Friday, November 24, 2017

நம்பிக்கைகள்


எல்லாரும் மின்சார க்ரமடோரியத்திலிருந்து திரும்பி வந்திருந்தார்கள், சரஸ்வதி காலமாகிவிட்டாள். அவர்கள் எல்லோரும் அவளுடைய நெருங்கிய பந்துக்கள். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, அப்புறம் சரஸ்வதியின் மைத்துனர் மகன். எல்லோரும் ஹாலில் வந்து அமர்ந்தனர். வள்ளி எல்லோருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வள்ளி 20 வயதான இளம்பெண், சரஸ்வதியின் தூரத்து உறவு. அனாதை. சரஸ்வதியுடன் இருந்து பணிவிடை செய்து வந்தாள்.

காப்பி வாங்கிக்கொண்டவர்கள் அவளைப் பார்த்து அரைமனதாக புன்னகை செய்தார்கள். வள்ளி யாரையும் ஏறிட்டு பார்க்கவில்லை. அழுததால் அவள் கண்கள் கலங்கியிருந்தன. எல்லாருக்கும் காப்பி கொடுத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். 

ஒரு வித நிசப்தம் நிலவியது. பிறகு ஒவ்வொருவராக எழுந்து அவரவர்கள் அறைக்கு சென்றனர். அவர்கள் எல்லோருமே சரஸ்வதி காலமான செய்தி கேட்டு வந்திருந்தார்கள்.

“அக்கா போயிட்டா. திடீர்னு இப்படி போவான்னு யார் நெனச்சா? நான் போன தடவை பார்த்தப்போ நல்லாத் தான் இருந்தா. அது போன வருஷம். அவளுக்கு 65 வயசு தான். இப்படி சீக்கிரம் போயிடுவான்னு நெனைக்கவே இல்ல. அவள இன்னும் ஒரு தடவையாவது வந்து பார்த்திருக்கணும். இப்ப நெனச்சு என்ன பிரயோசனம்?” இது ரேணுகா, சரஸ்வதியின் அடுத்த தங்கை.

அவள் கணவன், “ஆமா, அது சரி, உன் அக்கா நமக்கு எதாவது கணிசமா விட்டுட்டு போயிருப்பா இல்லையா? நம்ப நிஷாவுக்கு கல்யாணம் பண்ணனுமே. அப்பறம் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் வாங்கணும். நான் அதைத்தான் நம்பியிருக்கேன்.”

“என்னங்க, அதுக்குள்ள அதெல்லாம் பத்தி பேச வேண்டாம்.”

“நீ அதப்பத்தி நெனக்கவே இல்ல மாதிரி பேசறே? ஒன் மனசிலேயும் அந்த நெனப்பு இருக்குன்னு எனக்கு தெரியாதா, என்ன?”

“ஆமா, இருக்கு. ஒத்துக்கறேன். ஆனா இப்ப அதப்பத்தி பேசறது என்னவோ மாதிரி இருக்கு. என்ன இருந்தாலும் அவ என் அக்கா, இல்லையா?”

“எல்லார் மனசிலேயும், உன் செல்ல தங்கச்சி வீணா, தம்பி பாபு எல்லார் மனசிலேயும், அதே எண்ணம் தான் இருக்கு. அதனால தானே நாம எல்லரும் உடனே ஓடி வந்திருக்கோம். அப்புறம் அந்த பையன், அதான் உங்க அக்காவோட மருமகப்பிள்ள, அவன் பேர் என்ன?”

“பிரகாஷ சொல்றீங்களா?”

“ஆமா. பிரகாஷ், நல்ல பிள்ளையா தான் தெரியறான். பார்க்கவும் நல்லா இருக்கான். என்ன, ரேணுகா, நம்ம நிஷாவுக்கு அவன பார்த்தா என்ன?”

“எனக்கும் அந்த எண்ணம் தோணிச்சு தான். படிச்சிருக்கான், பார்க்க அம்சமா இருக்கான். நல்ல குடும்பம்.”

“ஆனா அவனுக்கு நெலையா வேலை இல்ல. ஏதோ பிசினெஸ் பண்றானாம். அதையெல்லாம் நம்ப முடியாது. ஆனா அவனுக்கும் சொத்துல பங்கு இருக்கும். அதனால வேல இல்லன்னு நாம யோசிக்க வேணாம். ஆனா பணம் மட்டும் இல்லேன்னா நம்ம நிஷாவுக்கு அவனப்பத்தி யோசிக்கக்கூட மாட்டேன், அவன் எவ்வளவு படிச்சிருந்தாலும், எத்தன அழகா இருந்தாலும். ஒரு வி ஐ பிக்கு..... அதாவது வேலை இல்லா பேர்வழிக்கு என் செல்ல பொண்ண குடுக்கமாட்டேன். சரி, சரி. அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கெல்லாம் அவசரம் எதுவும் இல்ல. அதப்பத்தி அப்புறம் யோசிச்சுக்கலாம். ஆமா. இந்த வேலுச்சாமி, உன் அக்காவோட வக்கீல், நாளைக்கு கார்த்தால நம்ம எல்லாரையும் கூப்டிருக்காரே, எதோ மீட்டிங்குன்னு. என்ன விஷயம்னு தெரியல்ல. உங்க அக்கா சொத்தப்பத்தி பேசுவாரோ?”

“அதப்பத்தி பேச என்ன இருக்கு? அக்காவோட சொத்த நம்ம எல்லாருக்கும் சமமா பிரிச்சு தரவேண்டியது தானே? அக்கா அப்படித்தான் எப்பவும் மறைமுகமா சொல்லிட்டிருந்தா. மீட்டிங்க் கீட்டிங்கெல்லாம் எதுக்குன்னு தெரியல்ல.”

“உன் அக்கா சரியான ஆளு. மறைமுகமா ‘ஹின்ட்’ பண்ணுவா. ஒண்ணும் “டெஃபனெட்டா சொல்ல மாட்டா. நம்மையெல்லாம் அதிகாரம் பண்ணுவா.”
“நமக்கு எத்தன உபகாரம் பண்ணியிருக்கா! சும்மா செத்துப்போனவளப்பத்தி இப்படி மோசமா பேசாதீங்க. ஒண்ணு யோசிச்சீங்களா?”

“என்ன?”

“சொத்து எல்லாத்தையும் அக்கா அந்த வள்ளிக்கு எழுதிவச்சிருந்தான்னா? ஐயோ! அப்ப நாம என்ன பண்ணுவோம்?”

“சேச்சே! அப்படி பண்ணமாட்டா. நீங்க எல்லாரும் அவங்களோட ரத்த பந்தம். உங்களுக்கு தான் உரிமை. அந்த பொண்ணு. பாவம் தான், அனாதை. எதாவது அவளுக்கு செஞ்சிருப்பா உன் அக்கா. மத்தபடி சொத்து முழுக்க அவளுக்கு கொடுத்திருப்பான்னு நான் நெனைக்கல்ல.”

“ஆமா. நானும் அப்படித்தான் நம்பறேன். இல்லேன்ன நம்ம கதி அம்போ தான்.”

அடுத்த அறையில் இன்னொரு தங்கை வீணாவும் அவள் கணவன் நரசிம்மனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“என்னோட ஒரே நம்பிக்கை உன் அக்கா சொத்துல ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கும்ங்கறதுதான். உன்னோட அக்காவோட சொத்து மதிப்பு  சுமார் பத்து கோடி இருக்கும். அதுதான் என்னோட எஸ்டிமேட் படி நம்ம பாகம் அட்லீஸ்ட் இரண்டரை கோடி இருக்கும்” என்றான் நரசிம்மன்.

“அதுக்குள்ள  சொத்தப்பத்தி பேசறது நல்லா இல்ல.”

“ஒனக்கே தெரியும், நான் வெளிப்படையா பேசறவன்னு. ஒளிச்சு பேசற ஆள் இல்ல நான். நாம எல்லாரும் அதுக்காகத்தானே ஓடி வந்திருக்கோம். ஆனா ஒரு நல்ல விஷயம் என்னன்னா உன் அக்காவுக்கு பாரபட்சம் கிடையாது. நீங்க எல்லாரும் சமம் அவளுக்கு. எனக்கு இப்ப  டிஃபிகல்ட் டயம். பிசினஸ் ரொம்ப மோசமா போயிட்டிருக்கு. உன் அக்கா பணத்த தான் நம்பிட்டிருக்கேன்.”

“அது என் பணம். அதுல கை வைக்கலாம்னு கனவு காணாதீங்க. நம்பளோட ஒரே வாரிசு, நம்ப செல்லப்பிள்ள வருண் அவன் வேற பணத்துக்கு எங்கிட்ட அடிபோட்டுட்டு இருக்கான்.”

“பாத்தியா? நீயும் அதே நெனப்புல தானே இருக்கே. அதுக்குள்ள என் பணம்னு புத்தி வந்திருச்சே!”

“அதெல்லாம் சரி, அக்கா பணத்த எல்லாம் அந்த வள்ளிக்கு கொடுத்திட்டா? அத நெனச்சு பார்த்தீங்களா? அவ கொஞ்சம் வருஷமா அக்காவோடவே இருக்கா. அவள கவனுச்சுக்கிட்டு, பணிவிட செஞ்சுட்டு. அக்காவோட மூடுக்கெல்லாம் ஈடு கொடுத்திட்டு வரா. நாம என்ன செஞ்சோம்? வந்து கூட பார்க்கல்ல. அக்காவுக்கு இந்த வள்ளிய ரொம்ப பிடிக்கும். அவள படிக்க வச்சா. சொத்து முழுக்க அவளுக்கு தந்தாலும் ஒண்ணும் ஆச்சர்யம் இல்ல.”

“அய்யோ! அப்படி நடக்கக்கூடாது. ஆனா நான் நெனக்கறேன், உன் அக்கா உயில் கியிலெல்லாம் எழுதியிருக்க மாட்டா. செத்துப்போவோம்னு நெனைச்சிருக்க மாட்டா. ஹார்ட் அட்டேக் திடீர்னு வந்திரிச்சு. நாம தானே ஓறவு? நமக்கு தான் சொத்தெல்லாம்.”

“நானும் அவள பார்க்கணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள பக்குன்னு போய்ட்டா”.

அந்த வீட்டு தோட்டத்தில் இருந்த ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருந்தான் சரஸ்வதியின் கடைசி தம்பி பாபு என்கிற நாராயணன். அவன் தனியாக பெங்களூரில் இருந்தான். அவன் மனைவி அவனை விட்டுப்போய் வருஷம் ஏழாகிறது. அவனுடைய மனைவி அவன் ஆட்டபாட்டங்களை சகிக்க முடியாமல் தன் ஒரே மகளுடன் வீட்டை விட்டுவிட்டு போய்விட்டாள். எங்கே இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ எதுவும் பாபுவுக்கு தெரியாது.

பாபு மனதிலும் அதே எண்ணம் தான், அக்கா சொத்தில் தனக்கு என்ன பங்கு கிடைக்கும்? அவனுக்கு கடன் எக்கச்சக்கமா இருந்தது. ஆனால் அவன் சிந்தனை கடன்களை அடைப்பது பற்றி இருக்கவில்லை. கையில் நிறைய பணம் கிடைக்கப்போவதைப்பற்றி அவனுக்கு ஒரே குஷி. சூதாட்டத்தில் புகுந்து விளையாட துடித்தான். “கிடைச்சா சின்ன ஆட்டம் எல்லாம் இல்ல, பெரிய க்ளப்கள்ல போய் ஒரு கை பார்க்கவேண்டியது தான்.”

இன்னொரு அறையில் தன் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான் பிரகாஷ், சரஸ்வதியின் மருமகன். சரஸ்வதியின் கணவன் ராமசாமியின் தம்பி மகன். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருந்தாள். அவள் வரவில்லை.

எதோ பகற்கனவில் அவன் தன்னையே இழந்திருந்தான். அவன் கனவு பணத்தைப் பற்றி இல்லை. தன் கனவுக்கன்னியைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தான். என்ன அழகு? விசாலமான கண்கள், அடர்ந்த கருங்கூந்தல்! திடீரென அவன் நினைவு நிகழ்காலத்துக்கு வந்தது. வேலுச்சாமி “எதோ மீட்டிங்க், வந்துடுப்பா”ன்னாரே, எதப்பத்தி பேசப்போறார்? எதுக்கும் போய் பார்ப்போம்.”

அடுக்களையில் வள்ளி மதிய உணவுக்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அடுப்பு மூட்டக்கூடாது என்பதால் வெளியிலிருந்து சாப்பாடு ஆர்டர் செய்தாள். அவள் மனமும் யோசனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. “ஸரஸ்வதி பாட்டி போயிட்டாங்க.. பாவம் பாட்டி! எங்கிட்ட ரொம்ப பாசமா இருந்தாங்க. என்னை படிக்க வச்சு என்னை ஒரு பட்டதாரியாக்கினாங்க. இனிமே இங்க இருக்கமுடியாது. கிளம்பவேண்டியதுதான். எங்க போறது? எதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல எடம் பார்க்கணும். அப்புறம் வேலைக்கு அப்ளை பண்ணனும்.”

அடுத்த நாள் காலையில் எல்லாரும் டிராயிங் ரூமில் கூடியிருந்தார்கள். எல்லாரும் சேர்களிலும் சோபாக்களிலும் உட்கார்ந்திருந்தார்கள். வள்ளி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தாள். வேலுச்சாமி அவளையும் கூப்பிட்டிருந்தார். வேலுச்சாமி வக்கீல் தவிர குடும்ப நண்பர் கூட.
வேலுச்சாமி வந்து எல்லோர் முன்னாலேயும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். எல்லோரையும் பார்த்து புன்னகை செய்தார். பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“எல்லாரும் ராத்திரி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்திருப்பீங்கன்னு நெனைக்கறேன். வள்ளி! நீயும் உக்காந்துக்கோ. எத்தன நேரம் நின்னிட்டிருப்பே? சரி, இப்ப, சரஸ்வதி சில விஷயங்கள உங்க எல்லாருக்கும் சொல்லும்படி எங்கிட்ட சொல்லியிருந்தா. அவளுக்கு ஹார்ட் வீக்கா இருந்தது உங்க யாருக்கும் தெரியாது. யாருக்கும் சொல்லவேண்டாம்னு சொல்லியிருந்தா. அவளோட ஹார்ட் 25% தான் வேல செஞ்சிட்டு இருந்திச்சு”

வள்ளியைத்தவிர மற்ற எல்லோருக்கும் அதிர்ச்சி.
வேலுச்சாமி தொடர்ந்தார்.

“நீங்க எல்லாரும்  சரஸ்வதிக்கு நிறைய சொத்து இருக்கு, ரொம்ப பணக்காரின்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க இல்லையா, உண்மைய சொல்லப்போனா சரஸ்வதிகிட்ட எதுவும் கிடையாது.”
எல்லோரும் திடுக்கிட்டனர், வள்ளியைத்தவிர.

“இல்ல. பொய் சொல்றீங்க!” இது ரேணுகா.

“ஆமா, இத நாங்க நம்ப மாட்டோம்.”

வேலுச்சாமி அமைதியாகத் தொடர்ந்தார், “இது உண்மை. உங்களுக்கெல்லாம் “ஷாக்கா” இருக்கும்னு தெரியும். எனக்கும் இத சொல்றதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா சரஸ்வதி எங்கிட்ட இத ஏற்பிச்சிருக்கா. ராமசாமி இறந்தபோது, நிறைய சொத்துக்கள விட்டுவிட்டு போனது என்னவோ வாஸ்தவம்தான். ஆனா பிஸினெஸ்ல ஏகப்பட்ட கடன் இருந்திச்சு. நாங்க சொத்துல கொஞ்சமாவது மீட்கணும்னு எத்தனையோ முயற்சி பண்ணினோம். ஆனா மூழ்கற கப்பல மீட்கற மாதிரி ஒண்ணும் செய்யமுடியல்ல. சொத்துக்கும் கடன்களுக்கும் சரியாப்போச்சு. இந்த வீடும் மார்கேஜ்ல தான் இருக்கு. இது கூட இருக்காது, போயிடும்”

எல்லாரும் பிரமிச்சுப்போய் உட்கார்ந்திருந்தனர்.

வேலுச்சாமி தொடர்ந்தார்.

“நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு தான் சொன்னேன். சரஸ்வதி தான் பிடிவாதமா ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டா..  நீங்க எல்லாரும் அவள பெரிய சொத்துக்காரின்னு நெனைச்சிட்டிருந்தீங்க, அவளும் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டா. அவ நெனச்சா, பணம் இருந்தாத்தான் மதிப்பீங்கன்னு.”

“இல்லே, பொய் சொல்றிங்க, அக்கா நான் கேட்டப்ப எல்லாம் பணம் அனுப்புவா.” இது ரேணுகா.

“ஆமா, அக்கா கேட்டா உடனே அனுப்பிடுவா.” இது வீணா.

“ஆமா, அனுப்புவா தான். எனக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கெல்லாம் பணம் அனுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டான்னு. தன் நகையெல்லாம் வித்து அனுப்புவா. உங்களுக்கு அவளோட உண்ம நெல தெரியக்கூடாதுன்னு நெனச்சா.” 

“அக்கா நம்பள ஏமாத்திட்டா.” இது ரேணுகா

எல்லோரும் ஆமோதிப்பாக தலைட்டினார்கள். எல்லோர் முகத்திலும் திகைப்பும் ஏமாற்றமும் நடனமாடின.

வேலுச்சாமி மறுபடியும் தொண்டையை கனைத்துக்கொண்டார்.
“இன்னும் ஒரு விஷயம்....”

அனைவரும் நிமிர்ந்து பார்த்தனர்.

“ஸரஸ்வதி ஒரு கடிதம் எழுதி வச்சிருக்கா. தான் இறந்துட்டா அத உங்க எல்லாருக்கும் படிச்சு காமிக்கணும்னு எங்கிட்ட சொல்லியிருந்தா. வாசிக்கட்டுமா?”

“இதெல்லாம் தேவையா, ஸார்? என்ன எழுதியிருக்கப்போறாங்க? நல்லா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டாங்க. இனிமே ஊர் திரும்பற வழிய பார்ப்போம்.” என்றான் ரேணுகாவின் கணவன் கோபம் கொந்தளிக்க.
 
“எனக்கென்னவோ இதெல்லாம் பொய்னு தோணுது. சொத்து எல்லாம் வள்ளிக்குன்னு படிக்கப்போறாரு. அத நாம இருந்துக்கிட்டு கேக்கணுமா என்ன?, வாங்கக்கா, போகலாம்.” என்று கிசுகிசுத்தாள் வீணா தன் சகோதரி காதில்.

வேலுச்சாமி வாசிக்க ஆரம்பித்தார்.

அன்புமிக்க என் அருமை மக்களே, எனக்கு உங்கள் கிட்ட சொல்றது அதிகமா எதுவும் இல்லை. உங்கள் எல்லோருக்கும் சுகமும் ஆரோக்கியமும் அளிக்க கடவுளை வேண்டிக்கிறேன்.
உங்களுக்கெல்லாம் தெரியும், வள்ளி எப்படி எனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் என்று. அவள் மிகவும் நல்ல குணமுள்ள பெண். அவளும் நமக்கு தூரத்து உறவு தான். அவளை நான் படிக்க வைத்தேன். இன்றைக்கு அவள் ஒரு க்ரேஜுவேட். ஆனால் அதற்கு மேல் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்கள் எல்லோருக்கும் முடிந்த போது உதவி செய்தேன். இப்போது எனக்கு ஹார்ட் வீக்காக இருக்கிறது, டாக்டர் சொல்லிவிட்டார், இனிமேல் எப்போது வேண்டுமானாலும் எனக்கு முடிவு வரலாம்.

எனக்கிருக்கும் ஒரே ஆசை வள்ளியை, பிரகாஷோ அல்லது வருணோ கல்யாணம் செய்துக்கணும் என்று. அப்படி இரண்டு பேரில் ஒருவர் சம்மதித்தால் இந்த வீட்டிலேயே நிச்சயம் செய்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
சரஸ்வதி.

எல்லோரும் அதிர்ச்சியில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
சில வினாடிகள் கழிந்து பிரகாஷ் பேச ஆரம்பித்தான், “பாட்டிக்கு....,”

“வேண்டாம், யாரும் ஒண்ணும் சொல்ல வேண்டாம்” என்றாள். வள்ளி ஆக்ரோஷத்துடன். பிறகு வேலுசாமியை நோக்கி சொன்னாள். “இந்த குடும்பத்திலிருந்து எனக்கு யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் சுயநலம் பிடிச்சவங்க. ... எல்லாரும் பேசிட்டிருந்தத நான் கேட்டுட்டு தான் இருந்தேன். பாட்டிக்கிட்டேயிருந்து எத்தன பணம் கிடைக்கும்னு கணக்கு பண்ணிட்டிருந்தாங்க. யாரும் அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடல்ல. எல்லாருக்கும் உதவி செஞ்சா, பாட்டி. பாவம் பாட்டி! ..... கல்மனசு எல்லாருக்கும்.”

“என்ன தைரியம் ஒனக்கு? நீ யாரு எங்கள இப்படி எல்லாம் பேசறதுக்கு? நாங்கள்ளாம் அக்காவோட கூடப் பொறந்தவங்க! நீ வெறும் வேலக்காரி!” என்று சொன்ன ரேணுகாவை நேரிட்டுப் பார்த்தாள் வள்ளி. உணர்ச்சிவசத்தில் அவள் முகம் சிவந்திருந்தது.

“எனக்கென்ன பயம்? பாட்டிய பாக்க எத்தன தரம் வந்தீங்க? பாட்டி போயிட்டான்னு தெரிஞ்சப்புறம்தானே எல்லாரும் வந்திருக்கீங்க? ஏன்? பாட்டிக்கு எல்லாம் போயிரிச்சுன்னு எனக்கு முன்னாலேயே தெரியும் பாட்டி பாவம், எங்கிட்ட இருந்த பாசத்தால இப்படியெல்லாம் எழுதியிருக்காங்க. …நான் ஒண்ணும் என்னை யாராவது ஏத்துக்கணும்னு காத்திட்டிருக்கல்ல. …நான் ….வேல தேடிக்கப்போறேன். ..என் கால்கள்ள ஊனி நிக்க தான் ஆசப்படறேன்.” கடைசி வார்த்தைகள் அவளுடைய விம்மல்களுடன் கலந்து வந்தன.
வள்ளி அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். 
வேலுச்சாமி சங்கடத்துடன் நெளிந்தார்.

 “என்ன தைரியம் அவளுக்கு, வேலக்காரி, அவ நம்மள என்ன பேச்சு பேசிட்டா?” என்ற வீணாவின் ஆக்ரோஷமான வார்த்தைகள் அங்கு நிலவிய நிசப்த்தத்தை கலைத்தன.

“ஆமா, வீணா, நாம இனிமே இங்க இருக்கறதுல அர்த்தம் இல்ல. போலாம்.”

எல்லோரும் எழுந்தனர்.

வேலுசாமி, “ஸரஸ்வதியோட காரியங்கள் ….” என்று இழுத்தார்.“

“எனக்கு அர்ஜன்டா மும்பை போகணும். வா, ரேணு,” இது ரேணுகாவின் கணவன். ஒன்றுமே பேசாமல் வீணாவும் அவள் கணவனும் அவர்களை பின் தொடர்ந்தனர்.

“ஸார், நான் ஒரு வாரம் இங்க தான் இருப்பேன். அத்தைக்கு செய்யறதெல்லாம் செஞ்சிடலாம்.” என்றான் பிரகாஷ்.

“சரி. இன்னும் அத்தையோட மேட்டர்ஸ் எல்லாம் சரி பண்ணனும். எனக்கு உன் ஹெல்ப் தேவை. நீ இருக்கேன்னா சந்தோஷம். அப்போ நான் ஏற்பாடெல்லாம் பாக்கறேன். வரேன்.” வேலுச்சாமி போய்விட்டார்.

வள்ளி தன் சிறிய அறையில் தன் பொருள்களை எடுத்து பேக்கிங்க் செய்து கொண்டிருந்தாள். அப்போது வேலைக்காரப்பெண் வசந்தா உள்ளே நுழைந்தாள்.

“வள்ளி, பிரகாஷ் அய்யா உங்கிட்ட இந்த லெட்டர குடுக்க சொன்னாரு.”

பிரகாஷ் எதுக்கு எனக்கு எழுதணும்? தயக்கத்துடன் கடிதத்தை வாங்கி படித்தாள்.

வள்ளி,
நான் இன்று காலை உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் என்று நினைத்தேன். ஆனால் நீ அதற்குள் போய்விட்டாய். உன் ஈமெயிலோ மொபைல் நம்பரோ எனக்குத் தெரியாது.  நீ கிளம்பி போய்விடுவாய் என்பதால் உனக்கு நான் இதை எழுதுகிறேன்.
நான் உனக்கு ஒரு வேலை ஆஃபர் செய்யலாம் என்று நினக்கிறேன். நான் ஒரு பிஸினெஸ் ஆரம்பித்திருக்கிறேன். அதற்காக கொஞ்சம் பேரை ரெக்ரூட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அதுல உனக்கு ஒரு வேலை தரலாம் என்று நினைக்கிறேன்.
இதுல எனக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது. நீ பயப்பட தேவையில்லை.எனக்கு ஏற்கனவே என் மனதுக்கு இஷ்டமான ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது.
எனக்கும் சரஸ்வதி அத்தையிடம் இருக்கற பாசத்தினால் நான் இதை செய்ய விரும்புகிறேன். தவிர எனக்கு நம்பிக்கையான பேர்களைத்தான் வேலையில் அமர்த்த விரும்புகிறேன். நான் என் ஈமெயிலும்  மொபைல் நம்பரும் தருகிறேன். இன்னும் ஒரு வாரம் அத்தை காரியங்கள் முடியும்வரை இங்கு தான்  இருப்பேன். உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
பிரகாஷ்.
வள்ளி ஒரு நிமிடம் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். 
“எனக்கு நம்பிக்கையான பேர்களைத்தான் வேலையில் அமர்த்த விரும்புகிறேன்.” இந்த வாக்கியம் அவள் மனதில் எதிரொலித்தது.
ஹேண்ட்பேக்கிலிருந்து தன் மொபைல் ஃபோனை எடுத்து பிரகாஷ் நம்பரை  அழைத்தாள்..