வள்ளியும்
முருகேசனும் தங்கள் குடிசையை நெருங்கினர். அங்கு கண்ட காட்சி முருகேசனை சட்டென்று
நிற்க செய்தது. குடிசைக்கு வெளியே ஒரு புறம் செல்வன் அமர்ந்திருக்க, அவனை சுற்றி
கோவிந்தன், முத்து, பாலன், பழனி, செல்லி யாவரும் அமர்ந்திருந்தனர். செல்வன் பேசிக்
கொண்டிருந்தான்.
“ரொம்ப நாளைக்கு முன்னால இங்கிலாந்துல ஒரு விஞ்ஞானி
இருந்தாரு, அவரு பேரு நியூட்டன். ஒரு நாள் அவர் ஒரு ஆப்பிள் மரத்தடில
உக்கார்ந்திருந்தாராம்.”
“ஆப்பிள்
மரமா?” செல்லி கண்களை அகல விரித்துக்கொண்டு கேட்டாள்.
“ஆமா,
ஆப்பிள் மரம். அதுல நெறைய ஆப்பிள் பழம் இருந்துது. அதுல ஒரு பழம் அவர் தலையில
விழுந்துது. அப்ப அவர் என்ன நெனச்சார், தெரியுமா?”
“அவருக்கு
நல்லா தல வலிச்சிருக்கும்.” – இது பழனி.
“அத
எடுத்து தின்னாரா?” – செல்லி.
“இல்ல.
அவர் சாப்பிடல்ல, யோசிச்சாரு.”
“அதுல
மண் பட்டிருக்கும். அதான் யோசிச்சிருப்பாரு”
“தொடச்சி
சாப்பிடவேண்டியது தானே?”
“இல்ல,
அவர் அத சாப்பிடல்லே. அவர் என்ன யோசிச்சாரு தெரியுமா?” எல்லோரும் செல்வனையே
ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அந்த
ஆப்பிள் பழம் ஏன் கீழ விழுந்துது, ஏன் மேல போகல்லேன்னு சிந்திச்சாரு.
“எங்கேயாவது
ஆப்பிள் மேலே பறக்குமா?” எல்லோரும் பெரிதாக சிரித்தனர்.
“ஏன்
எல்லா பொருளும் கீழே விழுது? மேல ஏன் போறதில்ல? சொல்லுங்க பார்க்கலாம்” என்றான்
செல்வன். எல்லோரும் மௌனமாக செல்வனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நம்ம
பூமி இருக்கே, நாம வசிக்கிறோமே இந்த பூமிக்கு ஒரு சக்தி இருக்குது. அந்த சக்தியால
பூமி எல்லா பொருள்களையும் தன்னை நோக்கி இழுக்கிறது. அதனால தான் மேலே எறியற பொருள்
எல்லாம் கீழே விழுது.”
“அதுனால
தான் மாங்காயை அடிச்சா மாங்காயும் கீளே விளுது, கல்லும் விளுது, இல்லே, செல்வா?”
கேட்டது பழனி
“அடியும்
முதுகில விளுது” இது பாலன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“பூமியோட
இந்த சக்திக்கு புவி ஈர்ப்பு விசைன்னு பேரு. இத முதல்ல கண்டுபிடிச்சவர்
நியூட்டன்.” என்று விளக்கினான் செல்வன். எல்லா சிறுவர்களும் செல்வன் சொல்வதை
ஆவலுடனும் கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்த
முருகேசனுக்கு வியப்பில் மூச்சடைப்பது போலிருந்தது.
“சூரியனுக்கும்
ஈர்ப்புசக்தி இருக்குது. அதனால பூமி சூரியன சுத்தி வருது. சூரியன் பூமியைவிட பல
மடங்கு பெருசு. ஆனா இங்கேயிருந்து பார்க்கும்போது சிறுசா தெரியுது. அதோட சக்தி
அதிகம்”
“சூரியன்
பெருசுன்னா சந்திரனும் பெருசு இல்லே செல்வா?” பாலன் சந்தேகம் எழுப்பினான்.
“வெரி
குட், சபாஷ்1” என்ற குரல் கேட்கவும் அனைவரும் திரும்பினர். பிரகாசம் அங்கே நின்று
கொண்டிருந்தார். செல்வன் சற்று வெட்கத்துடன் எழுந்து நின்றான்.
பிரகாசம்
முருகேசன் வள்ளி அருகில் சென்றார். முருகேசனைப் பார்த்து, “நீங்க செல்வன் அப்பா
முருகேசன் தானே?”
“ஆமாங்க”
என்றான் முருகேசன் பணிவுடன்.
“முருகேசன்,
செல்வன் ரொம்ப புத்திசாலி, அவன நல்லா படிக்க வைங்க. அவனால உங்க சமூகமே முன்னுக்கு
வரணும்.” என்று கூறிய பிரகாசம், செல்வனிடம் திரும்பி, “செல்வா, எனக்கு சென்னையில்
ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கெடச்சிருக்கு. இன்னைக்கு தான் லெட்டெர் வந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும்.”
ரொம்ப
நாட்களாக நீ உன் வீட்டுக்கு கூப்பிட்டுக் கொண்டே இருந்தாய். நானும் வரணும்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். இப்போ
இந்த கடிதம் வந்த உடனே, சரி இதையும்
சொல்லிட்டு உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.” என்றார்.
செல்வனுக்கு துக்கம்
தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் மல்கியது. பிரகாசம் அவனை அன்புடன் தட்டிக்
கொடுத்து, “சென்னைக்குத் தானே போறேன், அமெரிக்கா இல்லையே. அடிக்கடி வந்து உன்னைப்
பார்ப்பேன். நான் கடிதம் எழுதுவேன். நீயும் அடிக்கடி எழுது. என்ன? சரியா?”
“இவள் தான் மணிமேகலையா?”
என்று கேட்டுக்கொண்டே முருகேசனிடமிருந்து மணியை வாங்கிக் கொண்டார்.
“வாங்க, சாமி, உள்ளே” என்று
முருகேசன் அழைக்கவும் பிரகாசம் அவர்களின் எளிய ஆனால் துப்புரவாக இருந்த
குடிசைக்குள் சென்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் சகஜமாக உட்கார்ந்தார். வள்ளி
இரண்டு சிறிய வாழைப்பழங்களை ஒரு தட்டில் எடுத்து வந்தாள்.
“செல்வா, ஓடிப் போய் ஐயாவுக்கு
பெப்ஸி வாங்கிட்டு வா.”
“வேண்டாம், முருகேசன்,
இதுவே போதும்” என்று வாழைப் பழங்களை சாப்பிட்டார். பிறகு எழுந்தார் போவதற்கு.
“முருகேசன், வள்ளியம்மா,
நானும் உங்க மாதிரி மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வந்தவன் தான். எங்கம்மா என்னை
படிக்கவைக்க ரொம்ப கஷ்டப் பட்டாங்க. எப்படியோ படிச்சு இன்னைக்கு இந்த நிலைமைக்கு
வந்திருக்கேன். அதனால சொல்றேன், செவன் படிப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் நிறுத்திடாதீங்க.
செல்வா, இனிமே நீயே படிக்கலாம். யாரும் சொல்லிக்கொடுக்க அவசியமில்லை. அப்படி
எதாவது புரியல்லேன்னா டீச்சர் கிட்ட
கேட்டு தெரிஞ்சிக்கோ. இன்னும் ஒரு வாரம் இங்க தான் இருப்பேன். வழக்கம் போல வா.
அப்போ நான் வரட்டுமா?”
பிரகாசம் விடை பெற்று
சென்றார். அவர் சென்றதும் முருகேசன் படீர் படீரென்று தன் தலையில் அறைந்து
கொண்டான்.
“நான் ஒரு முட்டாள், மட்டி.
ஒனக்கிருக்கற புத்தி எனக்கில்லாம போயிருச்சே வள்ளி.” என்று பலவாறு புலம்பினான்.
பிறகு,
“வள்ளி, செல்வனை நல்லா
படிக்க வைக்கோணும். அவன் நல்லா படிச்சு ஐயா மாதிரி வெள்ள வேட்டி, சட்டைஎல்லாம்
போட்டுக்கணும்.” என்றான்.
“போப்பா, நான் ஜீன்ஸ், டி
சர்ட்டு தான் போட்டுப்பேன்.” என்று செல்வன் கூறியதும் எல்லோரும் சிரித்தனர்.
ஆனந்தத்தில் வள்ளிக்கு கண்களில் நீர் மல்கியது.
விதி தன்னை மீண்டும்
சோதிக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால் ஆனந்தப் பட்டிருப்பாளா?
No comments:
Post a Comment