செல்வன் பிரகாசத்திற்கு
கடிதம் எழுத உட்கார்ந்தான். என்ன எழுதுவது?
அன்புள்ள அண்ணனுக்கு,
வணக்கங்கள். எஸ்.எஸ்.எல்.ஸி
தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. நான் நன்கு படித்து வருகிறேன்.
அம்மாவுக்கு ஆபரேஷன் ஆன பிறகு உடல்நிலை கொஞ்சம் தேறி பழைய படி வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டாள்.
ஆனால் பலவீனமாகத் தான் இருக்கிறாள். தந்தை வேலை செய்துகொண்டிருந்த வீட்டை விட
வேண்டி வந்து விட்டது. போன மாதம் என் அப்பா கடும் காய்ச்சலில் படுத்துவிட்டார்.
“வள்ளி, எனக்கு சும்மா
வைத்தியம் செஞ்சு காசை செலவளிக்காதே. நான் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம்? நான்
போனா தான் நல்லது, இளுத்து வெளியே எறிஞ்சிடு” என்று அவர் புலம்பியது என் மனதை
அறுத்தது. மருந்து, ஆட்டோ எல்லா செலவும் மிக அதிகமாகிவிட்டது. மணியும் அடிக்கடி
சீக்காய் படுத்துவிடுகிறாள். அவளுக்கு
பால் வாங்குவதை நிறுத்தியாகி விட்டது. நாங்கள் சாப்பிடும்
உணவில் சத்து கிடையாது. அரிசி சோறு அதிகம் சாப்பிடுகிறோம். அதுவே நோய்கள் அடிக்கடி
வர காரணம் என்று எனக்கு தெரிகிறது.
நான் மாலையில் ஒரு வீட்டில்
வேலை செய்கிறேன். இப்போது வீடு இருக்கும் நிலைமையை பார்க்கும்போது படிப்பை
நிறுத்திவிட்டு முழு நேரமும் ஏதாவது வேலை செய்யலாமா என்று தோன்றுகிறது. ஆனால் என்
தாயும் தந்தையும் மற்றும் இங்குள்ளவர்கலும் நான் படிப்பை விட்டுவிடக் கூடாது
என்பதில் கண்டிப்பாக இருக்கிறார்கள். ராமக்காள் கூட தம்பி, நல்லா படி என்கிறாள்.
அவள் எங்களுக்கு செய்யும் உதவி கொஞ்சம் நஞ்சம் இல்லை.
உங்களை ஒரு முறை காணத்
துடிக்கிறேன். என் கஷ்டங்களை உங்களிடம் சொல்லி மனமாற அழவேண்டும் என்று
தோன்றுகிறது. வருவீர்களா?
இப்படிக்கு,
அன்பன்,
செல்வன்.
இப்படி
ஒரு கடிதம் அவன் கற்பனையில் தோன்றியது. மனதிலிருப்பதை கொட்டினால் இப்படித்தான்
எழுத வேண்டும். ஆனால் பிரகாசம் முன்பு ஒரு முறை இடுக்கண் வருங்கால் ங்குக என்ற
வரியை விளக்கும்போது கஷ்டம், கஷ்டம் என்று எப்பொழுது பார்த்தாலும் மூக்கால்
அழுபவர்களைக் கண்டால் எனக்கு
கொஞ்சமும் பிடிக்காது,
யார் கஷ்டங்களை புன்னகையுடன் சமாளிக்கிறார்களோ அவர்களிடம் எனக்கு மதிப்பு
உண்டாகிறது என்று கூறியது நினைவிற்கு வந்தது.
ஆகையால் கற்பனைக்
கடிதத்திற்கு பதிலாக சாதாரணமாக ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டான்.
பிரகாசத்திடமிருந்து செல்வனுக்கு பதில் வந்தது.
செல்வா, உன் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
பரிட்சையில் தேறி பள்ளியில் முதலாவதாக, ஏன், மாநிலத்திலேயே முதலாவதாக வருவாய் என
எதிர்பார்க்கிறேன். உன் காலனியில் வாழும் மற்ற பிள்ளைகளுக்கு நீ ஒரு வழிகாட்டி,
எடுத்துக்காட்டு என்பதை மறந்து விடாதே. நன்றாய் படி என்று உனக்கு சொல்ல வேண்டிய
அவசியமில்லை.
உனக்கும் உன் பெற்றோர்களுக்கும் ஒரு நற்செய்தி.
எனக்கு வரும் வெள்ளியன்று கோயிலில் எளிமையாக திருமணம் நடக்க உள்ளது. உனக்கு ஒரு
அண்ணி வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைவாய் என்றுநினைக்கிறேன். உன் தாய் நலமாக
இருப்பது கேட்டு மகிழ்ச்சி. உன் அப்பா நலமாக இருக்கிறாரா? அவரால் நடக்க முடிகிறதா?
செல்வி மணிமேகலைக்கு என் அன்பு.
இப்படிக்கு,
உன் அன்பு அண்ணன் பிரகாசம்.
பிரகாசத்திற்கு
கல்யாணமா? செல்வனுக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. வரப்போகும் அண்ணி மீது கொஞ்சம்
பொறாமை கூட வந்தது. அண்ணி வந்தவுடன் அண்ணனுக்கு தன் மேல் அன்பு மாறாமல் இருக்குமா?
“சேச்சே! அப்படி நெனைக்கறதே தப்பு. தன்னை தம்பியாகக் கருதி எத்தனை அன்புடன்
லெட்டெர் எழுதி இருக்காரு!” செல்வன் தன்னையே நொந்து கொண்டான்.
வள்ளி ஆனந்தப்பட்டாள்.
ஆயிரத்தில் ஒருத்தர். நல்லா குடியும் குடித்தனமா இருக்கட்டும் என்று மனதார
வாழ்த்தினாள்.
நாட்கள் ஓடின. பரிட்சைக்கு
இன்னும் ஒரு மாதமே இருந்தது. மாணவர்கள் தீவிரமாக படிப்பதில் மூழ்கினர். செல்வனும்
ரமணியும் சேர்ந்து படித்தார்கள். செல்வன் குடிசையில் மின்விளக்கு இல்லாததால் ரமணி
வீட்டில் சென்று படிப்பான். செல்வன் இருந்ததால் ரமணியும் கொஞ்சம் சிரத்தையுடன்
படித்தான்.
பரிட்சைக்கு பத்து
நாட்கள் முன்பு ஒரு நாள் மாலை செல்வன் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ரமணியின்
வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் மேம்பாலம் போடும் பணி நடந்து
கொண்டிருந்தது. ஆழமாக குழி வெட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மாதிரி வேலைகளை சற்று
நின்று வேடிக்கை பார்ப்பது செல்வனுக்குப் பிடிக்கும். அன்றும் பலர் நின்று
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
செல்வனும்
பெரிதாக குழி வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று எட்டி பார்த்தான். அப்போது
தன்னருகே ராம்குமார் நின்றுகொண்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை. திடீரென்று யாரோ
தன்னை பின்னாலிருந்து தள்ளுவதை உணர்ந்தான். “ஐயோ! அம்மா!” என்று அலறியபடி
குழிக்குள் விழுந்தான். குழி மிக ஆழமில்லை. ஆனால் குழியில் நீட்டிக் கொண்டிருந்த
ஒரு பாறாங்கல் அவன் தலையை பதம் பார்த்துவிட்டது. இரத்தம் பீரிட்டது. அம்மா! என்று
கத்திய செல்வன் மறுகணம் நினைவை இழந்தான். கசமுச என்று ஒரே இரைச்சல். எல்லோரும்
அதிர்ச்சியுடன் குழிக்குள் எட்டி பார்க்க முயற்சி செய்தார்கள். அந்த சந்தடியில்
ராம்குமார் அங்கிருந்து நழுவிவிட்டான்.
No comments:
Post a Comment