சாமி, நான்
போறேன். வேற வளி தெரியல்ல. நீ பளைய மாதிரி இல்ல. சாமி. நாம முன்னால சந்தோசமா தானே இருந்தோம்?
பொன்னு பொன்னுன்னு என் மேல எத்தன ஆசையா இருந்தே? உனக்கு கூலி வேல தான். தோட்ட வேல.
நான் மூணு வீட்ல வேலக்காரி. எதோ வந்த பணம் வச்சிட்டு ரெண்டு வேள சாப்பிட்டோம். நமக்கு
பூவாயி பொறந்தா. சந்தோசமா இருந்த நம்ம வாள்க்கை எப்படி பாளாப்போச்சு?
உனக்கு கியாபகம்
இருக்கா, பூ பொறந்த போது நீ எத்தன ஆனந்தப்பட்டே? “நம்ம பாப்பாவ நல்லா படிக்க வக்கணும்,
பொன்னு.”ன்னு நீ சொன்னியே. அவளுக்கு நாலு வயசாகறச்சே
அவள இஸ்கோல்ல கொண்டு போய் சேத்தமே? அவ இஸ்கோலுக்கு போக நீ தான் அவளுக்கு ஊனிபாம் போடுவே.
தலைய ஆசையா சீவி பேண்டு போட்டு கட்டி , பொட்டு வெப்பே. நாயித்துகிளமை பார்க்குக்குப்
போவோம். பாப்பா சறுக்கு மரத்துல வெளயாட நீ அவளத் தூக்கி விடுவே. ஊஞ்சஜல்ல உக்காத்தி
ஆட்டுவே. அப்புறம் நாம வண்டில விக்கிற பலகாரம் வாங்கி திம்போம். பாப்பா குச்சி ஐஸ் கேக்கும்.நீயும் ஆசையா அவளுக்கு வாங்கித் தருவே. அதெல்லாம் மறந்து போயிட்டியா ஐயா? எப்படி ஐயா?
நீ குடிக்க ஆரம்பிச்சே. என்னய கட்டிக்கறதுக்கு முன்னயும்
நீ குடிப்பே. கொஞ்சமா. எனக்கு பயந்து கொஞ்சமா குடிப்பே. பிரண்ட்ஸோட கொஞ்சம் குடிக்கறது
தான் புள்ளே, வேற ஒண்ணும் இல்லன்னு சொல்லுவே. நானும் ஆம்பிள்ளங்க கொஞ்சம் குடிக்கறதுதான் வளக்கம்னு நெனச்சேன்.
ஆனா அதெல்லாம்
பளய கதை. குடிப்பளக்கம் உன்னை நல்லா பிடிக்க
ஆரம்பிச்சுது. உன் குடி ஏற ஏற, மொள்ள மொள்ள
நம்ம குடும்பமும் சரிய ஆரம்பிச்சுது. வர வர உன் பணம் உனக்கு குடிக்க பத்தல. சாதுவா
இருந்த நீ குடிச்சா ராச்சசனா ஆயிடுவே. என் தலமுடியப் புடிச்சு இளுத்து, அடிச்சாவது
நான் சம்பாதிச்ச பணத்தை பிடிங்கிக்குவே. குடிப்பே. அப்புறம் நம்ம வீட்ல இருந்த பாத்ரம்
பண்டம் எல்லாத்தையும் ஒண்ணொண்ணா கொண்டுபோய் வித்து குடிக்க ஆரம்பிச்சே. உன்னால வேலைக்கு
சரியா போக முடியல்ல. அப்பறம் அடிக்கடி போதைல
உன் புத்தி தடுமாற ஆரம்பிச்சிடிச்சி. ஒரு நாளைக்கு என் தாலிக் கயித்த இளுத்தே. அதுல
இருந்த துளி தங்கத்த எடுக்க. நான் திமிறி ஓடப்பார்த்தேன். ஆனா உன் வெறிக்கு என்னால
ஈடு கொடுக்க முடியல்ல. என் கிட்ட இருந்த ஒரே தங்கம் அது தான். என் கொலுசு, அது, அதுக்கு
முந்தியே காணாம போயிரிச்சு. என் கிட்டேர்ந்தே திருடினே. நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்.
அப்பறம் பாப்பா
வயசுக்கு வந்திட்டா. என்னெல்லாமோ நான் கனா கண்டுட்டு இருந்தேன்! அதை நல்ல கொண்டாடணும்.
அவளுக்கு புது சேலை எடுக்கணும், காதுக்கு கங்கணம் எடுக்கணும். நாலு பேர கூப்பிடணும்னு எல்லாம்.
ஆனா ஒண்ணும் முடியல்ல. பாவம். அவ என் வயத்துல வந்து பொறந்தா. அப்ப கூட எனக்கு ஒரே ஒரு
நம்பிக்கை இருந்திச்சு. அவளும் ஒம்பதாவது கிளாசு எட்டிட்டா. அவள் எஸ்சேல்சி பரிச்சை
எளுதி பாசாகணும். டீச்சர் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுது. எப்படியாச்சும் அத நெறவேத்தணும்னு
ஆசைப்பட்டேன். உங்கிட்ட காலைல சொல்லும்போது நீயும் கொஞ்சம் கேட்டுப்பே. “ஆமா, பொன்னு.
நீ சொல்றது சரி தான். நா இனிமே ஒளுங்கா வேலக்குப் போறேன்” அப்படீன்னு சொல்லுவே. ஆனா
உனக்குள்ள இருக்கற பூதம் உன்னய விடல்ல.
எப்படியோ நாள
கடத்திட்டு இருந்தேன். உன் கிட்டேயிருந்து பணத்த ஒளிச்சு வைப்பேன். எனக்கு கஞ்சி இல்லேன்னாலும்
உனக்கும் பாப்பாவுக்கும் தந்திருவேன். வேல செய்யற வீட்ல எதாச்சும் பலகாரம் தருவாங்க.
அத அப்படியே கொணாந்து உங்க ரெண்டு பேருக்கும் தந்திடுவேன். கஷ்டமான வாள்க்கைதான். ஆனாலும்
ஒரு நிம்மதி இருந்திச்சு. அப்படியே இருந்திருந்தாக்கூட நான் இன்னிக்கு இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன்.
இந்த கரோனா வந்தப்பறம் கள்ளுக்கடைங்க மூடினாங்க. அப்ப நீ கொஞ்சம் ஒளுங்கா வேலைக்குப்போனே.
நானும் நிம்மதியா இருந்திட்டிருந்தேன். கரோனாக்கு நன்னி சொன்னேன். ஆனா பாளாப்போனவங்க
மறுபடியும் தொறந்தாங்க. நீயும் வேதாளம் முருங்க மரத்துல ஏறின மாதிரி இன்னும் சாஸ்தியா
குடிக்க ஆரம்பிச்சே. நானும் தலவிதின்னு பல்லக் கடிச்சிட்டு இருந்தேன்.
ஆனா நீ நேத்தைக்கு
என்ன செஞ்சே, நெனவிருக்கா? நீ செஞ்சது ரொம்ப
தப்பான காரியம் சாமி. மன்னிக்கவே முடியாது. ராத்திரி சம போதைல வீட்டுக்கு வந்தே. நானும்
பாப்பாவும் எப்பவும் மாதிரி உங்கிட்டேயிருந்து தள்ளி உக்கார்ந்தோம். ரெண்டு ரூம்பா
இருக்கு, உள்ள போய் தாப்பா போட்டுக்க? திடீர்ன்னு நீ பாப்பாவின் கையப்பிடிச்சு இளுத்தே.
போதை வெறில அவ கிட்ட , உன் சொந்த மககிட்ட தப்பா
கை வச்சே. குறுக்க வந்த என்னை தள்ளினே. எனக்கு வேற வளியில்லாம் வெறகு கட்டை எடுத்து
உன் தலைல ஓங்கி ஒரு அடி வச்சேன். நீ விளுந்தே. பாப்பா ரொம்ப பயந்திட்டா.
ஒரு வேள அவள
நானாக்கும்னு நீ நெனச்சிருக்கலாம். அவ நான் எளசா இருக்கறச்சே இருந்த மாதிரி இருக்கா.
அப்படித்தான் இருக்கும்னு நெனைக்கறேன். ஆனா அது ரொம்ப தப்பு. இனி அப்படி நடக்கக்கூடாது.
அதுனால இனிமே உங்கூட இருந்தா ஆபத்துன்னு தெரியுது. நான் போறேன். உன்ன விட்டுட்டு போறது
சங்கடமா இருக்கு, சாமி. ஆனா இப்ப நீ நீயா இல்ல. ஒரு மிருகமா ஆயிட்டே. வேற வளி தெரியல்ல.
இப்ப எனக்கு ஒரே லச்சியம், என் மகள காப்பாத்தணும். முடிஞ்சா படிக்க வச்சு டீச்சராக்கணும்.
அதத்தான் பாவம் அவ ஆசப்பட்டா. எனக்கு ரெண்டு கை இருக்கு. ஒளைக்க முடியும். கஸ்டப்பட்டாவது
அவள படிக்க வைக்கணும். இல்லாட்டி போனா அவள ஒளுங்கா பார்த்துக்கிட்டு, ஒரு நல்ல பையன்
கையில, ஒரு கெட்ட பளக்கமும் இல்லாத, படிச்ச பையனுக்கு கட்டி வைக்கணும். நீ திருந்துவியா? எனக்கு
நம்பிக்கை இல்ல. போறேன், சாமி. என்னயத் தேடாதே.