போறாளோ இங்க கேன்டீன்ல கொடுத்துடுவாங்க. மாசம் முடிஞ்சவுடன் பணம் தருவதாக அரேஞ்ச்மென்ட். இங்க நிறைய குழந்தைகள் கேன்டீன்ல சாப்பிடுவாங்க. பேரன்ட்ஸ் ரெண்டு பேரும்
ஒர்க் பண்ணும்போது இது அவங்களுக்கு சௌகரியமா இருக்கு. மிஸ்டர் ஹரிஹரன்! உங்க மனைவி ரொம்ப ஸ்மார்ட்.”
ஹரிக்கு ஒரே அதிர்ச்சி. ஆபீசுக்கு திரும்பின அவனை மனதில் குற்ற உணர்ச்சி வாட்டியது. தேவிகா ஒரு வேளை நல்லவளோ? தான் வீணாக அவளை சந்தேகப்படறேனோ?
“இளையாள்கிட்ட ஜாக்கிரதையா
இருக்கணும்டா. இடம் கொடுத்துட்டா அவ்வளவு
தான். இளையாள் மோகம் தலைக்கு ஏறிடும். கொழந்தைய
கொடுமை படுத்தாம பாத்துக்கோ” அம்மாவின் வார்த்தைகள் அவன் மனதில் எதிரொலித்தன.
ஆனா இப்ப பார்த்தா அவ நல்லவ மாதிரி
தெரியறாளே! மாலை வீடு திரும்பினவுடன் தேவிகாவிடம் ஸாரி சொல்லணும். இனிமே அவளிடம்
கண்டிப்பாக நடந்துக்கக் கூடாது. ஆபீஸிலிருந்து
திரும்பினான். வீட்டின் கதவில் பூட்டு தொங்கியது. “அப்பா!” ஐஸ்வர்யா ஸ்கூல்
பேக்குடன் பக்கத்து வீட்டிலிருந்து ஒடி வந்தாள். கூடவே பக்கத்து வீட்டுநிர்மலாவும்
வந்தாள்.
“இந்தாங்க, சாவி. தேவிகா இந்த
லெட்டரையும் குடுக்க சொல்லிச்சு.”
குழப்பத்துடன் சாவியையும் கடிதத்தையும்
வாங்கிக் கொண்டான். வீட்டிற்குள் நுழைந்ததும்
கடிதத்தை பிரித்தான்.
ஹரி,
நான் போறேன். ஆறு மாசமா உன் கொடுமையை அனுபவிச்சாச்சு.
போதும்ப்பா. நான் இந்தக் காலத்து பொண்ணு. மாடர்ன். எனக்கு 25 வயசு தான் ஆறது. எதுக்காக என்
வாழ்க்கையை வீணாக்கிக்கணும்? நீ எனக்கு மனைவீங்கற ஸ்தானம் கொடுக்கல்ல. சம்பளம்
இல்லாத சமையல்காரி, ஆயா மாதிரி ந்டத்தினே. எந்த மதிப்பும் கொடுக்கல்ல. இதுக்கு
பதில் நான் வேற எங்கேயாவது சம்பளத்துக்கு வேலை பார்க்கலாம். பார்க்கப்போறேன்.
நான் உன் வீட்டுக்கு வந்த போது சந்தோஷமா, எல்லா பெண்களுக்கும் இயற்கையா இருக்கற
எதிர்பார்ப்புகளோட தான் வந்தேன். ஐஸ்வர்யாவை எனக்கு பிடிச்சுது. ஆனா நீ என்னை தாழ்மை படுத்தினே. அநியாயமா
குத்தம் சாட்டிட்டே இருந்தே. எல்லாத்தையும் கெடுத்துட்டே. வந்த சில நாள்ளயே எனக்கு தெரிஞ்சு போச்சு. இது
ஒர்க் அவுட் ஆகப்போறதில்லேன்னு. இன்னிக்கு க்ளைமேக்ஸ். எனக்கும் தன் மானம்
இருக்குது, ஹரி. எனக்கு இந்த திருமணத்துலேர்ந்து விடுதலை கொடு அதாவது டிவோர்ஸ்.
என்னை திரும்பி அழைச்சுக்காலாம்னு எதாவது எண்ணம் இருந்தா அதை விட்டுடு. நான் வர
மாட்டேன். நான் வேலை தேடிக்கப் போறேன். ஐஸ்வர்யா என்னை கொஞ்சம் மிஸ் பண்னுவா. அது
கொஞ்சம் நாள்ள சரியாயிடும் . குட் பை!
தேவிகா
ஹரி பிரமித்துப் போனான். இத்தன
துடிப்பு உணர்வு அவளுக்குள் இருக்கா? அவனுக்கு அவள் மேல் கோபம் வரவில்லை. பதிலுக்கு
அவளை திரும்ப அழைத்து வரவேண்டும் என்று தீவர ஆவல் எழுந்தது. அவளை இழந்துவிடுவோமோ என்ற பயம் அவன் உள்ளத்தை ஆக்கிரமித்தது.
“அப்பா, பசிக்குது”
ஐஸ்வர்யாவின் குரல் அவனை
இவ்வுலகிற்கு கொண்டு வந்தது.
“அப்ப, ரொம்ப பசிக்கறது அப்பா. “
“ஐஸு, சித்திய கூட்டிட்டு வரலாமா?
சித்தி வருவாளா?”
“அப்பா, சித்தி வர மாட்டாப்பா.
எங்கிட்ட சொல்லிட்டா. நீ சமத்தா இருக்கணும். நான் என் ஊருக்குப் போறேன்னு
சொல்லிட்டாப்பா.”
ஐஸ்வர்யாவுக்கு துக்கம்
பொங்கிக்கொண்டு வந்தது.
“ரொம்ப பசிக்கறது.”
ஹரி பிரமை பிடித்தவன் போல்
நின்றிருந்தான். என்ன காரியம் செய்துட்டேன்! தேவிகா வர மாட்டாளா?
{இப்படி நிராசையின் ஒலியோடு கதையை முடித்துவிடலாம். ஆனால் இன்னும் என்ன
நடக்கிறது என்று பார்க்கலாம் என்று ஒரு ஆசை.}
“ஐஸு, சித்திய கூட்டிட்டு வரலாமா?
கூப்பிட்டா வருவா இல்லியா?”
“வருவாப்பா. போலாம்பா”
ஆனால் எங்கே போவது? ரயில்
ஸ்டேஷனுக்கா, பஸ்ஸுக்கா? அவள் பாட்டி ஊருக்குத்தான் போவாள்.
“ஐஸு, எங்கே போறதுன்னு
தெரியல்லியே.”
“அப்பா, சித்திக்கு வரச்சொல்லி ஃபோன் பண்ணலாமா?”
“ஃபோன் நம்பர் தெரியாதே! ஐஸு. எப்படி
ஃபோன் பண்றது?”
“எனக்குத் தெரியுமே!” ஐஸ்வர்யா
கத்தினாள். “என் டயரில இருக்குப்பா.”
“நெஜம்மாவா, ஐஸு? எடு! எடு!”
“இதோ.” பேக்கிலிருந்து டயரியை எடுத்து
அப்பாவிடம் கொடுத்தாள்.
முதல் பக்கத்தில் ஐஸ்வர்யாவின்
அட்ரஸ் முதலிய விவரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. அதில் கடைசியில் ஐஸ்வர்யாவின் வீட்டு ஃபோன்
நம்பரும் தேவிகாவின் மொபைல் நம்பரும் கொடுக்கப் பட்டிருந்தன.
ஹரிக்கு லாட்டரி டிக்கட் கிடைத்த
மாதிரி ஒரே சந்தோஷம்.
“ஐஸு! நீ ரொம்ப க்ளவர்!”
நம்பரை அழைத்தான். “ஹலோ”
மறுபுறத்திலிருந்து தேவிகாவின் குரல் கேட்டது.
“தேவிகா, நான் தான் ஹரி.”
“தெரிஞ்சுது. என்ன வேணும்?”
“என்ன வேணுமா? நீ உடனே வா.”
“லெட்டரை பார்க்கல்லியா? நான் தான்
எழுதுயிருந்தேனே நான் வரமாட்டேன்னு.”
“தேவிகா, சாரி, என்னை மன்னிச்சுடு.
நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ரொம்ப ரொம்ப சாரி. நீ வரணும். வந்தே ஆகணும்”
“வேணாம்பா, என்னால முடியாது. ஆறு
மாசம் நரகத்த அனுபவிச்சாச்சு. போரும். நான் இப்ப போகணும். என் ரயில் வர நேரமாச்சு”
ஹரி ஐஸ்வர்யா கிட்ட ஃபோனைத் தந்து
“பேசு” என்று சைகை காட்டினான்.
“சித்தி! ஐஸ்வர்யா பேசறேன். ”
“ஹலோ, ஐஸ்வர்யாவா, எப்படி இருக்கே?
சமத்தா இரு, என்ன?”
“சித்தி! வா. சித்தி. எனக்கு பசிக்கறது, அப்பா ஒண்ணுமே தரல்ல.”
“அயிய்யோ. ஒண்னும் சாப்பிடல்லியா? சாப்பிடு,
ஐஸ்வர்யா. எனக்கு டயமாச்சு. நான் போகணும்.”
“சித்தி...” ஐஸ்வர்யா அழ
ஆரம்பித்தாள்.
“ஹரி ஃபோனை வாங்கி, “தேவிகா,
எனக்கு ஒரு சான்ஸ் கொடு. நான் இனிமே உங்கிட்டா மோசமா நடந்துக்கவே மாட்டேன். அன்பா ஆதரவா இருப்பேன். வந்து பாரேன்.”
“எத்தனை நாளுக்கு? பழையபடி வேதாளம்
முருங்க மரத்துல ஏறிக்காதுன்னு என்ன நிச்சயம்?’
“நிச்சயமா இந்த வேதாளம் முருங்க
மரத்துல ஏறிக்காது. ப்ராமிஸ்.”
“சரி வரேன். ஆனா ஒரு கண்டிஷன். சம்மதிச்சா வரேன்.”
“என்ன சொல்லு. எதானாலும் சரி”
“எனக்கு வேலைக்கு போகணும். ஒத்துக்கறியா?”
“என் மேல நம்பிக்கை வரல்லியா?”
“இல்லே. இனிமே நான் என் கால்ல ஊனி
நிக்க விரும்பறேன். எக்ரி பண்ணறியா?”
“சரி, தேவிகா, உன் இஷ்டப்படி செய்.”
“சரி. ஆட்டோ பிடிச்சிட்டு வரேன்”
தேவிகா குரலில் ஒரு குழைவு தெரிந்தது.
“இல்லே. வேண்டாம். நீ வர வேண்டாம்.”
தேவிகா திடுக்கிட்டாள்.
“என்ன, என்ன சொல்றே?”
“ஆமா, நீ வர வேண்டாம், நாங்க
வரோம். அங்கயே வெயிட் பண்ணு. இன்னிக்கு நாம
ஸெலிப்ரேட் பண்ணப்போறோம். வெளில டின்னர் சாப்பிடப்போறோம்.”
“இப்போ எதுக்கு ஸெலிப்ரேஷன்?”
“தேவிகா வருகைய கொண்டாட வேண்டாமா? ஸ்வீட், ஐஸ்க்ரீமோட டின்னர்!”
“ஹய்யா! ஐஸ்க்ரீம்!” குதித்தாள்
ஐஸ்வர்யா.
அன்றிலிருந்து அவர்கள்
வாழ்க்கையில் வசந்தம் தொடங்கியது.
{இந்த முடிவு நல்லா இருக்கா?}