Thursday, October 6, 2016

திருடினது யார்?

எல்லாரும் ஆர்த்தியை புஸ்தகப்புழு என்பார்கள். எதாவது புத்தகத்தில் மூழ்கியிருப்பாள் அல்லது லேப்டாப்பில் எதாவது செய்து கொண்டிருப்பாள். எப்போதும் கலைந்த கூந்தலுடன், மூக்கில் மூக்குக்கண்ணாடியுடன் அவள் புஸ்தகப்புழுவாக காட்சியளிப்பாள்.

ஒரு நாள் ஆர்த்தி புத்தகத்தில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்தாள். அவளுடைய அம்மா, “ஆர்த்தி, புஸ்தகத்த மூடு. எப்போ பார்த்தாலும் படிச்சுக்கிட்டே இருந்தா ஒடம்பு எனனத்துக்கு  ஆகும்? போய் காத்தாட ஒரு வாக் போய்ட்டு வா.” என்று அதட்டினாள்.

“ஊம்? என்ன? என்ன சொன்னே, அம்மா?” என்றாள் ஆர்த்தி தலையை புத்தகத்திலிருந்து தூக்காமல்.

அவள் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கிய அவள் தாய், “எந்திரி, இந்த நிமிஷம் ஷூ போட்டுட்டு வாக் போறே. இப்படி வீட்டிலேயே அடைஞ்சு கெடந்தா ஒடம்பு கெட்டுப்போகும். போ, கெளம்பு!” என்று  அதட்டினாள்.

“சரி, போறேம்மா” என்று மனசில்லாமல் எழுந்து உடை மாற்றிக் கொண்டு ஷூ அணிந்து கொண்டு கிளம்பினாள். வேகமாக நடந்தாள். அவள் மனம் இன்னும் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலேயே இருந்தது. திடீரென யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் அவளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. 
சுற்று முற்றும் பார்த்தாள்.  சாலை ஓரத்தில் ஓரமாக உட்கார்ந்து ஒரு பெண் முழங்காலில் தலையை புதைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அருகில் ஆர்த்தி வரும் சப்தம் கேட்டு அந்தப் பெண் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆர்த்திக்கு ‘ஷாக்’க்காக இருந்தது. அது வேணி! அவள் வீட்டில் வேலை செய்யும் பெண்!

ஆர்த்தி அவள் அருகில் சென்று, “வேணி, ஏன் அழுதுட்டிருக்கே? என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
ஆர்த்தியைப் பார்த்ததும் வேணி பலமாக அழ ஆரம்பித்தாள். களைத்திருந்த அவளைப் பார்க்க ஆர்த்திக்கு பாவமாக இருந்தது.  “வேணி, சாப்பிட்டியா?”

இல்லை என்று வேணி தலையாட்டினாள்.

“சரி, வா. வீட்ல போய் எதாவது சப்பிடலாம். வா, எந்திரி.”

“வேண்டாம், அக்கா, எனக்கு ஒண்ணும் வேண்டாம்.” வேணி பலமாக விம்மிக்கொண்டு, “அக்கா, என்னை திருடின்னு சொல்லிட்டாங்க. நான் எதுக்கு உயிரோட இருக்கனும்? நான் செத்துப் போறேன்.”

ஆர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“யாரு உன்னை திருடின்னு சொன்னாங்க?”

“அவங்க தான். சிந்து வீட்ல. நான் அங்கேயும் போறேன் இல்லே? அவங்க வீட்ல ஒரு தங்க செயினைக் காணுமாம். நான் தான் அத எடுத்தேன்னு சொல்றாங்க. நான் செயினை திருப்பிக் குடுக்கல்லேன்னா என்னை போலீஸ்ல புடிச்சு குடுத்துருவாங்களாம். நான்  செயினை எடுக்கவே இல்லையே, எப்படி திருப்பி குடுக்க முடியும்? எனக்கு பயம்மா இருக்கு அக்கா. போலீஸ் என்னை அடிப்பாங்க.”

வேணிக்கு பதினைந்து வயது தான் இருக்கும். ஏழை. படிக்காதவள். இரண்டு, மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்தாள். அவள் அப்பா குடிகாரனாம். அவளுடைய அம்மாவும் அவளும் உழைத்து சம்பாதிக்கும் கொஞ்சம் பணத்தில் தான் அவர்கள் குடும்ப வண்டி ஓடியது.

ஆர்த்தி வேணியின் கையை பிடித்து அன்புடன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

“அம்மா, வேணிக்கு எதாவது திங்க குடு. அவ ஒண்ணுமே சாப்பிடலையாம்.”
ஆர்த்தியின் அம்மா வேணிக்கு ரொட்டி, ஜாம், டீ எல்லாம் கொடுத்தாள்.

“முதல்ல சாப்பிடு. அப்புறமா என்ன நடந்திச்சுன்னு சொல்லு.” என்றாள் ஆர்த்தியின் அம்மா இரக்கத்துடன்.

அழுகைக்கு நடுவே நடந்ததை விவரித்தாள் வேணி.

சிந்துவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விரைவில் நடக்கப் போகிறது.  முந்தின தினம் சிந்துவின் அம்மா அவளுக்கு வாங்கின நகைகளை வீட்டிற்கு வந்திருந்த சிநேகிதிகளுக்கு காட்டிவிட்டு பிறகு நகைகளை அதன் ஜிப் பையில் வைத்து தன் அறையில் பீரோவில் வைத்து பூட்டினாளாம். பிறகு வழக்கம் போல் பீரோ சாவியை பீரோவின் மேல் வைத்தாளாம். இது நடந்தது நேற்றைக்கு. இன்று காலை நகைகளை பேங்க் லாக்கரில் வைப்பதற்காக எடுத்தாளாம். எதற்கும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க பையை திறந்து பார்த்தாளாம். அதில் ஒரு தங்க செயினை காணோமாம். முந்திய தினம் மாலையிலிருந்து இன்று காலை 10 மணிக்குள் அந்த செயின் மாயமாய் மறைந்து விட்டது. காலையில் அந்த அறையை  கூட்டுவதற்காக உள்ளே வேணி போயிருக்கிறாள். அதனால் வேணி அப்போது அந்த செயினை எடுத்திருக்க வேண்டும் என்று சிந்துவின் அம்மா அவளை குற்றம் சாட்டியிருக்கிறாள்.

“நான் அந்த செயினை பார்த்ததே இல்லீங்க.” வேணி விம்மினாள்.

“அழுகைய நிறுத்து. வேணி. நீ சங்கிலியை எடுக்கல்லேன்னா யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது.” என்றாள் ஆர்த்தியின் அம்மா அன்புடன்.
“ஆனா நிச்சயமா நீ எடுக்கலையே?” ஆர்த்தி இப்படி கேட்டதும் இன்னும் பலமாக அழ ஆரம்பித்தாள் வேணி.

நீங்களும் நான் திருடின்னு சொல்றீங்களா, அக்கா?”
“இல்லவே இல்ல. நான் உன்னை சந்தேகப்படல்ல. நீ எடுக்கல்லேன்னா நீ பயப்பட தேவையில்ல. அதைத்தான் சொல்ல வரேன். உனக்கு நான் உதவி செய்யணும்னா என் கிட்ட எல்லாம் விவரத்தையும் சொல்லணும். நீ எடுக்கல்லேன்னா வேற யாராவது எடுத்திருக்கனும் இல்லையா? அது யாருன்னு நாம கண்டு பிடிக்கணும்.”

வேணி கண்களை அகல விரித்தாள்.
“ஆர்த்தி அக்கா, அவங்க வீட்ல இருந்தவங்க எல்லாரும் சொந்தக்காரங்க. நான் ஒருத்தி தான் வெளிலேயிருந்து போனேன்.”

“அதனால திருடினது யாருன்னு நாம கண்டு பிடிக்கணும். அப்பொ தான் நீ நிம்மதியா இருக்க முடியும். வீட்ல இருக்கறவங்க யாரோ தான் எடுத்திருக்காங்க. அதனால தான் நான் கேக்கறேன் சிந்து வீட்ல யாரெல்லாம் இருக்காங்க இப்போ?”

“சிந்து, அவ அப்பா, அம்மா, அப்பறம் சிந்துவோட அத்தை, அவங்க பொண்ணு பிரியா, அப்புறம் சிந்துவோட மாமா.”
ஆர்த்தி யோசித்தாள்.
“சிந்துவோட  அம்மா, சிந்து இவங்கள விட்டுரலாம். அப்போ பாக்கி இருக்கறது நாலு பேர்.”
“சிந்துவோட அப்பா? அவரா இருக்காதே, ஆர்த்தி?” என்றாள் அவள் அம்மா.
“சொல்ல முடியாதும்மா. அந்த நாலு பேர்ல ஒத்தர்” என்றாள் ஆர்த்தி அழுத்தம் திருத்தமாக.

 “வேணி, நீ எத்தன மணிக்கு வேலைக்கு அவங்கவீட்டுக்குப் போனே?” என்று கேட்டாள் ஆர்த்தி.
“9 மணிக்கு.”
“சரி, வேணி, இப்ப நீ வீட்டுக்குப் போ.”
வேணி கொஞ்சம் சமாதானத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள்.
“அம்மா, நான் சிந்து வீட்டுக்கு போய்ட்டு வரேன்.”
ஆர்த்தியின் தாய் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தாள். யார் வீட்டுக்குமே சாதாரணமா போக மாட்டாளே!

“நான் வேணி விஷயம் எல்லாம் பேச மாட்டேன். சும்மா சிந்துவை பார்க்கற மாதிரி போறேன். சிந்து பேச்சுலேயிருந்து எதாவது “க்ளூ” கிடைக்கும். வேணி எடுக்கல்லங்கறத நிரூபிச்சா போறும். பாவம். எப்படி அவங்க அவ மேல பழி சுமத்தறாங்க? ஏழைங்கறதுனால தானே”
ஆர்த்தியின் அம்மா அசந்து போனாள்.

சிந்து, ஆர்த்தியை சந்தோஷத்துடன் வரவேற்றாள். “வா, ஆர்த்தி. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. நீ கல்யாணத்தின் போது என் கூடவே இருக்கணும். சரியா? சாரீஸ் எல்லாம் இன்னும் வாங்கல்ல. நகை எல்லாம் பண்ணியாச்சு.”
“அப்படியா?”
“ஆமா, ஆர்த்தி, சிகப்பு கல் நெக்லஸ், வளையல், ஜிமிக்கி எல்லாம் செஞ்சிருக்காங்க. உனக்கு காட்டணும்னு ஆசையாயிருக்கு. ஆனா அம்மா எல்லாத்தையும் லாக்கர்ல வச்சுட்டாங்க”.
“அப்படியா?”
“ஆமா, ஆர்த்தி, மொதல்லையே லாக்கர்ல வச்சிருக்காலாம். அப்போ வேணி அந்த செயினை திருடியிருக்க மாட்டா.”
“வேணி திருடினாளா? அவ சாதுவாச்சே! ஏன் அவள திருடின்னான்னு சொல்றீங்க?”
“ஆமா, ஆர்த்தி. நேத்து சாயங்காலம் அம்மா பீரோவுல வச்சு பூட்டியிருக்காங்க.  அதுக்கப்புறம் யாரும் எங்க வீட்டுக்கு வரல்ல. எங்கம்மா சொல்றாங்க வேணி தான் அந்த ரூமுக்கு போயிருக்கா. அவ தான் எடுத்திருக்கணும்னு.”
“எந்த பீரோ?” என்று ஆர்த்தி கேட்டாள்.
“வா, காட்டறேன். அப்புறம் உன்னோட நெறைய பேசணும்.”

சிந்து ஆர்த்தியை தன் பெற்றோர் அறைக்கு கூட்டிச் சென்றாள்.
“இந்த பீரோதான். நேத்து மாலைல எங்கம்மா நகைகள தன்னோட ஃப்ரெண்ட்ஸ்களுக்கு காட்டிட்டு இந்த பீரோல வச்சு பூட்டியிருக்கா.”
“அப்போ எத்தனை மணி? “
“நாலு மணி இருக்கும்.”
“வேணி அப்போ இங்க இருந்தாளா?”
“அவ எப்படி அப்போ இருப்பா? அவ காலையில் தானே வரா!”
“வேணி பீரோவைத் திறந்து செயினை எடுத்திருக்கான்னு சொல்றீங்களா?”
“ஆமா, அப்படித்தான் இருக்கணும்.”
“பீரோ சாவி எங்க இருந்தது?”
“பீரோ மேல. எப்பவும் எங்கம்மா அங்க தான் வைப்பாங்க.”

ஆர்த்தி பீரோ அருகே சென்று பீரோ மேலே எட்ட முயற்சித்தாள்.
“பாரு, சிந்து, எனக்கே எட்டறது கஷ்டமா இருக்கு. வேணி என்னை விட குட்டை. அவளால எப்படி எடுத்திருக்க முடியும்? ஒரு ஸ்டூலோ சேரோ இல்லாம அவளால சாவிய எடுத்திருக்க முடியாது. இந்த ரூம்ல சேரோ ஸ்டூலோ இல்ல”
இதை கேட்டதும் சிந்து முகத்தில் குழப்பம்.

ஆர்த்தி உறுதியுடன் கூறினாள், “சாவிய எடுக்க வேணிக்கு ஒரு ஸ்டூலோ சேரோ வேணும். அதுக்கு அவ டைனிங் ரூமுக்கோ, சமையல் ரூமுக்கோ போயிருக்கணும். காலை நேரத்தில் வீட்ல எல்லாரும் இருந்த போது அவளால் யாருக்கும் தெரியாமல் அத எடுப்பது இம்பாஸிபிள். அப்படி ஒரு ஸ்டூலை அவள் எடுத்துக் கொண்டு போயிருந்தாலும், அது மேல ஏறி சாவியை எடுக்கணும், கொத்திலிருந்து சரியான சாவிய கண்டு பிடிச்சு பீரோவைத் திறக்கணும். நகைப்பையை எடுத்து சங்கிலியை எடுத்துக்கிட்டு பைய மூடி மறுபடியும் பீரோவுல வச்சு பீரோவைப் பூட்டி பழையபடி சாவிய பீரோ மேல வச்சிட்டு சங்கிலியை தன் ஜாக்கட்ல ஒளிச்சுக்கிட்டு, அப்புறம் ஸ்டூலை யாரும் பார்க்காமல் பழையபடி கொண்டே போடணும். இதுக்கெல்லாம் எவ்வளவு டயம் ஆகும்? எல்லாரும் வீட்ல இருக்கறச்சே இதெல்லாம் சாமர்த்யமா செய்ய வேணிக்கு மூளை இருக்குன்னு நெனக்கிறியா?”
சிந்து முகத்துல கலவரம்.

“ஆர்த்தி, நீ சொல்றத பார்த்தா....வேணி எடுத்திருக்கமாட்டான்னு தோணுது. ஆனா வேற யார் எடுத்திருப்பா? வேற யாரும் வரல்லியே?”
“சிந்து, வேணி நிச்சயமா எடுக்கல்ல. நீங்க அவள வீணா குத்தம் சொல்லிட்டிருக்கீங்க. பாவம். ஏழை.”
“ஆனா யார் திருடியிருப்பாங்க? அதை கண்டு பிடிக்கணுமே.”
“அதுக்கு வேற யாருக்கு எடுக்க வாய்ப்பு இருந்திச்சுன்னு கண்டுபிடியுங்க. நேத்தைக்கு சாயங்காலம் யார் வீட்ல தனியா இருந்தாங்கன்னு பாருங்க. அப்போ நிஜத் திருடன் இல்லாட்டா திருடி யாருன்னு கண்டுபிடிக்கலாம். சரி. சிந்து, நான் வரேன்.”

ஆர்த்தி வீட்டுக்கு வந்து தன் தாயிடம் எல்லாவற்றையும் சொன்னாள்.
“அம்மா, இனிமே வேணியை குத்தம் சொல்ல மாட்டாங்க.”
“அப்போ யார் திருடியிருப்பாங்க?”
“பாரு, சீக்கிரமே வெளில வரும்” என்றாள் ஆர்த்தி மர்மமாக.

அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு சிந்துவின் அம்மா வந்தாள்,
அவள் ஆர்த்தியின் அம்மாவிடம் “வேணியை நாங்க குத்தம் சொன்னது ரொம்ப தப்பு. ஸாரி. அவ எடுக்கல்லன்னு தெரிஞ்சு போச்சு. நேத்தைக்கு ஆர்த்தி வந்துட்டு போனப்புறம் சிந்து எல்லாம் சொன்னா. சிந்துவோட அப்பா யார் எடுத்தாங்கன்னு கண்டுபிடிச்சுட்டார்.”என்றாள்.
“யார் அது?”
சிந்துவின் அம்மா கொஞ்சம் தயக்கத்துடன், “சரி, சொல்றேன், நேத்தைக்கு நான் ஃப்ரெண்ஸுக்கு நகைகளை காட்டினப்புறம் பீரோவுல வச்சு பூட்டிட்டு நாங்க கோவிலுக்கு போனோம். என் வீட்டுக்காரரும் அவரோட தங்கச்சியும்  வரல்லேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என் வீட்டுக்காரர் வாக்கிங் போயிருக்காரு. அதனால அவரோட தங்கச்சி வீட்ல ஒரு மணி நேரத்துக்கு மேல  தனியா இருந்திருக்கறா. நேத்தைக்கு ராத்திரி என் வீட்டுக்காரர் அவள தனியா கூப்பிட்டு மிரட்டி விசாரிச்சிருக்கார். அவள் கடைசில சங்கிலிய எடுத்ததா ஒத்துக்கிட்டா.”

“எனக்கும் ஒரு பொண்ணு இருக்குது. அவளுக்கு ஒண்ணுமே இல்ல. சிந்துவுக்கு எத்தன இருக்கு! அதனால தான் நான் ஒரே ஒரு செயினை எடுத்துக்கிட்டேன். அதுல என்ன தப்பு?” அப்படீன்னு சொன்னா. நான் தான் அவசரப்பட்டு வேணியை குத்தம் சொல்லிட்டேன்.”

“செல்வி, வேணி ஏழைங்கறதுனால உனக்கு அவளை குத்தம் சாட்டறது ஈஸியாயிடுச்சு. நீ பண்ணினது ரொம்ப தப்பு” என்றாள் ஆர்த்தியின் அம்மா.

“அதனால தான் நான் இப்ப வந்தேன். வேணி உங்க வீட்டுக்கு வந்திருப்பா, அவளப் பார்த்து ஸாரி சொல்லிட்டு நாளைலேயிருந்து வேலைக்கு வரச் சொல்லத்தான் நான் வந்தேன். நல்லா வேலை செய்வா. எங்கே அவ?”

இதை கேட்க ஆர்த்திக்கும் அவள் அம்மாவிற்கும் வெறுப்பாக இருந்தது.

உள்ளேயிருந்து வேணி அவர்கள் இருந்த ஹாலிற்கு வந்தாள். அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் சிந்துவின் அம்மா குழைவான குரலில், “ஆ, இங்க இருக்கியா வேணி. நான் சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காதே. அவசரப்பட்டுட்டேன். ஒண்ணும் நெனைச்சுக்காதே. நீ பழையபடி வேலைக்கு வா. என்ன? சிந்து கல்யாணத்துக்கு உனக்கு நல்ல சீலை எடுத்து தரேன்.”

ஆர்த்தியும் அவள் அம்மாவும் வேணி என்ன சொல்வாள் என்று ஆவலாக அவளை பார்த்தனர்.
“வேண்டாம் அம்மா, எனக்கு என் நேர்மை ஒண்ணு தான் சொத்து. வேற எதுவும் கிடையாது. அத நான் இழக்க விரும்பல்ல.” சொல்லி விட்டு வேணி உள்ளே போய்விட்டாள்.
சிந்துவின் அம்மா ஏமாற்றத்துடன் வெளியேறினாள்.

“ஆர்த்தி, உன்னை வெளில வாக்கிங் போன்னு அனுப்பினது எவ்வளவு நல்லதா போச்சு, பாத்தியா?” என்றாள் அவள் அம்மா.
“ஆனா, நான் வாக்கிங்க் போகல்லியே, பாதியிலேயே வந்துட்டேனே” என்று சிரித்த ஆர்த்தி லேப்டாப்பை திறந்தாள்.






No comments:

Post a Comment