பிரகாசம் அருகில் இருந்து தைரியம் கொடுத்து உற்சாகப்
படுத்தியதால் தான் செல்வனால் பரிட்சை எழுத முடிந்தது. கேள்வித்தாளை கையில்
எடுத்ததும் அவனுக்கு தன் உடல் வேதனையெல்லாம் மறந்துவிடும். ஏதோ ஒரு சக்தி
உடலுக்குள் எழ, கிடுகிடுவென்று பதில்களை எழுதுவான். பிறகு வந்து சோர்ந்து
படுத்துவிடுவான். ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் அவனிடம் மிகுந்த அன்புடன் நடந்து
கொண்டனர்.
பரிட்சை முடிந்ததும் செல்வனின் உடல்நிலை பூரண குண்மாக
ஒரு மாதமாயிற்று. பரிட்சை முடிந்ததுமே பிரகாசம் சென்னை சென்றுவிட்டார். ரமணியும்
ராம்குமாரும் செல்வனின் கூடவே இருந்தனர். ராம்குமார் தனிமையில் செல்வனிடம் தான்
நடந்து கொண்டதிற்கெல்லாம் மன்னிப்பு கோரினான். கிருஷ்ணா நகர் காலனி மக்கள்
அனைவரும் ஒருமித்து செல்வனிடம் காட்டிய அக்கறையைக் கண்டு வள்ளியும் முருகேசனும்
நெகிழ்ந்து போனார்கள்.
பரிட்சை முடிவுகள் வெளியாயின. அனைவரும்
எதிர்பார்த்தது போலவே செல்வன் பள்ளியிலேயே முதலாவதாகத் தேறியிருந்தான்.
தமிழ்நாட்டில் மூன்றாவது ராங்க். முடிவுகள் வெளியான அன்று முருகேசன் காலனியில்
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினான். ரமணியும் ராம்குமாரும் நல்ல மதிப்பெண்கள்
வாங்கி பாஸ் செய்துவிட்டார்கள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு பள்ளியில் செல்வனுக்கு
ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு பிரகாசம் மனைவியுடன் வருவதாகக்
கூறியிருந்தார். செல்வன் அதிகாலையிலேயே ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டான்.
வண்டியிலிருந்து இறங்கிய பிரகாசம் மனைவியை கையைப் பிடித்து அழைத்து வந்தார்.
அவருடைய மனைவி கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். செல்வனுக்கு ஏதோ ஒரு உணர்வு
ஏற்பட்டது. செல்வனின் அருகில் வந்த பிரகாசம், “சுகுணா, செல்வன்
வந்திருக்கான்.”என்று சொல்லிக்கொண்டே செல்வனின் கைகளை எடுத்து தன் மனைவியின்
கைகளில் வைத்தார். செல்வனுக்கு அப்போதுதான் புரிந்தது, பிரகாசத்தின் மனைவி பார்வையற்றவள்.
“செல்வா, என் பாராட்டுக்கள்.” என்றாள் சுகுணா
தேனினும் இனிய குரலில். செல்வன் திக்பிரமை பிடித்தவன் போல் நின்றான். அவனுடைய
அதிர்ச்சியைப் பார்த்து பிரகாசம் புன்னகை புரிந்தார்.
“வா, செல்வா, போகலாம்.” என்றார். இயந்திரம் போல்
அவர்களை அழைத்துக்கொண்டு, அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு
அழைத்துச் சென்றான்.
அண்ணி பார்வையற்றவள்! இதை அவனால் தாங்க முடியவில்லை.
“செல்வா, நீ மேலே படிக்க சென்னை வந்து விடு. நான்
வேலை பார்க்கும் கல்லூரி வளாகத்திலேயே உன் அப்பாவுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு
செய்திருக்கிறேன். அவருக்கு செயற்கை கால் பொறுத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறேன்.
உன் அம்மா இதுவரை உழைத்தது போதும். இன்மேல அவங்க உங்களைப் பார்த்துக்கொண்டால்
போதும்.”
செல்வன் முகத்தில் இன்னும் அதிர்ச்சி நீங்கவில்லை. அவர்
கூறியதெல்லாம் அவன் காதில் அரைகுறையாகத் தான் விழுந்தது. அதனால் பிரகாசம் அவனைத்
தனியாக அழைத்துப்போய் சொன்னார், “செல்வா, உன் உணர்வு எனக்கு தெரியும். அதனால் தான்
முதலில் அண்ணியைப் பற்றி சொல்லவில்லை.
சுகுணா பெயருக்கு ஏற்றபடி இனிய சுபாவம் உள்ளவள். மிக இனிமையாகப் பாடுவாள். ஒரு
நிகழ்ச்சியில் அவள் பாடியதைக் கேட்டு தான் நான் அவளை
மணக்க விரும்பினேன். என்னைப் பொறுத்தவரை அவளுடைய குறை எனக்கு ஒரு குறையாகத்
தெரியவில்லை. ஆனாலும் உனக்கு ஒரு குட் ந்யூஸ் சொல்றேன். அவளுக்கு கண்விழி
பொறுத்தப்படும் ஆபரேஷன் செய்யப் போறாங்க. அவளுக்கு கண் பார்வை கிடைக்க நல்ல
வாய்ப்பிருக்கு. அதனால் வருத்தப் படாதே. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றார்.
செல்வனுக்கு ஆறுதலாக இருந்தது. வள்ளிக்கோ பிரகாசம்
ஒரு தெய்வமாக தோற்றமளித்தார். அவர் இருக்குமிடமெல்லாம் ஒளி கூடிவிடுகிறதே!
அன்று மாலை பாராட்டுவிழாவில் சுகுணா தன் இனிய குரலில்
இறைவணக்கம் பாடியது அனைவரையும் கவர்ந்தது. பிறகு பேசிய பள்ளி முதல்வர் செல்வனால்
பள்ளிக்கே பெருமை என்று கூறிவிட்டு ஆரம்பத்தில் தான் அவனுக்கு அட்மிஷன் கொடுக்க
மறுத்தையும் நினைவு கூர்ந்தார். பிரகாசம் தான் செல்வன் என்கிற வைரத்தை செதுக்கி
உருவாக்கியவர் என்று அவர் பிரகாசத்தை பாராட்டியபோது அனைவரும் கை தட்டினார்கள்.
செல்வனுக்கு மேல் படிப்புக்கு ஸ்காலர்ஷிப்
கிடைத்திருப்பதை அவர் அறிவித்த போது அவையில் ஒரே கரகோஷம். பலர் தனிப்பட்ட முறையில் அவனுக்கு பரிசளித்தார்கள்.
கிருஷ்ணா நகர் காலனி ஜனங்களும், படித்தவர்களும்,
பணக்காரர்களும், சரிசமமாக அமர்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. புது உடை
அணிந்துகொண்டு வள்ளியும் முருகேசனும் மணிமேகலையுடன் முதல் வரிசையில்
அமர்ந்திருந்தனர். மகள் செல்லியுடன் உட்கார்ந்திந்த ராமாத்தாளுக்கு வாயெல்லாம் பல். செல்லிக்கு செல்வன் தான் ஹீரோ.
இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த காவேரியம்மாள் முகத்தில் புன்னகையுடன் காட்சியளித்தாள். "எனக்கு செல்வனை குழந்தையிலிருந்தே தெரியும். சமத்து. நல்லா வருவான்னு தெரியும். என் பிள்ளை ராமுவுக்கு ரொம்ப ஃப்ரெண்டு" என்று தன் பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிக்கொண்டிருந்தாள்.
தொலைக்காட்சி பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் கணிசமாக
வந்திருந்தனர். முதல்வர் வீடியோவிற்கும் ,
ஃபோட்டோவிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
பிரகாசம்
பேசும்போது சொன்னார், “செல்வனுக்கு இன்று இந்தப்
பெருமை கிடைத்திருப்பது அவனுடைய தாயின் விடாமுயற்சியாலும் தியாகத்தாலும் தான். அவங்க எவ்வளவு கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அவனை படிக்கவைத்தாங்க என்பது சிலருக்கே
தெரியும். இது மாதிரி ஒவ்வொரு தாயும் செயல்படுவாளேயானால் இந்தியாவின் எதிர்காலம்
பொற்காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை”
பாராட்டுவிழா
முடிந்ததும் அனைவரும் செல்வனை சூழ்ந்து கொண்டனர். வள்ளி தன் ஆனந்தக் கண்ணீரை
யாரும் அறியாவண்ணம் துடைத்துக் கொண்டாள்.
முற்றும்.
No comments:
Post a Comment