Monday, March 7, 2016

                பேய்னாலே எனக்கு பயம்!

ஸ்ருதி பயத்தில் சோபாவில் நடுங்கி ஒடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

காலைல கிஷோர்கிட்ட எப்படி கெஞ்சினாள்? “எனக்கு தனியா இருக்க பயமா இருக்குப்பா. போகாதே, தயவு செஞ்சு!”

கிஷோர் பதிலுக்கு சிரித்தான். “பயித்தியம், பேய், பிசாசு எல்லாம் ஒண்ணும் கிடையாது.

“இல்ல. கிஷோர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”

“நீ ரொம்ப சீரியல் பாக்கறே.. மூவீஸ் பாக்கறே. அதான் பிரச்சன. அதுல வரதெல்லாம் பொய், ஸ்ருதி. லேட்டஸ்ட் டெக்னாலஜிய யூஸ் பண்ணி ஸ்பெஷல் எஃபெக்ட்க்காக எடுக்கறாங்க. உன் மாதிரி இருக்கறவங்கள நல்லா பயமுறுத்தறாங்க. சும்மா பேய் மாதிரி பிசாசு மாதிரி மேக்கப் போட்டுகிட்டு நடிக்கறாங்க. அதையெல்லாம் உண்மைன்னு நம்பிட்டு நடுங்கறே. பேய் பிசாசு அதெல்லாம் ஒண்ணும் கிடையாது.”

கிஷோர் அவளை கன்னத்தில் தட்டி. “ஒரே நாள் தானே? நாளைக்கு ஈவ்னிங்க் வந்துடுவேன். இந்த பில்டிங்க்ல நிறைய பேர் இருக்காங்க. கேட்ல வாட்ச்மேன் இருக்கான். பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை. வேணும்னா  கங்காவ வந்து படுத்துக்கச் சொல்லு”

“அவளால இன்னிக்கு வரமுடியாதாம். கிஷோர். ஆவியெல்லாம் இருக்கு, கிஷோர். அது எல்லாத்தையும் தாண்டி வரும். செவுரு வழியாக்கூட வந்துடும். தனியா யாராவது பொம்பளை இருந்தாப் போரும், வந்து பிடிச்சுக்கும். என்னை பிடிச்சுக்கும்னு ரொம்ப பயம்மா இருக்கு.”

கிஷோர் பெரிதாக சிரித்தான். “சரியான பயந்தாங்குள்ளி! சரி, சரி எனக்கு டயமாகுது. வேணும்னா உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி பேசு. தைரியமா இரு. என்ன?”

கிஷோர் போய்விட்டான். மாலை ஆக ஆக ஸ்ருதிக்கு பயம் அதிகமாகியது. அம்மாவுக்கு மூணு தடவை ஃபோன் பண்ணி  பேசியாச்சு. என்ன செய்யறது? இனிமே ஃபோன் பண்ண முடியாது. அவங்க தூங்குவாங்க.

திரை அசைந்தால் பயம், காற்று அடிக்கும் சத்தம் கேட்டால் பயம். பீதியில் ஸ்ருதிக்கு உடம்பே விரைத்த மாதிரி ஆகிவிட்டது.
வாயில் பெல் அடித்தது. “ஐயோ! பெல் அடிக்குதே! இப்போ என்ன பண்றது?”

“ஸ்ருதி, நான் கந்தசாமி பேசறேன். உன் கந்தசாமி அங்கிள்ம்மா. கதவத் தெற.”

குரல் கேட்டதும் ஸ்ருதிக்கு சந்தோஷமான அதிர்ச்சி. கந்தசாமி அங்கிள்! அவளுக்கு ரொம்ப பிடித்தமான அங்கிள். ஸ்ருதி விரைந்து சென்று கதவைத் திறந்தாள்.

“அங்கிள்! வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தனியா இருக்கேன். பயம்மா இருந்துது. வாங்க அங்கிள்.”

“இந்த பக்கம் வந்தேன். விடி காலையில பஸ் பிடிக்கணும். சரி, உன்ன பாத்துட்டு போலாம்னு நெனைச்சேன்.“

“ரொம்ப சந்தோஷம், அங்கிள். கிஷோர் வெளியூர் போயிருக்கார். தனியா எனக்கு பயம்மா இருந்துது. அங்கிள்! உக்காருங்க. ஹார்லிக்ஸ் சாப்பிடறீங்களா?”

“ஒண்ணும் வேண்டாம்மா. சாப்டாச்சு. நீ போய் படுத்துக்கோ. நான் இங்க சோபால படுத்துக்கறேன். விடி காலையில போயிடுவேன். நீ கவலப்படாதே. நீ எந்திரிக்க வேண்டாம். நான் கதவை இழுத்து சாத்திட்டு போறேன்”

“சரி, அங்கிள், ஆனா இப்போ எனக்கு தூக்கம் வரல்லே. கொஞ்சம் பேசலாமே. ஏதாவது பழைய கதையெல்லாம் சொல்லுங்க. அங்கிள். அப்புறமா படுத்துக்கறேன்.”

“சரிம்மா, இப்படி வந்து சோபால உக்காரு.”

 “நானும் உங்கப்பாவும் அந்த காலத்துல சேர்ந்து ஹாஸ்டல்ல மூணு வருஷம் தங்கினோம். தெரியும் இல்லையா? அப்ப நாங்க அடிச்ச லூட்டி! அட்டஹாசம்! அப்பல்லாம் செல்ஃபோன், கம்ப்யூட்டர் எல்லாம் கிடையாது. டிவி கூட அதிகம் கிடையாது. பொழுதுபோக்குன்னா சினிமா தான். ஒரு தரம் உங்கப்பாவும் நானும் நைட் ஷோ போயிட்டு திரும்பரச்சே ஹாஸ்டல் கேட் பூட்டிட்டாங்க.”

“அப்படியா? அப்புறம் என்ன ஆச்சு, அங்கிள்?”

“ரெண்டு பேரும் ஒரு பார்க்குல போய் அங்க ஒரு பென்ச்சுல.....”
ஸ்ருதிக்கு கந்தசாமி சொன்ன அந்த பழைய கதைகளைக்கேட்டு ஒரே சிரிப்பு. கேட்டுக்கொண்டே இருந்தவளுக்கு உறக்கம் கண்ணை சுழட்டியது. எப்போ தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

காலையில் ஃபோன் மணி அடித்ததும் விழித்துக் கொண்டாள். அங்கிளக் காணோம். காலையில எந்திரிச்சு போயிருப்பாரு.

ஃபோனை எடுத்தாள். “ஹல்லோ!”

“ஸ்ருதி, நான் தாம்மா அம்மா பேசறேன். ராத்திரி தூங்கினியா?”

“அம்மா, நல்லா தூங்கினேன்.”

“ரொம்ப பயந்து நடுங்கிட்டிருந்தையே, நானும் உன் அப்பாவும் கவலையா இருந்தோம்.”

“என்ன ஆச்சு தெரியுமா? நம்ம கந்தசாமி அங்கிள் வந்தார்ம்மா.”

“என்னது?”

சென்னையில் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“ஆமாம்மா, அங்கிள் வந்தது மட்டுமில்ல, ராத்திரி ரொம்ப நேரம் பழைய கதையெல்லாம் சொல்லிட்டிருந்தாரு. காலையில போயிட்டாரு. அப்பா, நீயும் அங்கிளும் ஒரு தரம் நைட் ஷோ போயிட்டு லேட்டா வந்தீங்களாம். ஹாஸ்டல் பூட்டிட்டாங்களாம். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் பார்க்குல பென்ச்சுல ராத்திரிய கழிக்கலாம்னு போனீங்களாம். போலீஸ்காரன் வந்து பிடிச்சிட்டு போயிட்டானாம். அப்பா, அந்த கதைய கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கல. அப்பா.., வாசல்ல யாரோ பெல் அடிக்கறாங்க. நான் அப்பறமா கால் பண்றேன்.”

ஸ்ருதியின் அம்மா, “என்னங்க, இப்படி எதோ சொல்றா?” என்றாள்.

“ஆமாம், சுகுணா, எனக்கும் புரியல. அவன் போயி ரண்டு வருஷமாகப் போகுது”

“ஆமாங்க, உங்களுக்கு நெனவு இருக்கா? அன்னிக்கு மறுநாள் தான் ஸ்ருதியோட கல்யாணம். அப்ப கந்தசாமி ஆக்ஸிடென்ட்ல போய்ட்டார்னு நியூஸ் வந்துது. ஸ்ருதிக்கு அவர் கிட்ட ரொம்ப பிரியம். அதனால நாம இந்த விஷயத்த அவகிட்ட சொல்லல்ல.”

“ஆமாம், சுகுணா. அப்புறம் அவ ஹனிமூன் போனா. அப்புறம் அப்படி இப்படின்னு நாம சொல்லாமையே விட்டுட்டோம்.”

“ஆமாங்க. இப்ப கந்தசாமி வந்ததா சொல்றாளே, ஒண்ணும் புரியல்லியே, கனாக் கண்டிருப்பாளோ?”

“அப்படித் தான் இருக்கணும். ஆனா கந்தசாமியையும் என்னையும் போலீஸ் பிடிச்ச சமாசாரம் நான் யார் கிட்டயும், உன் கிட்ட கூட சொன்னதே இல்லையே. அதான் புரியல்ல”


No comments:

Post a Comment