Tuesday, September 6, 2016

இப்படியும் நடக்கலாம்!

ஹல்லோ!  ஹல்லோ!
ஹல்லோ!  யாரு?”
மிஸ்டர் கங்காதரனா?”
ஆமா. நீங்க யாரு?”
என் பேரு கோபாலன். ஸார். சமீபத்துல தான் சர்வீஸ்லேர்ந்து ரிடயர் ஆனேன்.  விஷயம் என்னன்னா எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு கல்யாணம் செய்யணும்…”
, அதுவா விஷயம்? மிஸ்டர் கோபாலன், எனக்கு அந்த மாதிரி பையன் யாரும் இல்லையே! என் பசங்கள் எல்லாம் ஸ்கூலுக்கு போறவங்க.”
இல்ல ஸார், நான் அதுக்கு சொல்லல்ல. என் பொண்ணுக்கு வரன் தேடி முடிச்சாச்சு. உங்க கிட்ட வேற ஒரு உதவி கேக்கறதுக்குத் தான்கால்பண்ணினேன்.”
ஸாரி, பணம் கேட்டிங்கன்னா என்னால குடுக்க முடியாது.” கண்டிப்பாக சொன்ன கங்காதரன் ஃபோனை ஆஃப் பண்ணப் போனான்.
ஸார், ஸார், நான் பெரிய எமௌன்ட்  எதுவும் உங்க கிட்டேயிருந்து கேக்கல்ல. பகவானோட அருளால எனக்கு போதுமான வருமானம் இருக்கு. என்ன நடந்துதுன்னு சொல்றேன். என் பொண்ணுக்கு ஆறு வருஷமா கல்யாணம் முடிக்கணும்னு பாத்துண்டிருக்கேன்அவ ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குஅதனால அவ கல்யாணம் செட்டில்ஆகாம தள்ளிப் போயிண்டே இருந்துது. எனக்கு ஒரே கவலை.
கோபாலன், எனக்கு நெறைய வேலை இருக்கு…..”
ஒரே ஒரு நிமிஷம் கேளுங்கோ, நான் ரொம்ப கவலப் பட்டேன் ஸார். அப்பொ என் மனைவி பெரிய ஸ்வாமிகள போய் பார்த்து நம்ப பிரச்னையப் பத்தி சொல்லுங்கோன்னு யோசனை தெரிவிச்சா. அவர் நிச்சயமா நல்ல வழி காமிப்பார்னு சொன்னா. சரின்னு நானும் ஸ்வாமிகளப் போய் பார்த்தேன்,  ஸார். என்னோட கவலயை அவர்கிட்ட தெரிவிச்சேன். அவர் நான் சொன்னதை எல்லாம் பொறுமையா கேட்டார்.  பிறகு  சொன்னார்,  “பகவான்கிட்ட பிரார்த்தனை செஞ்சுக்கோ, பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனா பிச்சையெடுத்து கிடைக்கற  பணத்துல தாலி செய்யறதா வேண்டிக்கோ. ஒரு மஞ்சத்துணில ஒரு ரூபா காசை முடிஞ்சு உன் ஆத்துல சாமிகிட்ட வையி. வச்சுட்டு பொண்ணு கல்யாணம் ஆகணும்னு மனஸார வேண்டிக்கோ,  உன் பொண்ணு கல்யாணம் ஆறு மாசத்துக்குள்ள நிச்சயமாயிடும்” அப்டீன்னு சொன்னார். ஸார், நீங்க நம்ப மாட்டீங்க, நான் காசை முடிஞ்சு வச்ச ரெண்டு வாரத்துலேயே என் பொண்ணுக்கு ஒரு நல்ல எடத்துல கல்யாணம் நிச்சயமாயிடுத்து. அடுத்த மாசம் கல்யாணம். இப்போ நான் என்  வேண்டுதல, அதாவது பிச்சை எடுத்து தாலி வாங்கணும், அதை நிறைவேத்தணும். எதேச்சையா உங்க பேரை டைரக்டரில பார்த்தேன். என் அப்பா பேரும் கங்காதரன் தான். அதுனால தான் உங்கள கூப்படலாம்னு தோணித்து. நீங்க எதாவது கொடுங்க, ஒரு ரூபாயாக இருந்தாலும் வாங்கிக்கறேன்.”
கங்காதரனுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.
கோபாலன் மேலே தொடர்ந்தார். “ஸார்நீலகண்டன்ன்னு இந்த ஊர்ல இருக்கார்அவரும் உங்க மாதிரி ஆபீஸர் தான்அவர் 500 ரூபா குடுத்து ஹெல்ப் பண்ணினார். அவர் ஃபோன் நம்பர் தரேன். நீங்க வேணும்ன அவர் கிட்ட  விசாரியுங்கோ. “
கோபாலன் ஒரு நம்பர் தந்தார்.
மனைவி பத்மாவிடம் பேசிவிட்டு கங்காதரன் கூறினான், “ ஓகே, கோபாலன், நான் அவர்கிட்ட பேசறேன். நீங்க 4 மணிக்கு வாங்கோ. எனக்கு சரின்னு பட்டுதுன்னா என்னால முடிஞ்சத தரேன்.”
நீலகண்டனிடம் பேசிய போது அவர்,  “ஆமா, கங்காதரன்! அவர் நல்லவரா வும் நேர்மையானவராவும் தான் தெரிஞ்சார். அதனால நான் 500 ரூவா கொடுத்தேன்” என்றார்.
அன்று மாலை கோபாலன் வந்தார்நடுத்தர வயது, வேட்டி, சட்டை. நெற்றியில் வீபூதி. சாதுவான முகம்அமைதியாகவும் மரியாதையாகவும் பேசினார். கங்காதரன் 500  ரூபாய் கொடுத்தான். கங்காதரனின் தங்கை கிரிஜா, “நல்ல காரியம். நானும் 200 ரூபா தரேன்.” என்றாள்.
ரூபாயை வாங்கிக்கொண்ட  கோபாலன், ”தேங்க்ஸ் சார், தேங்க்ஸ் மேடம். நான் இந்த உதவியை மறக்கவே மாட்டேன். கல்யாணத்திற்கு பத்திரிகை அனுப்பறேன். கட்டாயம் வந்து என் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணுங்கோ.”
கோபாலன் போய் விட்டார்.
இது நடந்து ஒரு மாசம் இருக்கும்.  கங்காதரனின் ஆப்த நண்பன் பஞ்சு (பஞ்சாபகேசன்) தன் மனைவி உமாவுடனும் மகன் சுபாஷுடனும் கங்காதரன் வீட்டிற்கு வந்தான்.  கங்காதரனும், பஞ்சாபகேசனும்  காலேஜ் நாட்களிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் சந்தித்து வம்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். பத்மாவும் உமாவும் நல்ல சிநேகிதிகள்.
பத்மா நல்ல விருந்து தயாரித்திருந்தாள்.  எல்லோரும் சாப்பாட்டை ஒரு கை பார்த்தார்கள். பிறகு அரட்டையடிக்க ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரம் கழித்து பஞ்சு சொன்னான், “கங்கா, போன வாரம் எங்க வீட்ல வேடிக்கையா ஒண்ணு நடந்துது.”
“அப்படியா, என்ன நடந்துது?”
“கோபாலன்னு ஒத்தன் என்னை ஃபோன்ல கூப்டான்.  அவன் விசித்திரமா ஒரு கதை சொன்னான். அவனுக்கு ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்காளாம்..
பத்மா, “ஏன்னா, அவர் தானே....” என்று சொல்ல ஆரம்பித்தவளை  கங்காதரன் முறைத்து ஒரு பார்வையால் அடக்கினான்.
இதை கவனிக்காத பஞ்சு மேலே தன் கதையைத் தொடர்ந்தான்.
“அவன் சொன்னான், தன் பொண்ணுக்கு பல வருஷமா வரன் தேடிக்கொண்டிருந்தானாம்.  அவ ஜாதகத்துல செவ்வா தோஷம் இருக்கறதுனால வரனெல்லாம் தட்டி போயிண்டே இருந்துதாம். அவர் பெரிய ஸ்வாமிகள் கிட்ட போய் தன்னோட பிராப்ளத்த சொன்னாராம். அவர்  இவன ஒரு வேண்டுதல் செய்துக்க  சொன்னாராம். பொண்ணுக்கு  கல்யாணம் நிச்சயமானா பிச்சை எடுத்து தாலி பண்றதா வேண்டிண்டு ஒரு காசை மஞ்சத்துணில கட்டி வையி. கல்யாணம் நிச்சியமாயிடும்னு சொன்னாராம். அதே மாதிரி நல்ல வரன் கெடைச்சு கல்யாணம் நிச்சியமாயிடுத்தாம்.  அதுனால அவன் தன் வேண்டுதல நெறைவேத்தணும்னு நெனச்சானாம். அவன் என் பேரை தேர்ந்தெடுத்தானாம் ஏன்னா அவன் தாத்தா பேரும் பஞ்சாபகேசனாம்.”
பஞ்சு பெரிதாக சிரித்தான்.
பத்மா மறுபடியும் எதோ சொல்ல வாயெடுத்தாள், ஆனால்  கணவன்  முறைத்ததைப்பார்த்து  வாயை மூடிக்கொண்டாள்.
“அப்புறம்?” கங்கா கேட்டான்.
“பொறுமையா கேளு. அவன் சொன்னான், “இப்ப தங்கம் விக்கற வெலைல அரைப் பவுன்ல செஞ்சாலும்  கூலி எல்லாம் சேர்த்து தாலி பண்ண 12,000 ஆயிடும். எப்படியோ பிச்சை எடுத்து எடுத்து அந்த பணத்தை சேர்க்கணும். பரவாயில்லை. நீங்க எது கொடுத்தாலும் சரி. நீங்க ஒரு ரூபா குடுத்தாக்கூட வாங்கிக்கறேன்.”
பத்மாவின் முகத்தில் தவிப்பு தெரிந்தது.
“நீ எதாவது குடுத்தியா?”
“அதத்தான் சொல்ல வரேன்.  நான் குடுக்கல்லாம்னுதான் நெனச்சேன். ஆனா என் பிள்ளை இருக்கானே சுபாஷ் அவன் பலமா கையை ஆட்டி எதோ சைகை செய்தான். நான் ஸ்பீக்கர ஆஃப் பண்ணிட்டு அவன் கிட்ட என்னன்னு கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன?”
“அவன் என் கிட்ட எழுதி காமிச்சான்.  அப்பா, இது ஷெர்லாக் ஹோம்ஸ் கதைல வர மாதிரியே இருக்கு. ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் கதைல ஒருத்தன் இப்படி தான் எல்லாரையும் ஏமாத்துவான். சாதாரணமா இல்லாத ‘அன்யூசுவல்’ பேரை டைரக்டரிலேர்ந்து ‘சூஸ்’ பண்ணி அது தன்னோட அப்பா, இல்லாட்டா தாத்தா பேருன்னு சொல்லி அத வச்சு ஏமாத்துவான்.”
பத்மாவின் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
பஞ்சு தொடர்ந்தான். “என் பிள்ளை, அப்பா, அவன் உங்கள ஏமாத்தறான்னு தோண்றதுன்னு சொன்னான்”
பஞ்சு தண்ணீர் குடிப்பதற்காக கதையை நிறுத்தினான்.  பத்மாவும் கங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கங்கா பத்மாவை  பேசாதே என்று விரலை ஆட்டி சைகையால் எச்சரித்தான். பத்மாவுக்கு ஒரே குழப்பம்!
பஞ்சு அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தான். “டிடக்டிவ் கத மாதிரி இல்லே? ஆமா, அப்படித்தான் இருந்துது."
“அது சரி, அதுக்கு அப்புறம் என்ன நடந்துது?”
“சுவாரசியமா இருக்கு இல்லே? கொஞ்சம் பொறுமையாக் கேளு. நான் அந்த ஆள்கிட்ட 4 மணிக்கு வா, பணம் தரேன்னு  சொன்னேன்.  அப்புறம் நாங்க டிஸ்கஸ் பண்ணி ஒரு திட்டம் போட்டோம். கங்கா, உனக்கு கதிர்வேல தெரியும் இல்லே? நம்ம கூட ஸ்கூல்ல படிச்சான். அப்புறம் ஆக்டராயிட்டான்.”
“கதிரத் தெரியுமே. ”
“அவன கூப்பிட்டு எங்க ப்ளானை அவனுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணினேன்.”
கங்கா கொஞ்சம் நிமிர்ந்து,”என்ன ப்ளான்?” என்று கேட்டான்.
“ப்ளான் என்னன்னா கதிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி வேஷம் போட்டுட்டு எங்க வீட்டுக்கு சுமார் 3.30 மணி போல வரணும். இந்த ஆள் வரச்சே அவன் அங்க இருக்கணும். இந்த கோபாலன் நேர்மையான பேர்வழியா இருந்தா போலீஸ்காரன பார்த்தா அவனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனா அவன் ஒரு ஃப்ராடா இருந்தா போலீஸைப் பார்த்தா நடுங்குவான். இது தான் எங்க ப்ளான். எல்லாம் ப்ளான்படி நடந்துது. கதிர் நிஜ போலீஸ் டிரஸ்ல ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தான்.”
“டேடி, கதிர் அங்கிள் நிஜ இன்ஸ்பெக்டர் மாதிரியே இருந்தார் இல்லே?”  என்றான் சுபாஷ்.
“ஆமாம். அன்னிக்கு அவனோட ஆக்டிங்க்குக்கு என்ன அவார்ட் வேணுனாலும் குடுக்கலாம்.
“சரியா நாலு மனிக்கு கோபாலன் வீட்ல நுழைஞ்சான்.  சோஃபால உக்கார்ந்திருந்த கதிரப் பார்த்ததும் ஆடிப் போய்ட்டான்.  ஏதோ முனகிட்டு திரும்பி போக பார்த்தான். ஆனா நான் அவன போக விடல்ல. அவன “வாங்க, கோபாலன். உள்ள வாங்கோன்னு கூப்பிட்டு உட்காரச்சொன்னேன். பாக்கியெல்லாம் கதிர் கைல விட்டுட்டேன். கதிரப் பார்த்து கோபாலன் பயத்துல வெளிறிப் போய்ட்டான்.
நாங்க எல்லாரும் சுவாரசியமா சீரியல் பாக்கற மாதிரி எஞ்சாய் பண்னிட்டு இருந்தோம். கதிரோட அதிகாரமான விசாரணையில் அதிர்ந்து போன கோபாலன் எல்லாத்தையும் கக்கிட்டான்.  அவனோட “மோடஸ் ஆப்பரேண்டி” அதாவது அவனுடைய வழக்கமான யுக்தி, ஒரு புது எடத்துக்கு போவது, அங்குள்ள டெலிஃபோன் டைரக்டரில தேடி ஒரு “அன்யூஷுவல்” பெயரை தேர்ந்தெடுப்பது.”
“டேடி, அவன் உங்க பேர சூஸ் ஏன் பண்ணினான்னா பஞ்சாபகேசங்கற பேரு ரொம்ப அன்யூஷுவல்”” இது சுபாஷ்.
“ஆமா, ரொம்ப அன்யூஷுவல். உம்... சொல்லப் போனா, கங்கா,  உன் பேரு கூட அன்யூஷுவல் தான். கங்காதரன்கர பேரு சாதாரணமா யாருக்கும் இருக்காது.” பஞ்சு கங்காவை உற்றுப் பார்த்தான்.
“சரி, சரி. அப்புறம் என்ன ஆச்சு? கதைய முடி”
“ஒரு ஏமாந்தாங்குளிய கண்டுபிடிச்சு {கங்கா சங்கடத்தில் நெளிந்தான்} தன் கல்யாணம் ஆகாத பொண்ணு, செவ்வா தோஷம் அது இதுன்னு அந்த எல்லா கதையயும் அவிழ்த்து விடுவான். எப்படி தன்னோட தாத்தா பெயரா இருந்ததால அவன் பேர சூஸ் பண்ணினான்னு புருடா விடுவான். ஒரு ரூபா குடுத்தாலும் வாங்கிக்கறேன்னு சொல்வான். அவனோட மாஸ்டர் ஸ்ட்ரோக் மஹா ஸ்வாமிகள் சொன்னார்ங்கறது தான்! நெறைய பேருக்கு ஸ்வாமிகள்னா மரியாதையும் பக்தியும் ஜாஸ்தி. அவனோட இந்த யுக்தி நல்லா வேல செஞ்சுது. முக்காவாசிப் பேரும் தாராளமாவே பணம் கொடுத்திருக்காங்க. சாமர்த்தியமா அவன் எடத்த மாத்திண்டே இருப்பான்.
கடைசில அவன் கதிர் கால்ல விழுந்தான். “என்னை விட்டுடுங்கோ, ஸார்!”ன்னு  கெஞ்சினான்.
கதிர் அதிகாரத்தோரணையோட, “சரி, இந்த வாட்டி பொழைச்சுப்போ! நெக்ஸ்ட்  டைம் நேரா ஜெயில் தான்” ன்னு சொல்லிட்டு அவன விட்டுட்டான். அவன் தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டான்.”
கதை சொல்றதுல மூழ்கியிருந்த பஞ்சு, கங்காவும் பத்மாவும் அசாதாரணமான அமைதில இருந்ததை கவனிக்கல்ல.
“பத்மா, காபி கொண்டாயேன்” என்றான் கங்கா. உடனே  பத்மா எழுந்திருந்து காபி கலக்க சமையலறைக்கு சென்றாள். அவள் கூட உமாவும் உள்ளே போனாள்.
காபி குடித்துவிட்டு பஞ்சுவும் குடும்பமும் விடைபெற்றுக்கொண்டு போனார்கள்.
கங்கா நிம்மதியுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “ பத்மா, நல்லவேளை நாம ஏமாந்ததப்பத்தி நீ ஒண்ணும் உளறாம இருந்தே. பஞ்சுவுக்கு தெரிஞ்சுதோ அவ்வளவுதான், என்ன கிண்டல் செஞ்சு செஞ்சு கொன்னுடுவான்.”
“அயிய்யோ, நான் அத உமாகிட்ட சொல்லிட்டேனே! அவ கிச்சனுக்கு வந்தாளா, பேச்சுவாக்குல நான்   நாம ஏமாந்து போய் அந்த ஆளுக்கு பணம் குடுத்தத அவ கிட்ட சொல்லிட்டேன்.”
கங்கா கத்தினான், “மக்கு! உளறுவாய்!”
“அயிய்யோ! இப்போ என்ன செய்யறது? நான் வேணும்னாஅவளுக்கு ஃபோன் பண்ணி ஆத்துக்காரர்கிட்ட சொல்லாதேன்னு சொல்லிடவா?”
“போறும். மேல மேல குட்டைய கொழப்பாதே.”


No comments:

Post a Comment