ராம்குமார்
செல்வனை வெறுத்தான். செல்வன் படிப்பில் சிறந்து விளங்கினது மட்டுமல்ல,
பிரகாசத்தின் அறிவுரைகளால் பண்பட்ட அவன் அவன் எல்லோரிடமும் நடந்து கொள்ளும்
முறையும் மிக நன்றாக இருந்ததால் தலைமையாசிரியர் முதற்கொண்டு எல்லா
ஆசிரியர்களும் அவனிடம் அலாதியான அன்பும் அக்கறையும் காட்டினார்கள். வகுப்பிற்கு
எப்போதும் அவன் தான் லீடராக தேர்ந்தெடுக்கப் பட்டான். இதெல்லாம் ராம்குமாரை
ஆத்திரப்பட செய்தன. பொறாமையில் தீய்ந்து போனான். பள்ளியில் முடிந்தவரை செல்வனுக்கு
தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பான். ஆயினும் செல்வனின் முன்னேற்றம் சற்றும்
குறையவில்லை.
ஒரு
முறை ராம்குமார் செல்வனின் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டான்.
செல்வன் தன் புத்தகத்திற்காக தேடித்தேடி அலைந்ததைக் கண்டு ராம்குமார் குரூர
திருப்தி அடைந்தான். இரண்டு மூன்று நாள் கழித்து அப்புத்தகம் செல்வனின் இடத்தில்
பெஞ்சுக்கு அடியில் கிடந்தது. செல்வன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை எடுத்து
புரட்டினான். அதில் சில பக்கங்கள் தாறுமாறாக கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு
மனமொடிந்து போனான். பிறகு காலி காகிதங்களில் அந்த பாடங்களை கையால் எழுதி அந்தந்த
இடங்களில் ஒட்டி வைத்துக் கொண்டான்.
மற்றொரு
முறை செல்வனின் பின் உட்கார்ந்திருந்த ராம்குமார் செல்வன் கணக்கு
போட்டுக்கொண்டிருந்த போது அதில் இங்கை தெளித்துவிட்டான். ஆனால் அந்த முறை அதை
கவனித்துவிட்ட ஒரு பையன் ஆசிரியரிடம் சொல்லிவிட்டான். ராம்குமார் தண்டிக்கப்
பட்டான்.
இப்படி
கணக்கற்ற முறைகளில் ராம்குமார் செல்வனை சித்திரவதை செய்தான். பரிட்சைக்கு முன்பு
செல்வனின் எதாவது நோட்டு புஸ்தகத்தை ஒளித்து வைத்து விடுவான். அவன் பாக்ஸிலிருந்து
ரப்பரை தூக்கி எறிந்துவிடுவான். இப்படி
எல்லாம் அவன் தொந்தரவு செய்தாலும் செல்வன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தானுண்டு
தன் வேலையுண்டு என்றிருப்பான். ஆனால் அது ராம்குமாருக்கு மேலும் எரிச்சலை ஊட்டும்.
ராம்குமாரின் அம்மா காவேரி வேறு தூபம் போட்டு அவனுடைய வெறுப்பை அதிகரிக்கச்
செய்தாள்.
பள்ளியில்
செல்வன் மாநிலத்தில் நல்ல ரேங்க் எடுப்பான் என்கிற நம்பிக்கை இருந்தது.
முன்பெல்லாம் ராம்குமார் நன்றாகவே படிப்பான். ஆனால் இப்போது செல்வனின் மேல்
ஏற்பட்டிருந்த பொறாமையும் ஆத்திரமும் அவன் மனதை ஆக்கிரமித்திருந்ததால் அவனுக்கு
படிப்பில் சிரத்தை குறைந்தது.
செல்வனைப்
பற்றி அடிக்கடி தன் தாயாரிடம் புகார் கூறுவான். ஏற்கனவே ஆத்திரமடைந்திருந்த காவேரி
மேலும் ஆத்திரமடைவாள்.
வள்ளியையும்
அவள் குடும்பத்தைப் பற்றியும் எல்லோரிடமும் அவதூறாக பேசுவாள். வள்ளி திருடு,
செல்வன் காப்பியடித்து மார்க் வாங்குகிறான், முருகேசன் பாவம், பயந்தவன் அவர்களால்
கஷ்டப்படுகிறான், இதெல்லாம் தான் அவள் எல்லோருக்கும் இலவசமாக வழங்கும் தகவல்கள்.
ஆனால்
வள்ளியைப் பற்றியும் செல்வனைப் பற்றியும் அறிந்தவர்கள் யாரும் காவேரியின் வம்பு
பேச்சை நம்பவில்லை.
அன்று
குழி வெட்டிக்கொண்டிருந்த இடத்தில் செல்வனைக் கண்டதும், ராம்குமாரின் நீண்டகாலமாக
நீறுபூத்த நெருப்பாக இருந்த பொறாமையும் வெறுப்பும் திடீரென்று கொழுந்துவிட்டு
எரிந்தன. கைகளில் அசுரபலம் வந்துவிட்டது. செல்வனை ஒரு தள்ளு தள்ளினான். ஆனால்
செல்வனின் மண்டையிலிருந்து பீரிட்ட இரத்த வெள்ளத்தைக் கண்டதும் ராம்குமாருக்கு
உடல் நடுங்கியது. அவன் அதை எதிர் பார்க்கவில்லை. ஏதோ செய்யக்கூடாததை
செய்துவிட்டோமென்ற உணர்வு அவனை தாக்கியது. மயக்கமாக வந்தது. தான் தள்ளியதை யாராவது
பார்த்திருந்தால்? பயத்தில் உடல் நடுங்கியது. அங்கிருந்து விரைந்து வீட்டை நோக்கி
சென்றான்.
வீட்டிற்கு
வந்து வெகு நேரமாகியும் அவனுக்கு கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
அவனுடைய
அம்மா, “என்னடா? என்னவோ மாதிரி இருக்கே? காய்ச்சல் எதாவது வரதா, என்ன? கடவுளே!
பரிட்சை வேற வருதே!” என்று அங்கலாய்த்தவாறு அவனுடைய நெற்றியை தொட்டு பார்த்தாள்.
“எனக்கு
ஒண்ணுமில்லைம்மா, சும்மா தொண்தொணக்காதே.” என்று எரிச்சலுடன் அவன் பதில் கூறவே
காவேரி சமையலறைக்கு நகர்ந்தாள்.
தான்
செய்த காரியத்தை அம்மாவே ஏற்க மாட்டாள் என்று ராம்குமாரின் உள்ளுணர்வு கூறியது.
அவன் மனதிற்குள் ஒரே பயமாக இருந்தது. செல்வன் செத்துப் போய்விடுவானோ?
மறுநாள்
முழுவதும் ராம்குமாருக்கு ஒரே கவலையாக இருந்தது. படிப்பே ஓடவில்லை. அன்று மாலை அவனுடைய
தாய் பிள்ளையார் கோவிலுக்குக் கிள்ம்பினாள்.
“நானும்
வரேம்மா” என்ற ராம்குமாரை அவள் வியப்புடன் நோக்கினாள் காவேரி. சாதாரணமாக
கூப்பிட்டால் கூட கோவிலுக்கு வர மாட்டானே!
“பரிட்சைக்காக கவலப் படறான் போலிருக்கு. எஸ்ஸெல்சி
பரிட்சையாச்சே! இன்னும் பத்து நாள் கூட இல்லை. கவலையாத்தானே இருக்கும்?” என்று
தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாள். பிள்ளையாருக்கு ராம்குமார் நிறைய தோப்புக்கரணம்
போட்டான். தலையில் குட்டிக்கொண்டான். “சாமி, செல்வனுக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கணும்.
நான் செஞ்சதெல்லாம் தப்பு. நான் இனிமே அவன வெறுக்கமாட்டேன்.” என்று கண் கலங்க
மனமாற வேண்டிக்கொண்டான்.
No comments:
Post a Comment