Friday, November 24, 2017

நம்பிக்கைகள்


எல்லாரும் மின்சார க்ரமடோரியத்திலிருந்து திரும்பி வந்திருந்தார்கள், சரஸ்வதி காலமாகிவிட்டாள். அவர்கள் எல்லோரும் அவளுடைய நெருங்கிய பந்துக்கள். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, அப்புறம் சரஸ்வதியின் மைத்துனர் மகன். எல்லோரும் ஹாலில் வந்து அமர்ந்தனர். வள்ளி எல்லோருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வள்ளி 20 வயதான இளம்பெண், சரஸ்வதியின் தூரத்து உறவு. அனாதை. சரஸ்வதியுடன் இருந்து பணிவிடை செய்து வந்தாள்.

காப்பி வாங்கிக்கொண்டவர்கள் அவளைப் பார்த்து அரைமனதாக புன்னகை செய்தார்கள். வள்ளி யாரையும் ஏறிட்டு பார்க்கவில்லை. அழுததால் அவள் கண்கள் கலங்கியிருந்தன. எல்லாருக்கும் காப்பி கொடுத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். 

ஒரு வித நிசப்தம் நிலவியது. பிறகு ஒவ்வொருவராக எழுந்து அவரவர்கள் அறைக்கு சென்றனர். அவர்கள் எல்லோருமே சரஸ்வதி காலமான செய்தி கேட்டு வந்திருந்தார்கள்.

“அக்கா போயிட்டா. திடீர்னு இப்படி போவான்னு யார் நெனச்சா? நான் போன தடவை பார்த்தப்போ நல்லாத் தான் இருந்தா. அது போன வருஷம். அவளுக்கு 65 வயசு தான். இப்படி சீக்கிரம் போயிடுவான்னு நெனைக்கவே இல்ல. அவள இன்னும் ஒரு தடவையாவது வந்து பார்த்திருக்கணும். இப்ப நெனச்சு என்ன பிரயோசனம்?” இது ரேணுகா, சரஸ்வதியின் அடுத்த தங்கை.

அவள் கணவன், “ஆமா, அது சரி, உன் அக்கா நமக்கு எதாவது கணிசமா விட்டுட்டு போயிருப்பா இல்லையா? நம்ப நிஷாவுக்கு கல்யாணம் பண்ணனுமே. அப்பறம் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் வாங்கணும். நான் அதைத்தான் நம்பியிருக்கேன்.”

“என்னங்க, அதுக்குள்ள அதெல்லாம் பத்தி பேச வேண்டாம்.”

“நீ அதப்பத்தி நெனக்கவே இல்ல மாதிரி பேசறே? ஒன் மனசிலேயும் அந்த நெனப்பு இருக்குன்னு எனக்கு தெரியாதா, என்ன?”

“ஆமா, இருக்கு. ஒத்துக்கறேன். ஆனா இப்ப அதப்பத்தி பேசறது என்னவோ மாதிரி இருக்கு. என்ன இருந்தாலும் அவ என் அக்கா, இல்லையா?”

“எல்லார் மனசிலேயும், உன் செல்ல தங்கச்சி வீணா, தம்பி பாபு எல்லார் மனசிலேயும், அதே எண்ணம் தான் இருக்கு. அதனால தானே நாம எல்லரும் உடனே ஓடி வந்திருக்கோம். அப்புறம் அந்த பையன், அதான் உங்க அக்காவோட மருமகப்பிள்ள, அவன் பேர் என்ன?”

“பிரகாஷ சொல்றீங்களா?”

“ஆமா. பிரகாஷ், நல்ல பிள்ளையா தான் தெரியறான். பார்க்கவும் நல்லா இருக்கான். என்ன, ரேணுகா, நம்ம நிஷாவுக்கு அவன பார்த்தா என்ன?”

“எனக்கும் அந்த எண்ணம் தோணிச்சு தான். படிச்சிருக்கான், பார்க்க அம்சமா இருக்கான். நல்ல குடும்பம்.”

“ஆனா அவனுக்கு நெலையா வேலை இல்ல. ஏதோ பிசினெஸ் பண்றானாம். அதையெல்லாம் நம்ப முடியாது. ஆனா அவனுக்கும் சொத்துல பங்கு இருக்கும். அதனால வேல இல்லன்னு நாம யோசிக்க வேணாம். ஆனா பணம் மட்டும் இல்லேன்னா நம்ம நிஷாவுக்கு அவனப்பத்தி யோசிக்கக்கூட மாட்டேன், அவன் எவ்வளவு படிச்சிருந்தாலும், எத்தன அழகா இருந்தாலும். ஒரு வி ஐ பிக்கு..... அதாவது வேலை இல்லா பேர்வழிக்கு என் செல்ல பொண்ண குடுக்கமாட்டேன். சரி, சரி. அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கெல்லாம் அவசரம் எதுவும் இல்ல. அதப்பத்தி அப்புறம் யோசிச்சுக்கலாம். ஆமா. இந்த வேலுச்சாமி, உன் அக்காவோட வக்கீல், நாளைக்கு கார்த்தால நம்ம எல்லாரையும் கூப்டிருக்காரே, எதோ மீட்டிங்குன்னு. என்ன விஷயம்னு தெரியல்ல. உங்க அக்கா சொத்தப்பத்தி பேசுவாரோ?”

“அதப்பத்தி பேச என்ன இருக்கு? அக்காவோட சொத்த நம்ம எல்லாருக்கும் சமமா பிரிச்சு தரவேண்டியது தானே? அக்கா அப்படித்தான் எப்பவும் மறைமுகமா சொல்லிட்டிருந்தா. மீட்டிங்க் கீட்டிங்கெல்லாம் எதுக்குன்னு தெரியல்ல.”

“உன் அக்கா சரியான ஆளு. மறைமுகமா ‘ஹின்ட்’ பண்ணுவா. ஒண்ணும் “டெஃபனெட்டா சொல்ல மாட்டா. நம்மையெல்லாம் அதிகாரம் பண்ணுவா.”
“நமக்கு எத்தன உபகாரம் பண்ணியிருக்கா! சும்மா செத்துப்போனவளப்பத்தி இப்படி மோசமா பேசாதீங்க. ஒண்ணு யோசிச்சீங்களா?”

“என்ன?”

“சொத்து எல்லாத்தையும் அக்கா அந்த வள்ளிக்கு எழுதிவச்சிருந்தான்னா? ஐயோ! அப்ப நாம என்ன பண்ணுவோம்?”

“சேச்சே! அப்படி பண்ணமாட்டா. நீங்க எல்லாரும் அவங்களோட ரத்த பந்தம். உங்களுக்கு தான் உரிமை. அந்த பொண்ணு. பாவம் தான், அனாதை. எதாவது அவளுக்கு செஞ்சிருப்பா உன் அக்கா. மத்தபடி சொத்து முழுக்க அவளுக்கு கொடுத்திருப்பான்னு நான் நெனைக்கல்ல.”

“ஆமா. நானும் அப்படித்தான் நம்பறேன். இல்லேன்ன நம்ம கதி அம்போ தான்.”

அடுத்த அறையில் இன்னொரு தங்கை வீணாவும் அவள் கணவன் நரசிம்மனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“என்னோட ஒரே நம்பிக்கை உன் அக்கா சொத்துல ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கும்ங்கறதுதான். உன்னோட அக்காவோட சொத்து மதிப்பு  சுமார் பத்து கோடி இருக்கும். அதுதான் என்னோட எஸ்டிமேட் படி நம்ம பாகம் அட்லீஸ்ட் இரண்டரை கோடி இருக்கும்” என்றான் நரசிம்மன்.

“அதுக்குள்ள  சொத்தப்பத்தி பேசறது நல்லா இல்ல.”

“ஒனக்கே தெரியும், நான் வெளிப்படையா பேசறவன்னு. ஒளிச்சு பேசற ஆள் இல்ல நான். நாம எல்லாரும் அதுக்காகத்தானே ஓடி வந்திருக்கோம். ஆனா ஒரு நல்ல விஷயம் என்னன்னா உன் அக்காவுக்கு பாரபட்சம் கிடையாது. நீங்க எல்லாரும் சமம் அவளுக்கு. எனக்கு இப்ப  டிஃபிகல்ட் டயம். பிசினஸ் ரொம்ப மோசமா போயிட்டிருக்கு. உன் அக்கா பணத்த தான் நம்பிட்டிருக்கேன்.”

“அது என் பணம். அதுல கை வைக்கலாம்னு கனவு காணாதீங்க. நம்பளோட ஒரே வாரிசு, நம்ப செல்லப்பிள்ள வருண் அவன் வேற பணத்துக்கு எங்கிட்ட அடிபோட்டுட்டு இருக்கான்.”

“பாத்தியா? நீயும் அதே நெனப்புல தானே இருக்கே. அதுக்குள்ள என் பணம்னு புத்தி வந்திருச்சே!”

“அதெல்லாம் சரி, அக்கா பணத்த எல்லாம் அந்த வள்ளிக்கு கொடுத்திட்டா? அத நெனச்சு பார்த்தீங்களா? அவ கொஞ்சம் வருஷமா அக்காவோடவே இருக்கா. அவள கவனுச்சுக்கிட்டு, பணிவிட செஞ்சுட்டு. அக்காவோட மூடுக்கெல்லாம் ஈடு கொடுத்திட்டு வரா. நாம என்ன செஞ்சோம்? வந்து கூட பார்க்கல்ல. அக்காவுக்கு இந்த வள்ளிய ரொம்ப பிடிக்கும். அவள படிக்க வச்சா. சொத்து முழுக்க அவளுக்கு தந்தாலும் ஒண்ணும் ஆச்சர்யம் இல்ல.”

“அய்யோ! அப்படி நடக்கக்கூடாது. ஆனா நான் நெனக்கறேன், உன் அக்கா உயில் கியிலெல்லாம் எழுதியிருக்க மாட்டா. செத்துப்போவோம்னு நெனைச்சிருக்க மாட்டா. ஹார்ட் அட்டேக் திடீர்னு வந்திரிச்சு. நாம தானே ஓறவு? நமக்கு தான் சொத்தெல்லாம்.”

“நானும் அவள பார்க்கணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள பக்குன்னு போய்ட்டா”.

அந்த வீட்டு தோட்டத்தில் இருந்த ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருந்தான் சரஸ்வதியின் கடைசி தம்பி பாபு என்கிற நாராயணன். அவன் தனியாக பெங்களூரில் இருந்தான். அவன் மனைவி அவனை விட்டுப்போய் வருஷம் ஏழாகிறது. அவனுடைய மனைவி அவன் ஆட்டபாட்டங்களை சகிக்க முடியாமல் தன் ஒரே மகளுடன் வீட்டை விட்டுவிட்டு போய்விட்டாள். எங்கே இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ எதுவும் பாபுவுக்கு தெரியாது.

பாபு மனதிலும் அதே எண்ணம் தான், அக்கா சொத்தில் தனக்கு என்ன பங்கு கிடைக்கும்? அவனுக்கு கடன் எக்கச்சக்கமா இருந்தது. ஆனால் அவன் சிந்தனை கடன்களை அடைப்பது பற்றி இருக்கவில்லை. கையில் நிறைய பணம் கிடைக்கப்போவதைப்பற்றி அவனுக்கு ஒரே குஷி. சூதாட்டத்தில் புகுந்து விளையாட துடித்தான். “கிடைச்சா சின்ன ஆட்டம் எல்லாம் இல்ல, பெரிய க்ளப்கள்ல போய் ஒரு கை பார்க்கவேண்டியது தான்.”

இன்னொரு அறையில் தன் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான் பிரகாஷ், சரஸ்வதியின் மருமகன். சரஸ்வதியின் கணவன் ராமசாமியின் தம்பி மகன். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருந்தாள். அவள் வரவில்லை.

எதோ பகற்கனவில் அவன் தன்னையே இழந்திருந்தான். அவன் கனவு பணத்தைப் பற்றி இல்லை. தன் கனவுக்கன்னியைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தான். என்ன அழகு? விசாலமான கண்கள், அடர்ந்த கருங்கூந்தல்! திடீரென அவன் நினைவு நிகழ்காலத்துக்கு வந்தது. வேலுச்சாமி “எதோ மீட்டிங்க், வந்துடுப்பா”ன்னாரே, எதப்பத்தி பேசப்போறார்? எதுக்கும் போய் பார்ப்போம்.”

அடுக்களையில் வள்ளி மதிய உணவுக்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அடுப்பு மூட்டக்கூடாது என்பதால் வெளியிலிருந்து சாப்பாடு ஆர்டர் செய்தாள். அவள் மனமும் யோசனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. “ஸரஸ்வதி பாட்டி போயிட்டாங்க.. பாவம் பாட்டி! எங்கிட்ட ரொம்ப பாசமா இருந்தாங்க. என்னை படிக்க வச்சு என்னை ஒரு பட்டதாரியாக்கினாங்க. இனிமே இங்க இருக்கமுடியாது. கிளம்பவேண்டியதுதான். எங்க போறது? எதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல எடம் பார்க்கணும். அப்புறம் வேலைக்கு அப்ளை பண்ணனும்.”

அடுத்த நாள் காலையில் எல்லாரும் டிராயிங் ரூமில் கூடியிருந்தார்கள். எல்லாரும் சேர்களிலும் சோபாக்களிலும் உட்கார்ந்திருந்தார்கள். வள்ளி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தாள். வேலுச்சாமி அவளையும் கூப்பிட்டிருந்தார். வேலுச்சாமி வக்கீல் தவிர குடும்ப நண்பர் கூட.
வேலுச்சாமி வந்து எல்லோர் முன்னாலேயும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். எல்லோரையும் பார்த்து புன்னகை செய்தார். பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“எல்லாரும் ராத்திரி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்திருப்பீங்கன்னு நெனைக்கறேன். வள்ளி! நீயும் உக்காந்துக்கோ. எத்தன நேரம் நின்னிட்டிருப்பே? சரி, இப்ப, சரஸ்வதி சில விஷயங்கள உங்க எல்லாருக்கும் சொல்லும்படி எங்கிட்ட சொல்லியிருந்தா. அவளுக்கு ஹார்ட் வீக்கா இருந்தது உங்க யாருக்கும் தெரியாது. யாருக்கும் சொல்லவேண்டாம்னு சொல்லியிருந்தா. அவளோட ஹார்ட் 25% தான் வேல செஞ்சிட்டு இருந்திச்சு”

வள்ளியைத்தவிர மற்ற எல்லோருக்கும் அதிர்ச்சி.
வேலுச்சாமி தொடர்ந்தார்.

“நீங்க எல்லாரும்  சரஸ்வதிக்கு நிறைய சொத்து இருக்கு, ரொம்ப பணக்காரின்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க இல்லையா, உண்மைய சொல்லப்போனா சரஸ்வதிகிட்ட எதுவும் கிடையாது.”
எல்லோரும் திடுக்கிட்டனர், வள்ளியைத்தவிர.

“இல்ல. பொய் சொல்றீங்க!” இது ரேணுகா.

“ஆமா, இத நாங்க நம்ப மாட்டோம்.”

வேலுச்சாமி அமைதியாகத் தொடர்ந்தார், “இது உண்மை. உங்களுக்கெல்லாம் “ஷாக்கா” இருக்கும்னு தெரியும். எனக்கும் இத சொல்றதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா சரஸ்வதி எங்கிட்ட இத ஏற்பிச்சிருக்கா. ராமசாமி இறந்தபோது, நிறைய சொத்துக்கள விட்டுவிட்டு போனது என்னவோ வாஸ்தவம்தான். ஆனா பிஸினெஸ்ல ஏகப்பட்ட கடன் இருந்திச்சு. நாங்க சொத்துல கொஞ்சமாவது மீட்கணும்னு எத்தனையோ முயற்சி பண்ணினோம். ஆனா மூழ்கற கப்பல மீட்கற மாதிரி ஒண்ணும் செய்யமுடியல்ல. சொத்துக்கும் கடன்களுக்கும் சரியாப்போச்சு. இந்த வீடும் மார்கேஜ்ல தான் இருக்கு. இது கூட இருக்காது, போயிடும்”

எல்லாரும் பிரமிச்சுப்போய் உட்கார்ந்திருந்தனர்.

வேலுச்சாமி தொடர்ந்தார்.

“நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு தான் சொன்னேன். சரஸ்வதி தான் பிடிவாதமா ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டா..  நீங்க எல்லாரும் அவள பெரிய சொத்துக்காரின்னு நெனைச்சிட்டிருந்தீங்க, அவளும் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டா. அவ நெனச்சா, பணம் இருந்தாத்தான் மதிப்பீங்கன்னு.”

“இல்லே, பொய் சொல்றிங்க, அக்கா நான் கேட்டப்ப எல்லாம் பணம் அனுப்புவா.” இது ரேணுகா.

“ஆமா, அக்கா கேட்டா உடனே அனுப்பிடுவா.” இது வீணா.

“ஆமா, அனுப்புவா தான். எனக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கெல்லாம் பணம் அனுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டான்னு. தன் நகையெல்லாம் வித்து அனுப்புவா. உங்களுக்கு அவளோட உண்ம நெல தெரியக்கூடாதுன்னு நெனச்சா.” 

“அக்கா நம்பள ஏமாத்திட்டா.” இது ரேணுகா

எல்லோரும் ஆமோதிப்பாக தலைட்டினார்கள். எல்லோர் முகத்திலும் திகைப்பும் ஏமாற்றமும் நடனமாடின.

வேலுச்சாமி மறுபடியும் தொண்டையை கனைத்துக்கொண்டார்.
“இன்னும் ஒரு விஷயம்....”

அனைவரும் நிமிர்ந்து பார்த்தனர்.

“ஸரஸ்வதி ஒரு கடிதம் எழுதி வச்சிருக்கா. தான் இறந்துட்டா அத உங்க எல்லாருக்கும் படிச்சு காமிக்கணும்னு எங்கிட்ட சொல்லியிருந்தா. வாசிக்கட்டுமா?”

“இதெல்லாம் தேவையா, ஸார்? என்ன எழுதியிருக்கப்போறாங்க? நல்லா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டாங்க. இனிமே ஊர் திரும்பற வழிய பார்ப்போம்.” என்றான் ரேணுகாவின் கணவன் கோபம் கொந்தளிக்க.
 
“எனக்கென்னவோ இதெல்லாம் பொய்னு தோணுது. சொத்து எல்லாம் வள்ளிக்குன்னு படிக்கப்போறாரு. அத நாம இருந்துக்கிட்டு கேக்கணுமா என்ன?, வாங்கக்கா, போகலாம்.” என்று கிசுகிசுத்தாள் வீணா தன் சகோதரி காதில்.

வேலுச்சாமி வாசிக்க ஆரம்பித்தார்.

அன்புமிக்க என் அருமை மக்களே, எனக்கு உங்கள் கிட்ட சொல்றது அதிகமா எதுவும் இல்லை. உங்கள் எல்லோருக்கும் சுகமும் ஆரோக்கியமும் அளிக்க கடவுளை வேண்டிக்கிறேன்.
உங்களுக்கெல்லாம் தெரியும், வள்ளி எப்படி எனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் என்று. அவள் மிகவும் நல்ல குணமுள்ள பெண். அவளும் நமக்கு தூரத்து உறவு தான். அவளை நான் படிக்க வைத்தேன். இன்றைக்கு அவள் ஒரு க்ரேஜுவேட். ஆனால் அதற்கு மேல் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்கள் எல்லோருக்கும் முடிந்த போது உதவி செய்தேன். இப்போது எனக்கு ஹார்ட் வீக்காக இருக்கிறது, டாக்டர் சொல்லிவிட்டார், இனிமேல் எப்போது வேண்டுமானாலும் எனக்கு முடிவு வரலாம்.

எனக்கிருக்கும் ஒரே ஆசை வள்ளியை, பிரகாஷோ அல்லது வருணோ கல்யாணம் செய்துக்கணும் என்று. அப்படி இரண்டு பேரில் ஒருவர் சம்மதித்தால் இந்த வீட்டிலேயே நிச்சயம் செய்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
சரஸ்வதி.

எல்லோரும் அதிர்ச்சியில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
சில வினாடிகள் கழிந்து பிரகாஷ் பேச ஆரம்பித்தான், “பாட்டிக்கு....,”

“வேண்டாம், யாரும் ஒண்ணும் சொல்ல வேண்டாம்” என்றாள். வள்ளி ஆக்ரோஷத்துடன். பிறகு வேலுசாமியை நோக்கி சொன்னாள். “இந்த குடும்பத்திலிருந்து எனக்கு யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் சுயநலம் பிடிச்சவங்க. ... எல்லாரும் பேசிட்டிருந்தத நான் கேட்டுட்டு தான் இருந்தேன். பாட்டிக்கிட்டேயிருந்து எத்தன பணம் கிடைக்கும்னு கணக்கு பண்ணிட்டிருந்தாங்க. யாரும் அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடல்ல. எல்லாருக்கும் உதவி செஞ்சா, பாட்டி. பாவம் பாட்டி! ..... கல்மனசு எல்லாருக்கும்.”

“என்ன தைரியம் ஒனக்கு? நீ யாரு எங்கள இப்படி எல்லாம் பேசறதுக்கு? நாங்கள்ளாம் அக்காவோட கூடப் பொறந்தவங்க! நீ வெறும் வேலக்காரி!” என்று சொன்ன ரேணுகாவை நேரிட்டுப் பார்த்தாள் வள்ளி. உணர்ச்சிவசத்தில் அவள் முகம் சிவந்திருந்தது.

“எனக்கென்ன பயம்? பாட்டிய பாக்க எத்தன தரம் வந்தீங்க? பாட்டி போயிட்டான்னு தெரிஞ்சப்புறம்தானே எல்லாரும் வந்திருக்கீங்க? ஏன்? பாட்டிக்கு எல்லாம் போயிரிச்சுன்னு எனக்கு முன்னாலேயே தெரியும் பாட்டி பாவம், எங்கிட்ட இருந்த பாசத்தால இப்படியெல்லாம் எழுதியிருக்காங்க. …நான் ஒண்ணும் என்னை யாராவது ஏத்துக்கணும்னு காத்திட்டிருக்கல்ல. …நான் ….வேல தேடிக்கப்போறேன். ..என் கால்கள்ள ஊனி நிக்க தான் ஆசப்படறேன்.” கடைசி வார்த்தைகள் அவளுடைய விம்மல்களுடன் கலந்து வந்தன.
வள்ளி அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். 
வேலுச்சாமி சங்கடத்துடன் நெளிந்தார்.

 “என்ன தைரியம் அவளுக்கு, வேலக்காரி, அவ நம்மள என்ன பேச்சு பேசிட்டா?” என்ற வீணாவின் ஆக்ரோஷமான வார்த்தைகள் அங்கு நிலவிய நிசப்த்தத்தை கலைத்தன.

“ஆமா, வீணா, நாம இனிமே இங்க இருக்கறதுல அர்த்தம் இல்ல. போலாம்.”

எல்லோரும் எழுந்தனர்.

வேலுசாமி, “ஸரஸ்வதியோட காரியங்கள் ….” என்று இழுத்தார்.“

“எனக்கு அர்ஜன்டா மும்பை போகணும். வா, ரேணு,” இது ரேணுகாவின் கணவன். ஒன்றுமே பேசாமல் வீணாவும் அவள் கணவனும் அவர்களை பின் தொடர்ந்தனர்.

“ஸார், நான் ஒரு வாரம் இங்க தான் இருப்பேன். அத்தைக்கு செய்யறதெல்லாம் செஞ்சிடலாம்.” என்றான் பிரகாஷ்.

“சரி. இன்னும் அத்தையோட மேட்டர்ஸ் எல்லாம் சரி பண்ணனும். எனக்கு உன் ஹெல்ப் தேவை. நீ இருக்கேன்னா சந்தோஷம். அப்போ நான் ஏற்பாடெல்லாம் பாக்கறேன். வரேன்.” வேலுச்சாமி போய்விட்டார்.

வள்ளி தன் சிறிய அறையில் தன் பொருள்களை எடுத்து பேக்கிங்க் செய்து கொண்டிருந்தாள். அப்போது வேலைக்காரப்பெண் வசந்தா உள்ளே நுழைந்தாள்.

“வள்ளி, பிரகாஷ் அய்யா உங்கிட்ட இந்த லெட்டர குடுக்க சொன்னாரு.”

பிரகாஷ் எதுக்கு எனக்கு எழுதணும்? தயக்கத்துடன் கடிதத்தை வாங்கி படித்தாள்.

வள்ளி,
நான் இன்று காலை உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் என்று நினைத்தேன். ஆனால் நீ அதற்குள் போய்விட்டாய். உன் ஈமெயிலோ மொபைல் நம்பரோ எனக்குத் தெரியாது.  நீ கிளம்பி போய்விடுவாய் என்பதால் உனக்கு நான் இதை எழுதுகிறேன்.
நான் உனக்கு ஒரு வேலை ஆஃபர் செய்யலாம் என்று நினக்கிறேன். நான் ஒரு பிஸினெஸ் ஆரம்பித்திருக்கிறேன். அதற்காக கொஞ்சம் பேரை ரெக்ரூட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அதுல உனக்கு ஒரு வேலை தரலாம் என்று நினைக்கிறேன்.
இதுல எனக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது. நீ பயப்பட தேவையில்லை.எனக்கு ஏற்கனவே என் மனதுக்கு இஷ்டமான ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது.
எனக்கும் சரஸ்வதி அத்தையிடம் இருக்கற பாசத்தினால் நான் இதை செய்ய விரும்புகிறேன். தவிர எனக்கு நம்பிக்கையான பேர்களைத்தான் வேலையில் அமர்த்த விரும்புகிறேன். நான் என் ஈமெயிலும்  மொபைல் நம்பரும் தருகிறேன். இன்னும் ஒரு வாரம் அத்தை காரியங்கள் முடியும்வரை இங்கு தான்  இருப்பேன். உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
பிரகாஷ்.
வள்ளி ஒரு நிமிடம் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். 
“எனக்கு நம்பிக்கையான பேர்களைத்தான் வேலையில் அமர்த்த விரும்புகிறேன்.” இந்த வாக்கியம் அவள் மனதில் எதிரொலித்தது.
ஹேண்ட்பேக்கிலிருந்து தன் மொபைல் ஃபோனை எடுத்து பிரகாஷ் நம்பரை  அழைத்தாள்..



Friday, September 8, 2017

கழிவிரக்கம்

வடிவு தன் புருஷனை எதோ கத்திக்கொண்டே இருப்பாள். அவனை சதா காலமும் ஏசிக்கொண்டே இருப்பாள். அக்கம்பக்கத்தில் எல்லோரும் கேட்பார்களே என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் உரத்த குரலில் கண்டபடி கத்துவாள்.

“ஏய், என்ன இருக்கு ஒங்கிட்ட? பணமா, வீடா? ஒண்ணும் கிடையாது. எங்கப்பா என்னய எப்டி வளத்தாரு? பச்சக்கிளி மாருதி. ஒன் குடும்பத்துல, எல்லாம் ஒதவாக்கர கும்பல்!”

“ஒரு குந்துமணி தங்கம் உண்டா? ஓரு நல்ல சேல? ஊம்! வீட்ல ஜாமான் என்ன இருக்கு? அவங்க அவங்க மஹாராணி மாருதி சுத்தறாங்க! எங்கப்பா....”

விடிந்ததும் தொடங்குவாள். அக்கம்பக்கத்தவர் “காலங்கார்த்தால சுப்ரபாதம் ஆரம்பிச்சாச்சு!” என்று அலுத்துக்கொள்வார்கள். எல்லாருக்கும் முருகனைப்பார்த்து தான் அனுதாபம். முருகன் சாது. பெண்டாட்டியை சமாதானப்படுத்த முயற்சி செய்வான்.
“இங்க பாரு, புள்ள, கொஞ்சம். அடக்கி....”
அவன் வார்த்தைக்கு காத்திருந்தவள் போல் இன்னும் பலமாக கத்த ஆரம்பிப்பாள்.

ஒரு முறை இந்த தினசரி சண்டைய சகிக்கமுடியாத அவளோட அண்டைவீட்டுக்காரி சொன்னாள்,
“பாரு, வடிவு, ஒரு நாளைக்கு இது நடக்குதா இல்லியான்னு பாரு, முருகன் ஒரு நாள் உன்னைய விட்டுட்டு போயிடுவான், இல்லே தற்கொல செய்துக்குவான், வேணும்னா பாரு.”

இந்த வார்த்தைகளை நிஜமாக்குவது போல ஒரு நாள் வேலைக்கு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.  இரண்டு நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. வடிவு ஏதேதோ புலம்பிக்கொண்டே இருந்தாள். மூன்றாம் நாள் ஒரு திடுக்கிடும் செய்தி வந்தது. வேலைக்குப் போய் திரும்பினவர்கள் சொன்னார்கள். ஊருக்கு வெளியில் ரயில் தண்டவாளத்தில் உருத்தெரியாமல் நசுக்கப்பட்ட ஒரு ஆணின் சவம் கிடந்தததாம். சவத்தின் உடலில் நீல சட்டை இருந்ததாம். முருகனாயிருக்குமோ, அனைவருக்கும் சந்தேகம். காரணம் முருகன் எப்போதும் நீல சட்டை தான் போட்டிருப்பான், ஏனென்றால் அவனிடம் இருந்த ஒரே நல்ல, கிழிசல் இல்லாத சட்டை அது ஒன்று தான். வடிவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.

“ஐயோ, சாமி, என்னைய விட்டுட்டு போயிட்டயா! நான் என்ன பண்ணுவேன்? ஐயோ!”
தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.
“ஆமா, இப்ப அளுது என்ன பிரயோசனம்? அவன் இருந்தப்ப இவ ஒரு பொளுது அவனய விட்டிருப்பாளா? என்னமா ஏசினா? பாவம், தாங்க முடியாமதான் அவன் ரயிலுக்கு தன் தலைய குடுத்திருப்பான்” அண்டைவீட்டுக்காரி முணுமுணுத்தாள்.

“ஹய்யோ! நான் பாவி! அத கண்டமேனிக்கும் திட்டிட்டு இருந்தேன். பாவம், அது  நல்லது. என்னய ஒரு வார்த்த பேசாது. நான் பாவி! எனக்கு மன்னிப்பே கெடயாது! காலைல அது போனப்ப திரும்பி வராதேன்னு சொன்னது நெசம் தான். ஆனா சும்மா தான் சொன்னேன். நெசத்துல அது தான் என் உசுரு. அது மாத்ரம் உசுரோட வரட்டும், நான் அவனய ராசா மாருதி பார்த்துக்குவேன். அவனய ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஐயோ, சாமி! என் ராசா!”
வடிவு கதறி அழுதாள்.

திடீரென நிசப்தம் நிலவியது. “வரது முருகன் மாருதி தெரியுது!”
ஆமாம், முருகன் மெதுவாக வந்துகொண்டிருந்தான்.
வடிவு அதிர்ந்து உற்று பார்த்தாள். ஆமாம் முருகனே தான்.
வடிவு ஒரு ஓட்டம் ஓடி சினிமா கதாநாயகி போல “என் ராசா, நீ சாகல்லியா, வந்துட்டியா?” என்று அவனை கட்டிக்கொண்டாள்.
“ஏ, புள்ள, என்ன இது, எல்லாரும் பாக்கறாங்க..” முருகன் கஷ்டப்பட்டு தன்னை விடுவித்துக்கொண்டான்.

“பாரு, சத்தியமா சொல்றேன், இனிமே நான் உன்னய ஒண்ணும் சொல்லமாட்டேன். நீ இருந்தா போதும் ஆமா, நெசம்மாத்தான் சொல்றேன்”

அடுத்த நாள் காலை. வடிவின் கீச்சுக்குரல் கேட்கிறது.
“நீ என்னய பயமுறுத்தப்பாத்தே இல்ல? எங்கே போனே? ரகசியமா? கேக்கறேன் இல்லே? எங்க போனே? சொல்லு?”

அண்டைவீட்டுக்காரி முண்முணுக்கிறாள், “ஆரம்பிச்சுட்டா. இவளாவது திருந்தறாவது!”

Sunday, August 13, 2017

பாவம், சரசு!

சரசுவை அவளுடைய பாட்டி எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த போது அவளுக்கு வயது ஒன்பது இருக்கும்.  அவளுக்கு அப்பா அம்மா கிடையாது. கிழவியான அவளுடைய பாட்டி தான் அவளுக்கு சோறு போட்டு வளர்த்தாள். அந்த பாட்டி பரம ஏழை. என்னுடைய தந்தை அவளுக்கு ஃப்ரீயாக கேஸ் நடத்திக்கொண்டிருந்தார். கேஸ் ஜயித்தால் அவளுக்கு கொஞ்சம் நிலம் கிடைக்கும். ஆனால் கேஸ் சுலபத்தில் முடியுமா? இழுத்துக்கொண்டு கேஸ் முடிய வருஷக்கணக்காகும். ஒரு நாள் அந்த பாட்டி தன் பேத்தியை எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தாள். “இது இங்க ஒரு மூலெல கெடக்கட்டும்”. விட்டுவிட்டு போய்விட்டாள்.
அன்றிலிருந்து சரசு எங்கள் வீட்டின் ஒரு  அங்கமாகிவிட்டாள்.
சரசு ஒல்லியாக , உயரமாக இருப்பாள். நல்ல கருப்பு நிறம். களையான முகம். இயற்கை அவளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருந்தது.
தானாகவே எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு ஒத்தாசையாக இருக்க ஆரம்பித்தாள். எங்களுக்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்வாள். எங்கள் படிக்கையை விரிப்பதும் சுருட்டி வைப்பதும் அவள் வேலையாகிவிட்டது. ஒரு முறை வழக்கமான வேலைக்காரி வேலையை விட்டு நின்றதும் சரசு அந்த வேலைகளை தானாகவே ஏற்றுக்கொண்டாள். காலையில் எழுந்ததும் என் அம்மா காப்பி தயாரிக்க உதவியாக குமுட்டி அடுப்பை பற்ற வைப்பாள். (அப்போதெல்லாம் ஸ்டவ்வு, கேஸ் எல்லாம் ஏது?)
 பிறகு வாசல் தெளித்து கோலம் போடுவாள். பாத்திரங்களை தேய்ப்பது, வீடு கூட்டுவது, துணி துவைப்பது என்று எல்லா காரியங்களையும் செய்துகொண்டே இருப்பாள். என் பெற்றோரிடம் அசாத்தியமான விசுவாஸம் இருந்தது அவளுக்கு.
எனக்கு ஞாபகம் இருக்கிறது, என் கல்யாணத்தின் போது , என் அம்மா சரசுவை ஸ்டோர் ரூமிற்கு காவலாக இருக்கச் சொன்னாள். 
அப்போது  நாங்கள் இருந்த வீடு மூன்று பாகமாக இருந்தது. மூன்று குடும்பங்கள் அந்த பெரிய வீட்டில் இருந்தோம். வடக்கு பக்கம் என் அத்தையின் பெரிய  குடும்பம் இருந்தது. கிழக்கில் இருந்த பாகம் என் சித்தப்பவினுடையது. அங்கே என் பாட்டி, இன்னொரு அத்தை இன்னும் சிலர் இருந்தனர். மேற்கில் எங்கள் குடும்பம் இருந்தது.  கல்யாணத்திற்காக உறவினர்கள் “நான்கு நாள் முன்னதாகவே” வந்து எல்லா வீடுகளிலும் குவிந்திருந்தனர்.
அந்த ஸ்டோர் ரூமில் தான் கல்யாண விருந்துகளுக்கான மளிகை சாமான்களும், அதிரசம், மைசூர்பாகு, லட்டு, பாதாமி கேக், முறுக்கு  போன்ற பட்சணங்களும் பலவித பருப்பு தேங்காய்களும்  வைக்கப்பட்டிருந்தன.  யாரும்  நுழைந்து பட்சணங்களையும், முந்திரிப்பருப்பு, திராட்சை எல்லாவற்றையும் எடுத்து விடாமல் இருக்க தான் சரசு காவல். சரசு ஸ்டோர் ரூம் வாசலில் அசையாமல் நிற்பாள். அவளை மீறி யாரும் நுழைந்துவிட முடியாது. நெருங்கிய உறவினர்களைக் கூட விடமாட்டாள். என் அம்மாவிற்கு தன் புக்ககத்து உறவினர்களைக் கண்டால் பயம்.  அவர்களில் சிலர் உள்ளே நுழைந்து அங்கிருக்கும் பாதாம் அல்வாவையும், முந்திரி கேக்கையும் ஒரு கை பார்க்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் சரசுவோ யார் வந்து அவளைப் பார்த்து முறைத்தாலும் அசையமாட்டாள்.  என் பெற்றோரிடம் அவளுக்கு இருந்த  விசுவாசம் அசைக்க முடியாத ஒன்று.
அவள் என் அம்மா அவளுக்கு எதாவது கொடுத்தாலே ஒழிய எதையும் தொடமாட்டாள்.  அவளுக்கு ஆசைகளே இல்லையோ என்று எனக்கு சில சமயம் தோன்றும்.
என் பெற்றோர் அவளிடம் கருணையுடன் இருப்பார்கள்.  அவர்களுக்கு அவளிடம் அனுதாபமும் பாசமும் இருந்தது.  ஆனால் சரசு தன்னை ஒரு வேலைக்காரியாகவே நினைத்தாள்.  நாங்கள் எல்லோரும் அவளிடம் அனுதாபமாக நடந்துகொண்டாலும் அவள் ஒரு போதும் அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளமாட்டாள்.  என் அப்பா அவளுக்கு நெய், தயிர், காய்கறியுடன் நல்ல சாப்பாடு தரவேண்டும் என்று கண்டிப்பாக சொல்வார்.  இது சமையல்காரம்மாக்களுக்கு (எங்கள் வீட்டில் ஒருவர் பின்னால் ஒருவராக நிறைய சமையல்காரம்மாக்கள்) பிடிக்காது.  இந்த கருப்பிக்கு என்ன ஸ்பெஷல்? என்று முனகுவார்கள். நாங்கள் யாராவது அங்கே இல்லை என்றால் சரசுவுக்கு அன்று சாதமும் குழம்பும் மட்டும் தான்.  ஆனால் சரசு எதுவும் சொல்லமாட்டாள். எப்போதும் ஒரு சிறிய புன்னகை அவள் முகத்தில் இருக்கும்.
நாங்கள் ஆரம்பத்தில் அவளுக்கு கொஞ்சம் பாடம் சொல்லித்தர முயற்சி செய்தோம். அவள் உட்கார்ந்து சிரத்தையுடன் கேட்பாள். கொஞ்சம் கற்றுக்கொண்டாள். ஆனால் எங்களுக்குத் தான் சிறிது காலத்துக்கப்புறம் சிரத்தை குறைந்துவிட்டது. அதையும் அவள் அமைதியுடன் ஏற்றுக்கொண்டாள்.
அவள் எங்கள் வீட்டில் சுமார் 6 வருடங்கள் இருந்தாள்.
ஒரு நாள் திடீரென சரசுவின் பாட்டி வந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
சரசுவின் தாய்மாமன் பர்மாவிலிருந்து  வந்திருக்கிறானாம், அவன் சரசுவுக்கு உடனே கல்யாணம் செய்தால், தான் அவளுக்கு இரண்டு சவரனில் ஒரு சங்கிலி போடுவதாக  சொல்லியிருக்கிறானாம்.
நம்ப சரசுக்கு தங்க செயின்! சரசுவின் பாட்டிக்கு தலைகால் புரியவில்லை
சரசுவுக்கு கல்யாணம் நிச்சயித்திருப்பதாக அறிவித்தாள்.
என் அப்பாவிற்கு ஒரே அதிர்ச்சி, கோபம்.
உனக்கு எதாவது பயித்தியம் பிடிச்சிரிச்சா?  சரசுக்கு இன்னும் பதினஞ்சு வயசு கூட ஆகல்ல.  வயசுக்கு வரல்ல. கூடவே கூடாது!”
சரசுவுக்கு 15 வயசானாலும் இன்னும் பெண்மைக்குரிய அங்க அடையாளங்கள் எதுவும் அவள் மேனியில் காணப்படவில்லை.  அவள் மார்பு சிலேட்டு மாதிரி தட்டையாக இருந்தது.
ஆனால் கிழவி பிடிவாதமாக இருந்தாள். அவள் சரசுவுக்காக ஒரு பையனை தீர்மானம் செய்திருந்தாள். ஒரு பூக்கடைக்காரன்.
என் அப்பா எத்தனை வாதாடியும் அந்தக்கிழவியை அசைக்கமுடியவில்லை.
சரசுவுக்கும், பூ வியாபாரி செல்வராஜுக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் எல்லோரும் கல்யாணத்திற்கு சென்றோம்.  என் அப்பா திருமணப்பரிசாக 500 ரூபாய் கொடுத்தார்.  அது அந்தக்காலத்தில் ஒரு பெரிய தொகை. சரசுவுக்கு அதுவரை சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
என் அப்பா செல்வராஜிடம் கண்டிப்புடன் சொன்னார்,  “ சரசுவை நல்லாப் பாத்துக்கோ. சரசு கண் கலங்கின்னான்னு நான் கேள்விப்பட்டா  அவள உன் கிட்ட விட்டு வைக்கமாட்டேன். “
“நல்லா பாத்துக்குவேன் ஐயா. கவலப்படாதீங்க.” என்றான் செல்வராஜ்.
சரசு கல்யாணத்திற்கப்புறம் புருஷன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.  எங்களுக்கெல்லாம் சரசு போய்விட்டது ரொம்ப வருத்தத்தைக் கொடுத்தது.
செல்வராஜ் நல்ல பையன். சரசுவிடம் அன்பாக நடந்துகொண்டான்.  அவனுடைய பூக்கடையில் சரசு உதவி செய்தாள். அவனிடம் விசுவாசமாக இருந்தாள்.  அவளுடைய இயல்பு அப்படி.  என் தந்தையிடம்,  அவளைத் தான் நல்லமுறையில் வைத்திருப்பதைக் காட்ட அவளுடைய கணவன்,  ஓரிரு முறை சரசுவை எங்கள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தான்.  அப்போதெல்லாம் சரசு அவன் கடையிலிருந்து எங்களுக்கு நிறைய பூ கொண்டுவருவாள்.
அதற்கு சில காலம் கழித்து சரசுவின் பாட்டி இறந்துவிட்டாள்.
ஒரு வருஷம் கழித்து செல்வராஜ் ஒருநாள் என் அப்பாவைப் பார்க்க தனியாக வந்தான். கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னான்,
“ஐயா, நான் கொஞ்ச நாள் முன்னால சரசுவ லேடிடாக்டர்கிட்ட  கூட்டிட்டு போனேன். “
என் அப்பா அவனை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தார். சரசு அம்மா ஆகப்போறாளா?
செல்வராஜ் தொடர்ந்தான். “ஐயா, சரசு இன்னும் வயசுக்கு வரல்ல ஐயா.  அதுக்காகத்தான் லேடிடாக்டர்கிட்ட  கூட்டிட்டுப்போனேன். அவங்க சரசுவ சோதிச்சு பார்த்தாங்க.  அவங்க சொன்னாங்க, சரசுவோட உறுப்புகள் எல்லாம் வளர்ச்சி அடையல்ல,  இனிமேயும்  வளர்ச்சி அடைய வாய்ப்பு இல்ல, அதனால அவளால  குடும்ப வாழ்க்கை நடத்தமுடியாதாம்”.
என் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.
செல்வராஜ்   தயக்கத்துடன் மேலும் தொடர்ந்தான்.
“எனக்கு சரசு மேல ரொம்ப பாசம் இருக்கு, ஐயா. ஆனா நானும் மனுசன் தானே? எனக்கு குடும்ப வாழ்க்கை, குளந்தைங்க எல்லாம் வேணும்னு இருக்காதா,  ஐயா?”
“சரி, அதனால என்ன செய்யறதா ஒனக்கு  உத்தேசம்?”
“ஐயா, வேற வழி இல்லாம, நான் இன்னொரு கல்யாணம் செய்துக்கலாம்னு தீர்மானம் செஞ்சிருக்கேன், ஆனா அதனால சரசுவ நான் விட்டுறமாட்டேன், ஐயா,   நீங்க கவலப்படாதீங்க. அவகிட்ட அன்பா, பாசமா இருப்பேன்,  நான் இத உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன், நான் வரேன், ஐயா”
அவன் போய்விட்டான்.
அதற்குப்பிறகு ஓரிருமுறை சரசுவை கூட்டிக்கொண்டு வந்தான்.
“உன்ன உன் புருசன் நல்லா நடத்தறானா?” என்று என் தந்தை சரசுவை விசாரிப்பார்.  எப்போதும் போல ஒரு சிறிய புன்னகையுடன் ஆமாம் என்று அவள் தலையாட்டுவாள்.
 அதன் பின்னர் ஒரு வருஷத்திற்கு சரசுவைப்பற்றி எந்த தகவலும் இல்லை. ஓரிரு முறை என் தந்தை “சரசு எப்படி இருக்கான்னு தெரியல்ல.” என்றார். அப்போதெல்லாம் டெலிஃபோன் வசதி எல்லாம் கிடையாது.
ஒருநாள் திடீரென சரசு தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக அவள் கிராமத்திலிருந்து ஒருவர் வந்து சொன்னார்.  வீட்டில் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.  துக்கம்.
என் அப்பா செல்வராஜை சந்தித்து விவரம் கேட்பதற்காக அவன் இருந்த கிராமத்திற்குப்போனார். செல்வராஜ் ஆழ்ந்த சோகத்தில் இருந்தான்.
“ஏன் அந்த புள்ள இப்பிடி செஞ்சிரிச்சு? ஐயா,  நான் அவள நல்லா தான் பார்த்துக்கிட்டேன். பாவம், நல்ல புள்ள.”  என்று அவன் உண்மையான வருத்தத்தோடு புலம்பினான். அவனுடைய மனைவி  -  பார்க்கும்போது அவள் கர்ப்பிணி என்று தெரிந்தது   -  பலமாக ஒப்பாரி வைத்து அழுதாள்.  அது என் அப்பாவிற்கு  கொஞ்சம் போலியாகத் தெரிந்தது.
என் அப்பா செல்வராஜின் தோளை ஆறுதலாக  தட்டிக்கொடுத்துவிட்டு கனத்த இதயத்துடன் தன் காரில் ஏறப்போனார். அப்போது ஒரு ஸ்த்ரீ, வயதானவள், “ஐயா! ஐயா!” என்று கத்திக்கொண்டு காரினருகில் வந்தாள்.
“ஐயா! விஜயா, பாவிமக, அவதான் அந்தப்புள்ளைக்கு வெசம் வச்சு கொன்னுபோட்டா!”
“என்ன சொல்றே?”
“ஆமா, ஐயா, அவளோட அளுகாச்சி எல்லாம் வெறும் பாசாங்கு.  ஐயா, அவ தான் சரசுவ கொன்னுபோட்டா. கொலகாரி!
என் தந்தை அதிர்ந்தார்.
“எப்படி சொல்றே? இப்படியெல்லாம் சும்மா எல்லாம் சொல்லக்கூடாது.”
“ ஐயா, சரசு ரொம்ப நல்ல புள்ள, ஐயா. அந்த விஜயா, அவ தான் செல்வராசு ரெண்டாவதா கட்டியிருக்கானே, அவ , அந்த புள்ளைய கொஞ்சமாவா படுத்தினா? கிராமத்துல யார வேணுமானா கேட்டுபாருங்க. பாவம், ராசு நல்ல பையன் தான். ஆனா அவ படுபாவி, ராச்சசி, அவன் முன்னால நல்லவ மாதிரி நடிப்பா.  சரசு கிட்ட  ரொம்ப பாசமா இருக்கறமாதிரி நடிப்பா. ராசு போனப்புறம் அவள கொடுமப்படுத்துவா. ஆனா சரசு சாது, ஐயா,  ராசுகிட்ட ஒண்ணும் சொல்லமாட்டா. விஜயா பெரிய சண்டைக்காரி. அதனால எங்களால ஒண்ணும் செய்யமுடியல்ல. ராசு விஜயாள நம்பினான்.”  
“ஏன் இதெல்லாம் யாரும் எங்கிட்ட வந்து சொல்லல்ல?”
“எங்கே சாமி, எங்க பொளப்பே கஸ்டம், சாமி. நான் சொல்லிக்கிட்டேதான் இருந்தேன், யாராவது ஐயாகிட்ட போய் சொல்லி சரசுவ கூட்டிட்டு போக்ச்சொல்லுங்கன்னு. யாரும் என் பேச்சை கேக்கல்ல.  வந்து சொல்லியிருப்போம் சாமி, அதுக்குள்ள படுபாவி இப்படி செய்வான்னு எதிர்பார்க்கல்ல.”
இதற்குள்ள அங்க நாலைந்து பேர் கூடிவிட்டார்கள். எல்லாரும் கிழவி சொன்னதற்கு தலையாட்டினார்கள்.
“சாமி, சரசு நிச்சயமா தற்கொல செஞ்சிருக்கமாட்டா. எந்த கஸ்டத்தையும்  அவ தாங்கிப்பா.  எப்பவும் அமைதியா, சிரிச்சிட்டு இருப்பா. பாவம், சாமி. எங்க எல்லாருக்கும் அவ போனது வருத்தமா இருக்கு.” கிழவி கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.
“நீங்க எதாவது செஞ்சு அவளுக்கு தண்டன வாங்கிக்கொடுங்க சாமி.” எல்லோரும்
எப்படியோ அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு என் தந்தை வீடு திரும்பினார்.  என் அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்.
“ கிழவி சொன்ன மாதிரி அந்த விஜயா சரசுக்கு வெஷம் கொடுத்திருப்பாளா?” இது என் அம்மா.
“அதெல்லாம் எதுவும் நிச்சயமா சொல்லமுடியாது. அப்படியே அவள் செஞ்சிருந்தாலும் நிரூபிக்கறது கஷ்டம். தவிர நிருபிச்சு என்ன செய்யப்போறோம்? ... அவளுக்கு கொழந்த வேற பொறக்கப்போறது. செல்வராஜ் பெண்டாட்டிய நம்பறான். இதுல இப்ப நாம தலையிட்டா போலீஸ் கோர்ட்ன்னு அவனோட நிம்மதி போயிடும்.... நம்ம மேலயும் தப்பு இருக்கு. நாம அவ எப்படியிருக்கான்னு கவனிக்காம விட்டுட்டோம்.... உம்.....விஜயாவோட மனசாட்சியே அவள் உறுத்தும். அது தான் அவளுக்கு தண்டனை.”
“அப்போ அவ செஞ்சிருக்கான்னு நீங்க நினைக்கறீங்களா?”
“நிச்சயமா சொல்ல முடியாது.”
“ரொம்ப வருத்தமா இருக்குன்னா!”
“ஆமா, சரசு ஆசைகளையேல்லாம் துறந்த  உயர்ந்த ஆத்மா. சொல்லப்போனா நம்ம எல்லரையும் விட உயர்ந்தவ.”
“பாவம், சரசு”

பாவம், சரசு ! அது எங்கள் எல்லார் இதயத்திலும் எதிரொலித்த்து.

Sunday, July 2, 2017

சாமியாரின் யோசனை.


புதுசா ஒரு சாமியார் அந்த ஊர் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். ஊர் மக்களுக்கு ஒரே சந்தோஷம். அவரை எல்லோருக்கும் பிடித்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்கிருந்தோ வருவார். கோயில் வெளியில் ஒரு மரத்தடியில் ஒரு துண்டை விரித்து அதன் மேல் உட்காருவார். அதனால் அவரை மரத்தடி சாமியார் என்று எல்லோரும் குறிப்பிட்டனர். அவர் பணத்தையோ வேறு எதையுமோ எதிர்பார்க்கவில்லை. அதிகம் பேசமாட்டார். சீக்கிரமே மக்களுக்கு அவரிடம் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவரைப்பார்க்க மக்கள் ஆவலுடன் வந்தார்கள். தங்கள் பிரச்னைகளை அவர் முன் சொல்வார்கள். அவர் பேசாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பார். சில சமயம் வாய் திறந்து ஏதாவது அறிவுரை சொல்வார்.
ஒரு வெள்ளியன்று வேலுசாமி சாமியாரைப் பார்க்க கியூ வரிசையில் நின்றான். அவனுடைய முறை வந்ததும் சாமியார் முன்பு சென்று பணிவுடன் வணங்கினான். சாமியார் அவனை ஏறிட்டுப்பார்த்தார்.
“ஐயா, உங்களுக்கு பணிவிடை செய்ய ஆசைப்படறேன், நான் ரொம்ப பாவம் செய்துருக்கேன், சாமி. அதுக்கு பரிகாரமா உங்களுக்கு தொண்டு செய்யணும்னு விரும்பறேன் சாமி, என்னை ஏத்துக்குங்க” என்றான் வேலுசாமி.
சாமியார் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தார்.
வேலுசாமி விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
“நான் ரொம்ப கெட்டவன். சாமி. என்னை ஏத்துக்குங்க. நான் உங்களுக்கு உதவியா இருக்கேன். உங்க துணிய தொவச்சு போடறேன், சோறு சமைக்கறேன். உங்க கூட எப்பவும் இருந்து எல்லாம் செய்யறேன். வேண்டாம்னு சொல்லிடாதீங்க சாமி!”
சாமியார் அப்பவும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தார். வேலுசாமி மடை திறந்தாற்போல் தன் கதையை அவரிடம் கொட்டினான்.
 “ சாமி, நான் என்ன செஞ்சேன்னு சொல்றேன் சாமி, என் மனைவிய ஏமாத்திட்டேன். பாவம். அவ. என்னையே நம்பிட்டிருந்தா. ஒரு நாடக நடிகையப் பாத்து மயங்கி என் மனைவிய, உத்தமிங்க அவ, அவள விட்டுட்டு அந்த நடிகையோட போயிட்டேன். சாமி! ஐயோ!”
வேலுசாமி கொஞ்சம் நிறுத்தினான். சாமியார் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“வீட்ல இருந்த பணம், என் பெண்டாட்டியோட நகை எல்லாத்தையும் தூக்கிட்டு ....அவளையும் என் சின்ன பாப்பா, என் ஒரு வயசு மகளையும் அம்போன்னு விட்டுட்டு... அந்த மேனாமினுக்கி, அந்த படுபாவி, கழிசடை லீலாதேவியோட ஓடிப்போனேங்க. ஆறே மாசங்க, அந்த பாவி என்னோட எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு வேறொத்தனோட ஓடிட்டா. பதினஞ்சு வருஷம் ஆச்சுங்க. என் பெண்டாட்டி, புள்ள, என்ன ஆனாங்களோ, என் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாதுங்க. என் எஞ்சிய காலம் உங்க கூட இருந்து பரிகாரம் செஞ்சு என் பாவத்த கழுவலாம்னு பார்க்கறேன் .”
சாமியார் வாயைத் திறந்தார்.
“உன் பொண்டாட்டி, குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினயா?”
“ஐயோ, சாமி, எனக்கு நெனைக்கவே பயம்மா இருக்கு. அவ எப்படி இருக்காளோ! நிச்சயமா பிச்சைக்காரியா இருப்பா. என்னைப்பாத்தா நிச்சயமா காரித்துப்புவா, சாமி.”
“போ. போய்ப்பாரு. அப்புறம் வா.”
“அவ எங்க இருக்காளோ, நான் எல்லாத்தையும் சுருட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்காரன் அவள தொரத்தியிருப்பான். அவ வாடக எப்படி கொடுப்பா?  ஐயோ, நான் பாவி, சாமி!”
வேலுசாமி ஒப்பாரி வைத்தான்.
“எங்க நீ அவள விட்டுடுட்டு போனயோ அங்கேயே போய் பாரு.”
வேலுசாமி தன் ஊருக்கு பஸ்ஸில் சென்று முன்பு தன் மனைவியுடன் வசித்த சிறு ஓட்டு வீட்டுக்கு சென்றான்.  அது இப்போது ஒரு சின்ன ஹோட்டலாக மாறியிருந்ததைப் பார்த்து வியப்படைந்தான். வீட்டின் முன் ஒரு கூரையினாலான பந்தல் போடப்பட்டிருந்தது. அதில் சுமார் இருபது  மேஜைகளும், மடக்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. இரவு மணி ஏழு. வியாபாரம் மும்மரமாக இருந்தது. பலர் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வெங்காய சாம்பாரின் மணம் மூக்கைத் துளைத்தது.
“ஐயோ! செல்லம்! அவளுக்கு என்ன ஆச்சு? அவ எங்கே?”
அவன் சென்று ஒரு மூலையில் இருந்த மேஜையில் அமர்ந்தான். தலையைக்குனிந்து கொண்டிருந்தான்.
ஒரு சர்வர் அவனருகில் வந்து, “உம்,  என்ன வேணும்?” என்றான்.
வேலுசாமிக்கு தன் தோற்றத்தைப் பற்றி அவமானமாக இருந்தது, பழைய உடை, கலைந்த தலைமுடி, சவரம் செய்யாத முகம் இதையெல்லாம் பார்த்து அவனை எதோ பிச்சை கேட்டு வந்திருக்கிறான் என்று அவன் நினைத்தால் வியப்பில்லை.
வேலுசாமி “ஒரு தோசை.” என்றான்.
அந்த சர்வர் பத்து நிமிஷம் கழித்து சூடாக மசாலா தோசை, வெண்பொங்கல் சாம்பார் சட்னி எல்லாம் கொண்டு வந்து வைத்தான்.
நல்ல பசி. வேலுசாமி கிடுகிடு என்று எல்லாவற்றையும் காலி செய்தான். என்ன ருசி! செல்லம் செய்வது போலவே இருக்கே! சர்வர் சுடச்சுட காபி கொண்டு வந்து வைத்தான்.
காபியை ரசித்து குடித்தான். பில்லுக்கு பணம் கொடுக்க தன் சட்டைபையிலிருந்த பழைய பர்ஸை எடுத்தான்.
“இத்தன வருஷம் கழிச்சு இப்போ எதுக்கு வந்திருக்கே?”
திடுக்கிட்டு நிமிர்ந்தான் வேலுசாமி.
கொஞ்சம் பருமனாக, நகைநட்டு, ஜரிகை சேலை, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு. “பளிச்”சென்று ஒரு ஸ்த்ரீ அவன் எதிரே நின்றுகொண்டிருந்தாள்.
“யார் இவ? எங்கேயோ பாத்த மாதிரி தோணுதே! செல்லம்! ஆமா, செல்லமே தான்.”
“கேக்கறேன் இல்ல, எதுக்கு வந்திருக்கே?”
“செல்லம், நீயா? எனக்கு தெரியல்ல. என்னை மன்னிச்சுடு. தெரியாம வந்து சாப்டுட்டேன்.”
“இங்க எப்படி வந்தே? இத்தன வருஷம் கழிச்சு? அவ தான் ரெண்டு மாசத்திலேயே ஓடிப்போயிட்டான்னு கேள்விப்பட்டேன். நான் என்ன கஸ்டம் எல்லாம் பட்டேன்னு தெரியுமா? இந்த ஊர்க்காரங்கள கேளு. சொல்லுவாங்க. அது சரி, இப்ப எதுக்கு வந்தே? உம்... என்ன விஷயம்?”
“அந்த மரத்தடி சாமியார் தான் உனக்கு என்ன ஆச்சுன்னு பாத்துட்டு வான்னாரு. எனக்கு வர பயமாதான் இருந்திச்சு. செல்லம், ஒனக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. நா போறேன்”
“வந்தது வந்தே. இந்த ராத்திரி வேளைல போக வேணாம். இங்க ஒரு மூலைல படுத்துக்க. காலையில எந்திரிச்சு போய்க்கோ.”
அவள் போய் விட்டாள். ஹோட்டலும் காலியாகியிருந்தது. பணியாள் ஒரு பாயும் தலையணையும் கொண்டுவந்து கொடுத்தான்.
கொட்டகையிலேயே ஒரு மூலையில் பாயில் படுத்தான்  வேலுசாமி. “நல்ல வேளை, செல்லம் நல்ல நெலமையில் இருக்கா. இனிமே நான் நிம்மதியா போலாம். ஆனா .. உம்.... டிபன் ரொம்ப நல்லா இருந்திச்சு. செல்லத்தோட கை எல்லாத்திலேயும் தெரிஞ்சுது.  சட்னி என்ன ருசி! ஒருவேள செல்லம் இங்கேயே தங்கச்சொன்னா? சுகமா இருக்கலாம். ஆரம்பத்துல கோவமா இருப்பா. போகபோக சரியாயிடும். பாப்பாவ இன்னும் பாக்கல்ல. பாக்க ஆசையா இருக்கு..” இப்படி யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டான்.
தன் அறையில் மகளுடன் படுத்திருந்த செல்லத்தின் மனமும் யோசனையில் ஈடுபட்டது.
“பாவி! இத்தன வருஷம் கழிச்சு வந்திருக்கான். இந்த நெலமைக்கு வர எத்தன சிரமம் பட்டிருக்கேன்! போகட்டும். போய் தொலையட்டும்.அடிச்சு வெரட்டணும்னு தான் தோணுது. மனுசனாவது திருந்தறாவது.....ஆனா... வீட்ல ஒரு ஆம்பள இருந்தா நல்லாதான் இருக்கும். பாப்பாவுக்கும் அப்பான்னு ஒத்தர் இருந்தா, அவன் எத்தன கேடுகெட்டவனா இருந்தாலும். பாப்பாவுக்கு வயசு பதினாறாகப்போகுது. கல்யாணம் செய்யணும். இங்க ஆளெல்லாம் என்னை ஏமாத்தறாங்க. கண்காணிக்க ஒரு ஆள் வேணும். அவன் இருந்தா எனக்கும் கௌரவமா இருக்கும். ஆனா கொஞ்சம் கூட எடம் குடுக்கக்கூடாது. கண்டிப்பா இருக்கணும்” தீர்மானம் செய்த செல்லம் நிம்மதியாக உறங்கினாள்.
விடியற்காலை. வேலுசாமி திடீரென விழித்துக்கொண்டான். வியர்த்துக்கொட்டியது. என்ன கெட்ட கனவு!
கனவில் அவன் கொட்டகையில் நாற்காலிகளுக்கும் மேஜைகளுக்கும் நடுவில் நின்றுகொண்டிருக்கிறான். வேலைக்காரர்களும் வாடிக்கையாளர்களுக் அவனை ஏசிக்கொண்டிருக்கின்றனர். “அங்க பாருங்க, அவன் தான் வேலுசாமி, கட்டின பெண்டாட்டிய விட்டுட்டு எவளோ ஒருத்தியோட ஓடினவன்! எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடின திருடன்! சீச்சீ! மனுசனா இவன்!”
அவனுடைய மனைவியும் மகளும் அவன் முன்னால் கைகளை ஆட்டியபடி அவனை கண்டபடி திட்டிக்கொண்டிருக்கின்றனர்.
வேலுசாமிக்கு கைகால் நடுங்கியது. அங்கு மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான். மணி நான்கு.
எழுந்திருந்தான். சட்டையை மாட்டிக்கொண்டான். நல்ல வேளை, யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. பர்ஸிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கல்லாவில் வைத்து அதன் மேல் அங்கிருந்த ஒரு டம்ளரை வைத்தான். பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.


அப்பா!

சப்தம் கேட்டு வேலுசாமி திரும்பி பார்த்தான். ஏழெட்டு வயது ஒரு சிறுமி வீட்டு கதவின் வெளியே நின்று கொண்டிருந்தாள்.



"தன் மகள்!" இது வரை தன் மகளை பார்த்திருக்கவில்லை. அவன் மகள் தான் அவனை கூப்பிட்டிருக்கிறாள்!

அப்பா! திரும்பவும் அவள் கூப்பிட்டாள். அவளுடைய இளம்குரல் அவன் உள்ளத்தை இழுத்தது. அவன் கல் போல் அசையாமல் நின்றான்.
அப்போது செல்லம் உள்ளிருந்து வெளியே வந்தாள். "வாங்க, காபி ரெடியா இருக்குது."
வேலுசாமி அவர்களை நோக்கி நடந்தான்.





.