Friday, October 9, 2020

உடல் பருமன்

 

நான் சிறியவளாக இருந்தபோது எனக்கு தமிழ் சினிமா ரொம்ப பிடிக்கும். அப்போ ஒரு காமடி நடிகை, பெயர் அங்கமுத்துன்னு இருந்தாங்க. அவங்க ரொம்ப பருமனா இருப்பாங்க. சோகமான சீன்களுக்கு நடுவுல  கொஞ்சம் காமடி பண்ண, அவங்க தன் பருமனான தேகத்த இப்படியும் அப்படியும் ஆட்டி பேசி நடிக்கும் போது ரொம்ப வேடிக்கையா இருக்கும். நாங்க அவங்க நடிப்பையும் பருமனான உடம்பையும் பார்த்து சிரி சிரின்னு சிரிப்போம்

எனக்கு அவங்க ஒரு இஷ்டமான நடிகை. ஆனா இன்னிக்கு அந்த மாதிரி ஒரு நடிகையப்பார்த்து யாரும் சிரிக்க மாட்டாங்க. காரணம் எங்கே பார்த்தாலும் அங்கமுத்துகள் தான், சின்னவங்க, நடுத்தர வயசுக்காரங்க, பாட்டிகள் எல்லாரும்.

நான் மிகைப்படுத்தி சொல்றதா உங்களுக்குத் தோணுதா? ஒரு வேளை நிலைமை அவ்வளவு மோசமாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனா பொறுத்திருந்து பாருங்க. நான் சொல்றது ரொம்ப கரக்ட்டுன்னு சொல்வீங்க

இப்பல்லாம் டிவில வர, சீரியலை எல்லாம் பாருங்க. கதாநாயகிகளே நல்ல சதைப்பற்றோட காட்சி தராங்ககொடியிடையுள்ள கதாநாயகிகளைக் காண்பது குதிரைக்கொம்பாகிவிட்டது! அம்மா வேடத்தில் வருபவர்களோ சொல்லவே வேண்டாம். நல்ல குண்டாக இருக்க வேண்டும் என்பது  நியதியாகிவிட்டதுஹீரோக்கள் மாத்திரம் என்ன குறைந்தவர்களா? அவர்களும் இந்த பந்தயத்தில் பின் தங்குவதில்லை. உயரமா, உயரத்துக்கு தகுந்த பருமனா? ஊஹூம்!

போலீஸ்காரர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களால் தங்கள் தொந்தியையும் தொப்பையையும் தூக்கிக்கிட்டு திருடனை துரத்தி பிடிக்க முடியுமா, சொல்லுங்க?

               

காரணங்கள்

 

உடல் பருமன் ஒரு நோய் என்றே சொல்லலாம். அது சின்ன வயசு, வயசானவங்கன்னு பார்க்காது. ஒரு வேளை பெண்களை அது அதிகமா பாதிக்குதோன்னு தோணுது. ஆண்களும் ரொம்ப பின்னால தங்கிடல்ல. உடம்புல வெயிட் போடறதுல. ரெடியா கிடைக்கற ஃபாஸ்ட் ஃபூட் என சொல்லப்படும் பலகார சிற்றுண்டி வகைகள், ஸ்வீட்டுகள்,இவைகளே முக்கிய காரணம் வெயிட் ஏறுவதற்கு. அதுக்கு மேல உடலால் உழைப்புங்கறதே போயிடிச்சு  ,தேகப்பயிற்சி செய்யவேண்டும் என்ற நெனப்பே பலருக்கும் இல்லவே இல்லை.

 

ஒண்ணு, டிவி முன்னால உக்கார்ந்திருப்பாங்க, இல்லேன்னா செல்ஃபோன்ல எதாவது செய்திட்டிருப்பாங்க. இப்பல்லாம் பெண்களும் வேலைக்கு போறதுனால அவங்களுக்கு உணவு சமைக்க கிடைக்கும் நேரம் குறைவு தான். வெளிலேயிருந்து சாப்பாடு வரவழைக்கறது சகஜமாப் போச்சு. அந்த உணவுல சேச்சுரேடட் ஆயில், அதாவது கொழுப்பு சத்து நிரம்பியிருக்கற எண்ணையை உபயோகப்படுத்துவாங்க.அது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டும் இல்ல, சதை போடவும் அது ஒரு காரணம்.

 

இன்னொரு விஷயம், இப்பல்லாம் தடுக்கி விழுந்தா பலகாரக் கடைகள். நல்ல ருசியாத்தான் செய்து விக்கறாங்க. இல்லேன்னு சொல்லல்ல. வித விதமான ஸ்வீட்டுகள் நெய் சொட்ட சொட்ட. உப்பும் காரமும் நல்லா சேர்ந்த சுவையான முறுக்குகள், மிக்ஸர்கள். பல மாநில, பல நாட்டு பக்குவங்கள், அயிட்டங்கள். சாப்பாடு தான் இப்போ பெரிய பிஸினஸ். ஆபீஸ்ல வேலை செஞ்சு களைச்சுப்போன பெண்மணிகள் தான் இவர்களுக்கு பெரிய வாடிக்கயாளர்கள். ஆபீஸ்லேயிருந்து திரும்பும்  அவங்க நேரா பலகாரக் கடைக்கு தான் போவாங்க. மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு தயாரா எதாவது வச்சிருக்கணும். இல்லாவிட்டால ரகளை தான்

 

டீனேஜர்னு சொல்லப் படும் இளம்தலைமுறையினர் விஷயமோ கேட்கவே வேண்டாம். வாரக்கடைசியில் சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்டுக்கோ, ஸ்னேக் பாருக்கோ போய் அரட்டை அடித்துக்கொண்டு ஐஸ்க்ரீம், ஸ்னேக்ஸ் சாப்பிடுவாங்க, தங்கள் எடை கூடுவதைப்பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல். அது தான் ஃபேஷன். “வாழ்க்கையைஎஞ்சாய்பண்ணனும். அப்புறமா ஜிம்முக்கு போய் உடல்பயிற்சி பண்ணிஃபிட்டா ஆயிக்கலாம்.”

சைக்கிள்ள போறது நல்ல எக்ஸர்சைஸ். ஆனா இப்போ என்னடான்னா சின்ன பசங்க கூட பைக் ஓட்டிட்டு போறாங்க

ஸ்கூல்லேயிருந்து பிள்ளைங்கள் வீட்டுக்கு வந்ததும் ட்யூஷனுக்கு போகணும், அப்புறம் ஹோம் ஒர்க். கொஞ்சநஞ்ச நேரம் ஃப்ரீயா நேரம் கிடைச்சா மொபைல்ல கேம் விளையாடறாங்க, இல்லே, டிவி பாக்கறாங்க. இதெல்லாம் நொறுக்குத்தீன பேக்கட்டை பிரிச்சு கொறிச்சுக்கிட்டேதான். இப்போ இருக்கற பசங்க குண்டா இருக்கறது ஏன்னு தெரியறதா? நான் சமீபத்துல ஒரு பயங்கரமான செய்தி படிச்சேன், ஓவர் வெயிட்டா இருக்கற குழந்தைகளுக்கு பிற்காலத்துல கல்லீரல் பாதிக்கப்படுதாம்




தவறான கருத்துக்கள்

 

கர்ப்பிணிப்பெண்கள் நிறைய சாப்பிடணும்னு எல்லாரும்  நெனைக்கறாங்க. “ரெண்டு ஜீவன்களுக்கு சேர்த்து சாப்பிடவேண்டாமா?” குழந்தை பிறந்தப்புறம் அதே கதை தான். நிறைய நெய் தயிர் எல்லாம் சேத்துக்கணும். “உடம்புலேயிருந்து ரத்தம் எல்லாம் போயிரிச்சு, பாப்பாவுக்கு வேற பால் குடுக்கணும். நல்லா சாப்பிடு. நிறைய ரெஸ்ட் எடுத்துக்கோ.” அப்புறம் என்ன? ஜாலி தான், “சாப்பிட்டுவிட்டு ரெஸ்டா இருக்கலாம்.”  முக்கால்வாசிப் பெண்கள் பருமனாவது அப்போது தான். இன்னொரு காரணம் மிச்சம் மீதி உணவைவேஸ்டாபோகுதேன்னு பெண்கள் சாப்பிடுவது. வயிறுஒரு  குப்பைமேடு மாதிரி.

 

விளைவுகள்

 

அதிக உடல் எடையினால் வரக்கூடிய வியாதிகள்: பிரஷர், டையாபட்டீஸ், முட்டிவலி, இதயநோய்கள் இன்னும் பல.

 

இதற்கு என்ன செய்வது?

 

உடல் பயிற்சி, யோகா, உபவாசம், நல்ல சத்துள்ள அதே சமயம் உடம்பு எடையை ஜாஸ்தியாக்காம இருக்கற உணவு. இதெல்லாம் செஞ்சோம்னா நல்ல ஆரோக்கியமா, நோய்நொடி இல்லாம வாழ்க்கையை நடத்தலாங்க

 

இந்த கொரோனா வைரஸ் உலகத்தையே தன் கோரப்பிடியில் வைத்திருக்கும் இந்த சமயத்துல நாம நம்ம ஆரோக்கியத்த பார்த்துக்கவேண்டாமா? ஏற்கனவே உடம்புல  சுகர், பிரஷர் மாதிரி கோளாறுகள் இருந்தா இந்த கோவிடுக்கு ரொம்ப குஷி. அதனால உடம்பை ஃபிட்டா வச்சுக்கற வழியப்பாருங்க

 

இப்போ ஒரு புது வழி பிரபலமாயிட்டிருக்கு உடம்பு வெயிட்டைக் குறைக்க. அதைத்தான் ஆங்கிலத்துலஇன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்அப்படீன்னு சொல்றாங்க. அதாவது இடையில் இடையில் பட்டினி கிடப்பது. இது நம்ம நாட்டுல ஒண்ணும் புதுசு இல்லீங்க. ஆனா நாம தான் அதை மறந்துட்டோம். அதென்னஇன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்ன்னு கேக்கறீங்களா? அது ஒண்ணும் பெரிய விஷயமோ கஷ்டமான விஷயமோ இல்லீங்க. எங்க குடும்பத்துல எல்லாரும் அதை கடைபிடிச்சு வெயிட்டை நல்லா குறைச்சிட்டோம்

 

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க் நீங்க ஒரு 12 மணி நேரம், முடிஞ்சா 14 மணி நேரம் பட்டினி அதாவது உபவாசம் இருக்கணும். இதைத்தான்இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்’  அப்படீன்னு சொல்றாங்க. ராத்திரி சீக்கிரமா சாப்பாட்டை முடிச்சுக்கணும். 7 மணிக்கு இரவு சாப்பாடுன்னா, காலை காபியோ, டீயொ 7 மணிக்கு சாப்பிடணும். அப்போ நாம 12 மணி நேரம் உணவு இல்லாம இருப்போம் இல்லையா? அது தாங்க இதோட ரகசியம். இது ரொம்ப கஷ்டம் இல்ல, ஏன்னா இரவு முழுக்க 8 மணி நேரம் தூக்கத்துல போயிடும், இல்லீங்களா? முடிஞ்சா 14 மணி நேரம் ஃபாஸ்டிங்க் பண்ணலாம். அப்போ ரிசல்ட்  இன்னும் பிரமாதமா இருக்கும். கூடவே கண்ட கண்ட உணவை கட்டுப்பாடில்லாமல் சாப்பிடக்கூடாது.

 

இதையெல்லாம் எப்போ நடைமுறையாக்கறது? இப்போ! இந்த க்ஷணத்துலேயிருந்து ஆரம்பியுங்க. ஆரோக்கியமா வாழுங்க.