Monday, June 1, 2020

சமயத்தில் செய்த உதவி


அசோக்கின் மனம் கலங்கியது. எப்படி அம்மாவின் முகத்தைப் பார்ப்பது?
“எதுக்காக நான் உயிர் வாழணும். என்னால அம்மாவுக்கு ஏமாற்றம். பாவம் அம்மா, எனக்காக எத்தனை கஷ்டப்படறாங்க! நான் ஒரு வேஸ்ட்! இந்த ஒலகத்துல இருக்க லாயக்கில்ல.”
உடைந்த மனதுடன் அசோக் கால் போனபோக்கில் நடந்தான். ப்லஸ் டூ எக்ஸாமில் ஃபெயில் ஆகிவிட்ட அவன் மனம் கலங்கினதில் என்ன ஆச்சர்யம்?
 “ரயில் பாதையில் போய் படுத்து விடலாம். இந்த உபயோகமில்லாத வாழ்க்கை முடியட்டும்.”
வெகு தூரம் வந்து நடந்து எங்கேயோ வந்து விட்டதை உணர்ந்த அசோக் திரும்பி இரயில் ஸ்டேஷனை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
“ஹெல்ப்! ஹெல்ப்!” எங்கிருந்தோ ஒரு கூக்குரல்!
அசோக் சட்டென்று குரல் வந்த திசையில் நோக்கினான். யாருமில்லை. மேலே நடக்க ஆரம்பித்தான்.
“ஹெல்ப்! ஹெல்ப்!” மீண்டும் அதே குரல்!
“யாரானும் இருக்கீங்களா!  மாட்டிட்டிருக்கேன், ப்ளீஸ்! காப்பாத்துங்க! உதவி செய்யுங்க!”
அசோக் திரும்பி பார்த்தான். உற்றுக்கேட்டான். அந்த இடத்தில் சில வீடுகளே இருந்தன. வீதியில் ஜனநடமாட்டமில்லை. கோடியில் இருந்த ஒரு வீட்டிலிருந்து கூக்குரல் வந்து கொண்டிருந்தது.
அந்த வீட்டை நோக்கி அசோக் விரைந்தான். அந்த வீட்டை சுற்றி காம்பௌண்டு சுவர் இருந்தது. முன்னால் கேட் கதவு சாத்தியிருந்தது. கேட்டை திறந்து மெதுவாக தயங்கிக்கொண்டே உள்ளே நுழைந்தான். குரல் வீட்டின் ஒரு பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. ஓசை வந்த திக்கில் போன அசோக் குரல் அந்தப்பக்கம் இருந்த ஒரு அறையிலிருந்து வந்ததை கவனித்தான். பாத்ரூமாக இருக்கும் போல இருந்தது. சிறிதான ஜன்னல் உயரத்தில் இருந்தது.
அருகில் போய், “யாரு? என்ன?” என்றான்.
உடனே உள்ளேயிருந்து ஒரு பெண் குரல் படபடப்புடன், “நல்ல வேளை. நான் கத்தினது உங்களுக்கு கேட்டிரிச்சு. தயவு செஞ்சு ஹெல்ப் பண்ணுங்க. நான் இங்க பாத்ரூம்ல மாட்டிட்டிருக்கேன். என் குழந்தை, சின்ன பாப்பா வெளில கதவை தாழ்ப்பாள் போட்டுட்டா. அவளுக்கு திறக்கத் தெரியல்ல. வீட்டில வேற யாரும் இல்ல. தயவு செஞ்சு ஹெல்ப் பண்ணுங்க!“
அசோக் பிரமித்தான். பிறகு,
“மேடம், என்ன செய்யணும்னு சொல்லுங்க, நான் போய் யாரையாவது கூட்டிட்டு வரட்டுமா?” என்று கேட்டான்.
“ஐயோ, போயிடாதீங்க.” அந்தப் பெண் பெரும் பதட்டத்தில் இருந்தது, அவள் குரலில் இருந்து தெரிந்தது.
“சரி, என்ன செய்யறது, சொல்லுங்க.”
“நீங்க யாரு, சின்னவரா? குரலக் கேட்டா சின்ன பையன் மாதிரி இருக்கு.”
“ஆமாம், மேடம், நான் பதினாறு வயசுபையன் தான். அதனால தான் யாரையாச்சும் கூட்டிட்டு வரட்டுமான்னு கேட்டேன்.”
“வேண்டாம், தம்பி, அக்கம் பக்கத்து வீடுகள்ள யாரும் இல்ல. நீயே பார்த்திருப்பே. எங்கேயும் போகவேண்டாம். சீக்கிரமா கதவை திறக்க எனக்கு ஒரு யோசனை தோணுது, நான் சொல்றபடி செய்யறியா?”
“சொல்லுங்க, மேடம்.”
வீட்டு வாசல்ல ஒரு கதவு இருக்கு, இல்லே?”
“ஆமா, மேடம்.”
“அந்தக் கதவுல ஆட்டமேட்டிக் லாக் இருக்கு. சாவி இருந்தாத்தான் வெளிலேர்ந்து திறக்க முடியும், ஒரு சாவி என் கிட்ட இருக்கு, என் செயின்ல இருக்கு. ஆனா அதை எப்படி உன் கிட்ட தரதுன்னு தெரியல்ல.”
“மேலே ஜன்னல் வழியா தூக்கிப் போடுங்க, நான் பிடிச்சுக்கறேன்.”
“இரு, கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் “ட்ரை” பண்றேன்.”
சில வினாடியக்ளுக்கப்புறம்,
“இந்தா, தம்பி பிடி!”
முதலில் சாவி ஜன்னல் கண்ணாடியில் இடித்து உள்ளேயே விழுந்தது.
இரண்டு மூன்று முயற்சிகளுக்கப்புறம் சாவி ஜன்னல் வழியாக வெளியே வந்து கீழே விழுந்தது.
“சீக்கிரம் எடுத்து திற, தம்பி! பாப்பா, பாவம் தனியா இருக்குது.”
“இதோ, போறேன்.”
அசோக் அந்த சாவியால் வாயிற்கதவை திறந்தான். முன் ஹாலில் ஒரு இரண்டு வயது பாப்பா விளையாட்டு சாமான்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தது. அசோக்கைப் பார்த்தது. “அம்மா பாத்தூம்” என்றது.
பக்கத்தில வந்த அசோக் “வா, பாப்பா!” என்று பாப்பாவை தூக்கிக் கொண்டான்.
“பாத்ரூம் எங்கே, பாப்பா?” என்றான். அது தன் குட்டி விரலால் சுட்டிக் காட்டியது.
அதற்குள் பாத்ரூமிலிருந்து பதைபதைப்புடன் “தம்பி! இங்கே!” என்ற குரல் கேட்கவும் அசோக் பாத்ரூம் கதவைத் திறந்தான். வெளியே வந்த ஒரு பெண்
“பாப்பா, கண்ணு!” என்று பாசத்துடன் குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்டு அதன் முகத்தில் முத்தங்கள் சொரிந்தாள். அந்த தாய்ப்பாசத்தைக் கண்ட அசோக்கின் உள்ளத்தில் தன் தாயின் தோற்றம் எழும்பியது.
அந்தத்தாய் அசோக்கை நோக்கி, “தம்பி, ரொம்ப ரொம்ப நன்றி. நீ மட்டும் வரல்லேன்னா என்ன ஆயிருக்குமோ! கல்பனை கூட பண்ண முடியல்ல. அவர், என் வீட்டுக்காரர், வர ஏழு மணியாயிடும். ஃபோன் இல்லாம் பாத்ரூம்ல மாட்டிக்கிட்டேன். நெனைக்கவே திகிலா இருக்கு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், உன் பேர் என்னப்பா?”
“அசோக், மேடம். அப்போ நான் போயிட்டு வரட்டுமா, மேடம்?”
“என்னை அக்கான்னு கூப்பிடு. இந்த மேடம் கீடம் எல்லாம் வேண்டாம். ஏன் அதுக்குள்ள போகணும்? காபி, டிபன் சாப்பிட்டுட்டு தான் நீ போகணும்.”
“இல்லே, மேடம்.  இல்லே அக்கா!, எங்கம்மா கவலைப்படுவாங்க. நான் போறேன்.”
“சரி, அசோக், இரு ஒரு நிமிஷம்.” உள்ளே போய் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தாள்.
“இந்தா, அசோக், கை முறுக்கு நான் பண்ணினது. வீட்டுக்குப் போய் சாப்பிடு. அப்புறம் நான், பாப்பா, என் ஹஸ்பண்ட் எல்லாரும் உன் வீட்டுக்கு ஒரு நாள் வரோம், உங்கம்மாவைப் பார்த்து நன்றி சொல்லணும். சரியா?”
“சரி, அக்கா, அப்போ நான் போயிட்டு வரேன். பாப்பா! டாட்டா, பை பை!” என்று விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்த அசோக்கின் மனதில் ஒரே எண்ணம். அம்மாவை பார்க்கணும். “என்ன பைத்திக்காரத்தனம் செய்ய இருந்தேன்! செத்துப்போயிட்டா, இந்த மாதிரி சமயத்துல இவங்களுக்கு உதவி செய்திருக்க முடியுமா? பரிட்சை மறுபடி எழுதி பாசாயிக்கலாம். நான் செத்துட்டா அம்மா மனசு என்ன பாடுபடும்? கடவுள் தான் காப்பாத்தினார்.”
அசோக் இலேசான மனதுடன் நடந்தான்.





No comments:

Post a Comment