Friday, August 19, 2016

அபார நடிப்பு!

செல்லம் தன் மகள் வருகைக்காக ஆவலாக காத்துக்கொண்டிருந்தாள்.  எல்லாம் ரெடி.  இன்று மாலை மகள் அணிய வேண்டிய நவீன ஜொலிக்கும் டிரஸ் வந்துவிட்டது. மாலை நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக டிஸைன் செய்தது. செல்லத்திற்கு ஒரே பரபரப்பு. சிறந்த நடிகை விருது வாங்கப் போகிறாள் யாமினி, அவளுடைய ஒரே செல்ல மகள்.

யாமினி தன் முதல் படத்திற்காக  சிறந்த நடிகை விருதை பெறப்போகிறாள். படம் வெளியாகி வெற்றிகரமாக ஓட ஆரம்பித்ததும் யாமினி தன் ஃப்ரெண்ட்ஸ்களுடன் வெற்றியைக் கொண்டாட கோவாவிற்கு போய்விட்டாள். ஒரு வாரம் முன்னாலேயே வந்திருக்கவேண்டும். யாமினி பிடிவாதக்காரி. கொஞ்சம் கூட பொறுப்பு  இல்லாமல் வருவதை ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டாள். செல்லத்திற்கு கோபமாக வந்தது. இன்னைக்கு சாயங்காலம் விழா! இன்னும் வந்து சேரல்ல.

டாக்ஸி சத்தம் கேட்டது. யாமினி தன் சினேகிதிகளுடன் அட்டகாசமாக சிரித்துக்கொண்டே வந்து இறங்கினாள். மகளைப் பார்த்ததும் முதலில் மகிழ்ந்த  செல்லம் பிறகு அதிர்ந்தாள். எப்பவும் போல மனதை மயக்கும் அழகு ராணியாகத்தான் யாமினி இருந்தாள், ஆனால் அந்த கொடி போன்ற உடல் எங்கே? ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மெல்லிய இடை எங்கே ஓடி ஒளிந்தது? எல்லாவற்றையும் சதை மூடி மறைத்துவிட்டது. யாமினி பூசினாற்போல் இல்லை, நன்றாகவே தடித்திருந்தாள். 

“சில வாரங்களில் ஒருத்தி இப்படி வெயிட் போடமுடியுமா? இப்போ என்ன செய்யறது? அவளால அந்த ஸ்பெஷல் டிரஸ்ஸுக்குள் நுழைய முடியுமா? அப்படி நுழைந்தாலும் டைட்டா அசிங்கமா இருக்கும். எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க. கேலியா பேசுவாங்க. சில சமயம் அப்படிக் கூட நடந்தாலும் நடக்கும், கொஞ்சம் நாள் முன்னாடி மும்பையில் ஒரு மாடலுக்கு ஆச்சே, ‘ரேம்பில்’ நடக்கும்போது டைட்  டிரஸ் அடில தையல் விட்டுக்கிட்டு  எப்படி கேவலமா ஆயிரிச்சு! எல்லா டிவி சேனல்களும் தினசரி தாள்களும்  அந்த விடியோ க்ளிப்பை போட்டு போட்டு காட்டிக்கிட்டே இருந்தாங்க. பாவம் அந்த மாடல். அந்த நெலமை யாமினிக்கு வராம இருக்கணும் கடவுளே!”

யாமினிக்கு பிரச்னை புரிந்த போது பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
“அழாதே. இப்ப அழுது என்ன பிரயோசனம்?”

“இப்ப நான் என்ன பண்ணுவேன்?  என்னால அவார்டு வாங்க முடியாது. நான் வெஷம் குடிச்சு செத்துப்போறேன்.” கிளிசரின் இல்லாமலேயே அவளுடைய அழகிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

செல்லத்தின் மூளை வேகமாக வேலை செய்தது. ரெடிமேட் டிரஸ்ஸெல்லாம் இந்த பெரிய நிகழ்ச்சிக்கு சரி வராது.

இறுதியில் அவள் சொன்னாள், “எனக்கு ஒரு யோசனை தோணுது.”

அன்று மாலை விழா நடக்கும் ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. தங்கள் மனம் கவர்ந்த இளம் நடிகை யாமினி என்ன அலங்காரத்தோடு வருவாள்?   எல்லார் மனதிலேயும் இந்த கேள்விதான் எதிரொலித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் அபிப்பிராயத்தை தீர்மானமாக கூறினார்கள்.
“நீ வேணா பாரு, கண்டிப்பா டைட் பேண்ட்ஸும் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்ஸும் தான். அழகா நெத்தியிலேயும் தோள்களிலும் விழற முடியை அவ இப்படி  ஸ்டைலா தள்ளுவா. ஆஹா, ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு!” என்றான் ஒரு இளம் ரசிகன்.

“கிடையவே கிடையாது. நிறைய ஜரிகை ஒர்க் செஞ்ச பள பளன்னு காக்ரா  சோலி தான் அவ போட்டுக்கிட்டு வருவா.”

“ஐயோ! அதெல்லாம் கிடையாது. ஆஸ்கார் அவார்டு போது போட்டுப்பாங்களே, அது என்ன? ஆ! பால் கௌன், அது தான் போட்டுப்பா, என்ன பெட் வைக்கறீங்க? 

“இந்த ப்ரொக்ராமுக்காகவே ஸ்பெஷலா டிஸைன் செய்யறாங்களாம்.
இது ஒரு பெண் ரசிகை தந்த தகவல். பலவிதமான அபிப்பிராயங்கள். பலவிதமான எதிர்பார்ப்புகள்.

ஆனால் எல்லார் சொன்னதுமே தவறுதான். 

எல்லோருமே மிக ஆவலாகக் காத்திருந்த அந்தத் தருணம் வந்தது.
“பெஸ்ட் ஃபீமேல் ஆக்டர் அவார்ட், செல்வி யாமினி, ஃபார் தி மூவீ ‘பியூட்டி க்வீன்’!”

அவள் பெயர் அறிவிக்கப்பட்டதும் பலத்த கரகோஷம் ஹாலில் எதிரொலித்தது. முன் வரிசையில் அமர்ந்திருந்த யாமினி எழுந்தாள். அனைவரும் அதிர்ந்தனர்.

வெள்ளை காஞ்சிபுரம் பட்டு சேலை. மெரூன் கலர் அகல பார்டரில் ஜரிகை அன்னபட்சிகள். வெள்ளைப்பட்டில் ஆங்காங்கே அரக்கு கலர் அன்னபட்சிகள் ஜரிகையில் ஜொலித்தன. மேட்சிங்காக ஜரிகைக் கரையுடன் பிளௌஸ்.  சிவப்பு கற்கள், முத்துக்களாலான அகல நெக்லஸ், வளையல்கள், பெரிய தோடு தொங்கட்டான்கள் அவளுடைய அழகுக்கு அழகு சேர்த்தன. அவளுடைய அடர்ந்த கருங்கூந்தல் அவளுடைய வலது தோளின் மேல் படர்ந்து வழிந்தது. இடது தோளின் மேல் புடவை ஒற்றையாக இறங்கியது. (அவளுடைய கொழு கொழுப்பான தோள்களை நன்றாகவே மறைத்தது.) கூந்தலில் மல்லிகைப்பூ கனகாம்பர சரம் நேர்த்தியாக ‘பின்’ பண்ணப்பட்டிருந்தது.

“என்ன அழகு, என்ன லட்சணம்! சாட்சாத் சரஸ்வதி தேவியே வந்த மாதிரி இருக்கு!”  என்று ஒரு வயதான பெண்மணியின் குரல் பலமாக கேட்டது.

யாமினி மெள்ள மெள்ள அழகான நடையுடன் மேடைப் படிகளில் ஏறினாள்.  சில வினாடிகள் அதிர்ச்சியில் மௌனமாக இருந்த அவையோர்கள் கைத்தட்ட ஆரம்பித்தனர்.   கரகோஷம் மெதுவாகத் தொடங்கி பின் வானைப் பிளந்தது.

விருதைப் பெற்றுக்கொண்ட யாமினி தன் இனிய குரலில், “என்னை வளர்த்து என்னை இந்த நிலைக்கு கொண்டு வர எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவருடைய விருப்பம் நான் இன்று நான் நம்ம கலாசாரப்படி உடை உடுத்தணும்னு.”

அவளுடைய அம்மா தன் கண்களைத் துடைத்துக்கொள்வதை (நிம்மதியில்?) அனைவரும் கண்டனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிளளித்துப் பேசிய யாமினி,
“இல்லை, எனக்கு தேவியா, தெய்வமா நடிக்கும் எண்ணமே இல்லை. இன்னைக்கு சேலை உடுத்தது என் அம்மாவை திருப்திப் படுத்தத்தான். இப்போதைக்கு ‘யங்க் ரோல்ஸ்’ தான். நான் இன்னும் டீனேஜர் தானே?(இரண்டு மூணு வருஷம் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இருந்தா என்ன?)

அடுத்த நாள் டிவியிலும் பேப்பர்களிலும் யாமினியை பற்றி அபார புகழாரங்கள். அழகு ஓவியம்! பாரதநாட்டு கலாச்சாரத்தை கை விடாமல்  காப்பாற்றிய நடிகை! என்றெல்லாம். அவளுடைய பெரிய ஃபோட்டோக்கள் பேப்பர்களின் முன் பக்கத்தை அலங்கரித்தன.

“அம்மா! நீ ரொம்ப க்ளவர்!” விழாவிலிருந்து காரில் திரும்பிப் போகும்போது யாமினி தாயை கட்டிக்கொண்டு கூறினாள்.

“பாரு, நான் இன்னும் க்ளவரா இருக்கப் போறேன். நாளை முதல் ஒனக்கு டயட், டயட், டயட், டயட், எக்ஸர்ஸைஸ், எக்ஸர்ஸைஸ்,  எக்ஸர்ஸைஸ் தான். இனிமே ஐஸ் கிரீம், பிஸ்ஸா எல்லாம் பந்த்!”
“சரிம்மா, நீ சொல்றபடியே செய்யறேன்.” என்றாள் யாமினி பணிவாக.





No comments:

Post a Comment