Friday, April 24, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 13

பிரகாசம் கோவை ஜன்ஷனில் ரயிலை விட்டிறங்கினார். நேரே வள்ளியின் குடிசைக்கு சென்றார். குடிசைக் கதவு தாழிடப்பட்டிருந்தது. பக்கத்து குடிசையின் வாயிலில் ராமக்காள் வள்ளியின் மகள் மணிமேகலையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிரகாசத்தைக் கண்டதும் எழுந்து வந்தாள்.
“வாங்கய்யா, வாங்க. செல்வனை பாக்கறதுக்கு வந்தீங்களா? பாவம். ஆஸ்பத்திரியில் கெடக்குது” என்றாள்.
பிரகாசம் திடுக்கிட்டார். “என்ன? என்ன ஆச்சு?”
“பாவம், அவனுக்கு மண்டையில அடிபட்டிருச்சுங்க. உங்களுக்குத் தெரியாதுங்களா? ரோட்டில குளி வெட்டிட்டிருந்தாங்க, சாமி. தடுக்கி அதுக்குள்ளார செல்வன் விளுந்திரிச்சு. மண்டைல கல்லு பட்டு நல்ல ஆளமா காயம். சர்க்காரு பெரிய ஆஸ்பத்திரில அட்மிட் பண்னியிருக்காங்க. வள்ளியும் முருகேசனும் நாலு நாளா அங்க தாங்க மாத்தி மாத்தி போயிட்டு போயிட்டு வராங்க.” என்று நடந்ததை விவரித்தாள் ராமக்காள்.
“உசுருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?” என்று கவலையுடன் கேட்டார் பிரகாசம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. நேத்தைக்கே நெனவு வந்திரிச்சு. பரிச்சை எளுத முடியாதுங்க. அத நெனச்சாத்தான் எல்லாருக்கும் வருத்தமா இருக்குதுங்க. என்னவோ சொல்லுவாங்களே வெண்ண தெரண்டு வரப்போ தாளி ஒடஞ்சிருச்சாம். அது மாதிரி ஆயிபோச்சே” என்று அங்கலாய்த்தாள் ராமக்காள்.
“சரி நான் போய் பார்க்கறேன்” என்று ராமக்காளிடம் விடைபெற்றுக்கொண்டு பிரகாசம் ஒரு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
ஆஸ்பத்திரியில் செல்வன் படுத்திருந்த கட்டிலருகே முருகேசனும் வள்ளியும் அமர்ந்திருந்தனர். செல்வனின் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது. கையை ஊசி வழியாக ரத்தக்குழாயில் க்ளூகோசும், மருந்தும்போய்க்கொண்டிருந்தன. வார்டுக்குள் நுழைந்த பிரகாசம் செல்வனின் அருகில் வந்தார். அவரைக் கண்டதும் செல்வனின் முகம் மலர்ந்தது. அதுவரை தன் சோகத்தை அடக்கி வைத்திருந்த வள்ளி விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். பிரகாசம் மிகுந்த அனுதாபத்துடன் வள்ளியை நோக்கினார். எப்படி இருந்தவள் எப்படி ஆகிவிட்டாள்! தேய்ந்து உருமாறி இருந்தாள்.
 “செல்வா!,” என்று அன்புடன் அழைத்தார் பிரகாசம். “செல்வா, நீ பரிட்சை எழுதப் போகிறாய்” என்று மெதுவான குரலில் ஆனால் அழுத்தமாகக் கூறினார்.
எல்லோரும் பிரமித்து அவரை நோக்கினர். செல்வன், “அது எப்படி ஸார் முடியும்?” என்றான். பாசத்துடன் அவனை தட்டிக்கொடுத்த பிரகாசம், “முடியும். செல்வா, நீ பரிட்சை எழுதலாம். நான் இவ்வளவு நேரம் டாக்டரோட பேசிட்டு தான் வரேன். இன்னும் அஞ்சு நாள் இருக்கு. அதுக்குள்ள மறுபடியும் டெம்பரேச்சர் வரல்லேன்னா அனுமதிக்கிறதா சொல்லியிருக்கார். நீ படிக்கணும்னு அவசியம் இல்ல. நீ முன்னே படிச்சதே போதும்.” என்றார்.
“முடியாது ஸார், என்னால முடியாது, ஸார், தலைய ரொம்ப வலிக்குது.’ என்றான் செல்வன் அழுதுகொண்டே.
“அதெல்லாம் சரியாயிடும். எத்தன சோதனைகளுக்குப் பிறகு இந்த கட்டத்திற்கு எட்டியிருக்கே, யோசிச்சுப்பார். மனசு தளர்ந்து போகாமல் தைர்யமா, உறுதியோட இரு. நான் பரிட்சை எழுதத் தான் போறேன் என்று உனக்கே சொல்லிக்கோ. பரிட்சை முடியற வரைக்கும் நான் உன் கூடவே இருக்கேன். நீ எழுதல்லேன்னா உன் காலனில இருக்கற ஜனங்களுக்கும் உன்னோட ஆசிரியர்களுக்கும் எத்தனை ஏமாத்தமா இருக்கும், நெனைச்சுப்பாரு. டாக்டரே எழுதலாம்னு அனுமதி கொடுத்திருக்காரு” என்றார் பிரகாசம் மீண்டும் கொஞ்சம் அழுத்தமாக.
டாக்டர் செல்வன் பரிட்சை எழுதுவதற்கு அவ்வளவு எளிதில் சம்மதம் கொடுக்கவில்லை. அவரிடம் பிரகாசம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செல்வனின் கதையெல்லாம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்திருந்தார்.
நானே அவனைத் தூக்கிச்சென்று பரிட்சை ஹாலில் உட்கார வைக்கிறேன். அவனுக்கு சிறிதும் ஸ்ட்ரெயின் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று பிரகாசம் உறுதியளித்தபிறகு தான் டாக்டரும் தான் ஒத்துழைப்பதாக கூறினார். அவ்ருக்கே இந்த கேஸ் மேல் சுவாரஸியம் வந்துவிட்டது. “நீங்க இவ்வளவு “இன்டரஸ்ட்” எடுத்துக்கறீங்க. அதனால நாம எல்லோரும் சேர்ந்து அவனை எழுத வைப்போம்.” என்றார் அவர் உற்சாகத்துடன்.
செல்வன் கலங்கினான். ஆனால் பிரகாசத்தின் வார்த்தைகளும் அன்பு ஸ்பரிசமும் அவனை புத்துயிர் கொள்ளச் செய்தன.
இந்த சமயத்தில் ராம்குமார் தயங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.  அவனைக் கண்டதும் செல்வன் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி! ராம்குமாரே தன்னை பார்க்க வந்திருக்கிறானே!
“எப்படிடா இருக்கே, செல்வா” என்றான் ராம்குமார்.
“நான் நல்ல இருக்கேன். தாங்க்ஸ்டா வந்ததுக்கு” என்றான் செல்வன். 
“நல்ல சகுனம் தான். ஆனா நீ படிச்சு ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே. மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை நல்லா கவனிச்சுக்கோ. பரிட்சை நல்லா எழுதிடலாம்.” என்றார் பிரகாசம் புன்னகையுடன்.
செல்வனும், “சரி, ஸார், எழுதறேன்” என்றான் கண்களில் புத்தொளியுடன்.
வள்ளி பிரகாசத்தை மனதிற்குள் வணங்கினாள். அவளைப் பொறுத்தவரை அவர் தான் தெய்வம்.

Wednesday, April 15, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 12

ராம்குமார் செல்வனை வெறுத்தான். செல்வன் படிப்பில் சிறந்து விளங்கினது மட்டுமல்ல, பிரகாசத்தின் அறிவுரைகளால் பண்பட்ட அவன் அவன் எல்லோரிடமும் நடந்து கொள்ளும் முறையும் மிக நன்றாக இருந்ததால் தலைமையாசிரியர் முதற்கொண்டு எல்லா ஆசிரியர்களும் அவனிடம் அலாதியான அன்பும் அக்கறையும் காட்டினார்கள். வகுப்பிற்கு எப்போதும் அவன் தான் லீடராக தேர்ந்தெடுக்கப் பட்டான். இதெல்லாம் ராம்குமாரை ஆத்திரப்பட செய்தன. பொறாமையில் தீய்ந்து போனான். பள்ளியில் முடிந்தவரை செல்வனுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பான். ஆயினும் செல்வனின் முன்னேற்றம் சற்றும் குறையவில்லை.
ஒரு முறை ராம்குமார் செல்வனின் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டான். செல்வன் தன் புத்தகத்திற்காக தேடித்தேடி அலைந்ததைக் கண்டு ராம்குமார் குரூர திருப்தி அடைந்தான். இரண்டு மூன்று நாள் கழித்து அப்புத்தகம் செல்வனின் இடத்தில் பெஞ்சுக்கு அடியில் கிடந்தது. செல்வன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை எடுத்து புரட்டினான். அதில் சில பக்கங்கள் தாறுமாறாக கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு மனமொடிந்து போனான். பிறகு காலி காகிதங்களில் அந்த பாடங்களை கையால் எழுதி அந்தந்த இடங்களில் ஒட்டி வைத்துக் கொண்டான்.
 மற்றொரு முறை செல்வனின் பின் உட்கார்ந்திருந்த ராம்குமார் செல்வன் கணக்கு போட்டுக்கொண்டிருந்த போது அதில் இங்கை தெளித்துவிட்டான். ஆனால் அந்த முறை அதை கவனித்துவிட்ட ஒரு பையன் ஆசிரியரிடம் சொல்லிவிட்டான். ராம்குமார் தண்டிக்கப் பட்டான்.
இப்படி கணக்கற்ற முறைகளில் ராம்குமார் செல்வனை சித்திரவதை செய்தான். பரிட்சைக்கு முன்பு செல்வனின் எதாவது நோட்டு புஸ்தகத்தை ஒளித்து வைத்து விடுவான். அவன் பாக்ஸிலிருந்து ரப்பரை தூக்கி எறிந்துவிடுவான்.  இப்படி எல்லாம் அவன் தொந்தரவு செய்தாலும் செல்வன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். ஆனால் அது ராம்குமாருக்கு மேலும் எரிச்சலை ஊட்டும். ராம்குமாரின் அம்மா காவேரி வேறு தூபம் போட்டு அவனுடைய வெறுப்பை அதிகரிக்கச் செய்தாள். 
பள்ளியில் செல்வன் மாநிலத்தில் நல்ல ரேங்க் எடுப்பான் என்கிற நம்பிக்கை இருந்தது. முன்பெல்லாம் ராம்குமார் நன்றாகவே படிப்பான். ஆனால் இப்போது செல்வனின் மேல் ஏற்பட்டிருந்த பொறாமையும் ஆத்திரமும் அவன் மனதை ஆக்கிரமித்திருந்ததால் அவனுக்கு படிப்பில் சிரத்தை குறைந்தது.
செல்வனைப் பற்றி அடிக்கடி தன் தாயாரிடம் புகார் கூறுவான். ஏற்கனவே ஆத்திரமடைந்திருந்த காவேரி மேலும் ஆத்திரமடைவாள்.
வள்ளியையும் அவள் குடும்பத்தைப் பற்றியும் எல்லோரிடமும் அவதூறாக பேசுவாள். வள்ளி திருடு, செல்வன் காப்பியடித்து மார்க் வாங்குகிறான், முருகேசன் பாவம், பயந்தவன் அவர்களால் கஷ்டப்படுகிறான், இதெல்லாம் தான் அவள் எல்லோருக்கும் இலவசமாக வழங்கும் தகவல்கள்.
ஆனால் வள்ளியைப் பற்றியும் செல்வனைப் பற்றியும் அறிந்தவர்கள் யாரும் காவேரியின் வம்பு பேச்சை நம்பவில்லை.
 அன்று குழி வெட்டிக்கொண்டிருந்த இடத்தில் செல்வனைக் கண்டதும், ராம்குமாரின் நீண்டகாலமாக நீறுபூத்த நெருப்பாக இருந்த பொறாமையும் வெறுப்பும் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்தன. கைகளில் அசுரபலம் வந்துவிட்டது. செல்வனை ஒரு தள்ளு தள்ளினான். ஆனால் செல்வனின் மண்டையிலிருந்து பீரிட்ட இரத்த வெள்ளத்தைக் கண்டதும் ராம்குமாருக்கு உடல் நடுங்கியது. அவன் அதை எதிர் பார்க்கவில்லை. ஏதோ செய்யக்கூடாததை செய்துவிட்டோமென்ற உணர்வு அவனை தாக்கியது. மயக்கமாக வந்தது. தான் தள்ளியதை யாராவது பார்த்திருந்தால்? பயத்தில் உடல் நடுங்கியது. அங்கிருந்து விரைந்து வீட்டை நோக்கி சென்றான்.
வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் அவனுக்கு கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
அவனுடைய அம்மா, “என்னடா? என்னவோ மாதிரி இருக்கே? காய்ச்சல் எதாவது வரதா, என்ன? கடவுளே! பரிட்சை வேற வருதே!” என்று அங்கலாய்த்தவாறு அவனுடைய நெற்றியை தொட்டு பார்த்தாள்.
“எனக்கு ஒண்ணுமில்லைம்மா, சும்மா தொண்தொணக்காதே.” என்று எரிச்சலுடன் அவன் பதில் கூறவே காவேரி சமையலறைக்கு நகர்ந்தாள்.
தான் செய்த காரியத்தை அம்மாவே ஏற்க மாட்டாள் என்று ராம்குமாரின் உள்ளுணர்வு கூறியது. அவன் மனதிற்குள் ஒரே பயமாக இருந்தது. செல்வன் செத்துப் போய்விடுவானோ?
மறுநாள் முழுவதும் ராம்குமாருக்கு ஒரே கவலையாக இருந்தது. படிப்பே ஓடவில்லை. அன்று மாலை அவனுடைய தாய் பிள்ளையார் கோவிலுக்குக் கிள்ம்பினாள்.
“நானும் வரேம்மா” என்ற ராம்குமாரை அவள் வியப்புடன் நோக்கினாள் காவேரி. சாதாரணமாக கூப்பிட்டால் கூட கோவிலுக்கு வர மாட்டானே!
 “பரிட்சைக்காக கவலப் படறான் போலிருக்கு. எஸ்ஸெல்சி பரிட்சையாச்சே! இன்னும் பத்து நாள் கூட இல்லை. கவலையாத்தானே இருக்கும்?” என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாள். பிள்ளையாருக்கு ராம்குமார் நிறைய தோப்புக்கரணம் போட்டான். தலையில் குட்டிக்கொண்டான். “சாமி, செல்வனுக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கணும். நான் செஞ்சதெல்லாம் தப்பு. நான் இனிமே அவன வெறுக்கமாட்டேன்.” என்று கண் கலங்க மனமாற வேண்டிக்கொண்டான்.

Tuesday, April 7, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 11

செல்வன் பிரகாசத்திற்கு கடிதம் எழுத உட்கார்ந்தான். என்ன எழுதுவது?
அன்புள்ள அண்ணனுக்கு,
வணக்கங்கள். எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. நான் நன்கு படித்து வருகிறேன். அம்மாவுக்கு ஆபரேஷன் ஆன பிறகு உடல்நிலை கொஞ்சம் தேறி பழைய படி வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டாள். ஆனால் பலவீனமாகத் தான் இருக்கிறாள். தந்தை வேலை செய்துகொண்டிருந்த வீட்டை விட வேண்டி வந்து விட்டது. போன மாதம் என் அப்பா கடும் காய்ச்சலில் படுத்துவிட்டார்.
“வள்ளி, எனக்கு சும்மா வைத்தியம் செஞ்சு காசை செலவளிக்காதே. நான் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம்? நான் போனா தான் நல்லது, இளுத்து வெளியே எறிஞ்சிடு” என்று அவர் புலம்பியது என் மனதை அறுத்தது. மருந்து, ஆட்டோ எல்லா செலவும் மிக அதிகமாகிவிட்டது. மணியும் அடிக்கடி சீக்காய் படுத்துவிடுகிறாள். அவளுக்கு பால் வாங்குவதை நிறுத்தியாகி விட்டது. நாங்கள் சாப்பிடும் உணவில் சத்து கிடையாது. அரிசி சோறு அதிகம் சாப்பிடுகிறோம். அதுவே நோய்கள் அடிக்கடி வர காரணம் என்று எனக்கு தெரிகிறது.
நான் மாலையில் ஒரு வீட்டில் வேலை செய்கிறேன். இப்போது வீடு இருக்கும் நிலைமையை பார்க்கும்போது படிப்பை நிறுத்திவிட்டு முழு நேரமும் ஏதாவது வேலை செய்யலாமா என்று தோன்றுகிறது. ஆனால் என் தாயும் தந்தையும் மற்றும் இங்குள்ளவர்கலும் நான் படிப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார்கள். ராமக்காள் கூட தம்பி, நல்லா படி என்கிறாள். அவள் எங்களுக்கு செய்யும் உதவி கொஞ்சம் நஞ்சம் இல்லை.
உங்களை ஒரு முறை காணத் துடிக்கிறேன். என் கஷ்டங்களை உங்களிடம் சொல்லி மனமாற அழவேண்டும் என்று தோன்றுகிறது. வருவீர்களா?
இப்படிக்கு,
அன்பன்,
செல்வன்.
இப்படி ஒரு கடிதம் அவன் கற்பனையில் தோன்றியது. மனதிலிருப்பதை கொட்டினால் இப்படித்தான் எழுத வேண்டும். ஆனால் பிரகாசம் முன்பு ஒரு முறை இடுக்கண் வருங்கால் ங்குக என்ற வரியை விளக்கும்போது கஷ்டம், கஷ்டம் என்று எப்பொழுது பார்த்தாலும் மூக்கால் அழுபவர்களைக் கண்டால் எனக்கு
 கொஞ்சமும் பிடிக்காது, யார் கஷ்டங்களை புன்னகையுடன் சமாளிக்கிறார்களோ அவர்களிடம் எனக்கு மதிப்பு உண்டாகிறது என்று கூறியது நினைவிற்கு வந்தது.
ஆகையால் கற்பனைக் கடிதத்திற்கு பதிலாக சாதாரணமாக ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டான்.
பிரகாசத்திடமிருந்து செல்வனுக்கு பதில் வந்தது.
செல்வா, உன் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். பரிட்சையில் தேறி பள்ளியில் முதலாவதாக, ஏன், மாநிலத்திலேயே முதலாவதாக வருவாய் என எதிர்பார்க்கிறேன். உன் காலனியில் வாழும் மற்ற பிள்ளைகளுக்கு நீ ஒரு வழிகாட்டி, எடுத்துக்காட்டு என்பதை மறந்து விடாதே. நன்றாய் படி என்று உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.
உனக்கும் உன் பெற்றோர்களுக்கும் ஒரு நற்செய்தி. எனக்கு வரும் வெள்ளியன்று கோயிலில் எளிமையாக திருமணம் நடக்க உள்ளது. உனக்கு ஒரு அண்ணி வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைவாய் என்றுநினைக்கிறேன். உன் தாய் நலமாக இருப்பது கேட்டு மகிழ்ச்சி. உன் அப்பா நலமாக இருக்கிறாரா? அவரால் நடக்க முடிகிறதா? செல்வி மணிமேகலைக்கு என் அன்பு.
இப்படிக்கு,
உன் அன்பு அண்ணன் பிரகாசம்.

பிரகாசத்திற்கு கல்யாணமா? செல்வனுக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. வரப்போகும் அண்ணி மீது கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அண்ணி வந்தவுடன் அண்ணனுக்கு தன் மேல் அன்பு மாறாமல் இருக்குமா? “சேச்சே! அப்படி நெனைக்கறதே தப்பு. தன்னை தம்பியாகக் கருதி எத்தனை அன்புடன் லெட்டெர் எழுதி இருக்காரு!” செல்வன் தன்னையே நொந்து கொண்டான்.
வள்ளி ஆனந்தப்பட்டாள். ஆயிரத்தில் ஒருத்தர். நல்லா குடியும் குடித்தனமா இருக்கட்டும் என்று மனதார வாழ்த்தினாள்.
நாட்கள் ஓடின. பரிட்சைக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. மாணவர்கள் தீவிரமாக படிப்பதில் மூழ்கினர். செல்வனும் ரமணியும் சேர்ந்து படித்தார்கள். செல்வன் குடிசையில் மின்விளக்கு இல்லாததால் ரமணி வீட்டில் சென்று படிப்பான். செல்வன் இருந்ததால் ரமணியும் கொஞ்சம் சிரத்தையுடன் படித்தான்.
பரிட்சைக்கு பத்து நாட்கள் முன்பு ஒரு நாள் மாலை செல்வன் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ரமணியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் மேம்பாலம் போடும் பணி நடந்து கொண்டிருந்தது. ஆழமாக குழி வெட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மாதிரி வேலைகளை சற்று நின்று வேடிக்கை பார்ப்பது செல்வனுக்குப் பிடிக்கும். அன்றும் பலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
 செல்வனும் பெரிதாக குழி வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று எட்டி பார்த்தான். அப்போது தன்னருகே ராம்குமார் நின்றுகொண்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை. திடீரென்று யாரோ தன்னை பின்னாலிருந்து தள்ளுவதை உணர்ந்தான். “ஐயோ! அம்மா!” என்று அலறியபடி குழிக்குள் விழுந்தான். குழி மிக ஆழமில்லை. ஆனால் குழியில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு பாறாங்கல் அவன் தலையை பதம் பார்த்துவிட்டது. இரத்தம் பீரிட்டது. அம்மா! என்று கத்திய செல்வன் மறுகணம் நினைவை இழந்தான். கசமுச என்று ஒரே இரைச்சல். எல்லோரும் அதிர்ச்சியுடன் குழிக்குள் எட்டி பார்க்க முயற்சி செய்தார்கள். அந்த சந்தடியில் ராம்குமார் அங்கிருந்து நழுவிவிட்டான். 

Wednesday, April 1, 2015

வீகன்

கமலம்: “வேதமா, வா. எங்க இப்படி?”
வேதம் : “கடை வீதிக்கு வந்தேனா, அப்படியே உன்னப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். என்ன ஆச்சு, உன் பொண்ண பொண் பார்க்க வரப் போறான் ஒரு பையன்னு சொன்னியே?”
“அது இல்லைன்னு ஆயிடுத்து, வேதம், அந்த பையன் என்னவோ வீகனாம். அது எல்லாம் நமக்கு சரிப்படாதுன்னு விட்டுட்டோம். வேல என்னவோ நல்ல வேலை தான். ஆனா என்ன பண்றது, அது என்ன கண்றாவியோ தெரியாது. எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு.”
“அது சரி, வீகன்னா என்னன்னு தெரியுமா?”
“அதெல்லாம் தெரியாது. எதுக்கு வீண் வம்பு? நாங்களோ ரொம்ப ஆச்சாரம். அது என்ன கண்றாவியோ, அதெல்லாம் நமக்கு சரிப்படுமா, சொல்லு.”
“அது சரி. நீ வெஜிடேரியன் தானே?”
“இதென்ன வேடிக்கை! ஏதோ தெரியாத மாதிரி கேக்கறியே. நான் முட்டையை தொட்டது கூட கிடையாது.”
“அது சரி, நீ பால் சாப்பிடுவியா?”
“சாப்பிடுவேன். ராத்திரி வழக்கமா அரை டம்ளர் பால் சாப்பிடுவேன்.”
“தயிர்?”
“ஊம், அதெல்லாம் தானே சத்து நமக்கு? மோருஞ்சாதம் சாப்பிடல்லேன்னா சாப்டமாதிரியே இருக்காது.”
“நெய்?”
“அது தானே அன்ன சுத்தி? ரெண்டு முட்டை நெய் சாத்துல விட்டுக்கணும். உனக்கு தெரியாத மாதிரி கேள்வி கேக்கறியே?”
 “எதுக்கு கேட்டேன்னா, இந்த வீகன் இருக்காளே நீ இப்ப சொன்னியே, அவா எல்லாம் பாலு, தயிரு, நெய்யெல்லாம் சாப்பிட மாட்டா. தெரியுமா?”
“அப்படியா? ஏன்?”
“அவா சொல்றா, அதெல்லாம் மாட்டிலேர்ந்து தானே வருது, அதனால அதெல்லாம் “அனிமல் ப்ராடக்ட்”டாம்”
“இதென்ன புதுசா இருக்கு? பின்ன அவா என்னதான் சாப்பிடுவா?”
“காய்கறி, பழம் அப்புறம் பருப்பு, சாதம் இதெல்லாம் தான் சாப்பிடுவா.. அதனால இந்த வீகன்ங்கறவா  எல்லாரும் உங்கள விட ஆச்சாரம்னு சொல்லலாம்.”
“ஐய்யயோ, இதெல்லாம் தெரியாம போச்சே. நல்ல பையனை வேண்டாம்னு சொல்லிட்டோமே! இப்போ என்ன பண்றது?”
“மறுபடியும் அப்ரோச் பண்ணிப்பாரு. அதிர்ஷ்டம் இருந்தா கெடைப்பான்.”