Friday, February 24, 2017

அனுசூயா

சௌடையனும் அவன் மனைவி குள்ளியும் எங்கள் வீட்டில் வேலை செய்தார்கள். அவர்களுடன் அவர்கள் பெண் அனுசூயாவும் வேலை செய்வாள். குள்ளி சாது ஆனால் சௌடையனுக்கும் அனுசூயாவுக்கும் கொஞ்சம் கை நீளம். என் அப்பாவிற்கு இது தெரிந்திருந்தும் அவர்கள் பெரிதாக எதுவும் திருடாதவரை பரவாயில்லை என்று இருப்பார். “பாவம் ஏழை. போனால் போகட்டும்” என்பார்.
அவர்கள் திருடுவது  தம்ளர், கிண்ணம், ஸ்பூன், செருப்பு மாதிரி சின்ன சின்ன பொருள்கள். அவர்கள் அதை பெரிய திருட்டாக நினைக்கவில்லை போலும்!
ஒரு முறை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பரங்கிக்கொடி  தானாக முளைத்து செழிப்பாக வளர்ந்து காய்க்க ஆரம்பித்தது. அதில் ஒரு பரங்கி பிஞ்சு கொஞ்சம் பெரிதாக இருந்தது. அது நாளுக்கு நாள் பெரிதாக ஆரம்பித்தது.
இந்தக் கதையை என் அப்பா இப்படி வேடிக்கையாக சொல்லுவார்:
ஒரு நாள் அனுசூயா தன் தந்தையிடம் சொன்னாள், “நயினா, காய் பெருசாயிடுச்சு.”
 சௌடையன் “தெரியும், புள்ளே! நீ சும்மா இரு.” என்றான்.
கொஞ்ச நாள் கழிந்ததும் பரங்கிக்காய் நன்றாக பெரிதாகி நிறம் மாற ஆரம்பித்தது. பச்சையும்  ஆரஞ்சு கலராகவும் இருந்த அந்த பரங்கிக்காய் பார்ப்பவரை கவர்ந்தது.

அதை ஒருநாள் கவனித்த என் அப்பா, சமையல்காரரை கூப்பிட்டார். “வெங்கடேசய்யர்! நாளைக்கு பரங்கிய பொறிச்சுடுங்கோ.”
சுவாரசியமாக வெற்றிலையை புகையிலையோடு மென்றுகொண்டிருந்த வெங்கடேச அய்யர் “பொழ்ச்சுட்டா போழது" என்றார்.
அனுசூயா தோட்டத்தில் உட்கார்ந்து சாவகாசமாக பீடி 
புகைத்துக்கொண்டிருந்த தன் அப்பாவிடம் ஓடினாள்.
“நயினா, சமையக்காரர் நாலக்கி புடுங்கப்போறாரு. ஐயா சொல்லிட்டிருந்தாரு. நான் கேட்டேன்.”
சௌடையன் நிதானமாக  புகையை ஊதிக்கொண்டே, “ நீ போ, புள்ளே. போய் உன் வேலையப்பாரு. புடுங்கப்போறாராம். புடுங்கற ஆளப்பாரு,” என்றான்.
அடுத்த நாள் என் தந்தை சூரிய ஒளியில் மஞ்சளாகத் தெரிந்த பரங்கிக்காயை பார்த்தார்.
“அம்பி! அம்பி!” என்று உரக்க கூப்பிட்டார். வாசலில் பந்து விளையாடிக்கொண்டிருந்த என் மூத்த சகோதரன் அங்கிருந்தே “என்னப்பா?”  என்றான்.
“இங்க வா, இங்க வந்து பாரு. இந்த பரங்கிக்காய் பெரிசாயிடுத்து. அத நாளைக்கு  பொறிச்சுடு, என்ன?”
“சரிப்பா.” என்று பதிளளித்த அம்பி மறுபடியும் விளையாட்டில் மூழ்கினான்.
இதை கேட்டுக்கொண்டிருந்த அனுசூயா தன் தந்தையிடம் ஓடினாள்.
“நயினா! நயினா!  சின்னையா நாலக்கி புடுங்கப்போறாரு. அய்யா சொல்லிக்கிட்டு இருந்தாரு.”
“கவலப்படாத நீ, புள்ளே. போ. போயி, பெரியம்மா காபி வச்சிருக்கும். எடுத்திட்டு வா.”

அடுத்தநாள் காய் பறிக்கப்படாமல் அப்படியே இருப்பதைப்பார்த்த என் அப்பா “இந்த வீட்ல யாருக்கும் பொறுப்பே கிடையாது. சரி, நாளைக்கு நானே பொறிச்சுடறேன்.” என்றார்.
அனுசூயாவும் சௌடையனிடம் ஓடினாள்.
“ நாலக்கி பெரிய அய்யாவே புடுங்கப்போறாராம்.” அனசூயாவின் செய்தியைக்கேட்ட சௌடையன் உஷாரானான்.
“ஐயாவே சொன்னாரா?”
மறுநாள் அந்த பெரிய ஆரஞ்சு கலர் பரங்கிக்காய் மாயமாக மறைந்துவிட்டது.  பரங்கிக்காய் திருட்டு போனதை என் அப்பாவிற்கு ரிப்போர்ட் செய்தது வேறு யாருமில்லை, சௌடையனே தான்!

அப்போதெல்லாம் என் அப்பா ஒரு பிஸியான லாயர். ஞாயிற்றுக்கிழமையானால்  நிறைய கட்சிக்காரர்கள் வருவார்கள். அவர்கள் தரும் பணத்தை என் அப்பா  தன் மேஜை டிராயரில் வைப்பார். டிராயரை பூட்டும் வழக்கமே அவருக்கு கிடையாது. ஒரு நாள் டிராயரில் தான் வைத்த ரூபாய் நோட்டுகள் கலைந்திருப்பதை கண்டார்.  என் அப்பா பணத்தைப்பற்றி கவனமாக இருக்கமாட்டார். டிராயரில் எத்தனை பணம் வைத்திருக்கிறோம் என்ற கணக்கு அவருக்கு தெரியாது. ஆனால் பல தினங்களில் டிராயரில் ரூபாய் நோட்டுகள் கலைந்திருப்பதை கவனித்தார். அதைப் பார்த்தால் ஒரு குழந்தை நோட்டுகளை கலைத்திருப்பதைப் போல இருந்தது. என் அப்பா அதற்கப்புறம் பணத்தை எண்ணி வைக்க ஆரம்பித்தார். என்றைக்கு நோட்டுகள் கலைந்திருந்ததோ அன்றெல்லாம் கொஞ்சம் பணம், ஒரு சிறிய தொகை குறைந்திருந்ததை பார்த்தார். சில சமயம் அஞ்சு ரூபாய், சில சமயம் பத்து ரூபாய், சில சமயம் சில்லறை காசுகள். 

அனுசூயா தான் திருடுகிறாள் என்று என் அப்பாவுக்கு நிச்சயமாகத் தெரிந்தது, காரணம், அனுசூயா மட்டும் தான் ஆபீஸ் ரூமிற்கு கூட்டுவதற்கு வருவாள்.  வேறு யாரும் வரமாட்டார்கள். என் அப்பா அனுசூயாவிடம் எதுவும் கேட்கவில்லை.  ஆனால் அன்று முதல் அவர் டிராயரை பூட்ட ஆரம்பித்தார். இந்த விஷயத்தை மிக வேடிக்கையாக ஒரு கதை போல் என் அப்பா சொல்லுவார். அது ஒரு குழந்தையின் குறும்பைப்பற்றி ஒரு தந்தை கூறுவது போல இருக்கும்.

அந்த  காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்களை, தீண்டப்படாதவர்கள் என்பவர்களை,  மேல் ஜாதிகளை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமாக, இழிவாக  நடத்துவார்கள்.  அவர்கள் அருகிலேயே வரக்கூடாது.  காந்திஜி அவர்கள் நிலையைக்கண்டு மனம் நொந்தார். அவர்கள் ஹரிஜனங்கள் என்று  காந்திஜியால் அழைக்கப்பட்டார்கள். அது காந்திஜியால் உண்டாக்கப்பட்ட சொல்.

கோயம்பத்தூருக்கு அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து சில ஹரிஜன பையன்கள் கிராமப் பள்ளிகளில் எஸ். எஸ். எல் ஸி பாஸ் செய்து விட்டு காலேஜ் படிப்பிற்காக கோயம்பத்தூர் நகரத்துக்கு வந்தார்கள். படிக்க ஆர்வம் இருந்தது, ஆனால் அவர்கள் மிகவும் ஏழைகள். ஹாஸ்டலில் தங்க அவர்களுக்கு வசதி போதாது. அவர்களுடைய பரிதாபமான நிலைமையை அறிந்த என் அப்பா அவர்களுக்கு ஒரு மாணவர் விடுதி நடத்த தீர்மானித்தார்.
அப்பாவின் ஒரு நண்பர் தன்னுடைய ஒரு பழைய வீட்டை மாணவ விடுதிக்காக கொடுக்க முன் வந்தார். சுமார் 20 மாணவர்கள் அதில் தங்கி படித்தார்கள். அவர்களுக்கான உணவுக்கான ஏற்பாட்டை என் தந்தை செய்தார். வீட்டை கூட்டி சுத்தம் செய்ய அனுசூயா நியமிக்கப்பட்டாள்.

பரிட்சை சமயத்தில் விடியற்காலையில் எழுந்து படிக்க என் அப்பா அந்த மாணவர்களுக்கு  ஒரு அலாரம் கடிகாரம் கொடுத்திருந்தார். அந்த பையன்களிடம் என் அப்பாவின் உள்ளத்தில் ஒரு விசேஷ  அன்பு இருந்தது. அவர்களுக்கு கணக்கு, ஆங்கிலம் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்.

ஒரு நாள் அந்த மாணவர்களில் சிலர் என் அப்பாவிடம் வந்து அந்த அலாரம் கடிகாரம் தொலைந்து போய்விட்டது என்று தெரிவித்தனர்.
அவர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் அந்த கடிகாரம் கிடைக்கவில்லை.  உடனே என் அப்பாவின் மனத்திரையில் அனுசூயாவின் உருவம் எழுந்தது.
அடுத்த நாள் ஒரு பையன் வீட்டின் பின்னால் இருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து படிக்க சென்றான். அப்போது அவன் அனுசூயா அங்கிருந்த ஒரு துவைக்கும் கல்லருகில் ஓரத்தில் செல்வதை பார்த்தான். அவள் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே பதுங்கி பதுங்கி சென்று ஒரு இடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.   அந்தப்பையன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க எழுந்து நின்றான். அவனைக்கண்ட அனுசூயா அங்கிருந்து ஓடிவிட்டாள். 

 அந்தப்பையன் அவள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு செனறான். அங்கு ஒரு இடத்தில்  தரையிலிருந்து ஒரு “டிக், டிக்” என்று சத்தம் வந்துகொண்டிருந்ததை கவனித்தான். அவன் பெரிதாக கூச்சல் போட்டான். எல்லா பையன்களும் ஓடி வந்தார்கள். சத்தம் வந்துகொண்டிருந்த  இடத்தை தோண்ட ஆரம்பித்தார்கள். அங்கே மண் ‘லூசாக’ இருந்தது. கொஞ்சம் மேலாக தோண்டின உடனேயே அந்தக் குழியில் தொலைந்த கடிகாரம் இருந்ததைக்கண்டு அனைவரும் சந்தோஷத்தில் குதித்து ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் என் அப்பாவிடம் இந்த சந்தோஷ செய்தியை தெரிவித்தனர்.

அப்பா அனுசூயாவைக் கூப்பிட்டு விசாரித்தபோது அவள் “ஐயா, நான் எடுக்கல்ல.” என்று மறுத்தாள். ஆனால் என் தந்தை அவளிடம் கண்டிப்பாக, “பொய் சொல்லாதே. இனிமே இது மாதிரி எதாவது நடந்தா அப்புறம் உன்ன வேலைக்கு வச்சுக்கமாட்டேன்” என்றார்.

அனுசூயாவின் குடும்பம் தொடர்ந்து எங்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தது. பிறகு அனுசூயாவின் அப்பா சௌடைய்யன் இறந்துவிட்டான். அம்மா குள்ளி நோய் வாய்ப்பட்டாள். அவளால் வேலைக்கு வர முடியவில்லை.  அனுசூயா தான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.
அந்த சமயத்தில் நான் காலேஜுக்கு போய்க்கொண்டிருந்தேன். ஒரு நாள் நான் கொடியில் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக்கொள்வதற்காக எடுத்தேன். புடவை நீளம் குறைவாக இருந்தது. என் அம்மாவிடம் இதை சொல்லிவிட்டு நான் வேறு சேலை உடுத்திக்கொண்டு காலேஜுக்குப் போய்விட்டேன். 
அனுசூயா வீட்டை கூட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய பாவாடைக்கு கீழே என் புடவையின் ஒரு பகுதி தெரிந்ததை என் அம்மா கவனித்தாள்.
“இந்தா, அனுசூயா, இங்க வா.” என்றாள் என் அம்மா. “பாவாடையை கொஞ்சம் தூக்கு.”
அனுசூயா தயங்கிக்கொண்டே  பாவாடையை தூக்கினாள்.  என் புடவையின் கிழித்த பகுதிய அவள் தன் இடுப்பை சுற்றி இறுக்கக் கட்டியிருந்தாள்.
சாதாரணமாக கோபமே வராத என் அப்பாவிற்கு கோபம் வந்துவிட்டது. அனுசூயாவின் அண்ணன் மாரப்பனை கூப்பிட்டார். மாரப்பன் அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வந்து எதாவது எடுபிடி வேலைகள் செய்வான். அவனிடம் என் அப்பா அனுசூயா என் புடவையை கிழித்த சமாசாரத்தை சொன்னார்.
“நான் விசாரிக்கறேன், ஐயா” என்று சொல்லிவிட்டு மாரப்பன் சென்றான்.

அடுத்த நாள் மாலை பெரிதாக அழுது கொண்டிருந்த அனுசூயாவை இழுத்துக்கொண்டு வந்தான் மாரப்பன். அவனுடைய இன்னொரு கையில் இரண்டு பெரிய துணி மூட்டைகளும் இருந்தன.  என் அப்பா எதிரே வந்து அனுசூயாவை தள்ளி அவள் கன்னத்தில் அறைந்தான். அவள் வாயிலிருந்து இரத்தம் வழிந்ததைப் பார்த்து நாங்கள் எல்லோரும் அதிர்ந்தோம்.
“அடிக்காதே, மாரப்பா. நிறுத்து.” என்றார் என் அப்பா கண்டிப்பாக.
“அடிக்காம என்ன செய்யறது?  என்ன செஞ்சிருக்கா பாருங்க! “ என்று கத்திக்கொண்டு மீண்டும் அவளை அடித்தான். பிறகு இரண்டு மூட்டைகளையும்  பிரித்துக்கொட்டினான்.
டம்ளர்கள், கரண்டிகள், கிண்ணங்கள், ஸ்பூன்கள், சட்டைகள், உள் பாவாடைகள், சீப்புகள், சோப்புகள், துண்டுகள், தலையணை உறைகள் என்று இன்னும் பலவித பொருள்கள் கீழே விழுந்தன.
“திருடி! இவள அடிச்சாப்போறாது. கொல்லணும்! ” மறுபடியும் அவளை அடிக்க ஆரம்பித்தான். அனுசூயா பெரிதாக ஓலமிட்டு அழுதாள்.
எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். எப்போது திருடினாள்? “ஆ! என் ப்ளூ சட்டை!” என்று கத்தினான் என் தம்பி.
அப்போது கூட என் தந்தை அவளிடம் இரக்கப்பட்டார்.
“மாரப்பா, அடிச்சது போதும். வீட்டுக்கு கூட்டிட்டு போ.” என்றார். 

அன்றிலிருந்து அனுசூயா எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவில்லை.
இது நடந்து இரண்டு வருஷங்கள் இருக்கும். ஒரு நாள்மாலை நாங்கள் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்திருந்தோம்.
“ஐயா!” என்று வாசலிலிருந்து மாரப்பனின் குரல் கேட்டது. மாரப்பன் தான் வந்திருந்தான். கூடவே புது மணப்பெண்ணின் பொலிவில் அனுசூயா! மணமகனும் வந்திருந்தான். அனுசூயாவைக்கண்டதும் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.
மணமகளும் மணமகனும் என் பெற்றோரை வணங்கினர். அப்பா அனுசூயா கையில் அன்பளிப்பாக பணம் கொடுத்தார்.
“அனுசூயா நல்ல பொண்ணு. அவள நல்லா பாத்துக்கோ.” என்றார் அனுசூயாவின் கணவனிடம்.

“ஐயா!” என்று கதறிக்கொண்டே என் தந்தையின் கால்களில் விழுந்தாள் அனுசூயா.

No comments:

Post a Comment