வி.எஸ். உயர்நிலைப்
பள்ளி. அன்று பள்ளியில் ஒரே கூட்டம். புதிய அட்மிஷன் செய்யும் நாளானதால்
பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளுடன் வந்து குழுமியிருந்தார்கள்.
வள்ளியும் செல்வனுடன்
அப்பள்ளிக்கு வந்திருந்தாள். செல்வன் கார்ப்பரேஷன் பள்ளியில் ஐந்தாவது
தேறியிருந்தான். இந்த பள்ளியில் காலையில் நுழைவுப் பரிட்சை வைத்திருந்தனர்.
வி.எஸ். உயர்நிலைப் பள்ளிக்கு ஊரில் நல்ல பெயர் இருந்தது. பள்ளி வள்ளியின்
வீட்டிற்குப் பக்கத்திலும் இருந்தது. இப்பள்ளியில் சேர்த்துவிட்டால் செல்வன்
நன்றாகப் படிப்பான் என்று நினைத்தாள் வள்ளி.
பள்ளி முதல்வர் அறைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப் பட்டனர். செல்வனின் முறை வந்தது. செல்வனும் வள்ளியும் உள்ளே
சென்றனர். ஹெட்மாஸ்டரின் முகம் கடுகடு என்று இருந்தது. வள்ளியையும் செல்வனையும் ஏற
இறங்க பார்த்தார். அவருடைய கையில் நுழைவுப் பரிட்சையில் செல்வன் வாங்கியிருந்த
மதிப்பெண்களின் தாள் இருந்தது.
“டெஸ்டில் ரொம்ப மோசமா
மார்க் வாங்கியிருக்கான் உன் பையன். அதனால அவன சேத்துக்க முடியாது. அட்மிஷன்
இல்லை” நிர்தாட்சண்யமாகக் கூறினார் முதல்வர்.
“அப்படி சொல்லாதீங்க
சாமி, எப்படியாச்சும் சேத்துக்குங்க சாமி.” என்று கெஞ்சினாள் வள்ளி.
“கணக்கில் 12, தமிழில்
18. மார்க்கு படு மோசமா இருக்கு. இந்தா இத எடுத்திட்டு போ. வேற ஸ்கூல்ல போய் பாரு.
இங்க அட்மிஷன் குடுக்க முடியாது. என் டயத்த வீணாக்காதே”
பள்ளித்தலைவரின்
குரலில் இருந்த கண்டிப்பு வள்ளியை பேசாமல் வெளியேற வைத்தது.
அவள் கட்டியிருந்த
கோட்டை நொறுங்கி விழும் வேதனையை அவளால் தாங்க முடியவில்லை. காலையிலிருந்து நின்று
கொண்டிருந்த களைப்பு வேறு.
“செல்வா, தலைய
சுத்துது, வா, அப்படி கொஞ்சம் குந்தலாம்.” என்றவாறு வள்ளி அங்கே ஓரமாக இருந்த
பெஞ்சில் உட்கார்ந்து கண்களை சோர்வுடன் மூடிக்கொண்டாள்.
“அம்மா, யாரோ வராங்க.”
செல்வன் குரல் கேட்டு
வள்ளி அவசரமாக எழுந்திருந்தாள்.
“உட்காருங்க, அம்மா!”
என்ற கனிவான குரல் கேட்டு வள்ளி நிமிர்ந்து பார்த்தாள்.
வெள்ளை வேட்டி, சட்டை,
கண்களில் கண்ணாடி, மெலிந்த உயர்ந்த உருவம். முப்பது வயதிருக்கும். ஒரு மனிதர் நின்று
கொண்டிருந்தார்.
மரியாதையுடன் நின்ற
வள்ளி பாமர ஜனங்களுக்கே உரித்தான வெகுளித்தனத்துடன்,
“சாமி, என் பையனுக்கு
இஸ்கோல்ல எடமில்லன்னு சொல்லிபோட்டாங்களே. ஏன், சாமி, இத்தன பெரிய இஸ்கோல்ல எப்படிங்க
எடமில்லாம போகும்?”
செல்வன் இடைமறித்து,
“போம்மா, உனக்கு
ஒண்ணும் தெரியல்ல. ஒரு க்ளாஸ்ல இத்தன பேர் தான் இருக்கலாம்னு ரூல் இருக்கு,
இல்லீங்களா, ஐயா?”
வள்ளியின்
பாமரத்தனமும், செல்வனின் புத்திசாலித்தனமும் அந்த மனிதரை சற்று கவர்ந்தது போலும்.
அவர் நின்றார்.
“இடம் இல்லேன்னு
சொல்லிட்டாங்களா?” என்று வினவினார்.
“ஆமா, ஐயா, பரிட்சைல
மார்க்கு கொறவு, அதனால எடமில்லன்னு சொல்லி போட்டாங்களே! சாமி, நீங்களாச்சும்
சொல்லி என் செல்வனுக்கு
எடம் வாங்கி தாங்கய்யா.
ஒங்களுக்கு ரொம்ப புண்ணியம். அவன் நல்லா படிக்கணும், அதாங்க என் ஆசை.” கெஞ்சினாள்
வள்ளி.
அந்த மனிதர் சற்று
யோசித்தார். பிறகு, “அந்த அப்ளிகேஷனை எங்கிட்ட கொடுங்க, நான் ஹெச். எம் கிட்ட
சொல்லி பார்க்கறேன். எதுக்கும் நாளை காலையில அட்மிஷன் ஃபீஸோட வாங்க. பணம் எவ்வளவு கட்டணும்னு
விசாரிச்சிட்டு போங்க. என் பெயர் பிரகாசம். நான் இங்கதான் இருப்பேன்” என்று சொல்லி
விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டார்.
வள்ளி நன்றிப்
பெருக்கில், “ஐயா, நீங்க அந்த முருகசாமி மாதிரி...”என்று ஏதோ சொல்லவந்தவள் நாக்கை
கடித்துக் கொண்டு மௌனமானாள்.
வெட்கத்துடன் தலை குனிந்தாள்.
பெரிதாக சிரித்த செல்வன்,
வெட்கத்துடன் தலை குனிந்தாள்.
பெரிதாக சிரித்த செல்வன்,
“எங்கப்பா பேரு
முருகேசன், அத சொல்லிட்டாங்க இல்ல, அதனால தான் வெக்கப்படறாங்க” என்று விளக்கினான்.
பிரகாசம் புன்னகை
புரிந்தார். எத்தனை வெகுளித்தனமானவர்கள்! முடிந்தால் இவர்களுக்கு உதவவேண்டும்
என்று நினைத்தார்.
“அப்போ காலையில்
பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு பிரகாசம் சென்றுவிட்டார். புத்துயிர் பெற்ற
நம்பிக்கையுடன் வள்ளி செல்வனின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நீக்கி நடந்தாள்.
கிருஷ்ணா நகரை
நெருங்கும்போதே ராமக்காள் ஓடிவந்தாள்.
“வள்ளி, முருகேசன
போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க.”
வள்ளி அதிர்ந்து போய்
நின்றாள்.
“ஆமா, வள்ளி, சீட்டாட்டத்தில
ஏதோ தகறாராம், அடிதடியாயிருச்சாம். பத்து பேர போலீசு பிடிச்சுட்டு
போயிருக்காங்களாம். நம்ம பாபு வந்து சொல்லிச்சு, அதான் ஓடியாரேன்” என்று மூச்சு
வாங்க தெரிவித்தாள் ராமக்காள்.
வள்ளி பிரமித்துப் போய்
வாயடைத்து நின்றாள்.
No comments:
Post a Comment