பர்வதத்திற்கு
ஒரே பரபரப்பு.இளம் டைரக்டர் பூபதி அவள் வீட்டிற்கு வருகை தரப் போகிறான். பூபதி வருவதென்றால்
சும்மாவா? இதற்காக எத்தனை நாளாக பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறாள்? பூபதியின் பெயர்
இப்போது திரையுலகு வட்டாரங்களில் ரொம்ப அடிபடுகிறது. அவன் பெயரின் பின்னால் ஏற்கனவே
மூன்று வெற்றிப் படங்கள். இப்போது மெகா பட்ஜட் படம் எடுக்கப் போகிறான் என்ற செய்தி
எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கிறது. பேபிக்கு எப்படியாவது ஒரு நல்ல ரோல் வாங்கிவிட
வேண்டும்.
அதற்காகத் தான்
இந்த தேனீர் விருந்து. பர்வதம்
பூபதியையும் அவனுடைய சகாக்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டிருக்கிறாள்.
பர்வதம் மனதிற்குள்ளேயே
கோட்டை கட்டினாள். இது வரை பேபி என்ற காமினிக்கு பெரும்பாலும் கவர்ச்சி ரோல்கள் தான்
கிடைத்துக் கொண்டிருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகி அல்லது இரண்டாவது கதாநாயகியாகவாவது
சான்ஸ் கிடைத்தால் அதிர்ஷ்டம் தான். அதிர்ஷ்டம் தானே வந்து விடுமா? அதற்கான பிரயத்தனமும்
செய்யத் தானே வேண்டும்?
பேபி பியூட்டி
பார்லருக்குப் போயிருக்குது. அதுவும் நல்லது தான். வந்ததும் நன்றாக கவர்ச்சியாக டிரஸ்
பண்ணிக்க சொல்லணும். பூபதிக்கு அழகிய பெண் என்றாலே சபலம்தானாம். அவ்வப்போது தனக்கு
இஷ்டமான பெண்களுக்கு படங்களில் சான்ஸ் கொடுப்பானாம். இதெல்லாம் பர்வதம் திரையுலக வம்பளப்புகளிலிருந்து
சேகரித்த தகவல்கள். பேபியை சந்தித்து பழகினால் அவளுடைய அழகிலும், பேச்சிலும்,புன்னகையிலும்
மயங்குவது நிச்சயம். அவளுடைய கட்டுடலில் மயங்காதவர் யார்? அதனால்தானே கவர்ச்சிக் கன்னி
காமினி என்று அவளுக்கு பெயர் சூட்டப் பட்டிருக்கிறது?
லீலா! லீலா! என்று
உரத்த குரலில் பர்வதம் கூப்பிட்டாள்.
“ஏங்க்கா? என்ன
வேணும்?” குரல் சமையல் அறையிலிருந்து வந்தது.
“எல்லாம் ரெடி
பண்ணிட்டியா?”
“பண்ணிக்கிட்டு
தான் இருக்கேன்”
லீலா வேலையில்
நிதானம் தான். பர்வதத்திற்கு தூரத்து உறவு. பரம ஏழை. சம்பளமில்லாத சமையல்காரி, வேலைக்காரி.
“சரி, டேபிளை நல்லா
பளிச்சுன்னு தொடச்சி வை. ப்ளேட், ஸ்பூன், கப்பு எல்லாம் தொடச்சி வச்சிட்டியா?”
“எல்லாம் பண்றேன்
அக்கா. கவலைப் படாதீங்க. அஞ்சு மணிக்கு மேல தானே வருவாங்க? இப்ப மணி மூணரை தானே?
“ஏய்! நீலா! வா
இங்கே! என்னவோ அங்கிருந்தே பதில் சொல்லிட்டிருக்கே?” என்று பர்வதம் அதிகாரமாக அதட்டவும்
லீலா சமையலறையிலிருந்து வெளிப் பட்டாள்.
“பேபியை இன்னும்
காணும்! டயமாயிட்டிருக்குது. வந்து டிரஸ் வேற பண்ணிக்கணும்.”
“வந்திடுவா, அக்கா”
லீலா சமாதானப் படுத்தினாள்.
“வேறே எங்கெயாச்சும்
போறதா சொல்லிச்சா?”
இல்லையென்று தலையாட்டினாள்
லீலா.
“இந்த பேபியால
எப்பவும் டென்ஷன் தான். கொஞ்ச நாளாகவே நான் பார்க்கிறேன், மொரண்டு பண்ணுது. எனக்காகவா நான் எல்லாம்
செய்யறேன்? அவள் பிரபலமாகணும், பத்மினி, சாவித்திரி போல பேர் எடுக்கணும்னு தானே நான்
பாடு பட்டுட்டு இருக்கறேன்! இந்தப் பொண்ணு கொஞ்சமாவது புரிஞ்சுக்குதா?”
"ஆமாங்க்கா, நீங்க
எவ்வளவு பாடு படறீங்க, ஆனாலும் பேபிக்கு பிடிவாதம் ஜாஸ்தி” லீலா வழக்கம் போல பர்வதத்திற்கு
ஒத்து ஓதினாள்.
“சரி, சரி. அவளை
எப்படி வழிக்குக் கொண்டுவரணும்னு எனக்குத் தெரியும். நீ போய் உன் வேலையை கவனி. இன்னும்
போண்டா போடற வாசனையே வல்லியே.” என்று பர்வதம் குற்றம் சாட்ட,
“இல்லேக்கா,
அவங்க வந்ததும் சூடா போடலாம்னு இருந்தேன். இதோ இப்ப போய் எண்ணை வச்சிடறேன்.”
லீலா சமையலறைக்கு
நகர்ந்தாள். வாசலில் கார் நுழையும் சப்தம் கேட்கவே பர்வதம் சந்தோஷத்துடன் தன் பருத்த
சரீரத்தை சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள். அவள் சென்றது ஒரு யானை
வேகமாக அசைந்து செல்வது போல இருந்தது.
அவர்களுடைய கார்
தான் வந்திருந்தது. காரில் டிரைவர் சண்முகம்
மட்டும் தான் இருந்தான். பேபி எங்கே? பர்வதம் அதிர்ச்சி அடைந்தாள்.
“ஏய், பேபி எங்கே?
என்றாள் படபடப்புடன்.
“சின்னம்மா வேறு
எங்கேயோ போகணும்னு சொல்லி டாக்ஸி
எடுத்திட்டுப் போய்ட்டாங்க. உங்க கிட்ட இந்த லெட்டரைக் கொடுக்க சொன்னாங்க.” என்று சண்முகம் ஒரு காகித உரையை நீட்டினான்.
“லெட்டரா, எதுக்கு?
இதென்ன வேடிக்கை? எனக்கெதுக்கு இப்போ லெட்டர்? எங்கே போயிருப்பா? அவங்க எல்லோரும் வந்திடுவாங்களே?”
“லெட்டரைப் படிச்சுப்
பாருங்கம்மா. சின்னம்மா அதில எல்லாம் வெவரமா எழுதியிருப்பாங்க.”
“எல்லாம் எனக்குத்
தெரியும். நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். சரி, நீ டீ குடிக்க அது இதுன்னு போயிடாதே, இங்கேயே இரு, என்ன?” என்று
அதிகாரக்குரலில் கட்டளையிட்டுவிட்டு உள்ளே சென்று மூச்சு வாங்க உட்கார்ந்தாள். பிறகு
லெட்டரை எடுத்துப் படித்தாள்.
அம்மாவிற்கு,
உன் கைக்கு இக்கடிதம் எட்டுமுன் நான் எட்டாத
தூரத்திற்கு சென்றிருப்பேன்.
[இவ்வரிகளைப் படித்த
பர்வதம் திடுக்கிட்டாள். கைகள் நடுங்க ஆரம்பித்தன,]
இத்தருணத்திற்காக நான் எத்தனை நாள் பிளான்
செய்திருப்பேன்! அப்பா! விடுதலை! நிம்மதி!
பத்து வருடங்களுக்கு முன் நான் கள்ளம் கபடில்லா
இளம் கன்னிப் பெண். இயற்கை எனக்களித்துள்ள அழகில் எனக்கு பெருமையும் கர்வமும் இருந்தது.
உனக்கு நினைவிருக்கா? ஒரு தரம் காலேஜ் டிராமாவில் நான் ஆக்ட் பண்ணினதைப் பார்த்து விட்டு
டைரக்டர் நாதன் என்னை தன் படத்தில் ஆக்ட் பண்ண அழைத்தார். அன்றிலிருந்து உறங்கிக் கிடந்த
உன் பேராசை பூதம் தலை தூக்க ஆரம்பித்தது. அதுவரை கௌரவமாக ஓடிக் கொண்டிருந்த நம் வாழ்க்கையும்
சரியத் தொடங்கியது.
சினிமா வாழ்க்கையில் கௌரவமாக வாழவே முடியாது
என்று நான் சொல்லவில்லை. எத்தனையோ பேர் சினிமா உலகில் இருந்துகொண்டு கௌரவமாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். ஆனால் உனக்கு காத்திருக்கப் பொறுமையில்லை. ஆரம்பத்தில் நிறைய
சான்ஸ்கள் வந்தது. பிறகு என் மார்க்கட் குறைந்தது. வாய்ப்புகள் தானாகவே வந்திருக்கும்.
ஆனால் செல்வத்தின் ருசி கண்டுவிட்ட உனக்கு பொறுமையில்லை. குறுக்கு வழிகளைத் தேட ஆரம்பித்தாய்.
எனக்கு போட்டி என்று நீ நினைத்த சில நடிகைகளைப் பற்றி அவதூறாக வதந்திகளைக் கிளப்பினாய்.
எனக்கு அது வெறுப்பாக இருந்தது. அவர்களுக்கும் என் போலவே தான் நிலைமை என்று ஏன் நீ
நினக்கவில்லை?
என் கட்டுடலையும் அழகையும் காட்டி ப்ரொட்யூஸர்களையும்
டைரக்டர்களையும் மயக்கி சான்ஸ் வாங்கி விட வேண்டும் என்று துடித்தாய். என்னை கிட்டத்
தட்ட ஒரு விலை மாதாக்கினாய். நானும் ஏமாந்தேன். அதற்கு
இரண்டு காரணங்கள். ஒன்று உன்னை நம்பினேன். இரண்டு, எனது அனுபவமின்மையும், இளமை வேகமும்.
முதலில் ஜகன். அவன் வாலிபன், அழகன், ஹீரோ.
அவனுடன் பழக என்னைத் தூண்டி விட்டாய். அவனும்
என் அழகில் மயங்கி என்னுடன் நெருங்கிப் பழகினான். என்னிடம் அன்பாகப் பேசினான். நிறைய
பரிசுகள் கொடுத்தான். அவன் என்னை காதலிக்கிறான், என்னை மணந்து கொள்வான் என்று மனக் கோட்டை
கட்டினேன். சீக்கிரமே அது தகர்ந்தது. அவன் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் கவர்ச்சி நடனம்
ஆட ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுத்தான். அவ்வளவு தான். அடுத்த படத்தில் நிச்சயமாக நல்ல
ரோல் வாங்கி கொடுப்பான் என்று சமாதானம் சொன்னாய். அவனோ என்னை சந்திப்பதையே கொஞ்சம்
கொஞ்சமாக குறைத்துக் கொண்டு பிறகு அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டான். அவனுக்கு புதிய
காதலி கிடைத்துவிட்டாள்.
பிறகு இதுவே உனக்கு வழக்கமாகிவிட்டது. எனக்கும்
உணர்வுகள் உண்டு என்று நீ நினைக்கவில்லை. வர வர உன் தேனொழுகும் வார்த்தைகளுக்குப் பின்னால்
ஒரு அதட்டலும், மிரட்டலும், ஒர் வலுக் கட்டாயப் படுத்தலும் இருப்பதை உணர்ந்தேன். என்னை
எங்கும் தனியாகப் போக விட மாட்டாய். ஒன்று நீ வருவாய் அல்லது உன் அடிமை லீலாவை கண்காணிக்க
அனுப்புவாய்.
கவர்ச்சி ரோல்களைத் தவிர ஒன்றும் உருப்பிடியாகக்
கிடைக்கவில்லை. நானோ அன்பான கணவன், குழந்தைகள் என்று ஒரு குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கினேன்.
ஆனால் நீயோ ஆண்களின் கீழ்த்தர ஆசைகளுக்கு என்னை பலி கொடுத்தாய். உன் தாயன்பு எங்கோ
மறைந்து விட்டது. அவர்கள் எல்லோரும் மிருகங்கள். என்னை ஒரு போகப் பொருளாக நினைத்தார்களே
தவிர ஒரு மனிதப் பிறவியாக நினைக்கவில்லை. கூண்டில் சிக்கிய பறவையாகத் துடித்தேன். மெதுவாக
மெதுவாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் என் மனதில் தலை தூக்கியது. தூக்க மருந்தா, தூக்குக்
கயிறா? உன் மேல் இருந்த வெறுப்பு என்னை தூக்குக் கயிறு வாங்க வைத்தது. நான் தூக்கில்
தொங்க வேண்டும், நீ அதைக் கண்டு துடிக்க வேண்டும் என்று ஆத்திரப் பட்டேன்.
“கவர்ச்சி நடிகை காமினி தற்கொலை! தன் தாயே
காரணம் எனக் கடிதம்!” என்றெல்லாம் தலைப்புச் செய்தி வெளியாகும். உன்னை எல்லோரும் காறித்
துப்ப வேண்டும் என்றெல்லாம் ஆத்திரப் பட்டேன்.
[பர்வதத்திற்கு
வியர்த்துக் கொட்டியது. முகம் பயத்தால் வெளிறியது. கைகள் கிடு கிடு என்று நடுங்கின]
எனக்கு சுருக்கு முடிச்சு எப்படிப் போடுவது
என்று கூடத் தெரியாது. உனக்கு நினைவு இருக்கிறதா? நடிகை மோனா தூக்குப் போட்டுக் கொண்டு
இறந்த போது, நாம் அதைப் பற்றி பேசினோம். அப்போது சுருக்கு முடிச்சு எப்படி போடுவார்கள்
என்று நான் உன்னைக் கேட்டேன்.
“அது ரொம்ப ஈஸி. நீ சின்ன பாப்பாவாக இருந்தப்ப
தூளி கட்ட நான் சுருக்கு முடிச்சு தான் போடுவேன். அப்ப தான் குழந்தை வெயிட் கீழே இழுக்கும்
போது முடிச்சு அவுகாம இன்னும் இருகிக்கும்.” என்று நீ கூறிவிட்டு விளையாட்டாக என் தோளிலிருந்து
துப்பட்டாவை எடுத்து சுருக்கு முடிச்சு போட்டு காட்டினாய். [பர்வதத்தின் முகம் மேலும் வெளிறியது.]
நான் அதை கவனமாகப் பார்த்துக் கொண்டேன்.
தனியாக இருக்கும் பொழுது சுருக்கு முடிச்சு போட்டு பழகிக் கொண்டேன். சரியான சந்தர்ப்பத்திற்காக
காத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என் தற்கொலை
எண்ணத்தை மாற்றியது. உனக்கு ஞாபகம் இருக்கும், போன முறை பெங்களூர் போன போது ஒரு நாள்
மழை காரணமாக அவுட் டோர் ஷூட்டிங்க் கான்ஸலாகிவிட்டது. அப்போது நாம் தங்கியிருந்த ஹோட்டலில்
முன்னால் லவுஞ்சில் உட்கார்ந்திருந்தோம். அங்கு சிலர் வந்து நம்மை ஒரு ஆன்மீக நிகழ்ச்சிக்குக்
கூப்பிட்டார்கள். அன்று வேறு அலுவல் ஏதும் இல்லாததால் நம்மில் சிலர் அந்நிகழ்ச்சிக்கு
சென்றோம்.
நீயும் வந்தாய்.
உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ, ஒரு நடுத்தர வயது மனிதர் பேசினார். சாந்தமான முகம், கண்களில் அளவில்லாத கருணை. பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது. உனக்குப் புரியாததால் நீ தூங்கிவிட்டாய்.
உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ, ஒரு நடுத்தர வயது மனிதர் பேசினார். சாந்தமான முகம், கண்களில் அளவில்லாத கருணை. பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது. உனக்குப் புரியாததால் நீ தூங்கிவிட்டாய்.
அவர் பேசப் பேச எனக்காகவே அவர் பேசியது போல்
எனக்குத் தோன்றியது. அவர் கூறிய சில வார்த்தைகள் என்னுள்ளே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
அவர் கூறினார், மிகுந்த பாக்கியத்தால் மனிதப் பிறவி கிடைக்கிறது. வந்து போகும் ஒவ்வொரு மூச்சும் அந்த இறைவனின்
வரப் பிரசாதம், வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் விலை மதிப்பற்றது. வாழ்க்கையில் அமைதி
ஆனந்தம் அடைவது நம் கையில் தான் இருக்கிறது என்றெல்லாம் அவர் பேசியபோது, தற்கொலை செய்துகொள்வது
என்ற என் முடிவு சரியானது அல்ல என்று தோன்றியது.
மேலும் அவர் கூறினார், “இவ்வுலகமே உன்னை
கை விட்டாலும் உன்னைப் படைத்தவன் உன்னை கை விட மாட்டான். நாற்புறமும் இருள் சூழ்ந்தாலும்
உன் இறைவன் உன் கூடவே இருக்கிறான் என்பதை மறக்காதே. அந்த எல்லையில்லா சக்தி மேல் நம்பிக்கை
வை. உனக்கு நிம்மதி கிடைப்பது நிச்சயம்.”
அவர் இன்னும் நிறைய பேசினார்.
அவர் பேசப் பேச நிராசை நிறைந்திருந்த என்
மனதில் நம்பிக்கை பிறக்கலாயிற்று. இன்னும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. புது
வாழ்வு தொடங்க வேண்டும் என்ற பேராவல் என் மனதில் தோன்றியது. இதற்காக நான் அந்த மகானுக்கு
என்றென்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன்.
புது வாழ்வு எப்படி தொடங்குவது? இதைப் பற்றி
நான் மிகவும் யோசித்தேன். இங்கு உன்னுடன் இருந்தால் அது முடியவே முடியாது என்று எனக்கு
நிச்சயமாகத் தோன்றியது. நான் முற்றிலும் மாறான ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்.
அதை ஏற்றுக் கொள்ள உன்னால் முடியாது. மேலும் மேலும் இந்த நரகக் குழியில் என்னை இழுக்கப்
பார்ப்பாய். ஆகவே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். அதற்காக திட்டம் போட ஆரம்பித்தேன்.
இரகசியமாக ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.
உனக்கு இந்தக் கடிதம் கிடைக்குமுன் நான்
வேறு நகரத்திற்கு விமானம் ஏறியிருப்பேன். ஆனால் என்னைத் தேட முயற்சி செய்யாதே. என்
நினைவுகள் என்ற தலைப்பில் என் திரையுலக அனுபவங்களை விளக்கமாக எழுதி வைத்திருக்கிறேன்.
நீ போலீஸுக்கு ரிபோர்ட் செய்தாலோ அல்லது பத்திரிகையில் விளம்பரம் செய்தாலோ அதை நான்
பிரசுரத்திற்கு கொடுக்க நேரிடும். அதை பிரசுரிக்க பத்திரிகையாளர்களும் டிவியிலும் போட்டி
போட்டுக் கொண்டு வருவார்கள். அது பிரசுரமானால் உனக்கு நன்றாக் இருக்காது. ஏனெனில் எனக்கு
சினிமா சான்ஸ் வாங்க நீ செய்ததெல்லாம் அதில் பிட்டு பிட்டு வைத்திருக்கிறேன்.
ஆனால் பயப்படாதே. நீ எனக்கெதிராக ஒன்றும்
செய்யவில்லை என்றால் கையெழுத்துப் பிரதியும் என்
பெட்டியில் பத்திரமாக இருக்கும்.
ஆகவே என்னைத் தேட முயற்சி செய்யாதே. என்
பெயரைக் கூட மாற்றிக் கொண்டுவிட்டேன்.
வருத்தப் படாதே. என் பேரிலும் தப்பு இருக்கிறது
என்பதை உணர்கிறேன். இப்போது என் மனதில் உன் மேல் கோபமோ வருத்தமோ இல்லை.
என் நகைகள் எல்லாம் உனக்கு விட்டுச் செல்கிறேன்.
வீடும் இருக்கிறது. பாங்கிலும் போதுமான பணம் இருக்கிறது. நீ சுகமாக வாழலாம். நான் எனக்கு
மிகக் குறைவாகவே எடுத்து செல்கிறேன். இதற்கு மேல் கூறுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை.
பேபி.
கடிதத்தை வாசித்து முடித்த பர்வதம் திக்பிரமை
பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தாள். திடீரென்று அடித்த டெலிபோன் மணி அவளை திடுக்கிடச்
செய்தது. மார்பு பட படவென்று அடித்துக் கொள்ள நடுங்கும் கையால் தொலைபேசியை எடுத்து
“ஹலோ” என்றாள்.
“ஹலோ! காமினி அம்மாதானே? நான் தான் பூபதி.”
என்ற குரலைக் கேட்டதும் பர்வதம் திடுக்கிட்டாள்.
“ஹலோ! உங்களுக்கு ஒரு சந்தோஷ சமாச்சாரம்
சொல்லப் போறேன். நம்ம புதுப் படத்திற்கு காமினி தான் ஹீரோயின்………ஹலோ! .என்ன பதிலே காணும்? சந்தோஷத்தில
பேச்சே வரல்லியா? பரவாயில்லை. புதுசா ஒரு ஸ்டோரி கெடச்சிருக்கு. நம்ம ரமணி ஸார் தான்
எழுதியிருக்காரு. ரொம்ப பவர்ஃபுல் ஸ்டோரி. ஒரு கவர்ச்சி நடிக்கையின் மனப் போராட்டங்கள்,
அவள் வாழ்க்கையில் அவள் படும் பாடு இதையெல்லாம் அருமையா சித்தரிச்சிருக்காரு. ஸ்க்ரிப்டை
படித்ததுமே காமினி தான் கதாநாயகின்னு தீர்மானம் பண்ணிட்டேன். என்ன பதிலையே காணும்?
”
”
“உம், சொல்லுங்க.” என்றாள் பர்வதம் ஹீனஸ்வரத்தில்.
“நாளைக்கு புதன்கிழமை, அமாவாசை வேறு. நெறைஞ்ச
நாள். நாளைக்கே உங்க வீட்டுக்கு வரோம். கான்ட்ரேக்ட் ஸைன் பண்ணிடலாம். அப்பவே உங்க
வீட்டு டிபனையும் ஒரு கை பார்த்திடலாம். சரிம்மா, வச்சிடறேன்” பூபதி உற்சாகமாக பேசி
முடித்தார்.
பர்வதத்திற்கு தலையைச் சுற்றி மயக்கம் வந்தது.
கையிலிருந்து ரிஸீவர் நழுவிக் கீழே விழுந்தது.
நடந்தது ஒன்றும் அறியாத லீலா வெஜிடபிள் போண்டாக்களை
பொரித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment