“அப்போ எனக்கு கல்யாணம்
ஆன புதுசு. அப்பல்லாம் எனக்கு வீட்டு வேல செஞ்சு பழக்கமில்ல. உன் அப்பா அப்ப ஒரு
ஆபீஸ்ல பியூனா இருந்தாரு. நெலையான வேலன்னு தான் என் அப்பா என்ன உன் அப்பாவுக்கு
கட்டி கொடுத்தாரு. ஆனா என்ன ஆச்சு? அந்த வேல பிற்பாடு போயிருச்சு. அது வேற கத.
உன் அப்ப என்னைய அந்த
ஆபீஸ் மேனேஜர் வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. அங்க என்ன நடந்தது தெரியுமா?
தெரியாது என்று
தலையாட்டினான் செல்வன். “அந்த மேனேஜர் வீடு ரொம்ப பெருசு. நாங்க அங்க போனப்ப அங்க
வேற ஒரு புத்சா கலயாணம் ஆன சோடி வந்திருந்தது. அந்தப் பொண்ணு சரிகை சீலை என்ன
பவுன் சங்கிலி என்ன காதுல தங்க கம்மலு, கையில தங்க வளையல் எல்லாம் போட்டுகிட்டு
ராணி மாதிரி இருந்திச்சு. அவங்களுக்கு அந்த வீட்டம்மா என்ன ஒபசாரம்
பண்ணிச்சு! உங்கப்பாவை வெய்யில்ல போய்
பழம், பலகாரம் எல்லாம் அவங்களுக்கு வாங்கிட்டு வர வெரட்டிச்சு. நாங்களும் அவங்க
மாதிரி புதுசா கல்யாணம் ஆனவங்க தானே? என்னை வேலை வாங்கிச்சு. அவங்க வீட்டு
வேலைக்காரி அன்னைக்கு மட்டம் போட்டிருச்சாம். எனக்கு அன்னைக்கு மனசுல
வேதனையாயிருச்சு. ஏன் நம்மை எல்லாரும் கேவலமா நடத்தறாங்க? செல்வா, ரோசனை பண்ணி
சொல்லு. அவங்க ஏன் எங்கள கேவலமா
நடத்தினாங்க? அந்த இன்னொரு சோடி வந்துதே அவங்களுக்கு ஒபசாரம் செஞ்சாங்க?”
செல்வன் யோசித்தான்.
“நாம வேலக்காரங்க,
அதுனால தானே, அம்மா?”
செல்வனுக்கு பெருமையாக
இருந்தது. “அம்மா தன்னை பெரிய ஆளா நெனச்சு பேசறாங்களே!” தாயிடம் இன்னும் நெருங்கி
அமர்ந்துகொண்டான். தாயின் அணைப்பில் தான் என்ன சொகம்? செல்வன் வள்ளியின் மடியில் படுத்துக் கொண்டான்.
அவன் தலையை
கோதிக்கொண்டே வள்ளி பேசலானாள்.
“செல்வா, நான் இதப்பத்தி
நெறைய ரோசனை பண்னினேன். நம்ம சமூகத்துல யாரும் படிக்கல. நாம ஏழை. அதுனால தானே
நம்மை எல்லோரும் மட்டமா நடத்தறாங்க? படிச்சிருந்தா நல்ல வேல கெடைக்கும். எல்லாரும்
நம்மை மதிப்பாங்க. பாரு, அந்த டாக்டர் வீட்டுல, நான் கூட கொஞ்சம் நாள் அவங்க வீட்ல
வேல செஞ்சேனே ஞாபகம் இருக்கா?”
“அந்த பிரவீன் வீடு
தானேம்மா?”
ஆமாண்டா கண்ணு, அவங்க
வீட்ல சமையல்காரம்மா இருந்தா. அந்தம்மா மகனு நல்லா படிப்பான். அந்தம்மா எல்லார்
வீட்லயும் போயி உதவி கேக்கும். ரொம்ப கஸ்டப்பட்டு படிக்க வச்சா. இப்ப அவன் பெரிய
கம்பெனில நல்ல வேலல இருக்கான். அவங்க இப்ப கௌரவமா இருக்காங்க. அவங்கள பாத்து தான்
எனக்கும் உன்ன நல்லா படிக்க வைக்கணும்னு தோணிச்சு. செல்வா, நாம்பளும் அவங்க மாதிரி
ஒரு நாள் ஆக வேண்டாமா, சொல்லு?”
ஆமாம் என்று
தலையாட்டினான் செல்வன்.
“என்னென்னைக்கும்
கூலிக்கு மாரடைச்சு கஸ்டப்படணும்மா?
வேண்டாம் என்பது போல
தலையாட்டினான் செல்வன்.
வள்ளி ஏதோதோ
பேசிக்கொண்டே போனாள். தாயின் மடியில் சுகமாகப் படுத்திருந்த செல்வனுக்கு அவள்
கூறிய பல விஷயங்கள் புரியவில்லை என்றாலும் ஒரு விஷயம் மட்டும் அவன் உள்ளத்தில்
ஆழமாகப் பதிந்தது. தான் பள்ளிக்கு ஒழுங்காகப் போய் படித்தால் தாய் தன்னிடம் அன்பாக
இருப்பாள். அன்னையின் அன்புக்கு ஏங்கிய செல்வனின் பிஞ்சு மனதில் அவளை திருப்திப்
படுத்தவேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
“நாமும் நல்ல வீட்ல
இருக்கலாம், நல்ல சாப்பாடு சாப்பிடலாம், நல்ல உடுப்பு உடுக்கலாம். யாரும் நமக்கு
கழுநீர் காப்பியும் ஊசிப்போன ரசத்தையும் கொடுக்கமாட்டாங்க.”
“அம்மா, நான் இனிமே
நல்லா படிக்கிறேன்” என்று வாக்குறுதி அளித்தான் செல்வன்.
செல்வனின் வார்த்தைகள்
வள்ளிக்கு தேனாக அளித்தன, அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.
“வள்ளீ! வள்ளீ! என்ற்
யாரோ கூப்பிடும் குரல் கேட்கவே வள்ளி எழுந்திருந்தாள்.
“அப்ப இஸ்கோலுக்கு
போறியா, செல்வா?”
“சரிம்மா”
“டப்பால பலகாரம்
இருக்குது, உண்டுட்டு சாக்கிரதையாப் போ. கீதா
வந்து கூப்பிடுது. நான் வேலைக்குப் போறேன்.” என்று கூறிய வள்ளி வேலைக்கு புறப்பட்டு
போனாள்.செல்வன் பள்ளிக்கு செல்ல தன் பழைய சீருடைய அணிந்துகொண்டு தயாரானான்.
No comments:
Post a Comment