நான் ஏழு வயதுவரை பள்ளிக்கு செல்லவில்லை. என் வயதுடைய என் அத்தை பெண்கள் இருவரும் ஐந்து வயதிலிருந்தே பள்ளி சென்றுகொண்டிருந்தனர். அவர்களுடைய வீடு ஸ்கூலுக்கு பக்கத்தில் இருந்தது. என் வீடு பள்ளியிலிருந்து தொலைவில் இருந்ததால் என் அப்பா என்னை பள்ளியில் சேர்க்கவில்லை. அப்போதெல்லாம் அது சாதாரண விஷயம் தான்.
ஆனால் எனக்கு பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. என் தந்தை எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தருவார். ஆனால் நான் பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினேன். நான் என் அப்பாவிடம் என்னை ஸ்கூலில் சேர்க்குமாறு நச்சரித்தேன். கடைசியில் என் ஆர்வத்தைப் பார்த்து அவர் சம்மதித்தார். பள்ளியின் ஹெட்மாஸ்டருக்கு ஒரு கடிதம் எழுதி என்னிடம் தந்தார். நான் பள்ளிக்கு சென்று I ஹெட்மாஸ்டரிடம் கடிதத்தை தந்தால் என்னை ஸ்கூலில் சேர்த்துக்கொள்வார்களாம்! நான் என் அண்ணனுடன் மாட்டுவண்டியில் பள்ளிக்கு சென்றேன். வேறு எந்த பெரியவர்களும் என்னுடன் வரவில்லை.
நானும் என் அண்ணனும் ஹெட்மாஸ்டர் அறைக்கு சென்று அவரிடம் என் அப்பாவின் கடிதத்தைக் கொடுத்தோம். அவர் கடிதத்தைப் படித்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். நான் சரியான விடையளித்ததும் அவர் என்னை “மூன்றாம் வகுப்பு ‘பி’ பிரிவில் போய் உட்கார்” என்றார். 1943 ல் என் அட்மிஷன் ஆனது இவ்வாறுதான். வகுப்பு கட்டணம் மாதத்திற்கு மூன்று ரூபாய். டொனேஷன் கிடையாது. ஸ்பெஷல் ஃபீஸ் எதுவும் கிடையாது.
காலம் எப்படி மாறிவிட்டது! இளம் பெற்றோர்களை அவர்கள் பிள்ளைகளின் அட்மிஷன் என்பது ஒரு கலக்கு கலக்குகிறது.
குழந்தை பிறந்த உடனேயே அதன் ஸ்கூல் அட்மிஷன் பற்றி ப்ளான் செய்வதும் தொடங்கி விடுகிறது. தங்கள் குழந்தையை ஒரு நல்ல பள்ளியில், அதுவும் தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும். டொனேஷனுக்கு, அட்மிஷனுக்கு என்று பணம் சேமிக்க ஆரம்பிக்க வேண்டும். இங்கிலீஷ் மீடியமாக இருப்பது அவசியம். நல்ல வசதி உள்ள பெற்றோருக்கு இது பெரிய காரியமில்லை. ஆனால் வசதி குறைவானவரும் தங்கள் செல்வங்களை நல்ல பெயர் உள்ள, பெரிய, தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆசைப்படுகிறார்கள். பள்ளிகளில் கட்டிட நிதி, அது இது என்று, அட்மிஷனுக்கு தவிக்கும் பெற்றோரிடம் பணம் கேட்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.
இந்த பேர் போன தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு குழந்தைகளுக்கு நுழைவு பரிட்சைகளும் உண்டு. இந்த சமயங்களில் பெற்றோர்களின் கவலை விவரிக்க இயலாது. அவர்கள் மற்ற பெற்றோர்களிடம், அதாவது இந்த கஷ்டமான காலகட்டத்தை கடந்தவர்களிடம், யோசனை கேட்பார்கள். அவர்களின் மனம் பல வாரங்களுக்கு நுழைவுப் பரிட்சை பற்றியும், இன்டர்வியூ பற்றியும் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்காது. தங்கள் குழந்தைகளை, மூன்று வயது குழந்தைகளை உட்கார்த்தி பாடம் புகட்டுவார்கள். சில சமயம் அவை ஒழுங்காக கற்றுக்கொள்ளும், ஆனால் பலமுறை முரண்டு பிடிக்கும். பாவம், அவை .
எனக்கு அப்படி ஒரு அப்பாவைத் தெரியும். அவன் தன் மூன்று வயதான சிறுமியை இன்டர்வியூவிற்கு கூட்டிக்கொண்டு போனான். தலைமை ஆசிரியை சில சுலபமான கேள்விகளை அந்த குழந்தையிடம் அன்பாக கேட்டாள். ஆனால் அவற்றிற்கெல்லாம் பதில் தெரிந்திருந்தாலும் சிறுமி வாயை இறுக்க மூடிக்கொண்டு தலைமை ஆசிரியை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். கவலையுடன் அருகில் உட்கார்ந்திருந்த அவளுடைய அப்பாவிற்குத் தெரியும் தன் மகளுக்கு அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியும் என்று. அவளைத் தூண்டிவிட மெதுவாக அவள் தொடையில் தட்டினான். உடனே அந்த சிறுமி, “ஏன் டேடி, என்னை அடிச்சே?” என்றாள் கோபத்துடன். அப்பாவுக்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது.
“நான் அடிக்கல, பாப்பா, சும்மா தட்டினேன்.”
“இல்ல, நீ பொய் சொல்றே, அடிச்சே!”
“ஸரி, நான் இனிமே அடிக்கல. ஆனா இப்ப மேடம் கேள்வி கேட்டாங்க, இல்லே, ஒனக்கு ஆன்ஸர் தெரியுமே. சொல்லு, பாப்பா.” அப்பா கெஞ்சாக்குறையா சொன்னான்.
“நீ அடிச்சேன்னா நான் ஆன்ஸர் சொல்லமாட்டேன்.”
“மிஸ்டர் சுந்தரம், அவளே சொல்லட்டும், நீங்க ப்ராம்ப்ட் பண்ணாதீங்க.”
“இல்ல, மேடம், அவ….”
“மிஸ்டர் சுந்தரம், எனக்கு குழந்தைகளோட டீல் பண்றதுல நல்ல அனுபவம் இருக்கு. எனக்கு அவங்கள ஜட்ஜ் பண்ண நல்லாத் தெரியும். நீங்க அவள வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க.”
அந்த அப்பாவுக்கு ஒரே ஏமாற்றம், வருத்தம். மேலும் தன் மனைவியும் தன்னைத்தான் குற்றம் சொல்வாள் என்று அவனுக்குத் தெரியும். வீட்டிற்கு போனவுடன் அந்த சிறுமி முதல் முறையாக தன் வாயைத் திறந்தாள். வள வள என்று தன் “மம்மி” கிட்ட நடந்தது எல்லாவற்றையும் விவரித்தாள். தலைமை ஆசிரியைக்கு மூக்கின் மேல் கருப்பாக ஒரு பெரிய மரு இருந்ததாம். விரிந்த கண்களுடன் அதை வர்ணித்தாள். (அவள் அதைப் பார்த்துக்கொண்டே இருந்ததால் மேடம் கேட்ட கேள்விகளை அவளால் கவனித்து பதில் சொல்ல முடியவில்லை! ) நல்ல வேளையாக அந்தப் பெண் “டென்னிஸ் தி மெனேஸ்” மேடத்தின் அந்த முக மருவைப்பற்றி அங்கேயே ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் விரைவில் அந்த “டேடிக்கு” ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளியிலிருந்து கடிதம் வந்தது. அவன் மகளுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. ஹெட்மிஸ்டரஸுக்கு இந்த குட்டிப்பெண் ஸ்மார்ட் என்று தெரிந்துவிட்டது போல!
ஒவ்வொரு தாய் தந்தையைக் கேட்டாலும் விதவிதமாக தங்கள் சிறார்களுக்கு அட்மிஷன் கிடைத்த கதையை சுவாரசியமாக (அவர்களுக்கு! )விவரிப்பார்கள். சில பள்ளிகளில் பெற்றோர்களுகளைக் கூட இன்டர்வியூ செய்கிறர்கள் என்று கேள்வி!
நர்சரி அட்மிஷனுடன் கதை முடிந்துவிடுமா, என்ன? அப்புறம் குழந்தை பெரிதாக வளர வளர ஹைஸ்கூல் அட்மிஷன், காலேஜ் அட்மிஷன் என்று கவலைகளின் பட்டியலும் நீண்டுகொண்டே போகும். காலம் மாறிப்போச்சு!
No comments:
Post a Comment