அரைவருடத்தேர்வில்
செல்வன் மிக மோசமாக மார்க் வாங்கியிருந்தான். செல்வனின் வகுப்பாசிரியர் மிகவும்
கண்டிப்பானவர். நன்றாக, சிரத்தையுடன் படிக்கும் பிள்ளைகளைத் தான் அவருக்குப்
பிடிக்கும். அன்று பரிட்சை தாள்களை கொடுக்கும் போது அவர் செல்வனை நன்றாகத்
திட்டிவிட்டார்.
“ஆடுமாடு மேய்க்கப்
போடா! உன்னையெல்லாம் எவன்டா படிக்கச் சொன்னது?” என்று அவர் திட்டியதும் வகுப்பில் கலீர் என்று ஏகத்தாளமாக சிரிப்பொலி
எழுந்தது.
“யாருடா சிரித்தது?
ஸ்டாண்ட் அப்!” என்று அதட்டியவாறு அவர் எல்லா பக்கமும் உற்று பார்த்தார்.
எல்லோரும் பூனை மாதிரி கப்சிப்பென்று அமர்ந்திருந்தனர். ராம் குமாரும் அவனுடைய சகாக்கள்
இருவரும் தான் சிரித்திருப்பார்கள் என்று செல்வனுக்குத் தெரியும். சிரமப்பட்டு
கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டான்.
அன்று மாலை வீட்டிற்கு
போக மனமில்லாமல் பள்ளியிலேயே ஒரு புறம் உட்கார்ந்திருந்தான்.
“செல்வா, உன்னைப்பற்றி
என்னவெல்லாமோ நெனச்சிட்டிருந்தேன். இவ்வளவு
தானா உனக்கு படிப்பில அக்கறை? இவ்வளவு மோசமா மார்க் வாங்கியிருக்கே,
சேச்சே, என் பேரு கெட்டுப் போச்சு”
பிரகாசத்தின் கடுமையான
குரல் கேட்டுசெல்வன் திடுக்கிட்டான். தலையை நிமிர்த்தி பார்த்துவிட்டு மரியாதையுடன்
எழுந்து நின்றான். தலையைக் குனிந்து கொண்டான்.
“உன் அம்மா உன்னை
படிக்க வைக்க எத்தனை கஷ்டப்படறாங்க? உழைச்சு படிக்க வேணாம்? இப்படியா
பொறுப்பில்லாம இருக்கறது?” என்று கண்டிப்பான குரலில் பிரகாசம் கேட்கவும்
பயத்தினாலும் துக்கத்தினாலும் தொண்டையை அடைத்தது செல்வனுக்கு.
“ஸார், நான்
நல்லாத்தான் ஸார் படிச்சேன்” என்றான்.
“பொய் சொல்லாதே. நீ
மார்க் வாங்கல்லேன்னாலும் பரவயில்லை. பொய் சொன்னால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.”
என்றார் பிரகாசம் கோபமாக.
“ஸார், நான்
உண்மையாத்தான் சொல்றேன். நான் இப்பல்லாம் விளையாடப் போவதே இல்லை. எப்பவும்
படிக்கிறேன். ஆனால் எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது. ஸார். அப்பா சொல்ற மாதிரி
எங்க சாதிக்கெல்லாம் படிப்பு வராது போல இருக்குது. மூளை கொறைவா இருக்கும் போல.”
செல்வனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
“எல்லாருக்கும் வீட்ல
படிச்சவங்க இருக்காங்க. சொல்லித்தறாங்க. ஸார். இல்லேன்னா டியூஷன் சொல்லிக்கறாங்க.
எனக்கு யார் ஸார் சொல்லித்தருவாங்க? எங்க காலனில யாருக்காவது லெட்டர் வந்தால்
எங்கிட்டதான் கொண்டு வருவாங்க. யாரும் படிச்சதில்லை.” மேலும் சற்று தைரியத்துடன்
சொன்னான்.
“உங்க சாதிக்கு படிப்பு
வராதுன்னு அப்படியெல்லாம் எதுவும்
கிடையாது,. உனக்கு புரியல்லேன்னா வாத்தியார்கிட்ட கேக்க வேண்டியது தானே?”
செல்வன் தயங்கிவிட்டு
பின் “ஸார், அவர் .. திட்டுவார் ஸார், எனக்கு ... அவரைப் பாத்தா ரொம்ப பயமா
இருக்கு ஸார்.” என்றான்.
பிரகாசம் யோசனையில்
ஆழ்ந்தார். செல்வனின் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் கோபக்காரர், கண்டிப்பானவர்.
பொதுவாக எல்லா மாணவர்களும் அவரைக் கண்டு பயப்படுவார்கள். செல்வன் பயந்ததில்
ஆச்சர்யமில்லை.
செல்வனைக் காணும் போது
பிரகாசத்திற்கு தன் இளமைப் பருவ நினைவுகள் வந்தன.
பிரகாசம் கூறினார்,
“செல்வா, நான் உனக்கு கொஞ்சம் பாடம் சொல்லித் தரலாம்னு பார்க்கிறேன்”
செல்வனுக்கு தன்
செவிகளையே நம்ப முடியவில்லை.
“இன்னைக்கு சாயங்காலம்
உன் புஸ்தகம், நோட்டு எல்லாத்தையும் எடுத்துகிட்டு என் வீட்டுக்கு வா. பார்க்கலாம்”
“சரிங்க, ஸார், வந்துடறேன்
ஸார்!” என்றான் செல்வன் உற்சாகத்துடன். அவன் கண்களில் புத்தொளி மின்னியது.
பிரகாசம் போய்
விட்டார். செல்வன் தன் பையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான். தாயிடம்
பிரகாசம் தனக்கு பாடம் கற்பிக்கப் போவதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
வள்ளிக்கு ஒரே சந்தோஷம்.
“செல்வா, அவர் நமக்கு
கடவுள் மாதிரி. நீ அவர்கிட்ட கவனமா படிக்கணும். சரியா? அப்பால வீட்டுல அவருக்கு
என்ன வேலை வேணுமானாலும் செய்து கொடுத்திரு. என்ன? துணிமணி துவைக்கணுமா, வீட்ட
சுத்தம் பண்ணனுமா, எதானாலும் நல்லா கிளீனா செஞ்சு கொடு.”
அன்றிலிருந்து
செல்வனுக்கு பிரகாசத்தின் டியூஷன் துவங்கியது. செல்வனின் தலையில் தான் எவ்வளவு
குழப்பங்கள்? அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இவையே சரியாக
புரியாத போது எப்படி பெரிய கணக்குகள் போட முடியும்? இங்கிலீஷ் எழுத்துகளே தெரியவில்லை.
தமிழ் கூட சரியாக தப்பில்லாமல் எழுத முடியவில்லை.
பிரகாசம் பொறுமையுடன்
அடிப்படையிலிருந்து கற்பிக்கத் தொடங்கினார். செல்வனுக்கு இயற்கையில் புத்தி கூர்மை
இருந்தது. கற்பித்ததை சட்டென்று பிடித்துக் கொண்டான். பிரகாசம் எரிச்சல் படாமல்
அவனுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
களிம்பேறிய விளக்கை
புளி, சாம்பல் போட்டு விளக்கினால் பள பளவென்று ஆகுமல்லவா? அது போல பிரகாசத்தின் டியூஷனில்
செல்வன் முன்னேற ஆரம்பித்தான். அவனுக்கு கற்றுத்தருவதில் பிரகாசத்திற்கு ஒரு
ஆத்மதிருப்தி இருந்த்து.
செவனுக்கோ
பிரகாசத்திற்கு பணிவிடை செய்வதில் அலாதியான ஆனந்தம். அவரிடம் அவனுக்கு இருந்த
ஈடுபாட்டிற்கு ஒரே ஒரு பெயர் தான் உண்டு - பக்தி
No comments:
Post a Comment