Monday, January 23, 2017

இரண்டு காதல்கள்

லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சென்னைக்கு பறந்து வந்து கொண்டிருந்த விமானத்தில் மைக் என்ற மைக்கேல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்த ஆஷாவிற்கு உறக்கம் வரவில்லை. அவள் திருமணத்திற்கு பின் தன் அமெரிக்க கணவனோடு முதன் முதலாக சென்னை வருகிறாள். தன் பெற்றோர்களுக்கு அவனை அறிமுகப்படுத்துவதில் அவளுக்கு எந்த கவலையும் இல்லை. அவளுடைய அப்பா அம்மா என்றுமே தங்கள் வாழ்க்கையில் தான் மூழ்கி இருப்பார்கள். அப்பாவுக்கு அவருடைய பிஸினஸ், அம்மாவிற்கு அவளுடைய க்ளப், சோஷல் லைஃப், ஃப்ரெண்ட்ஸ். அவளைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டதே இல்லை. அவளுடைய சிந்தனை முழுவதும் அவளுடைய பாட்டியைப் பற்றி தான். ஆஷா வளர்ந்தது முழுக்க முழுக்க பாட்டியின் அரவணைப்பில் தான். அவள் மேல் அன்பை சொரிந்து அவளிடம் அக்கறை காட்டியவள் அவள் தான். அவளுடைய அபிப்பிராயம் தான் முக்கியம். அவள் ஏற்றுக்கொள்வாளா?
டாக்ஸி அந்த பழைய வீட்டின் காம்பௌண்டில் நுழைந்தது. அவளுடைய அலமேலுப் பாட்டி வீட்டின் வாசலில் எதிர்பார்ப்புடன் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய தளர்ந்த, மெல்லிய ஆனால் அழகான உருவத்தைப் பார்த்ததும் ஆஷாவின் உள்ளம் அன்பாலும் இரக்கத்தாலும் உருகியது. ஆஷா ஓடி பாட்டியைக் கட்டிக்கொண்டாள்.
“பாட்டி! எப்படி இருக்கே?” அலமேலு வாத்சல்யத்துடன் ஆஷாவை அணைத்துக்கொண்டாள். பின்னால் பைகளுடன் வந்து கொண்டிருந்த மைக்கைப் பார்த்து புன்னகை செய்த அவள், “ஹல்லோ! மைக்! வெரி ஹேப்பி டு ஸீயூ. ஐ ஹோப் யூ ஹேட்  எ கம்ஃபர்டபிள் ஃப்ளைட்?” என்றாள் நல்ல ஆங்கிலத்தில்.
“யா. இட் வாஸ் ப்ரட்டி ஸ்மூத். க்ராண்ட் மா. நைஸ் டு மீட் யூ. ” என்று மிக சகஜமாக மைக் அவள் கைகளை குலுக்கினான். அவனுடைய பழுப்பு முடியும் நீலக்கண்களும் அலமேலுவை பாதிக்கவில்லை.
“கம் இன்ஸைட். உங்க ரூம் ரெடியா இருக்கு.”
அலமேலு சமையலறையில் சாப்பாடு தயாரிப்பதில் முனைந்திருந்தாள். அவள் உள்ளம் இந்த இளம் சிட்டுகளுக்காக உருகியது. தன் பேத்தி அன்பான கணவனை அடையவேண்டும், தன் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது தான் என்றும் அவளுடைய  விருப்பமாக, லட்சியமாக இருந்தது. அவள் மனம் பின்னோக்கி சென்றது. வாசு! அவளுடைய அன்புக்கணவன்! பிராணநாதன்! அவன் இறைவனடி சேர்ந்து பல வருடங்களாகியும் அவள் உள்ளம் அவனுக்காக ஏங்கியது.
“பாட்டி! என்ன பண்றே பாட்டி!, நல்ல வாசனை வருது!” ஆஷா சமையலறையில் நுழைந்தாள்.
அலமேலு புன்னகையுடன்,
“ஒனக்கு பிடிச்ச அயிட்டங்கள் தான். தேங்காய்ப்பால் விட்டு கோதுமை பாயசம், வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்கா தயிர் பச்சடி, ரசம். மைக்குக்கு என்ன பிடிக்கும்னு இனிமே தான் தெரிஞ்சுக்கணும். அவனும் வெஜிட்டேரியன்னு நீ சொல்லியிருக்கே.”
“ஆமாம், பாட்டி, அவனுக்கு இண்டியன் ஃபுட் ரொம்ப பிடிக்கும். ..உம்.. பாட்டி, உனக்கு அவன பிடிச்சுருக்கா?”
“கொஞ்சம் வெயிட் பண்ணு, இப்ப தானே நான் அவன பார்த்தேன். அப்புறம் சொல்றேன்.”
இந்த பதிலோட ஆஷா திருப்தியாக இருக்கவேண்டியிருந்தது.
“ஆஷா, நீங்க முதல்ல எப்படி சந்திச்சேள்?”
“நான் முதல்ல அவன ஒரு கான்ஃபரன்ஸ்ல மீட் பண்ணினேன், பாட்டி. ஆனா எனக்கு அது காதல் கண்டதும் காதல் இல்ல.”
“மைக்குக்கு?”
“அவனுக்கு கண்டதும் காதல்தானாம். சொல்றான்” என்று சிரித்தாள் ஆஷா.
அலமேலுவின் மனம் கால வண்டியில் பின்நோக்கி பல வருடங்களைக் கடந்து சென்றது.

“எனக்கும் வாசுவுக்கும் கண்டதும்காதல் தான்! எப்படி நினைவிருக்கு அந்தக் கணம்! என் அக்கா புவனாவின் கல்யாணத்தின் போது தான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். மாப்பிள்ளைத்தோழன் என்கிற முறையில் அவர் சதா மாப்பிள்ளை பக்கத்தில் நின்றுகொண்டிருப்பார். நானோ புவனா அருகில் நின்று கொண்டிருப்பேன் அல்லது அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருப்பேன். எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டே இருந்தன. என் உள்ளத்தில் மகிழ்ச்சியின் அலைகளுக்கு இடையே சோகத்தின் அலைகளும்  சுனாமி மாதிரி எழும்பிக்கொண்டிருந்தன. இந்த கல்யாணத்திற்குப்பிறகு அவர் போய்விடுவாரே என்ற சோகம், என் வாழ்க்கையிலிருந்தும் போய் விடுவாரோ என்ற அச்சம்.

“பாட்டி!”
அலமேலு தற்காலத்துக்கு திரும்பினாள்.
“பாட்டி, நான் உனக்கு லெட்டர் எழுதல்லன்னு கோவமா, பாட்டி? கான்ஃபரன்ஸ் முடிஞ்சப்புறம் நாங்க அவங்க அவங்க எடத்துக்கு திரும்பிட்டோம்.  அவன் நினைவு, அவன் உருவம் என் முன்னால வந்துட்டே இருந்தது. ஆனா கஷ்டப்பட்டு அவன மறக்க முயற்சி பண்ணினேன். உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு தோணிண்டே இருந்தது.”
“அப்புறம் என்ன நடந்துது?”
“அவன் ஒரு மெயில் அனுப்பினான். நான் உடனே பதில் அளிக்கல. ஆனா அவன் விடல்ல. மெயில் அனுப்பிண்டே இருந்தான். அப்புறம் நான் தயங்கிண்டே ரிப்ளை பண்ணினேன். அவ்வளவுதான்! ஃபோன் பண்ண ஆரம்பிச்சுட்டான். தினம் ஃபோன் பண்ணி பேசுவான். மணிக்கணக்கா பேசுவான். பாட்டி, அவனோட மிருதுவான சுபாவம், லவ் எல்லாம் என்னை கவர்ந்துது. நானும் மனம் விட்டு அவனோட பேச ஆரம்பிச்சேன்.”

எங்களுக்கு அத்தனை சுலபமா இருக்கல்ல, அந்த பிற்போக்கான காலத்துல.  கல்யாணத்துக்கப்புறம் அவர் போய்விட்டார். நான் அவருடைய கம்பீரமான உருவத்தையும் ஆசையான பார்வையையும், நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தேன்.

“நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். மூவீஸ் போவோம், ட்ரெக்கிங்க் போவோம். ரெஸ்டாரன்டுகள்ள சாப்பிடுவோம். பாட்டி! காதல்ல நாங்க கிட்டத்தட்ட பைத்தியமா ஆயிட்டோம்.

எங்களுக்கு எத்தன கஷ்டமா இருந்துது! வாசு எப்படியோ என் அத்திம்பேர் கிட்ட என்னை கல்யாணம் செஞ்சுக்க தன்னோட விருப்பத்த தெரிவிச்சார். அவரும் இதுல முனைஞ்சார். என் வீட்டுல எல்லோருக்கும் சந்தோஷம். வாசு பட்டதாரி.  உத்தியோகம் இருந்தது. தவிர அவன் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவர் குழந்தையா இருந்தப்பவே அவரோட அப்பா போய்ட்டார். எல்லோரும் இது ஒரு நல்ல விஷயம்னு சந்தோஷப்பட்டா. அது எவ்வளவு பெரிய தப்புன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது.”

மைக் சமையலறையில் நுழைந்தான். “ஹா! நைஸ் ஸ்மெல்! .”
அலமேலு, “சின்ன வெங்காயம். சாம்பாருக்கு.” என்றாள்.
“நான் ஹெல்ப் பண்ணட்டுமா?”
“ஐயோ, பாட்டி, நான் கேக்கவே இல்லை. நான் வெங்காயம் உரிக்கறேன்.” இது ஆஷா.
“இல்ல. இன்னிக்கு நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். ஃப்ளைட்ல வந்தது களைப்பா இருக்கும். ஜெட்லேக் இருக்கும். நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. லன்ச் இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடியாயிடும்.”
உண்மைலேயே களைப்பாக இருந்த ஆஷாவும் மைக்கும் தங்கள் அறைக்கு ஓய்வெடுக்க சென்றனர்.
அலமேலுவின் மனம் பின் நோக்கி சென்றது.

கல்யாணமான சில வருஷங்கள் சுகமும் வேதனையுமாக கழிந்தன.
அப்பா! எத்தன கஷ்டமா இருந்துது எங்களுக்கு! எங்களை சந்தோஷப்பட விடாம எப்படி கஷ்டப்படுத்தினா வாசுவோட அம்மா!
தன்னோட ஒரே மகன் மேல இருந்த கண்மூடித்தனமான பாசத்தினால், அவரையே சுகமா இருக்கவிடாமல் தடுத்தாள். வாசுவுக்கோ தன் தாயிடம் கடமை உணர்வு நிறைய இருந்தது.
வாசு பிறந்ததும் சில மாதங்களிலேயே அவன் அப்பா இறந்துவிட்டார். வாசுவின் அம்மா தன் பிள்ளையை வளர்க்க அரும்பாடு பட்டாளாம். தன் சுகங்களை தியாகம் செய்து அவனை வளர்த்தாளாம். இதை அடிக்கடி சொல்லி அவனுடைய இளம் மனதில் பதியவைத்திருந்தாள். புதிதாக கல்யாணமான அவர்களை தனியாக இருக்கவே விடமாட்டாள். வாசுவை கூப்பிட்டுக்கொண்டே இருப்பாள். இரவில் அலமேலுவை தன்னருகே படுக்க வைப்பாள். அம்மா உறங்கின பிறகு வாசு மெதுவாக வந்து அவளைத் தட்டி தன் படிக்கைக்கு வரும்படி அழைப்பான். அலமேலுவுக்கு பயமா இருக்கும். ஆனால் வாசுவின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து சில சமயம் அவள் எழுந்து செல்வாள். பயமாக இருக்கும். வாசு அவளை அடங்கா காதலுடன் அணைத்துக்கொள்வான்.
“இந்த காலத்தில் இதை சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள்.” அலமேலு அந்த நாட்களை எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
தன் மாமியாருக்கு இந்த நள்ளிரவு சந்திப்புகளைப் பற்றி தெரியும் என்ற சந்தேகம் அலமேலுவிற்கு இருந்தது. மருமகள் மேல் வாசு கொண்டிருந்த அபரிமிதமான காதலைக்கண்டு வாசுவின் அம்மா அவளை வெறுத்தாள். வாசு இல்லாத போது அலமேலுவை குத்தி குத்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அலமேலுவின் பெற்றோரைப்பற்றியும், உறவுக்காரர்களையும் பற்றி ஏளனமாகப் பேசுவாள். வாசு ஆஃபீஸுக்கு போனப்புறம் தன் ஏவுகணைகளை வீச ஆரம்பிப்பாள்.
“என்ன கல்யாணம் செஞ்சா? ஃபேன் காத்துல பறந்து போயிடற மாதிரி வெள்ளிப்பாத்திரம். ஹூம்! மாப்பிள்ள அழைப்புக்கு பாண்டு வாத்தியம் வேணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன்! பண்ணல்லியே! உருப்பிடியா எதாவது செஞ்சாங்களா? ” இது மாதிரி பேசுவாள், ஏசுவாள். “என் தலைவிதி இதுமாதிரி மாட்டுப்பொண் வந்து சேர்ந்திருக்கா. எதாவது காரியம் பாந்தமா செய்யறாளா?”
வாசு தன்னால் முடிந்த போதெல்லாம் அவளை எதாவது சாக்கில் வெளியே அழைத்து செல்வான். ஒரு நாள் மேல் ஆபீஸரின் அழைப்பு, தட்ட முடியாது என்பான். இன்னொரு நண்பனின் அழைப்பு. எப்படியோ அவளை ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிரியமானதை ஆர்டர் செய்வான். அவள் ஆசையுடன் சாப்பிடுவதை அன்புடனும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டிருப்பான். பிறகு ஒரு பார்க்கிற்கு சென்று ஒரு பென்சில் எவ்வளவு நேரம் முடியுமோ, உட்கார்ந்து பேசுவார்கள். அப்போது அலமேலு அன்று வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லுவாள். அவன் அம்மா தன்னை ஏசியதை எல்லாம் சொல்லுவாள். அவள் எல்லாவற்றையும் ஒரு சோகமான புன்னகையுடன் சகித்துக்கொண்டு பேசாமல் இருக்கும் டிவியில் வரும் கதாநாயகிகள் போல் இருக்கமாட்டாள். எல்லாவற்றையும் சொல்லுவாள். வாசு இரக்கத்துடன் கேட்டுக்கொண்டிருப்பான்.
தினமும் குடிக்கவே முடியாத கழுநீர் மாதிரி காபி கொடுப்பதை சொல்லுவாள்.
“அலமு, யார் காபி போடறா, காலம்பற, நீ தானே?”
ஆமாம் என்று தலையாட்டுவாள் அலமேலு.
“அப்போ அம்மா எழுந்திருக்கறது முன்னாடி நீ ஒரு நல்ல காபியா போட்டு குடிச்சிட வேண்டியது தானே?”
“அதெப்படி? காபி டிகாஷனும், பாலும் கம்மியா இருந்தா அம்மா கண்டுபிடிச்சுடுவாளே!”
“நீ சரியான ஃபூல், அலமு. காபி குடிச்சிட்டு கொஞ்சம் தண்ணிய விட்டு வச்சுடவேண்டியது தானே!” என்பான் வாசு.
“இன்னைக்கு  சாப்பிடறச்சே கொஞ்சம் சாதமும் ரசமும் தான் எனக்கு இருந்துது. காய், சாம்பார் எதுவுமே இருக்கல்ல” என்பாள் அலமேலு. அப்போதெல்லாம் அவள் வாசு சாப்பிட்ட எச்சில் இலையில் தான் சாப்பிடுவாள். வாசு சாமர்த்தியமாக கறி, கூட்டெல்லாம் கொஞ்சம் அதிகமாகப்போட்டுக்கொண்டு அவளுக்கு இலையில் கொஞ்சம் மிச்சம் வைப்பான்.
“இதக்கேட்டா இந்தக்காலத்து பொண்கள் எல்லாம், ஐயே, எச்சல் எலைலா சாப்பிடறதா, கேக்கவே அசிங்கமா இருக்கும்பா.”என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள் அலமேலு. ஆனால் வாசு அவளைஎவ்வளவு காதலித்தாலும், தன்னை வளர்த்து ஆளாக்கி தன்னை படிக்கவைத்ததிற்காக நன்றி உணர்வினால் தன் அம்மாவிடம் எதுவும் பேசமாட்டான்.
 “ஆனா திருட்டுத்தனமா காதல் செய்யறதுல தான் எத்தன சுகம் இருந்துது!”
அவர்களுக்கு பத்மா பிறந்தபோது வாசுவின் அம்மா குழந்தையை முழுக்க முழுக்க தன் கண்ட்ரோல்ல எடுத்துக்கொண்டுவிட்டாள். குழந்தைக்கு தப்பான விஷயங்களை கற்பிப்பதை பார்த்து பார்த்து அலமேலு தவிப்பாள்.
சில வருஷங்களுக்குப் பிறகு வாசுவின் அம்மாவிற்கு பக்கவாதம் வந்து சிலமாதங்களுக்கு படுத்தபடிக்கையாக இருந்து பிறகு இறந்து போனாள்.
அலமேலு சுதந்திரப்பறவையாக பன்னிரண்டு வருஷங்கள் வாசுவுடன் சந்தோஷமாக இருந்தாள். பத்மாவின் கல்யாணத்தை விமரிசையாக கொண்டாடினார்கள். அப்புறம் ஒரு நாள் பேரிடியாக வாசு மாரடைப்பால் காலமானான். அலமேலு அவன் பிரிவை தாங்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது, பத்மா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். வாசுவின் சாயலாக இருந்த குழந்தை ஆஷா, அலமேலுவின் புண்பட்ட இதயத்திற்கு அருமருந்தாக இருந்தாள். குழந்தை வளர்ப்பை அன்புடனும் பாசத்துடனும் அவள் ஏற்றுக்கொண்டாள். பத்மாவும் அவள் கணவனும்  அலமேலுவிடம் குழந்தையின் பொறுப்பை முழுமையாக விட்டுவிட்டு, ஃபைனான்ஸ், இன்வெஸ்ட்மென்ட், பார்ட்டி, க்ளப் என்று பல விஷயங்களில் மூழ்கினார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தையுடன் கழிக்க நேரமே இருக்கவில்லை.
அலமேலு குழந்தை ஆஷாவை கொஞ்சுவதிலும் அவளுடன் விளையாடுவதிலும் அத்யந்த மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்தாள். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் நெருக்கமான பாச இணைப்பு ஏற்பட்டது.

அலமேலு பழைய நினைவுகளிலிருந்து இக்காலத்திற்கு வந்தாள். அவள் மனம் கடந்தகாலத்தில் இருந்தாலும் கைகள் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன. சமையலை முடித்து எல்லாவற்றையும் டைனிங்க் டேபிளில் சீராக எடுத்துவைத்துவிட்டு பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றினாள். கண்ணை மூடி பிரார்த்தனையில் ஈடுபட்ட அவள் காதில் ஆஷாவின் கீச்சுக்குரல் விழுந்தது. அவர்கள் இருந்த அறை பூஜை ரூமிற்கு அடுத்தாற்போல் இருந்ததால் அவள் பேசியது தெளிவாகக்கேட்டது. அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கக்கூடாது என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தவளை ஆஷாவின் வார்த்தைகள் நிற்க வைத்தன. ஆங்கிலத்தில் பேசினாலும் அலமேலுவுக்கு நன்றாக தெளிவாகப்புரிந்தது.
“பாட்டி பாவம்! குடும்ப வாழ்க்கைய நம்ம மாதிரி சந்தோஷமா அனுபவிக்கல்ல. உனக்குத் தெரியுமா மைக், பாட்டிய அவளோட மதர் இன் லா , அதாவது என் கொள்ளுப்பாட்டி அடிமை மாதிரி நடத்தினாளாம்!”
“ஓ, தட் ஈஸ் வெரி பேட்!”
“ஆமா, அடிமை மாதிரி வேலை வாங்குவாளாம், ஆனா சாப்பிட சரியா ஒண்ணும் சரியா தரமாட்டாளாம்!”
“ஆஷா, தட் ஈஸ் டெரிபிள்!”
“அப்போ எல்லாம் மைக், ரொம்ப பிற்போக்கான காலம். என் பாட்டி,  தாத்தா சாப்பிட்ட எச்சில் வாழை எலைல தான் சாப்பிடணும். அலம்பாம!”
“அப்படியா, வெரி இன்ட்ரஸ்டிங்க்!”
“ஒனக்கு அப்படி தோண்றதா? அப்படி ஒரு ‘ப்ரிமிடிவ்’ வழக்கம் அப்ப இருந்துது. வேடிக்கை என்னன்னா, என் தாத்தா தான் சாப்பிடும்போது நிறைய கூட்டு, கறி எல்லாம் போட்டுண்டு பாட்டிக்கு எலைல மிச்சம் வைப்பாராம்.”
“உன் தாத்தா ரொம்ப க்ளவரா இருந்திருப்பார் போல இருக்கே!”
“அவர் அப்படி செய்யல்லேன்னா பாட்டிக்கு மோர் சாதம் தான். பாட்டி இந்த கதையெல்லாம் எனக்கு சொல்லியிருக்கா.”
அலமேலு சிலை மாதிரி நின்றுகொண்டிருந்தாள். இந்த ஆஷா சரியான உளறுவாய்!
“ஆஷா, அதுலேயிருந்து  உன் தாத்தா உன் பாட்டிய எவ்வளவு காதலிச்சார்னு தெரியறது. அது தான் ரொம்ப முக்கியம் என்னைக்கேட்டா. நம்ம மாதிரி சௌகரியம் எல்லாம் அவங்களுக்கு இல்லாம இருந்திருக்கலாம். ஆனா அவா  லவ்வும் நம்ப லவ் மாதிரிதான். ஆஷா, உன் பாட்டிய நாம் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போலாமே!”
“ஆமா, மைக், எனக்கும் பாட்டிய கொண்டே வச்சுக்கணும்னு ஆசையா இருக்கு. வா, இப்பவே பாட்டிகிட்ட சொல்லலாம்.”
அலமேலு கண்களில் நீர் துளிர்த்தது. “ஆஷாவுக்கு உண்மையான காதல் கிடச்சுடுத்து. அது போதும். ஆனா இப்போ நான்  அவாளோட வாழ்க்கைல எடைஞ்சலா போகக்கூடாது. அவா கொஞ்சம் காலம் ஃப்ரீயா இருக்கட்டும். அது எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும். அவா எப்ப வேணும்னாலும் இங்க வரட்டும். பின்னால ஆஷாவுக்கு டெலிவரி,  குழந்தைன்னு வந்தா அப்போ போயிக்கலாம்.”
அலமேலு பூஜை அறையிலிருந்து வெளியேறி டைனிங்க் ரூமிற்கு சென்று அவர்கள் வருகைக்காக காத்திருந்தாள். அவள் உள்ளம் நிறைந்திருந்தது.


No comments:

Post a Comment