பிரகாசம் கோவை ஜன்ஷனில் ரயிலை
விட்டிறங்கினார். நேரே வள்ளியின் குடிசைக்கு சென்றார். குடிசைக் கதவு
தாழிடப்பட்டிருந்தது. பக்கத்து குடிசையின் வாயிலில் ராமக்காள் வள்ளியின் மகள்
மணிமேகலையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிரகாசத்தைக் கண்டதும் எழுந்து
வந்தாள்.
“வாங்கய்யா, வாங்க. செல்வனை
பாக்கறதுக்கு வந்தீங்களா? பாவம். ஆஸ்பத்திரியில் கெடக்குது” என்றாள்.
பிரகாசம் திடுக்கிட்டார். “என்ன?
என்ன ஆச்சு?”
“பாவம், அவனுக்கு மண்டையில
அடிபட்டிருச்சுங்க. உங்களுக்குத் தெரியாதுங்களா? ரோட்டில குளி
வெட்டிட்டிருந்தாங்க, சாமி. தடுக்கி அதுக்குள்ளார செல்வன் விளுந்திரிச்சு. மண்டைல
கல்லு பட்டு நல்ல ஆளமா காயம். சர்க்காரு பெரிய ஆஸ்பத்திரில அட்மிட்
பண்னியிருக்காங்க. வள்ளியும் முருகேசனும் நாலு நாளா அங்க தாங்க மாத்தி மாத்தி
போயிட்டு போயிட்டு வராங்க.” என்று நடந்ததை விவரித்தாள் ராமக்காள்.
“உசுருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?”
என்று கவலையுடன் கேட்டார் பிரகாசம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. நேத்தைக்கே
நெனவு வந்திரிச்சு. பரிச்சை எளுத முடியாதுங்க. அத நெனச்சாத்தான் எல்லாருக்கும்
வருத்தமா இருக்குதுங்க. என்னவோ சொல்லுவாங்களே வெண்ண தெரண்டு வரப்போ தாளி
ஒடஞ்சிருச்சாம். அது மாதிரி ஆயிபோச்சே” என்று அங்கலாய்த்தாள் ராமக்காள்.
“சரி நான் போய் பார்க்கறேன்” என்று ராமக்காளிடம் விடைபெற்றுக்கொண்டு பிரகாசம்
ஒரு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
ஆஸ்பத்திரியில் செல்வன் படுத்திருந்த கட்டிலருகே முருகேசனும் வள்ளியும்
அமர்ந்திருந்தனர். செல்வனின் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது. கையை ஊசி வழியாக
ரத்தக்குழாயில் க்ளூகோசும், மருந்தும்போய்க்கொண்டிருந்தன. வார்டுக்குள் நுழைந்த
பிரகாசம் செல்வனின் அருகில் வந்தார். அவரைக் கண்டதும் செல்வனின் முகம் மலர்ந்தது.
அதுவரை தன் சோகத்தை அடக்கி வைத்திருந்த வள்ளி விம்மி விம்மி அழ ஆரம்பித்து
விட்டாள். பிரகாசம் மிகுந்த அனுதாபத்துடன் வள்ளியை நோக்கினார். எப்படி இருந்தவள்
எப்படி ஆகிவிட்டாள்! தேய்ந்து உருமாறி இருந்தாள்.
“செல்வா!,” என்று அன்புடன் அழைத்தார் பிரகாசம். “செல்வா, நீ பரிட்சை எழுதப் போகிறாய்” என்று மெதுவான
குரலில் ஆனால் அழுத்தமாகக் கூறினார்.
எல்லோரும் பிரமித்து அவரை நோக்கினர். செல்வன், “அது
எப்படி ஸார் முடியும்?” என்றான். பாசத்துடன் அவனை தட்டிக்கொடுத்த பிரகாசம், “முடியும். செல்வா, நீ பரிட்சை
எழுதலாம். நான் இவ்வளவு நேரம் டாக்டரோட பேசிட்டு தான் வரேன். இன்னும் அஞ்சு நாள்
இருக்கு. அதுக்குள்ள மறுபடியும் டெம்பரேச்சர் வரல்லேன்னா அனுமதிக்கிறதா
சொல்லியிருக்கார். நீ படிக்கணும்னு அவசியம் இல்ல. நீ முன்னே படிச்சதே போதும்.”
என்றார்.
“முடியாது ஸார், என்னால முடியாது, ஸார், தலைய ரொம்ப
வலிக்குது.’ என்றான் செல்வன் அழுதுகொண்டே.
“அதெல்லாம் சரியாயிடும். எத்தன சோதனைகளுக்குப் பிறகு
இந்த கட்டத்திற்கு எட்டியிருக்கே, யோசிச்சுப்பார். மனசு தளர்ந்து போகாமல் தைர்யமா,
உறுதியோட இரு. நான் பரிட்சை எழுதத் தான் போறேன் என்று உனக்கே சொல்லிக்கோ. பரிட்சை
முடியற வரைக்கும் நான் உன் கூடவே இருக்கேன். நீ எழுதல்லேன்னா உன் காலனில இருக்கற
ஜனங்களுக்கும் உன்னோட ஆசிரியர்களுக்கும் எத்தனை ஏமாத்தமா இருக்கும்,
நெனைச்சுப்பாரு. டாக்டரே எழுதலாம்னு அனுமதி கொடுத்திருக்காரு” என்றார் பிரகாசம்
மீண்டும் கொஞ்சம் அழுத்தமாக.
டாக்டர் செல்வன் பரிட்சை எழுதுவதற்கு அவ்வளவு எளிதில்
சம்மதம் கொடுக்கவில்லை. அவரிடம் பிரகாசம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செல்வனின்
கதையெல்லாம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்திருந்தார்.
நானே அவனைத் தூக்கிச்சென்று பரிட்சை ஹாலில் உட்கார
வைக்கிறேன். அவனுக்கு சிறிதும் ஸ்ட்ரெயின் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று
பிரகாசம் உறுதியளித்தபிறகு தான் டாக்டரும் தான் ஒத்துழைப்பதாக கூறினார். அவ்ருக்கே
இந்த கேஸ் மேல் சுவாரஸியம் வந்துவிட்டது. “நீங்க இவ்வளவு “இன்டரஸ்ட்”
எடுத்துக்கறீங்க. அதனால நாம எல்லோரும் சேர்ந்து அவனை எழுத வைப்போம்.” என்றார் அவர்
உற்சாகத்துடன்.
செல்வன் கலங்கினான். ஆனால் பிரகாசத்தின்
வார்த்தைகளும் அன்பு ஸ்பரிசமும் அவனை புத்துயிர் கொள்ளச் செய்தன.
இந்த சமயத்தில் ராம்குமார் தயங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் செல்வன்
முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி! ராம்குமாரே தன்னை பார்க்க வந்திருக்கிறானே!
“எப்படிடா இருக்கே, செல்வா” என்றான் ராம்குமார்.
“நான் நல்ல இருக்கேன். தாங்க்ஸ்டா வந்ததுக்கு”
என்றான் செல்வன்.
“நல்ல சகுனம் தான். ஆனா நீ படிச்சு ஸ்ட்ரெயின்
பண்ணிக்காதே. மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை நல்லா கவனிச்சுக்கோ.
பரிட்சை நல்லா எழுதிடலாம்.” என்றார் பிரகாசம் புன்னகையுடன்.
செல்வனும், “சரி, ஸார், எழுதறேன்” என்றான் கண்களில்
புத்தொளியுடன்.
வள்ளி பிரகாசத்தை மனதிற்குள் வணங்கினாள். அவளைப்
பொறுத்தவரை அவர் தான் தெய்வம்.
No comments:
Post a Comment