Thursday, March 22, 2018

சர்வ தேச தண்ணீர் தினம்


ஏண்டி, என்ன தைரியம் இருந்தா என் கொடத்த நகத்துவே?” கங்கா காவேரி மேல பாய்ந்து அவளுடைய முடியைப் பிடித்து ஆத்திரத்துடன் உலுக்கினாள். காவேரி விடுவாளா? அவள் கங்காவைப் பிடித்து தள்ளினாள். அந்த பெரிய ஆலமரத்துக்கு அடியில் உட்கார்ந்திருந்த ஆண்பிள்ளைகளில் சிலர் பீடி புகைத்துக்கொண்டே இந்த காட்சியைப் பார்த்து நகைத்தனர். வேறு சிலர் “இந்த பொம்பளைங்களுக்கு இதான் வேல. எப்ப பார்த்தாலும் சண்டை. ரோதன தாங்கல.” என்று முணுமுணுத்தனர்.
அந்த வரட்சியான கிராமத்துக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் தண்ணீர் லாரி வரும். தண்ணீர் வரும் நாள், விடியற்காலையிலிருந்தே கலர் கலராக பிளாஸ்டிக் குடங்கள் அந்த ஆலமரத்தருகே வரிசையாக வைக்கப்பட்டுவிடும். கிராமத்து பெண்மணிகளுக்கு அவரவர்கள் குடும்பத்துக்கு குடிக்க, சமைக்க  அத்தியாவசியமாக வேண்டிய தண்ணீர் அந்த ஒரு நாள் தான் கிடைக்கும். இரண்டு வாரங்களுக்கு முடிந்த அளவு தண்ணீர் பிடித்து வைக்கவேண்டும். அதனால் அன்று இந்த மாதிரியான சண்டை காட்சிகள் சகஜம் தான்.

அடுத்த நாள் கிராமத்து பெண்கள் தங்கள் முந்திய தின சண்டைகளை முற்றிலும் மறந்துவிட்டு  நட்புடன் சிரித்து அரட்டை அடிப்பார்கள்.
ஒருத்தருக்கொருத்தர் வேலையில் உதவி செய்துகொள்வார்கள்.

இப்படி நம் நாட்டில் எத்தனை கிராமங்களில் நடக்கிறது! இன்று சர்வ தேச தண்ணீர் தினம். அதனால் என் பங்கிற்கு இந்த சின்ன கட்டுரையை எழுத முற்பட்டேன். தண்ணீர் கஷ்டம் பெண்களை தான் அதிகமாக பாதிக்கிறது. நீங்கள் கூட பெண்கள் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்தவாறு செல்லும் அழகிய ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். ஓவியங்களை ரசிக்கும்போதே அவர்கள் படும் சிரமங்களை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்திருப்பீர்களா? எங்காவது ஆண்கள் தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் ஓவியங்களைப் பார்த்திருக்கிறீகளா?

No comments:

Post a Comment