செல்வன் தனக்கு வரும்
ஆபத்தை உணராமல் விளையாட்டில் லயித்திருந்தான். பாலன், கோவிந்தன், பழனி, முத்து
எல்லோரும் கிருஷ்ணா நகர் சேரியில் செல்வனின் நண்பர்கள். ஆரம்பத்தில் அவர்களும் செல்வனுடன்
பள்ளிக்கு சென்றவர்கள் தான். சத்து உணவிற்காக பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில்
போனார்கள். இரண்டு மூன்று வருடங்களில் அவர்கள் எல்லோரும் படிப்பை
விட்டுவிட்டார்கள். செல்வன் மாத்திரம் தன் தாயின் பிடிவாதத்தினால் பள்ளி
சென்றுகொண்டிருந்தான்.
பழைய கிரிக்கட் மட்டை,
பழைய பந்து, மூன்று குச்சிகள் இவைகளை வைத்துக் கொண்டு அந்த சிறுவர்கள் இஷ்டப்படி
கத்திகொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். செல்வன் பேட்டிங். மட்டையை வைத்துகொண்டு
பந்தை அடிக்கத் தயாராக நின்றான். முத்து பௌலிங். வேகமாக அவன் பந்தை வீச செல்வன் மட்டையால்
அதை தூக்கி அடிக்க அது அங்கு வந்துகொண்டிருந்த வள்ளி மேலே போய் அடித்தது. “டேய்,
உங்கம்மாடா!” பழனி கத்தினான். சிறுவர்கள் அனைவரும் அங்கிருந்து சிட்டாய் பறந்தனர்.
செல்வன் நடுங்கினான்.
வசவுகளை பொரிந்து கொட்டியபடியே வள்ளி செல்வனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்
கொண்டு போனாள். நண்பர்கள் கூட்டம் தூரத்திலிருந்து இரக்கத்துடன் பார்த்தது. வள்ளி
செல்வனை தன் குடிசைக்குள் இழுத்துக்கொண்டு போய் கதவை சாத்தினாள். உள்ளிருந்து
கத்தியபடியே வள்ளி “படீர். படீர்” என்று அடிக்கும் சப்தமும், “ஐயோ! ஐயோ!” என்று
செல்வனின் அலறலும் வெளியே கேட்கவே நண்பர்கள் செய்வதறியாது ஒருவரை ஒருவர்
நோக்கினர்.
அதே சமயம் பக்கத்து
குடிசையிலிருந்து வெளியே வந்த ராமக்காள் விடு விடு என்று வள்ளியின் குடிசைக்
கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
“இந்தா, வள்ளி, விடு
அவனை!, உனக்கு என்ன பிசாசு பிடிச்சிருச்சா? போட்டு கொல்றியே! பாவம்!
பொளுதன்னிக்கும் இதே தொளிலாப்போச்சு! வாடா நீ!” என்று பலவாறு வள்ளியை அதட்டிவிட்டு
செல்வனை தன் குடிசைக்கு அழைத்துக் கொண்டு போனாள். வள்ளி ஒன்றும் பேசாமல் குடிசைக்
கதவை சாத்திவிட்டு வேலைக்கு சென்றாள்.
மாலையில் முருகேசன் வந்ததும்
செல்வன் அம்மா தன்னை செம்மையாக அடித்ததை அழுதுகொண்டே தெரிவித்தான். ராமக்காளும்
மற்றும் பலரும் வள்ளி செல்வனை அடித்ததைப் பற்றி முருகேசனிடம் புகார் செய்தார்கள்.
சாதாரணமாக வள்ளிக்கு அடங்கிப் போகும் முருகேசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு
வந்துவிட்டது. வள்ளி வந்ததும் முருகேசன் பெரிதாக சத்தம் போட்டான்.
“அவன் படிக்காட்டி
ஒண்ணும் மோசம் போயிராது. ராச்சசி மாதிரி கொளந்தையை கொன்னுபோட்டியே! கேட்டுக்க,
நாளையிலிருந்து அவன் இஸ்கோலுக்கு போக வேணாம். ஆமாம்.” என்று கண்டிப்புடன்
சொன்னான். எதற்கும் வள்ளி பதில் பேசவில்லை.
பேசாமல் சோறும்
குழம்பும் ஆக்கி புருஷனுக்கும் செல்வனுக்கும் படைத்தாள். பிறகு சமைத்த இடத்தை
சுத்தம் செய்துவிட்டு தான் சாப்பிடாமல் படுத்துவிட்டாள்.
மறு நாள் காலையில்
முருகேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டான். அவன் போனவுடன் குடிசைக் கதவை
சாத்தின வள்ளி, செல்வனை எழுப்பினாள். “எந்திரி, வா இங்க.” என்றாள். பாயில்
எழுந்திருக்க மனமில்லாமல் படுத்துக்கொண்டிருந்த செல்வன் பயத்துடன் கண்களை இறுக
மூடிக் கொண்டான்.
“செல்வா, கூப்பிடறேன்,
இல்லே, வா இங்க.”
செல்வன் கண்ணை கொஞ்சம்
திறந்து பயத்துடன் அவளை நோக்கினான்.
“வா, நான் அடிக்கல, வா”
செல்வன் மெதுவாக
எழுந்திருந்து தன் தாயின் அருகே சென்றான்.
“அடிச்சது நோவுதா,
கண்ணு?” வள்ளி பாசத்துடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
“செல்வா, நீ
பொறக்கறதுக்கு முன்னால நடந்த ஒரு விசயம்
சொல்றேன், கவனமாக் கேளு, என்ன?”
செல்வன் தலையாட்டினான்.
வள்ளி பேசலானாள்.
No comments:
Post a Comment