வடிவு தன் புருஷனை
எதோ கத்திக்கொண்டே இருப்பாள். அவனை சதா காலமும் ஏசிக்கொண்டே இருப்பாள். அக்கம்பக்கத்தில்
எல்லோரும் கேட்பார்களே என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் உரத்த குரலில் கண்டபடி கத்துவாள்.
“ஏய், என்ன இருக்கு
ஒங்கிட்ட? பணமா, வீடா? ஒண்ணும் கிடையாது. எங்கப்பா என்னய எப்டி வளத்தாரு? பச்சக்கிளி
மாருதி. ஒன் குடும்பத்துல, எல்லாம் ஒதவாக்கர கும்பல்!”
“ஒரு குந்துமணி
தங்கம் உண்டா? ஓரு நல்ல சேல? ஊம்! வீட்ல ஜாமான் என்ன இருக்கு? அவங்க அவங்க மஹாராணி
மாருதி சுத்தறாங்க! எங்கப்பா....”
விடிந்ததும் தொடங்குவாள்.
அக்கம்பக்கத்தவர் “காலங்கார்த்தால சுப்ரபாதம் ஆரம்பிச்சாச்சு!” என்று அலுத்துக்கொள்வார்கள்.
எல்லாருக்கும் முருகனைப்பார்த்து தான் அனுதாபம். முருகன் சாது. பெண்டாட்டியை சமாதானப்படுத்த
முயற்சி செய்வான்.
“இங்க பாரு, புள்ள,
கொஞ்சம். அடக்கி....”
அவன் வார்த்தைக்கு
காத்திருந்தவள் போல் இன்னும் பலமாக கத்த ஆரம்பிப்பாள்.
ஒரு முறை இந்த
தினசரி சண்டைய சகிக்கமுடியாத அவளோட அண்டைவீட்டுக்காரி சொன்னாள்,
“பாரு, வடிவு,
ஒரு நாளைக்கு இது நடக்குதா இல்லியான்னு பாரு, முருகன் ஒரு நாள் உன்னைய விட்டுட்டு போயிடுவான்,
இல்லே தற்கொல செய்துக்குவான், வேணும்னா பாரு.”
இந்த வார்த்தைகளை
நிஜமாக்குவது போல ஒரு நாள் வேலைக்கு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. வடிவு ஏதேதோ
புலம்பிக்கொண்டே இருந்தாள். மூன்றாம் நாள் ஒரு திடுக்கிடும் செய்தி வந்தது. வேலைக்குப்
போய் திரும்பினவர்கள் சொன்னார்கள். ஊருக்கு வெளியில் ரயில் தண்டவாளத்தில் உருத்தெரியாமல்
நசுக்கப்பட்ட ஒரு ஆணின் சவம் கிடந்தததாம். சவத்தின் உடலில் நீல சட்டை இருந்ததாம். முருகனாயிருக்குமோ,
அனைவருக்கும் சந்தேகம். காரணம் முருகன் எப்போதும் நீல சட்டை தான் போட்டிருப்பான், ஏனென்றால்
அவனிடம் இருந்த ஒரே நல்ல, கிழிசல் இல்லாத சட்டை அது ஒன்று தான். வடிவுக்கு அதிர்ச்சி
தாங்கவில்லை.
“ஐயோ, சாமி, என்னைய
விட்டுட்டு போயிட்டயா! நான் என்ன பண்ணுவேன்? ஐயோ!”
தன் தலையிலும்
மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.
“ஆமா, இப்ப அளுது
என்ன பிரயோசனம்? அவன் இருந்தப்ப இவ ஒரு பொளுது அவனய விட்டிருப்பாளா? என்னமா ஏசினா?
பாவம், தாங்க முடியாமதான் அவன் ரயிலுக்கு தன் தலைய குடுத்திருப்பான்” அண்டைவீட்டுக்காரி
முணுமுணுத்தாள்.
“ஹய்யோ! நான் பாவி!
அத கண்டமேனிக்கும் திட்டிட்டு இருந்தேன். பாவம், அது நல்லது. என்னய ஒரு வார்த்த பேசாது. நான் பாவி! எனக்கு
மன்னிப்பே கெடயாது! காலைல அது போனப்ப திரும்பி வராதேன்னு சொன்னது நெசம் தான். ஆனா சும்மா
தான் சொன்னேன். நெசத்துல அது தான் என் உசுரு. அது மாத்ரம் உசுரோட வரட்டும், நான் அவனய
ராசா மாருதி பார்த்துக்குவேன். அவனய ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஐயோ, சாமி! என் ராசா!”
வடிவு கதறி அழுதாள்.
திடீரென நிசப்தம்
நிலவியது. “வரது முருகன் மாருதி தெரியுது!”
ஆமாம், முருகன்
மெதுவாக வந்துகொண்டிருந்தான்.
வடிவு அதிர்ந்து
உற்று பார்த்தாள். ஆமாம் முருகனே தான்.
வடிவு ஒரு ஓட்டம்
ஓடி சினிமா கதாநாயகி போல “என் ராசா, நீ சாகல்லியா, வந்துட்டியா?” என்று அவனை கட்டிக்கொண்டாள்.
“ஏ, புள்ள, என்ன
இது, எல்லாரும் பாக்கறாங்க..” முருகன் கஷ்டப்பட்டு தன்னை விடுவித்துக்கொண்டான்.
“பாரு, சத்தியமா
சொல்றேன், இனிமே நான் உன்னய ஒண்ணும் சொல்லமாட்டேன். நீ இருந்தா போதும் ஆமா, நெசம்மாத்தான் சொல்றேன்”
அடுத்த நாள் காலை.
வடிவின் கீச்சுக்குரல் கேட்கிறது.
“நீ என்னய பயமுறுத்தப்பாத்தே
இல்ல? எங்கே போனே? ரகசியமா? கேக்கறேன் இல்லே? எங்க போனே? சொல்லு?”
அண்டைவீட்டுக்காரி
முண்முணுக்கிறாள், “ஆரம்பிச்சுட்டா. இவளாவது திருந்தறாவது!”
No comments:
Post a Comment