சரசுவை அவளுடைய
பாட்டி எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த போது அவளுக்கு வயது ஒன்பது இருக்கும். அவளுக்கு அப்பா அம்மா கிடையாது. கிழவியான அவளுடைய பாட்டி தான் அவளுக்கு சோறு
போட்டு வளர்த்தாள். அந்த பாட்டி பரம ஏழை. என்னுடைய தந்தை அவளுக்கு ஃப்ரீயாக கேஸ் நடத்திக்கொண்டிருந்தார்.
கேஸ் ஜயித்தால் அவளுக்கு கொஞ்சம் நிலம் கிடைக்கும். ஆனால் கேஸ் சுலபத்தில்
முடியுமா? இழுத்துக்கொண்டு கேஸ் முடிய வருஷக்கணக்காகும். ஒரு நாள் அந்த பாட்டி தன்
பேத்தியை எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தாள். “இது இங்க ஒரு மூலெல
கெடக்கட்டும்”. விட்டுவிட்டு போய்விட்டாள்.
அன்றிலிருந்து சரசு எங்கள் வீட்டின் ஒரு
அங்கமாகிவிட்டாள்.
சரசு ஒல்லியாக , உயரமாக இருப்பாள். நல்ல கருப்பு நிறம். களையான முகம். இயற்கை
அவளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருந்தது.
தானாகவே எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு ஒத்தாசையாக இருக்க ஆரம்பித்தாள்.
எங்களுக்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்வாள். எங்கள் படிக்கையை விரிப்பதும் சுருட்டி
வைப்பதும் அவள் வேலையாகிவிட்டது. ஒரு முறை வழக்கமான வேலைக்காரி வேலையை விட்டு
நின்றதும் சரசு அந்த வேலைகளை தானாகவே ஏற்றுக்கொண்டாள். காலையில் எழுந்ததும் என்
அம்மா காப்பி தயாரிக்க உதவியாக குமுட்டி அடுப்பை பற்ற வைப்பாள். (அப்போதெல்லாம்
ஸ்டவ்வு, கேஸ் எல்லாம் ஏது?)
பிறகு வாசல் தெளித்து கோலம் போடுவாள்.
பாத்திரங்களை தேய்ப்பது, வீடு கூட்டுவது, துணி துவைப்பது என்று எல்லா காரியங்களையும்
செய்துகொண்டே இருப்பாள். என் பெற்றோரிடம் அசாத்தியமான விசுவாஸம் இருந்தது
அவளுக்கு.
எனக்கு ஞாபகம் இருக்கிறது, என் கல்யாணத்தின் போது , என் அம்மா சரசுவை ஸ்டோர்
ரூமிற்கு காவலாக இருக்கச் சொன்னாள்.
அப்போது நாங்கள் இருந்த வீடு மூன்று
பாகமாக இருந்தது. மூன்று குடும்பங்கள் அந்த பெரிய வீட்டில் இருந்தோம். வடக்கு
பக்கம் என் அத்தையின் பெரிய குடும்பம்
இருந்தது. கிழக்கில் இருந்த பாகம் என் சித்தப்பவினுடையது. அங்கே என் பாட்டி,
இன்னொரு அத்தை இன்னும் சிலர் இருந்தனர். மேற்கில் எங்கள் குடும்பம் இருந்தது. கல்யாணத்திற்காக உறவினர்கள் “நான்கு நாள்
முன்னதாகவே” வந்து எல்லா வீடுகளிலும் குவிந்திருந்தனர்.
அந்த ஸ்டோர் ரூமில் தான் கல்யாண விருந்துகளுக்கான மளிகை சாமான்களும், அதிரசம்,
மைசூர்பாகு, லட்டு, பாதாமி கேக், முறுக்கு
போன்ற பட்சணங்களும் பலவித பருப்பு தேங்காய்களும் வைக்கப்பட்டிருந்தன. யாரும்
நுழைந்து பட்சணங்களையும், முந்திரிப்பருப்பு, திராட்சை எல்லாவற்றையும் எடுத்து
விடாமல் இருக்க தான் சரசு காவல். சரசு ஸ்டோர் ரூம் வாசலில் அசையாமல் நிற்பாள்.
அவளை மீறி யாரும் நுழைந்துவிட முடியாது. நெருங்கிய உறவினர்களைக் கூட விடமாட்டாள்.
என் அம்மாவிற்கு தன் புக்ககத்து உறவினர்களைக் கண்டால் பயம். அவர்களில் சிலர் உள்ளே நுழைந்து அங்கிருக்கும்
பாதாம் அல்வாவையும், முந்திரி கேக்கையும் ஒரு கை பார்க்கத் தயங்க மாட்டார்கள். ஆனால்
சரசுவோ யார் வந்து அவளைப் பார்த்து முறைத்தாலும் அசையமாட்டாள். என் பெற்றோரிடம் அவளுக்கு இருந்த விசுவாசம் அசைக்க முடியாத ஒன்று.
அவள் என் அம்மா அவளுக்கு எதாவது கொடுத்தாலே ஒழிய எதையும் தொடமாட்டாள். அவளுக்கு ஆசைகளே இல்லையோ என்று எனக்கு சில சமயம்
தோன்றும்.
என் பெற்றோர் அவளிடம் கருணையுடன் இருப்பார்கள். அவர்களுக்கு அவளிடம் அனுதாபமும் பாசமும்
இருந்தது. ஆனால் சரசு தன்னை ஒரு
வேலைக்காரியாகவே நினைத்தாள். நாங்கள்
எல்லோரும் அவளிடம் அனுதாபமாக நடந்துகொண்டாலும் அவள் ஒரு போதும் அதை தனக்கு சாதகமாக
எடுத்துக்கொள்ளமாட்டாள். என் அப்பா
அவளுக்கு நெய், தயிர், காய்கறியுடன் நல்ல சாப்பாடு தரவேண்டும் என்று கண்டிப்பாக
சொல்வார். இது சமையல்காரம்மாக்களுக்கு
(எங்கள் வீட்டில் ஒருவர் பின்னால் ஒருவராக நிறைய சமையல்காரம்மாக்கள்)
பிடிக்காது. இந்த கருப்பிக்கு என்ன
ஸ்பெஷல்? என்று முனகுவார்கள். நாங்கள் யாராவது அங்கே இல்லை என்றால் சரசுவுக்கு
அன்று சாதமும் குழம்பும் மட்டும் தான்.
ஆனால் சரசு எதுவும் சொல்லமாட்டாள். எப்போதும் ஒரு சிறிய புன்னகை அவள்
முகத்தில் இருக்கும்.
நாங்கள் ஆரம்பத்தில் அவளுக்கு கொஞ்சம் பாடம் சொல்லித்தர முயற்சி செய்தோம்.
அவள் உட்கார்ந்து சிரத்தையுடன் கேட்பாள். கொஞ்சம் கற்றுக்கொண்டாள். ஆனால் எங்களுக்குத்
தான் சிறிது காலத்துக்கப்புறம் சிரத்தை குறைந்துவிட்டது. அதையும் அவள் அமைதியுடன்
ஏற்றுக்கொண்டாள்.
அவள் எங்கள் வீட்டில் சுமார் 6 வருடங்கள் இருந்தாள்.
ஒரு நாள் திடீரென சரசுவின் பாட்டி வந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
சரசுவின் தாய்மாமன் பர்மாவிலிருந்து வந்திருக்கிறானாம், அவன் சரசுவுக்கு உடனே கல்யாணம்
செய்தால், தான் அவளுக்கு இரண்டு சவரனில் ஒரு சங்கிலி போடுவதாக சொல்லியிருக்கிறானாம்.
நம்ப சரசுக்கு தங்க செயின்! சரசுவின் பாட்டிக்கு தலைகால் புரியவில்லை
சரசுவுக்கு கல்யாணம் நிச்சயித்திருப்பதாக அறிவித்தாள்.
என் அப்பாவிற்கு ஒரே அதிர்ச்சி, கோபம்.
“உனக்கு எதாவது
பயித்தியம் பிடிச்சிரிச்சா? சரசுக்கு
இன்னும் பதினஞ்சு வயசு கூட ஆகல்ல.
வயசுக்கு வரல்ல. கூடவே கூடாது!”
சரசுவுக்கு 15 வயசானாலும் இன்னும் பெண்மைக்குரிய அங்க அடையாளங்கள் எதுவும்
அவள் மேனியில் காணப்படவில்லை. அவள் மார்பு
சிலேட்டு மாதிரி தட்டையாக இருந்தது.
ஆனால் கிழவி பிடிவாதமாக இருந்தாள். அவள் சரசுவுக்காக ஒரு பையனை தீர்மானம்
செய்திருந்தாள். ஒரு பூக்கடைக்காரன்.
என் அப்பா எத்தனை வாதாடியும் அந்தக்கிழவியை அசைக்கமுடியவில்லை.
சரசுவுக்கும், பூ வியாபாரி செல்வராஜுக்கும் திருமணம் நடந்தது. நாங்கள்
எல்லோரும் கல்யாணத்திற்கு சென்றோம். என்
அப்பா திருமணப்பரிசாக 500 ரூபாய் கொடுத்தார்.
அது அந்தக்காலத்தில் ஒரு பெரிய தொகை. சரசுவுக்கு அதுவரை சம்பளம் எதுவும்
கொடுக்கப்படவில்லை.
என் அப்பா செல்வராஜிடம் கண்டிப்புடன் சொன்னார், “ சரசுவை நல்லாப் பாத்துக்கோ. சரசு கண்
கலங்கின்னான்னு நான் கேள்விப்பட்டா அவள
உன் கிட்ட விட்டு வைக்கமாட்டேன். “
“நல்லா பாத்துக்குவேன் ஐயா. கவலப்படாதீங்க.” என்றான் செல்வராஜ்.
சரசு கல்யாணத்திற்கப்புறம் புருஷன் வீட்டிற்கு சென்றுவிட்டாள். எங்களுக்கெல்லாம் சரசு போய்விட்டது ரொம்ப
வருத்தத்தைக் கொடுத்தது.
செல்வராஜ் நல்ல பையன். சரசுவிடம் அன்பாக நடந்துகொண்டான். அவனுடைய பூக்கடையில் சரசு உதவி செய்தாள்.
அவனிடம் விசுவாசமாக இருந்தாள். அவளுடைய
இயல்பு அப்படி. என் தந்தையிடம், அவளைத் தான் நல்லமுறையில் வைத்திருப்பதைக் காட்ட
அவளுடைய கணவன், ஓரிரு முறை சரசுவை எங்கள்
வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தான். அப்போதெல்லாம்
சரசு அவன் கடையிலிருந்து எங்களுக்கு நிறைய பூ கொண்டுவருவாள்.
அதற்கு சில காலம் கழித்து சரசுவின் பாட்டி இறந்துவிட்டாள்.
ஒரு வருஷம் கழித்து செல்வராஜ் ஒருநாள் என் அப்பாவைப் பார்க்க தனியாக வந்தான். கொஞ்சம்
தயக்கத்துடன் சொன்னான்,
“ஐயா, நான் கொஞ்ச நாள் முன்னால சரசுவ லேடிடாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். “
என் அப்பா அவனை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தார். சரசு அம்மா ஆகப்போறாளா?
செல்வராஜ் தொடர்ந்தான். “ஐயா, சரசு இன்னும் வயசுக்கு வரல்ல ஐயா. அதுக்காகத்தான் லேடிடாக்டர்கிட்ட கூட்டிட்டுப்போனேன். அவங்க சரசுவ சோதிச்சு
பார்த்தாங்க. அவங்க சொன்னாங்க, சரசுவோட
உறுப்புகள் எல்லாம் வளர்ச்சி அடையல்ல, இனிமேயும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இல்ல, அதனால அவளால குடும்ப வாழ்க்கை நடத்தமுடியாதாம்”.
என் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.
செல்வராஜ் தயக்கத்துடன் மேலும் தொடர்ந்தான்.
“எனக்கு சரசு மேல ரொம்ப பாசம் இருக்கு, ஐயா. ஆனா நானும் மனுசன் தானே? எனக்கு
குடும்ப வாழ்க்கை, குளந்தைங்க எல்லாம் வேணும்னு இருக்காதா, ஐயா?”
“சரி, அதனால என்ன செய்யறதா ஒனக்கு உத்தேசம்?”
“சரி, அதனால என்ன செய்யறதா ஒனக்கு உத்தேசம்?”
“ஐயா, வேற வழி இல்லாம, நான் இன்னொரு கல்யாணம் செய்துக்கலாம்னு தீர்மானம் செஞ்சிருக்கேன்,
ஆனா அதனால சரசுவ நான் விட்டுறமாட்டேன், ஐயா, நீங்க கவலப்படாதீங்க. அவகிட்ட அன்பா, பாசமா இருப்பேன், நான் இத உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு
வந்தேன், நான் வரேன், ஐயா”
அவன் போய்விட்டான்.
அதற்குப்பிறகு ஓரிருமுறை சரசுவை கூட்டிக்கொண்டு வந்தான்.
“உன்ன உன் புருசன் நல்லா நடத்தறானா?” என்று என் தந்தை சரசுவை விசாரிப்பார். எப்போதும் போல ஒரு சிறிய புன்னகையுடன் ஆமாம்
என்று அவள் தலையாட்டுவாள்.
அதன் பின்னர் ஒரு
வருஷத்திற்கு சரசுவைப்பற்றி எந்த தகவலும் இல்லை. ஓரிரு முறை என் தந்தை “சரசு
எப்படி இருக்கான்னு தெரியல்ல.” என்றார். அப்போதெல்லாம் டெலிஃபோன் வசதி எல்லாம்
கிடையாது.
ஒருநாள் திடீரென சரசு தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக அவள் கிராமத்திலிருந்து
ஒருவர் வந்து சொன்னார். வீட்டில்
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. துக்கம்.
என் அப்பா செல்வராஜை சந்தித்து விவரம் கேட்பதற்காக அவன் இருந்த கிராமத்திற்குப்போனார்.
செல்வராஜ் ஆழ்ந்த சோகத்தில் இருந்தான்.
“ஏன் அந்த புள்ள இப்பிடி செஞ்சிரிச்சு? ஐயா, நான் அவள நல்லா தான் பார்த்துக்கிட்டேன். பாவம்,
நல்ல புள்ள.” என்று அவன் உண்மையான
வருத்தத்தோடு புலம்பினான். அவனுடைய மனைவி
- பார்க்கும்போது அவள் கர்ப்பிணி
என்று தெரிந்தது - பலமாக ஒப்பாரி வைத்து அழுதாள். அது என் அப்பாவிற்கு கொஞ்சம் போலியாகத் தெரிந்தது.
என் அப்பா செல்வராஜின் தோளை ஆறுதலாக
தட்டிக்கொடுத்துவிட்டு கனத்த இதயத்துடன் தன் காரில் ஏறப்போனார். அப்போது ஒரு
ஸ்த்ரீ, வயதானவள், “ஐயா! ஐயா!” என்று கத்திக்கொண்டு காரினருகில் வந்தாள்.
“ஐயா! விஜயா, பாவிமக, அவதான் அந்தப்புள்ளைக்கு வெசம் வச்சு கொன்னுபோட்டா!”
“என்ன சொல்றே?”
“ஆமா, ஐயா, அவளோட அளுகாச்சி எல்லாம் வெறும் பாசாங்கு. ஐயா, அவ தான் சரசுவ கொன்னுபோட்டா. கொலகாரி!
என் தந்தை அதிர்ந்தார்.
“எப்படி சொல்றே? இப்படியெல்லாம் சும்மா எல்லாம் சொல்லக்கூடாது.”
“ ஐயா, சரசு ரொம்ப நல்ல புள்ள, ஐயா. அந்த விஜயா, அவ தான் செல்வராசு ரெண்டாவதா
கட்டியிருக்கானே, அவ , அந்த புள்ளைய கொஞ்சமாவா படுத்தினா? கிராமத்துல யார வேணுமானா
கேட்டுபாருங்க. பாவம், ராசு நல்ல பையன் தான். ஆனா அவ படுபாவி, ராச்சசி, அவன்
முன்னால நல்லவ மாதிரி நடிப்பா. சரசு
கிட்ட ரொம்ப பாசமா இருக்கறமாதிரி நடிப்பா.
ராசு போனப்புறம் அவள கொடுமப்படுத்துவா. ஆனா சரசு சாது, ஐயா, ராசுகிட்ட ஒண்ணும் சொல்லமாட்டா. விஜயா பெரிய சண்டைக்காரி.
அதனால எங்களால ஒண்ணும் செய்யமுடியல்ல. ராசு விஜயாள நம்பினான்.”
“ஏன் இதெல்லாம் யாரும் எங்கிட்ட வந்து சொல்லல்ல?”
“எங்கே சாமி, எங்க பொளப்பே கஸ்டம், சாமி. நான் சொல்லிக்கிட்டேதான் இருந்தேன்,
யாராவது ஐயாகிட்ட போய் சொல்லி சரசுவ கூட்டிட்டு போக்ச்சொல்லுங்கன்னு. யாரும் என்
பேச்சை கேக்கல்ல. வந்து சொல்லியிருப்போம்
சாமி, அதுக்குள்ள படுபாவி இப்படி செய்வான்னு எதிர்பார்க்கல்ல.”
இதற்குள்ள அங்க நாலைந்து பேர் கூடிவிட்டார்கள். எல்லாரும் கிழவி சொன்னதற்கு
தலையாட்டினார்கள்.
“சாமி, சரசு நிச்சயமா தற்கொல செஞ்சிருக்கமாட்டா. எந்த கஸ்டத்தையும் அவ தாங்கிப்பா. எப்பவும் அமைதியா, சிரிச்சிட்டு இருப்பா. பாவம்,
சாமி. எங்க எல்லாருக்கும் அவ போனது வருத்தமா இருக்கு.” கிழவி
கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.
“நீங்க எதாவது செஞ்சு அவளுக்கு தண்டன வாங்கிக்கொடுங்க சாமி.” எல்லோரும்
எப்படியோ அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு என் தந்தை வீடு திரும்பினார். என் அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்.
“ கிழவி சொன்ன மாதிரி அந்த விஜயா சரசுக்கு வெஷம் கொடுத்திருப்பாளா?” இது என்
அம்மா.
“அதெல்லாம் எதுவும் நிச்சயமா சொல்லமுடியாது. அப்படியே அவள் செஞ்சிருந்தாலும்
நிரூபிக்கறது கஷ்டம். தவிர நிருபிச்சு என்ன செய்யப்போறோம்? ... அவளுக்கு கொழந்த வேற
பொறக்கப்போறது. செல்வராஜ் பெண்டாட்டிய நம்பறான். இதுல இப்ப நாம தலையிட்டா போலீஸ்
கோர்ட்ன்னு அவனோட நிம்மதி போயிடும்.... நம்ம மேலயும் தப்பு இருக்கு. நாம அவ எப்படியிருக்கான்னு
கவனிக்காம விட்டுட்டோம்.... உம்.....விஜயாவோட மனசாட்சியே அவள் உறுத்தும். அது தான்
அவளுக்கு தண்டனை.”
“அப்போ அவ செஞ்சிருக்கான்னு நீங்க நினைக்கறீங்களா?”
“நிச்சயமா சொல்ல முடியாது.”
“ரொம்ப வருத்தமா இருக்குன்னா!”
“ஆமா, சரசு ஆசைகளையேல்லாம் துறந்த உயர்ந்த ஆத்மா. சொல்லப்போனா நம்ம எல்லரையும் விட
உயர்ந்தவ.”
“பாவம், சரசு”
பாவம், சரசு ! அது எங்கள் எல்லார் இதயத்திலும் எதிரொலித்த்து.